திஹார் சிறை …
“நம் மக்கள்” உள்ளே இருக்கிறார்கள்.
விரைவில்“வெளியே” வந்து விடுவார்கள்.
ஊர் ஊராக வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் –
“அந்தமான் சிறை”க்கு சென்ற “தியாகி”களுடன்
ஒப்பிட்டுப் பேசுவார்கள்.பிரிட்டிஷ் காலத்தில்
அந்தமான் சிறை எப்படி இருந்தது என்பது
அநேகமாக எல்லாருக்கும் தெரியும்.
இவர்கள் புனிதப் பயணம் சென்றிருக்கும்
“திஹார்” எப்படி இருக்கும் என்று
தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா ?
டெல்லியில் எனக்கு சீக்கிய நண்பர் ஒருவர்
இருக்கிறார். இந்த மாதிரி விஷயங்களில்
ஆர்வம் உள்ளவர். நிறைய விஷயம் தெரிந்தவர்.
அவரிடம் சில விஷயங்களைத் தெரிந்து கொண்டு
இதை எழுதுகிறேன்.
திஹார் சிறை திறக்கப்பட்டது – 1958-ல்.
இருக்கும் இடம் – டெல்லி அருகே.
சாணக்கியபுரியிலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர்
தொலைவில் இருக்கும் “திஹார்”என்கிற கிராமத்தில்
இருப்பதால் இது திஹார் சிறை ஆனது!
ஒரு காலத்தில்,புகழ் பெற்ற பெண் போலீஸ் அதிகாரி
கிரண் பேடி (ஆம்- டீம் அண்ணா குழு தான் )
இதன் ஐ.ஜி.யாக இருந்தபோது
இதன் பெயரை “திஹார் ஆஷ்ரம்”என்று மாற்றினார்.
இப்போது இருக்கும் பல வசதிகள் – அவர் காலத்தில்
செய்யப்பட்டவை தான்.

தெற்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய
திறந்த வெளி சிறை வளாகம்.
சாதாரணமாக இதில் அனுமதிக்கப்பட்டுள்ள
கைதிகளின் எண்ணிக்கை -6250.
ஆனால் இப்போது இருப்பது சுமார் 12,000 பேர்.
இப்போது இதில் வாசம் புரியும் முக்கியஸ்தர்களில்-
நமக்குப் பழக்கமானவர்கள் -2ஜி ஸ்பெக்ட்ரம் புகழ்
ஆ.ராஜா, கனிமொழி, சரத் ரெட்டி,
காமன்வெல்த் போட்டி புகழ் சுரேஷ் கல்மாடி…..
இதில் சுரேஷ் கல்மாடி இருப்பது 4ஆம் எண் சிறை.
ஆ.ராசாவின் வாசம் 1ஆம் எண் சிறையில்.
கனிமொழி இருப்பது 6ஆம் எண் சிறை – (இது
பெண்களுக்கான தனிச் சிறை வளாகம்.)

இவர்கள் எல்லாருக்குமே விசேஷ வகுப்பு
கொடுக்கப்பட்டுள்ளது.
12 க்கு 10 நீள அகலமுள்ள
ஒரு தனி அறை ஒவ்வொருவருக்கும்.
அதிலேயே ஒரு பகுதி தடுக்கப்பட்டு –
பாத்ரூம்,டாய்லெட்.
ஒரு மின் விசிறி, டிவி பெட்டி உண்டு.
இரண்டு தினத்தாள்கள் சிறையில் அளிக்கப்படுகிறது.
வெளியிலிருந்து தேவையான- வார, மாத
இதழ்களையும், புத்தகங்களையும்
தருவித்துக் கொள்ளலாம்.
சொந்த உடை.
தண்டனைக் கைதிகளுக்கு இருக்கும் கடுமையான
கட்டுப்பாடுகள் விசாரணைக் கைதிகளுக்கு கிடையாது.
சிறைக்குள் நண்பர்களை சுலபமாக
சந்தித்துக் கொள்ளலாம். கொஞ்சம் சுதந்திரமாக
நடமாடலாம்.
சிறை சாப்பாட்டைத தவிர, தேவையானதை
சிறை கேண்டீனிலிருந்து காசு கொடுத்து
வாங்கிக் கொள்ளலாம்.
யாரையோ பிடித்து, உள்ளே போய் விவரமாக
ஒரு ரவுண்டு அடித்து விட்டு வந்த, ஒரு இந்தி
பத்திரிகையாளர் கூறுகிறார் –
பணம் இருந்தால் போதும்- உள்ளே
வசதிகள் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.
காசு கொடுக்கத் தயாராக இருந்தால் –
பிரத்தியேக சமையல்காரரே கிடைப்பாராம் !
சுரேஷ் கல்மாடி இருக்கும் 4ம் எண் சிறை,
கத்துக்குட்டிகளுக்கானதாம் (முதல் தடவையாக,
உள்ளே வருபவர்கள் ) அநேகமாக எல்லாருமே
25 வயதுக்குட்பட்டவர்கள்.
ஒரு முறை நீதிபதி ஒருவர் சிறை நிர்வாகம்
தொடர்பான ஏதோ வேலையாக சிறை அலுவலகம்
ஒன்றிற்கு வந்த போது – அங்கு
சுரேஷ் கல்மாடியும்
சிறை உயர் அதிகாரி ஒருவரும்
டேபிள்,நாற்காலிகளில் எதிரெதிரே அமர்ந்து,
ஜாலியாக அரட்டை அடித்துக்கொண்டு –
வெளியிலிருந்து கொண்டு வரப்பட்ட
உணவு வகைகளை ஒரு கை
பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டு
திகைத்திருக்கிறார்.
ராஜா, கனிமொழி, சுரேஷ் கல்மாடி ஆகிய
மூவருக்குமே -சிறைக்கைதிகளுக்குள்ளேயே
தேர்ந்தெடுக்கப்பட்ட, சாதுவான, தனிப்பட்ட
பணிகளைச் செய்யக்கூடிய, தண்டனைக் கைதிகள்
உதவியாளர்களாகக் கொடுக்கப்பட்டுள்ளனராம்.
அறையை சுத்தமாக வைத்திருக்கவும்,
குடிநீர் போன்ற வசதிகள் செய்யவும்,
சாப்பாடு, மற்ற கேண்டீன்
பொருட்கள் வாங்கிவருவது போன்ற வேலைகளையும் –
இவர்கள் பார்த்துக் கொள்கிறார்களாம்
இப்படி உதவியாளர்களாக இருப்பவர்களின்,
குடும்பத்தினருக்கு, சிறைக்கு வெளியே,
சம்பளம் போல் பெரிய தொகை உதவிப்பணமாக
கொடுக்கப்படுகிறதாம்.
சாதாரணமாக – நாட்களை உள்ளே கழிப்பது
சிரமம் தான். அதுவும் உள்ளே போன
முதல் சில நாட்கள் யாராக இருந்தாலும்-
நொந்து விடுவார்கள். போகப் போக ஓரளவு
பழகிக் கொள்கிறார்கள்.
விசாரணைக்காக கோர்ட் அழைத்து
வரப்படும் நாட்களை – இவர்கள்
ஆவலோடு எதிர்கொள்கிறார்களாம்.
வெளியிலிருக்கும் வேண்டப்பட்டவர்களோடு
நிறைய நேரம் செலவழிக்க முடியும் என்பதால் !
இந்த விஐபி க்களுக்கு ஜாமீன் தள்ளிப் போவது
சிறைக்குள் இவர்களுக்கு உதவியாக
இருப்பவர்களுக்கு மிகவும் சௌகரியமாக
இருக்கிறதாம் !
என்ன செய்வது –
அவரவர் கவலை அவரவருக்கு !!!
பின்குறிப்பு –
அந்தமான் சிறை பற்றி தெரியாதவர்களுக்கு
ஒரு சின்ன சாம்பிள் –

பிரிட்டிஷ் அரசை எதிர்த்து,
இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக,
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு
ஆயுள் தண்டனை பெற்ற சுதந்திர போராட்ட வீரர்கள்
சிறை வைக்கப்பட்ட நரகம்
“அந்தமான் செல்லுலார் சிறை”.
தாய் நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான
மைல்கள் தொலைவில், எளிதில்
சென்றடைய முடியாத தீவில்,
தனித்தனியே 15 அடிக்கு 8 அடி அளவில்
எந்தவித வசதிகளும் இல்லாத இந்த கொட்டடிகளில்,
வெளிச்சம் வர 10 அடி உயரத்தில் சிறிய கூண்டு
போன்ற இரும்பு சட்டம் போட்ட திறப்பு மட்டும் இருந்தது.
சிறைவாசிகள் சுமார் 700 பேர்கள் –
அத்தனை பேரும் தனித்தனியே
அடைத்து வைக்கப்பட்டார்கள். வெளி உலகத்துடன்
எந்தவித தொடர்பும் மறுக்கப்பட்டிருந்தார்கள்.
இதன் “உள்ளே” போனவர்கள் யாரும்
(மிகச் சிலரைத் தவிர)உயிருடன்
வெளியே வரவில்லை.






இவர்களின் ” வரவேற்பு” நிகழ்ச்சியில்
கலந்து கொள்ள ஆர்வமாக
எதிர்நோக்கி இருக்கிறேன் !
தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு பற்றி உங்கள் இடுக்கையேய் எதிர்பார்கிறேன் .
மட்டறுத்தலுக்காக…அப்படின்னா ??
சுத்த பட்டி காட்டானா இருக்கியேப்பா கருவாயா ?
அவங்கள புகழ்ந்து எழுதினா மட்டும் போடுவாங்க மத்ததெல்லாம் கட் பண்ணிடுவாங்க!
வருக நண்பரே,
மறுமொழிகள் வெளியாக – நீங்கள்
எழுதியவரை பாராட்டவும் வேண்டாம் –
பழிக்கவும் வேண்டாம்.
இடுகையில் உள்ள விஷயங்களைப் பற்றிய
உங்கள் கருத்துக்கள் வெளிப்படுத்தி
எழுதினால் போதும் !
என்ன … கொஞ்சம் நல்ல, நாகரீகமான,
தமிழைப் பயன்படுத்தினால் தேவலை !
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்