வாய்ச்சொல்லில் வீரரடி….


கிட்டத்தட்ட 4 நாட்களாக சென்னையிலும், கடலோர மாவட்டங்களிலும்
மழை கொட்டுகிறது. எத்தனை மழை கொட்டினாலும், நான்
இயற்கையை சபிக்க மாட்டேன். வரவேற்கவே செய்வேன். இயற்கையுடன் இயைந்து வாழத்தெரியாததால் தான் நாம் இன்று அவதிக்கு உள்ளாகி இருக்கிறோம்.

சென்னையிலும், அதைச்சுற்றிலும், சில பகுதிகள் இயற்கையாகவே,
தாழ்வான பகுதிகளாக அமைந்து விட்டன. அதிக, மிக அதிக ஜனத்தொகை காரணமாக, இந்த பெருநகரில் துன்பம் அதிகம்.
சரியான நீர்வடிதல் ஏற்பாடு இல்லாமை காரணமாக சில மணி நேர
மழையை கூட தாங்க முடியவில்லை. பல இடங்களில் தண்ணீர் தேங்குகிறது.

தாழ்வான பகுதிகளில் தேங்கும் இந்த தண்ணீரை அவ்வப்போது
உடனடியாக அகற்ற உரிய ஏற்பாடுகள் தொடர்ந்து செயல்பட்டால், இந்த
துன்பத்தை கொஞ்சம் குறைக்கலாம்.

ஆனால், பல சமயங்களில் பொறுப்பில்லாமல் உளறிக்கொட்டும் அமைச்சர்கள் வெந்த புண்களில் வேலைச் செருகுகிறார்கள்.
மக்கள் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து திண்டாடும்போது, தொலைகாட்சிகளுக்கு எதிரே, பேட்டிகளில் உளறுகிறார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சிங்கப்பூரை விட, இங்கிலாந்தை விட, நாம் தயாராகவே இருக்கிறோம்…..இன்ன பிற…!!!

செய்தியாளர் கூட்டம்… எதிரே இருக்கும் செய்தியாளர் கேட்கிறார்..

நீங்கள் நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது என்று சொல்கிறீர்களே …
பல இடங்களில் இப்போதும் தண்ணீர் வெள்ளம் போல் சூழ்ந்திருக்கிறதே என்று.

என்ன செய்திருக்க வேண்டும் அமைச்சர்…. ?
கூடவே கார்பரேஷன் கமிஷனர் இருக்கிறார்., துணை, இணை கமிஷனர்கள் இருக்கிறார்கள்… அவர்களை முன்னிறுத்தி, எங்கெங்கே வெள்ளம் தேங்கி இருக்கிறது என்று விவரமாக சொல்லுங்கள்..
அதிகாரிகள் குறித்துக் கொண்டு உடனடி நடவடிக்கை எடுப்பார்கள். அப்படி எடுக்கப்படவில்லை என்றால் எனக்கு போன் செய்யுங்கள்… என்று கூறி தன் தொலைபேசி எண்ணையும் கொடுத்திருந்தால்,

சம்பந்தப்பட்ட அனைவருக்குமே (அங்கிருந்த, கார்பரேஷன் அதிகாரிகள்,
பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் மற்றும்
தொலைக்காட்சி நிருபர்கள் ) – ஒரு பொறுப்புணர்வு வந்திருக்கும். உடனடியாக தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும்…

அதை விட்டு விட்டு, நிருபர்கள் அதே குற்றச்சாட்டை தொடரவும், அமைச்சர் மறுக்கவும், தொலைக்காட்சி சேனல்கள் திரும்ப திரும்ப இதையே காட்டவும் – அவதிப்படும் மக்கள் இதைக்கண்டு மேலும் அவதிப்படுகிறார்கள்.

எதிர்க்கட்சித்தலைவரோ, தனது தொகுதியை மட்டும் சென்று கவனித்து
விட்டு, சில நூறு பேர்களுக்கு “தான-தர்ம”ங்களை செய்து விட்டு,
வழக்கம்போல், உதவாக்கறை அரசு, உருப்படாத அரசு, போகிற நாள்
வந்து விட்டது என்று அர்ச்சனை செய்து விட்டு –
ஜிம்முக்கு சென்று புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதிலும்,
மறுநாள் வெளிநாடு செல்வதற்கு தயாராவதிலும் பிசி’யாகி விடுகிறார்.

இவர் அனுமதியின்றா இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, மீடியாக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன…?

இயற்கைச் சீற்றங்களின்போது கூடவா கட்சி பாகுபாடுகள்,
குறைசொல்லல்கள் தொடர வேண்டும்..?

இந்த நேரத்தில் குறை சொல்வதற்கு பதிலாக,சற்று வித்தியாசமாக,
பாதிக்கப்பட்ட சில பகுதிகளுக்கு தாங்கள் பொறுப்பேற்றுக்கொண்டு,
மின் மோட்டார்களை தருவித்து, ஆட்களை, கட்சித்தொண்டர்களை
ஈடுபடுத்தி, தேங்கி இருக்கும் நீரை அகற்றும் செயலில் ஈடுபடக்கூடாது ?

குறை சொல்ல வேறு சந்தர்ப்பமா கிடைக்காது ? துன்பம் நேர்கையில்
எல்லாரும் ஒன்று சேர்ந்து அதனை நீக்கும் பணியில் ஈடுபடுவது தானே
நியாயம்…? இந்த பெருந்தன்மை ஏன் யாரிடத்தும் இல்லை…?

பெரிய பெரிய தொழில் நிறுவனங்கள் சென்னையிலும், அதன்
சுற்றுப்புறங்களிலும் இருக்கின்றன… பாதிக்கப்பட்ட சில இடங்களில் அவை ஏன் பொறுப்பேற்று செயல்படக்கூடாது ?
இயந்திரங்களோ, மின்மோட்டார்களோ, ஆள் சக்தியோ -இவற்றை
திரட்டுவது அவற்றிற்கு மிகவும் சுலபம்… இவர்களிடம் ஏன் இல்லாமல் போய் விட்டது மனிதாபிமானம்…?

தொலைக்காட்சி சேனல்கள், திரும்ப திரும்ப அவலங்களை காட்சிப்படுத்தி காட்டுவதிலேயே குறியாக இருக்கின்றனவே தவிர அந்த அவலங்களை குறைக்கும் பொறுப்பு அவற்றிற்கு இல்லையா ?

தமிழக அரசு சென்னை மாவட்டத்தை 15 மண்டலங்களாக பிரித்து,
ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மூத்த IAS அதிகாரியை பொறுப்பாளராக
நியமித்து, அவர்களது தொலைபேசி எண்களையும் வெளியிட்டிருக்கிறது.

பாதிக்கப்பட்ட இடங்களை வீடியோ படம் பிடிக்க, செய்தி சேகரிக்க –
அங்கே செல்லும் நிருபர்கள், செய்தியாளர்கள், அரசாங்கம் அறிவித்திருக்கும் தொலைபேசி எண்களில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டு, தாங்கள் காணும் காட்சியை விவரித்து, உடனடியாக உதவும்படி கேட்க வேண்டாமா ? சாதாரண மக்களுக்கு கூட இருக்கும் அந்த பொறுப்பு அவர்களுக்கு இல்லையா…?

இந்த வலைத்தளம் அனைவரையும் கை கூப்பி வேண்டிக்கொள்கிறது.
தயவுசெய்து, இன்னலில் தவிக்கும் மக்களுக்கு உங்களாலான விதத்தில்
உதவி செய்ய முன்வாருங்கள். இப்போதைக்கு தாழ்வான பகுதிகளில்
தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்றுவதற்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.

அமைச்சர் பெருமக்களே, அரசு/கார்பரேஷன் அதிகாரிகளே,
எதிர்க்கட்சி தலைவர்களே/தொண்டர்களே, தொழில் நிறுவனங்களின்
பொறுப்பாளர்களே, செய்தி/தொலைக்காட்சி நிறுவனங்களே
உங்களால் எந்தெந்த விதங்களில் உதவ முடியும் என்று யோசியுங்கள்..
இயன்றதை உடனடியாக, விரைந்து செயலாற்றுங்கள்…
மக்கள் உங்களை கையெடுத்து கும்பிட்டு, நன்றி சொல்வார்கள்.

—————————————————————————-

மழை சேத பாதிப்பில் இருந்து மக்கள் உதவி பெற சென்னை
மாநகராட்சி மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம்
சார்பில் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களைத்
தொடர்பு கொள்வதற்கான போன் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

1. சென்னை மாநகராட்சி -1913

2. கட்டுப்பாட்டு அறைகள்- 044-25367823, 25363694, 25362538,

25364965,25362561, 25369206

3. வாட்ஸ் அப் எண்கள்- 94454 77662, 94454 77205

4. காஞ்சீபுரம் மாவட்டம்- 1077

5. பேரிடர் மேலாண்மை

அலுவலகம் – 044- 27237107, 27237207

6. வாட்ஸ் அப் எண்கள்- 94450 51077, 94450 71077

7. காஞ்சிபுரம் டிவிஷன்- 94451 64756

8. செங்கல்பட்டு டிவிஷன் – 97909 30878

9. தாம்பரம் டிவிஷன் – 99622 28549

10. மதுராந்தகம் டிவிஷன் – 94444 80048

11. திருவள்ளூர் மாவட்டம்- 1077

12. திருவள்ளூர் டிவிஷன்- 044- 27660248, 9940318661

13. பொன்னேரி டிவிஷன்- 044- 27974073, 8608984066

14. திருத்தணி டிவிஷன்- 044- 27885877, 9994123566

15. அம்பத்தூர் டிவிஷன்- 044- 26541221, 9444555950

————————————————————————————————————

மக்களிடையே அச்சத்தை அதிகரிக்கும் வண்ணம் இன்று மாலை/இரவு பிபிசி ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது —

சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், உடனடியாக உரிய முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளில் அவசியம் ஈடுபடுவார்கள் என்று நம்புவோம்.

 

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to வாய்ச்சொல்லில் வீரரடி….

  1. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    https://vimarisanam.wordpress.com/2015/12/08/பிபிசி-வானிலை-முன்னெச்சர/ இது ஒரு முந்தைய இடுகை ….. 2015 ம் ஆணடு டிசம்பர் மாதம் சென்னை.மழையினால் வெள்ளக்காடான பாேதும் பிபிசி டிவிட்டரில்.பயம் காட்டியதை பற்றி // எனவே நாம் ஏன் பீதி கிளப்பும் முடிவுகளுக்கு வர வேண்டும்.

    இந்நிலையில் இவர்கள் தேவையில்லாமல் ட்விட்டரில் வானிலை
    எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

    அனுபவமற்ற இவர்கள் லண்டனில் உட்கார்ந்து கொண்டு
    நம் உள்ளூர் வானிலை நிலவரம், வெள்ளத்துக்குப் பிறகான
    மக்களின் மனநிலை என்று எதுவும் அறியாமல் வானிலை
    முன்னெச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர். // என்று குறிப்பிட்டு பதிவிட்டது பாேல் தற்பாேதும் கூறியிருப்பார்களாே …? …. எது எப்படி இருந்தாலும் அரசு இதை எச்சரிக்கையாகக் காெண்டு விரைந்து செயல்பட வேண்டும் … வாயால்
    வியாக்கினம் பேசுவதை மந்திரிகள் விட்டுவிட்டு களத்திவ் இறங்கி பணியாற்ற வேண்டும் …!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.