—வெள்ளைக்காரன் காலத்து விகடன் ஜோக்குகள் சில ..… !!!

………………………………………

………………………………………………………….

………………………………………………………

(பல இன்றும் ரசிக்கலாம்…….. கடைசி ஜோக் -ஸூப்பர் …!!! )

(1929, ஏப்ரல்)

ஒரு வெள்ளைக்காரனிடம் பரிசாரகன் வேலை பார்த்திருந்த மந்தோனியின் நாய் இறந்துபோனதற்கு அவன் மிகவும் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தான்.

நண்பன்:- நாய் இறந்துபோனதைக் குறித்தா இவ்வளவு விசனப்படுகிறாய்?

மந்தோனி:- அது இறந்ததைப் பற்றி விசனிக்கவில்லை. இப்போது ஒரு வேலை அதிகமாயிற்றே என்பதற்குத்தான் விசனப்படுகிறேன்.

நண்பர்:- என்ன வேலை அதிகமாகிவிட்டது?

மந்தோனி:- துரைகள் சாப்பிட்ட பின் பிளேட்டுகளை அந்த நாய் சுத்தமாக நக்கி வைத்துவிடும். இப்போது அவற்றையெல்லாம் கழுவித் துலக்கவேண்டிய வேலை ஒன்று அதிகமாயிற்று.

…………………………………………………………………………….

ஒரு சர்க்கஸ் கொட்டகையில், ஒரு சர்க்கஸ் பெண்மணியின் கையிலிருந்த சர்க்கரையை சிங்கம், பூனைக்குட்டியைப் போல் அடங்கி ஒடுங்கி நக்கித் தின்பதைக் கண்ட ஒருவன், ‘‘இது என்ன பெரிய காரியமா! இதைப்போல் யாரும் எளிதில் செய்யலாமே” என்றான்.

சர்க்கஸ் பெண்:- (வியப்புடன்) உன்னால் இது செய்ய முடியுமென்றா சொல்லுகிறாய்?

அவன்:- சந்தேகமில்லாமல் சிங்கத்தைவிட நன்றாய் செய்ய என்னால் முடியும்…!!!

………………………………………………..

அகஸ்மாத்தாய் லக்ஷாதிபதியான ஒருவர் கீழ்வருமாறு ஒரு புஸ்தக வியாபாரிக்குக் கடிதம் எழுதினார்:- அன்பார்ந்த ஐயா, தாங்கள் அனுப்பிய `கம்ப ராமாயணம்’, `வால்மீகி ராமாயணம்’, `வில்லிபுத்தூரார் பாரதம்’ முதலிய புத்தகங்கள் கிடைக்கப் பெற்றேன். அவை மிகவும் நன்றாய் இருக்கின்றன. இந்த ஆசாமிகள் புதியதாக ஏதாவது புஸ்தகங்கள் எழுதினால் உடனே வி.பி-யில் அனுப்பிவையுங்கள்.

…………………………………………………………………………

உபாத்தியாயர்:- ஒரே காலத்தில் சம்பவித்த காரியம் ஒன்று சொல், பார்க்கலாம்.

பையன்:- என்னுடைய தாயார், தகப்பனார் கல்யாணம்.

………………………………………………………………………………

தம்பியப்பா:- சீமையிலிருந்து நான் ஒரு இயந்திரம் வரவழைத்திருக்கிறேன். அதில் ஒரு ஆட்டுக்குட்டியை அப்படியே போட்டுவிட்டால் துண்டு துண்டாக வந்து விழும்.

நம்பியப்பா:- ஜெர்மனியிலிருந்து நான் ஒரு இயந்திரம் வரவழைத்திருக்கிறேன். அதில் ஒரு ஆட்டைப் போட்டால் சமைத்து, குழம்பு, வறுவல், சட்னி இவையாக வெளியே வரும்.

கம்பியப்பா:- அமெரிக்காவிலிருந்து நான் ஒரு நேர்த்தியான இயந்திரம் வரவழைத்திருக்கிறேன். அதில் ஒரு ஆட்டுக்குட்டியைப் போட்டால் சமைத்துச் சாப்பிடுவதற்கு தயாராகச் செய்து வெளியே அனுப்பும். அது வாய்க்கு ருசியாக இல்லாவிட்டால் அதைத் திருப்பி இயந்திரத்தில் ஊற்றினால் மறுபடியும் ஆட்டுக் குட்டியாகவே வெளியே வரும்.

(1929, ஜனவரி)

……………………………………………………………………………..

டாக்டர்: (நோயாளி கையைப் பிடித்துப் பார்த்துவிட்டு) பிராணன் போய்விட்டதென்றே நினைக்கிறேன். பாடைக்கு ஏற்பாடு செய்யுங்கள்.

நோயாளி: இல்லை, இல்லை, நான் உயிருடன்தான் இருக்கிறேன்.

நோயாளியின் பெண்சாதி: அடே முட்டாளே, சும்மாயிரு. டாக்டர் சொன்னதுதான் சரி. உன்னைவிட அவருக்கு அதிகம் தெரியும் என்பதை மறந்துவிடாதே.

(1929, பிப்ரவரி)

……………………………………………………………………………

சின்னஞ்சிறு தமாஷ்

விறகு விலை உயர்ந்தது!

சென்னையில் பக்கிம்காம் கால்வாயை அடைத்துவிட்டதன் பயனாய் விறகு விலை இருமடங்காக உயர்ந்துவிட்டது. இது குறித்து சட்டசபையில் கேள்வி கேட்டார்கள். ரயில்வே கம்பெனியார் விறகு கொண்டுவருவதற்கு உதவி செய்யவில்லையென்று குறை கூறப்பட்டது.

நாடெங்குமுள்ள இயற்கை வைத்தியர்கள் கூட்டங்கூடி அரசாங்கத்துக்கும், ரயில்வே கம்பெனிக்கும் நன்றி செலுத்தியிருப்பதாக அறிகிறோம். ஜனங்களைப் பச்சை உணவு உட்கொள்ளும்படி செய்ய இதுதான் சரியான வழி என்று அவர்கள் சந்தோஷப்படுகிறார்களாம்.

(1929, மார்ச்)

……………………………………………………………………………

தண்ணீரே சிறந்தது!

சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்த பூனைக்கால் ஜான்ஸன் ‘‘உலகில் தண்ணீரைவிடச் சிறந்த பானம் வேறில்லை’’ என்று தெரிவித்தார். சென்னையிலுள்ள பால்காரர்களுக்கு இந்த உண்மை வெகுநாளாகத் தெரிந்திருப்பதாக நகரவாசிகள் `விகட’னிடம் முறையிடுகிறார்கள்.

(1929, மார்ச்)

…………………………………………………………………………..

வருந்தும் பத்திரிகைகள்!

சென்னை மௌண்ட் ரோட்டில் சூதாட்டத்தில் ஆயிரம் ரூபாய் தோற்ற ஒரு முஸ்லிம், அந்தப் பணத்தை ஜெயித்த மற்ற இரு முஸ்லிம்களைக் காயப்படுத்தினானாம். அதன்மேல் அவன் கைதுசெய்யப்பட்டான். இவர்களில் எல்லோரும் முஸ்லிம்களாயிருந்துவிட்டார்களேயென்று ஆங்கிலோ இந்தியப் பத்திரிகைகள் வருத்தப்பட்டதாக ஒரு ரகசியச் செய்தி கூறுகிறது. ஒருவன் மட்டும் ஹிந்துவாயிருந்தால் `ஹிந்து – முஸ்லிம் கலவரம்’ என்பதாகப் பெரிய தலைப்புகளுடன் போட்டிருக்கலாமல்லவா?

(1929 ஏப்ரல்)

.

நாலணா வக்கீல்!

நீதிபதி ஒருவர் சாதுர்யமாகப் பேசுவதில் தமக்கு இணையில்லையென்ற எண்ணங்கொண்டவர். ஒரு வழக்கில் பிரதிவாதியைப் பார்த்து ‘‘உன் வக்கீல் எங்கே?’’ என்று அவர் கேட்டார். ‘‘சுவாமி! நான் ஏழை, வக்கீல் வைக்க சக்தியில்லை’’ எள்று பிரதிவாதி கூறினான். ‘‘அடே மடசாம்பிராணி! நாலணா வக்கீல்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்களே… பார் ரூமிலே போய் யாரையாவது அழைத்து வா’’ என்று நீதிபதி சாதுர்யமாகப் பேசி நகைத்தார்.

பிரதிவாதி ரூமிலே போய் நாலணா வக்கீல் யாரென்று ஒவ்வொருவராக விசாரித்தான், வக்கீல்களுக்குக் கோபத்தினால் முகம் சிவந்தது. கடைசியில் கிழப்புலி வக்கீல் ஒருவர் அவனை அழைத்துக் காதில் ஏதோ ரகசியமாகச் சொல்லி அனுப்பினார்.

பிரதிவாதி நீதி மண்டபத்துக்குள் வந்ததும், ‘‘எங்கே வக்கீல்?’’ என்று நீதிபதி கேட்டார். அவன் பதில் அளித்ததாவது: ‘‘பிரபுவே! என் செய்வேன்… நாலணா வக்கீல்களெல்லாரும் ஜட்ஜுகளாகி விட்டார்களாமே!’’ (விகடனுக்கு நன்றி… )

……………………………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக