இமயத்தின் வட மேற்கே – கொடுத்து வைத்த மக்கள் !!

கடந்த சில நாட்களாக – ஒரு மாறுதலுக்காகவும்,
புத்துணர்வு பெற விரும்பியும் –
வடக்கே ஒரு பயணம் மேற்கொண்டிருந்தேன்இமயத்தின்
வட மேற்கே இமாசலப் பிரதேசத்திற்கு.

ஏற்கெனவே பலமுறை இமயத்திற்கு சென்றிருந்தாலும்,
இமயப் பயணம் மட்டும் அலுப்பதே இல்லை.
பரந்து விரிந்து கிடக்கும் மலைப்பிரதேசங்களில்
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பக்கம் பயணம் !

சில தடவைகள் -ஹரித்வார், ரிஷிகேஷ் பக்கம்.
சில தடவை – சந்தீபானி – டல்ஹௌசி – தர்மசாலா பக்கம்.
இந்த முறை சண்டிகார், மண்டி, குலு, மணாலி வழியாக –

பியாஸ் நதியின் பிறப்பிடமான –
கடல்மட்டத்திலிருந்து 13,051 அடி உயரத்தில் இருக்கும்
“ரோதங் பாஸ்” வரை !

பியாஸ் நதி சின்னஞ்சிறிய ஓடையாக உற்பத்தியாகும்
இடத்திலிருந்து – அது
கடல் மட்டத்திலிருந்து சுமார் 1000 அடி உயரத்தில்  
சட்லெஜ் நதியுடன் இணைகின்ற இடம் வரையில்
சுமார் 400 கிலோ மீட்டர் தூரம் முழுவதும்
தொடர்ந்து சாலை வழியே பயணித்தேன்.

பச்சைப்பசேல் என்கிற மலைகளுக்கிடையே  வளைந்தோடும் நதி.
இரு புறமும் அற்புதமான இயற்கைக் காட்சிகள்.
மனதிற்குள் அப்படியே நிறுத்தி வைத்துக் கொள்ளவேண்டும்
போல் இருக்கிறது.

இமாசலப் பிரதேச மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.
இயற்கையோடு இணைந்து வாழ்கிறார்கள்.
இந்த மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையே
வெறும் 60 லட்சம்  மட்டுமே.
அமைதியான, கள்ளம் கபடு அறியாத மக்கள்.
வற்றாத 6 ஜீவ நதிகள் – வருடம் முழுவதும் இமயத்திலிருந்து
குளிர் நீரைக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன.
நீருக்கும் பஞ்சமில்லை. மின்சாரத்திற்கும் பஞ்சமில்லை.
பழத்தோட்டங்களுக்கும், காய்கறி – உணவுப்பொருட்களுக்கும்
பஞ்சமே இல்லை.

இது போன்ற ஒரே ஒரு ஜீவநதி இருந்தால் கூடப் போதும்
தமிழ்நாட்டிற்கு ! எவரிடமும் தண்ணீருக்காக சண்டை போட
வேண்டிய அவசியமே இருக்காது.

கிட்டத்தட்ட 40 % பிரதேசம் – அடர்ந்த காடுகளாலும்
மலைகளாலும் நிரம்பப்பெற்று இருக்கிறது. எங்கு நோக்கினும்
வானுயர்ந்த  தேவதாரு, ஊசியிலை மரங்கள்.
நகரங்களுக்குள்ளாகவே  குலை குலையாகத் பழுத்துத்
தொங்கும் ஆப்பிள் செடிகள்.

பியாஸ் நதி, குல்லு அருகே வரும்போது ராப்டிங் எனப்படும்
ரப்பர் படகுகளில் சவாரி செய்ய போட்டி போட்டுக் கொண்டு
அழைக்கிறார்கள். பெரும் வேகத்தோடு வரும் நீரில்,
ரப்பர் மிதவை – ஆற்றின் நடுவே இருக்கும் பெரும் கற்களில்
முட்டி மோதிக்கொண்டு பயணிப்பது இளைஞர்களுக்கு
அற்புதமான அனுபவம்.

அதே போல் ரோதங் பாஸிலிருந்து மணாலி வரும் வழியில்
பாரா க்ளைடிங்  – பாராசூட் மூலம் மலைப்பகுதியிலிருந்து –
மெதுவாகப் பறந்துகொண்டே பள்ளத்தாக்கில் இறங்குவது –
இன்னொரு வித்தியாசமான அனுபவம்.

இரண்டையும் வேடிக்கை பார்த்ததோடு சரி.
அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை -வயதும்,
உடல் நிலையும் !

என்ன – சாலைகள் தான் பல இடங்களில் மிக மோசமான
நிலையில் இருக்கின்றன. மழைக்காலம் இப்போது தான்
முடிந்திருப்பதால், பல இடங்களில் நிலச்சரிவு காரணமாக
கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் சாலைகளில் பயணிப்பது
பல சமயங்களில் அச்சத்தைத் தருகிறது.

ஆயிரக்கணக்கான அடிகள் உயரத்தில் மிகக் குறுகலான
பாதை. அவ்வப்போது எதிரே லாரிகளும், ட்ரக்குகளும்
வரும்போது – நிஜமான த்ரில்லிங் அனுபவம்.

கார்கில், லே, லடாக்  ஆகிய இடங்களுக்கு செல்ல,
ராணுவத்தினருக்கு இது ஒன்று தான் தரைவழிப் பாதை.
(NH 21)

நவம்பர் முதல் மார்ச் வரை சாலைகள் பனியால்
மூடப்பட்டு, போக்குவரத்து முற்றிலும் தடைப்படும்.
ஜூலை முதல் செப்டம்பர் வரை மழைக்காலம் –
பெரும் நிலச்சரிவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
மிச்சமிருக்கும் காலத்தில் தான் இந்த சாலைகளைப்
ஒழுங்குபடுத்தி, பராமரித்து -போக்குவரத்தை
சமாளிக்க வேண்டும்.

இந்தப் பாதை – முழுவதுமாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில்
இருக்கிறது. பாவம் – இந்த சாலைகளை பராமரிக்க வேண்டிய
முழுப்பொறுப்பில் இருக்கும் ராணுவத்தினரின் பாடு தான்
மிகவும் திண்டாட்டம்.

கடினமான பயணமாக இருந்தாலும் – அற்புதமான அனுபவம்.
இந்த அனுபவம் அடுத்த இரண்டு வருடங்களுக்காவது
போதும் என்று நினைக்கிறேன். அதற்குப் பிறகு –
இருந்தால் பார்த்துக் கொள்ளலாம் !

நான் பார்த்த இயற்கைக் காட்சிகளில் சில –
உங்களுக்காக கீழே -புகைப்பட வடிவில் !

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to இமயத்தின் வட மேற்கே – கொடுத்து வைத்த மக்கள் !!

  1. thamilannan's avatar thamilannan சொல்கிறார்:

    NICE

  2. சதுக்கபூதம்'s avatar சதுக்கபூதம் சொல்கிறார்:

    புகைபடங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி
    //அமைதியான, கள்ளம் கபடு அறியாத மக்கள்.//
    உண்மை. வட இந்தியாவிலேயே ஏன் இந்தியாவிலேயா அமைதியான/ பழக இனிமையான மக்கள் ஹிமாச்சல மக்கள்

  3. KANNAN R's avatar KANNAN R சொல்கிறார்:

    It is nice to see you when you come back here….
    and nice place too…

  4. இனிய பயணத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி…

    அருமையான படங்கள்…

    படங்கள் இன்னும் சேர்த்திருக்கலாமோ…

  5. Thakkudu's avatar Thakkudu சொல்கிறார்:

    இந்த இடத்துக்கு எல்லாம் போயிட்டு வந்த நீங்களும் குடுத்து வச்சவர் தான் சார்! 🙂

  6. Bala's avatar Bala சொல்கிறார்:

    Welcome back… Hope you all refreshed now and back to normal…
    I was checking your site every day and I believe there are many other people like me…
    Good Luck.

  7. rathnavelnatarajan's avatar rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமையான பதிவு.
    நன்றி.

  8. chollukireen's avatar chollukireen சொல்கிறார்:

    lதிடீர் ப்ரேக், அது, இது என்னவோ என்று நினைத்தேன். திரும்பவும் அருமையான
    படங்களும், கட்டுரையும். அப்பாடாநிம்மதி.

  9. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    உங்கள் புத்துணர்ச்சி ஊட்டிய பயணத்தை இட்டும், வலைதளத்தில் உங்கள் எழுத்துக்கள் மூலமாக மீண்டும் சந்திப்பதை இட்டும் மிக்க மகிழ்ச்சி!

  10. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    நன்றாக ரீசார்ஜ் செய்துக்கொண்டு வந்துவிட்டீர்கள்.
    ஆரம்பியுங்கள் ஐயா மீண்டும்!
    வெல்கம் பேக்.
    (பார்த்து, இப்படியெல்லாம் படங்களை வைத்திருந்தால் இப்போது தீவிரவாதின்னு பிடிச்சுட்டு போயிடுறாங்கைய்யா, ஜாக்கிரதை)

  11. Padmanabhan Potti L's avatar Padmanabhan Potti L சொல்கிறார்:

    நண்பருக்கு வணக்கம். நீண்ட இடைவெளிக்குப்பின் பேசுவது போன்ற உணர்வு. நீங்கள் சென்று வந்த இடங்களில்
    நான் ஹரித்வார் , ரிஷிகேஷ் ஆகிய இடங்களுக்கு சென்று வந்துள்ளேன். அதற்குமேல் அமர்நாத் போன்ற இடங்களுக்கு
    செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் துவாரகை , பீமாஷங்கர் போன்ற இடங்களுக்கு போய்வந்துள்ளேன்.
    அதில் பீமாஷங்கர் பார்க்கவேண்டிய இடம். வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள். மற்றபடி இதுபோன்ற இடங்களில்
    காண கிடைக்கும் இயற்க்கை காட்சிகள் நேரில் பார்த்தவர்களுக்குத்தான் ரசிக்க இயலும். விரைவில் விவாத போர்
    துவங்கலாமா?

  12. ரமேஷ்'s avatar ரமேஷ் சொல்கிறார்:

    வாவ் – வந்து விட்டீர்களா காவிரிமைந்தன் சார் !
    நீங்கள் வந்து விட்டீர்களா என்று கடந்த ஒருவாரமாக
    தினமும் உங்கள் வலைப்பக்கத்திற்கு வந்து பார்த்துக்
    கொண்டிருந்தேன்.
    போகும்போது இவ்வளவு அற்புதமான
    இடத்திற்கு போவதாகச் சொல்லி இருந்தால் நாங்களும்
    ஒரு நாலு பேர் கூட வந்திருப்போம் அல்லவா ?
    புகைப்படங்களையும், கட்டுரையையும் பார்க்கும்போதே
    உற்சாகம் பொங்குகிறதே.
    இத்தனையையும் நேரில் அனுபவித்து விட்டு
    வந்திருக்கிறீர்களே. கொடுத்து வைத்தது இமாசலக்காரர்கள்
    மட்டும் அல்ல. நீங்களும் கூடத்தான்.
    புத்துணர்ச்சியுடன் எழுத்துப்பணியைத் தொடர வாழ்த்துக்கள்.
    நன்றி.

  13. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    வருக! வருக !!
    இப்போ நாடு இருக்கும் நிலையில் நல்லவர்களுக்கு ஒரே புகலிடம் இமயம்தான் என்பதை சொல்லாமல் சொன்னதற்கு நன்றி

  14. mandaitivu's avatar mandaitivu சொல்கிறார்:

    வணக்கம்.
    நன்றி ஐயா நீங்கள் பதிவு செய்துள்ள இமயமலை
    படத்தொகுப்புகள் பார்த்தேன் ரொம்ப அழகா உள்ளது. பிரதிகள் அதிகம் இருந்தால் எங்களுக்கும் அனுப்பி வைக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்
    நன்றி
    மண்டைதீவு இணையம்.
    mandativu@hotmail.com

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.