ஞானி – யார் ?

ஞானி – யார் ?

அறிவுஜீவுகள் என்று அழைக்கப்படுபவர்கள் –
அல்லது தங்களைத்தாங்களே  அப்படி நினைத்துக்
கொள்பவர்களில்  அனேகம் பேர்
(கவனிக்கவும் – அனைவரும் அல்ல )
கனவுலகிலேயே சஞ்சரிக்கிறார்கள்.
தங்கள் அறிவும் அனுபவமும் மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும்
என்பதை விட -மற்றவர்களை விட தாம் எந்த விதத்தில்  வித்தியாசமானவர்கள் என்பதை  நிரூபிக்கவே  அவர்கள் நேரத்தையும், சிந்தனையையும் அதிகமாக செலவழிக்கிறார்கள்.

எழுத்தாளர்  ஞானி  நன்றாக சிந்திக்கக் கூடியவர்.
நன்றாக  எழுதக்கூடியவர்.
அவர் எழுத்தை விரும்பிப் படிப்பவர்கள் நிறைய பேர்
இருக்கிறார்கள்.  ஆனாலும் பிரச்சினைகளை   வித்தியாசமான  கோணத்தில் எழுதினால்  தான் – தான் கவனிக்கப்படுவோம்
என்கிற நம்பிக்கையில்  பல  விஷயங்களைப் பற்றி
பொதுக்கருத்துக்கு   மாறாக  எழுதுவதையே  வழக்கமாகக்
கொண்டிருக்கிறார்.

ஏற்கெனவே  அவர் – ஆணும் பெண்ணும்  திருமணம்
செய்து கொள்ளாமலே சேர்ந்து   வாழ்வதை (living  in company)
ஆதரித்தும்,    ஒரே  பாலின (same gender sex –   gay  or lesbian)
உடலுறவு  வைத்துக்கொள்வதை  ஆதரித்தும்  எழுதியது
பழைய  கதை.   அண்மையில்  ராகுல் காந்தி சென்னை விஜயம்
வந்தபோது – சில பத்திரிகையாளர்களையும், சினிமா
நட்சத்திரங்களையும், அறிவுஜீவிகளையும் (?)
(ஞானியையும் சேர்த்து தான்)
வரவழைத்துப்  பேசியதன் விளைவாக – ராகுல் காந்தியை
நம்பிக்கை  நட்சத்திரமாக  அனுமானித்து எழுதியது  –
சில மாதங்களுக்கு முன்னர் நடந்தவை.

இப்போது அவர் லேடஸ்ட்டாக  எடுத்திருப்பது அன்னா ஹஜாரே
உண்ணாவிரதத்தையும்.  லோக்பால் சட்டத்தின்  தேவையின்மை
(ஆமாம் – தேவை இன்மை  தான்) பற்றியும்.
அவர் எதிர்பார்த்தது  போலவே  இது அவரது
வழக்கமான வாசகர்களை விட அதிக தூரம்
சென்றது.  இல்லை என்றால் நான் இந்த இடுகையை எழுத
முற்பட்டிருக்க மாட்டேனே !

கீழே இருப்பது ஞானி தன்னைப் பற்றி கூறுவது –

“மனித வாழ்வைத் தொடும் அனைத்தின் மீதும் எனக்கு உள்ள  அக்கறையே, பல தடைகளையும் மீறி என்னைத் தொடர்ந்து
இயங்க  வைக்கிறது.

என் கருத்துகளுக்காகப் பொங்கி எழுபவர்கள் எல்லாம்  உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக விஷயத்தைப் பார்க்க  வேண்டும்.”

எனவே  இயன்ற வரை  உணர்ச்சிவசப்படாமல்,
அறிவுபூர்வமாகவே –  அவரது கருத்துக்கள் என் பார்வையில்
எந்த அளவிற்கு தவறாகத் தோன்றுகின்றன  என்பதை
விவாதிக்க விரும்புகிறேன். என் கருத்துக்களை
ஆதரிப்பவர்களோடு, மறுப்பவர்களும் இருக்கலாம்.   அவர்களது மறுமொழிகளையும் வரவேற்கிறேன் –

—————————————————-
“”அன்னா ஹஜாரே ஒரு சமூக சேவகர், சீர்திருத்தவாதி
என்பதற்கு மேல் அவர் மீது எனக்குப்  பெரிய பக்தியோ மரியாதையோ இல்லை”

ஓடைகளுக்குக் குறுக்கே தடுப்பணைகள் தேக்கங்கள்
அமைத்து  நிலத்தடி நீரை மேம்படுத்தியது தான் அன்னா அங்கே செய்த சாதனை”
———————–
மிகப்பெரிய சாதனையாளரான அன்னா ஹஜாரேயை
சாதாரண சமூக சேவகர் வகையில் சேர்க்க ஞானி முயல்வது
அவரது நிச்சயமாக அறியாமை  காரணமாக அல்ல.
தன் வாதத்திற்கு வலு சேர்க்க வசதியாக
மற்ற விஷயங்களை  மறைத்து விட்டார். அன்னாவின்
சரித்திரம்  வலைத்தளத்தில் முழுமையாகக் கிடைக்கிறது.
சொந்த கிராமத்தை முன்னேற்றியதோடு நிற்கவில்லை அவர்.
மகாராஷ்டிராவில்  ஊழலுக்கு எதிராக பல தடவை
பெரும்போர்கள்  நிகழ்த்தியவர்.ஒவ்வொரு முறையும் அவர்
ஏந்திய ஆயுதம் உண்ணாவிரதம் மட்டுமே ! ஊழலை எதிர்த்து சிறைக்கும் போயிருக்கிறார்.
அவரது தொடர் முயற்சியின் காரணமாக அங்கு ஆளும்
கட்சியாக உள்ள சரத்பவாரின் தேசீயவாதி காங்கிரசின்
மூன்று ஊழல் அமைச்சர்கள்  பதவி விலக நேர்ந்தது.

இன்று நாம் அனுபவிக்கும் (right to information act )
தகவல் கோரும் உரிமைக்கு அஸ்திவாரம்
போட்டவரும் கட்டிடம் எழுப்பியவரும்  அவர் தான். அதன்
பலனாகத் தான் அரசாங்கத்தின் பல ஊழல்களை –
மும்பை அடுக்கு மாடி ஊழல்,
2ஜி அலைக்கற்றை  ஊழல்,
கலைஞரின் விருப்பப்படி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின்
வீடுகளை  வேண்டுபவர்களுக்கெல்லாம்  அள்ளிக்கொடுத்த
ஊழல் உட்பட  –
வெளிக்கு கொண்டு வர முடிந்தது.
இவற்றை  எல்லாம் சாதனை என்று ஞானி ஏற்க மறுப்பது
எப்படி என்று தான் எனக்குப்  புரியவில்லை.

————————————————————

“ஒரு காந்தியவாதியாகவும், அன்னா காந்தியத்தில் ஆழ்ந்த அறிவு  இருப்பவராக எனக்குத் தெரியவில்லை. ஊழல் செய்பவர்களை,  லஞ்சம் வாங்குபவர்களை தூக்கில் போட வேண்டும் என்று இந்த  வாரம் கூட பேசியிருக்கிறார். அசல் காந்தி ஒருபோதும் மரண  தண்டனையை ஆதரித்ததே இல்லை.”

இதைப்பற்றி அன்னாவே  விளக்கி இருக்கிறார்.
ஊழலைப் பொருத்த வரையில்  நான் காந்திஜியோடு,
சத்ரபதி சிவாஜியையும் சேர்த்து பின்பற்ற விரும்புகிறேன்
என்று.
தொடர்ந்து சகலவித ஊழல்களிலும் ஈடுபடும் சமூக விரோதிகளை,
எவ்வளவு முறை தண்டனை கொடுத்தாலும்  திருந்தாமல்
மீண்டும் மீண்டும் ஊழலில்  ஈடுபடுவர்களை – தூக்கில்
போட்டாலும் தவறு இல்லை என்பது அவரது கருத்து.
இந்த கருத்தை – ஊழல் அரசியல்வாதிகளையும்,
எதையும் குதர்க்கமாகவே பார்க்கும்
ஞானி போன்றவர்களையும் தவிர –
சாதாரண  பொது மக்கள் வரவேற்கவே  செய்கிறார்கள்.

———————————————————————

“பி.ஜே.பி முதலமைச்சர் மோடியை பாராட்டி அன்னா பேசியிருக்கிறார்.குஜராத் முஸ்லிம் படுகொலைகள்
பற்றியெல்லாம் அன்னா  பதறியதாக எந்த செய்தியும் நான் படித்ததில்லை”

குஜராத் கலவரத்தின் போது அன்னா அதை கண்டித்து தான்
பேசினார்.  இவையும்  தளத்தில் இருக்கின்றன.  அவர் அந்த
கால கட்டத்தில்  மகாராஷ்டிராவிற்கு வெளியே அதிகம்
அறியப்படாமல் இருந்ததால்  அவர் பேச்சுக்கு மீடியாவில்
முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அதனால் ஞானியும்
படிக்கவில்லை ! (இது யார் தவறு ?)

மேலும் அன்னா நரேந்திர மோடியைப் பாராட்டியது
குஜராத்தில் அவரது வளர்ச்சிப் பணிகளுக்காகவே.
இதையும் அவரே விளக்கி இருக்கிறார்.  இதையும்,
கூடவே பீகார் முதல்வர் நிதீஷ்குமாரையும்
அன்னா பாராட்டியதையும் ஞானி தன் சொந்த
சௌகரியத்திற்காகவே மறந்து ( மறைத்து ?) விட்டார் போலும் !
———————————————————————–

“1971, 1977, 1985, 1989, 1996, 1998, 2001, 2005, 2008 என்று பல முறை  திரும்பத் திரும்ப மக்களவையில் அந்த மசோதா கொண்டு  வரப்பட்டிருக்கிறது. அதற்கெல்லாம் அன்னா ஹசாரே காரணமல்ல.  அவர் எதிர்க்கிற அரசியல்வாதிகளேதான் கொண்டு வந்தார்கள்.”

ஞானியே  சொல்லி இருப்பது போல்  8 முறை
அரசியல்வாதிகளால் கொண்டு வரப்பட்ட
லோக்பால் மசோதா 42 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல், திரும்பத் திரும்ப  கைவிடப்பட்டதேன் ?
திருடனைப் பிடித்துக் கொடுக்க  திருடனே  சட்டம் கொண்டு வருவானா ?
அரசியல்வாதிகள்  கொண்டு வருவதாக
“பாவ்லா” காட்டினார்கள் – அவ்வளவு தான்.

உண்மையில் சட்டம் கொண்டு வர அவர்களுக்கு விருப்பம் இல்லை.
அதனால் தான் அன்னா இப்போதாவது அதை நிறைவேற்ற
வற்புறுத்தி போராட்டத்தில் இறங்க நேர்ந்தது.

———————————————————

“அன்னாவின் நான்கு நாள் உண்ணாவிரதத்தையடுத்து
மத்திய அரசு லோக்பால் மசோதாவை இறுதி செய்யும்
குழுவில் அன்னா விரும்பிய சுயேச்சையான அறிஞர்களை சம பலத்தில் சேர்த்துக் கொள்வதாக அறிவித்துவிட்டது.
உண்னாவிரதம் முடிந்தது.

இது ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கத்துக்குக் கிடைத்த
பெரிய வெற்றி என்று மீடியாக்கள் கொண்டாடுகின்றன.”

மீடியாக்கள் அதிகமாகக் கொண்டாடினாலும்
சம்பந்தப்பட்டவர்களும், விஷயம் தெரிந்தவர்களும்  கொண்டாடவில்லை என்பது
ஞானிக்கே  தெரியும்.  முதல் படி தாண்டப்பட்டது.
அவ்வளவு தான்.
—————————————————————————-
“இங்கேதான் என் சில கவலைகளை முன்வைக்க
விரும்புகிறேன்.
இதே போல மற்றவர்கள் உண்ணாவிரதம் இருந்து
ஒரு கோரிக்கையை அரசு முன்வைத்தால், அரசு
ஏற்றுக் கொண்டு விடுமா? நான்கு நாள்
உண்னாவிரதத்துக்கு அடிபணிந்த இந்திய அரசு, பத்து வருடமாக மணிப்பூரில் ஐரம் ஷர்மிளா இருந்து வரும்
( இப்போதும்..) உண்ணாவிரதத்தைப் பொருட்படுத்தாதது ஏன் ?”

ஞானி இந்த  கேள்வியைக் கேட்க வேண்டியது
அன்ன ஹஜாரே குழுவினரிடம் அல்ல –
காங்கிரஸ்  தலைமையிடமும்,  அவர் போற்றும்
ராகுல் காந்தியிடமும், மன்மோகன் சிங்
அரசிடமும்  தான்.  பதில் சொல்ல வேண்டியவர்களும்
அவர்கள் தான் !
——————————————————–

“உண்மையில் ஏற்கனவே ஊழலைத் தடுக்க, தண்டிக்க இருக்கும் சட்டங்கள் போதுமானவைதான். அசல் பிரச்சினை சட்டம் போதவில்லை என்பதே அல்ல. அவை நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதுதான்.”

இது அபத்தமான வாதம். இப்போது நடைமுறையில் உள்ள சட்டப்படி உயர் பதவியில் இருப்பவர்கள் மீது வழக்கு தொடர வேண்டுமானால், அரசாங்கத்திடம்( கவர்னர் அல்லது ஜனாதிபதியிடம்) அனுமதி
பெற வேண்டும். அப்படி தப்பித்தவறி அனுமதி கிடைத்தாலும், அதை விசாரிக்கும் சிபி ஐ  நிறுவனமும், அதைக் கண்காணிக்கும்
ஊழல் கண்காணிப்பாளரகமும் – மத்திய அரசின்
கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன.  ஊழல் வழக்குகளை தொடரவோ, விசாரிக்கவோ கால கெடு எதுவும் கிடையாது.

15 வருடங்களுக்கு முன்னர் லாலு பிரசாத், மாயாவதி, முலாயம் சிங்  யாதவ்  ஆகியோர் மீது  தொடங்கப்பட்ட விசாரணை/வழக்குகள்
முடிவே  கண்ணுக்குத் தெரியாமல் இன்னும்  தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.
தற்போதுள்ள  சட்டங்கள்  பல்லில்லாத
சட்டங்கள்  – குரைப்பதுடன் சரி – கடிக்க முடியாது.

எனவே தான் புதிய மசோதாவில் 2 வருட காலக்கெடு நிர்ணயிக்கப்படுகிறது. முதல் வருடத்திற்குள் விசாரணை முடிக்கப்பட
வேண்டும். அடுத்த வருடத்திற்குள் வழக்கு முடிந்து தீர்ப்பு அளிக்கப்பட்டாக வேண்டும்.

மேலும்,   உயர்பதவிகளில்  இருப்பவர்கள் மீது வழக்கு தொடர யாரிடமும் முன் அனுமதி வாங்க  வேண்டிய  அவசியம் இல்லை.
ஊழல்வாதிகள்  தப்ப முடியாத அளவிற்கு
புதிய சட்டத்திற்கு  வலிமை கொடுக்கப்படுகிறது.  எனவே  தான் எதையாவது செய்து இதைத் தடுக்க – பதவியில் உள்ளவர்கள்  படாத பாடு படுகிறார்கள்.

ஞானிக்கு உண்மையிலேயே  இந்த விவரங்கள்
தெரியாது எனில்  அவர் இத்தகைய  கட்டுரைகளை எழுத தகுதி இல்லாதவர்.
தெரிந்தே இப்படி எழுதுகிறார் என்றால் –
அவர் வாதம் விதண்டாவாதம் என்று தானே அர்த்தம் ?
———————————————————

“ஜனநாயகத்தில் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தேர்தலில் மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பும் பிரதிநிதிகளுக்கே சட்டம் இயற்றவும் நிர்வாகம் செய்யவும் அதிகாரம் உண்டு. அவர்களிடம் மற்றவர்கள் கோரிக்கை எழுப்பலாம். பரிந்துரைக்கலாம். இயற்றப்பட்ட சட்டம் தவறானதென்றால், நீதிமன்றம் சென்று போராடலாம். தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற அணுகுமுறை – அது காந்தியத் தடியாக இருந்தாலும், தவறுதான்.”

மீண்டும் மீண்டும் அதே தவறான அணுகுமுறை.

அன்னா ஹஜாரேயோ  அவரது ஆதரவாளர்களோ தங்களுக்கு
சட்டம் இயற்றும்  உரிமையைக் கேட்கவில்லை.  42  ஆண்டுகளாக
அரசியல்வாதிகள்  ஊழல் ஒழிப்பு சட்டத்தைக் கொண்டு வருவதாக  சொல்லிக்கொண்டே –  ஏமாற்றி கொண்டே வருவதால் – தாங்களே  ஒரு மாதிரி  சட்ட வடிவத்தைத் தயாரித்து  அரசிடம் அளித்து
அதை பரிசீலித்து, தாமதமின்றி  நிறைவேற்ற வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.  அவர்கள் தயாரித்தளிக்கும்  வரைவு  சட்ட
மசோதா வழக்கமான நடைமுறைப்படி கீழ்க்கண்ட  வழிகளில் பயணம் செய்தாக வேண்டும் –

முதலில்  மத்திய  அமைச்சரவை உரிய முறையில் பரிசீலித்து ஒப்புதல் அளிக்க வேண்டும்.

அடுத்து அது பாராளுமன்ற நிலைக்குழுவால்
(standing committee) பரிசீலித்து ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.

பின்னர் அது  பாராளுமன்றத்தின்  இரண்டு  சபைகளிலும் (லோக்சபாவிலும், ராஜ்ய சபாவிலும்) விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட  வேண்டும்.

பின்னர்  அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு சட்டமாக அறிவிக்கப்பட வேண்டும்.

இவற்றில்  எந்த நடைமுறையிலும் அன்னா  குறுக்கிடவில்லை.  இனியும், காலம் தாழ்த்தாமல்,  ஏமாற்றாமல்,  நாங்கள்  நிரம்ப
யோசித்து தயாரித்துக் கொடுக்கும் மாதிரி மசோதாவை பரிசீலித்து நிறைவேற்றும் வழியைப் பாருங்கள் என்று சொல்கிறார்.
அவ்வளவே .

இந்த  மசோதாவில் மாற்றம் செய்ய  அரசுக்கு, ஆளும் கட்சிக்கு, எதிர்க்கட்சிகளுக்கு  நிச்சயம்  உரிமை உண்டு.
ஆனால் –  தகுந்த காரணங்களோ,
நியாயமோ இன்றி  மாற்றினால் அவர்கள்
மக்களிடம் மாட்டிக்கொள்வார்கள்.
இதில்- இந்த யோசனையில்  என்ன குற்றம் காண முடியும் ?

————————————————————————–

இறுதியாக – ஞானிக்கு தெரியுமோ  தெரியாதோ !
மற்றபடி  பொதுமக்கள் அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக –
எனக்கு தெரிந்த  சில விவரங்களை கீழே தருகிறேன்.  விருப்பமும், ஈடுபாடும் உள்ளவர்கள்  அதில் பங்கும் கொள்ளலாம் –

இந்த வரைவு “ஜன் லோக் பால்” சட்ட மசோதா
அன்னா  ஹஜாரேயின்  படைப்பு அல்ல. அவர் ஒரு கிரியா ஊக்கியாகவே செயல்படுகிறார்.
பல குழுக்களும்,  பொதுமக்களும்,  சட்ட வல்லுனர்களும்,  அறிஞர்களும் சேர்ந்து தயாரித்த  மாதிரி சட்ட மசோதா இது.
இதை  தயாரிக்கும் முன்னர் அனைவரிடமிருந்தும்
வலைத்தளத்தின் மூலமாகவும், நேரடியாகவும்
ஆலோசனைகளை பெற்றார்கள்.

இப்போது இந்த சட்டவரைவு கமிட்டி அமைக்கப்பட்டவுடன்
மீண்டும் இதற்காக பொது மக்களிடமிருந்து  ஆலோசனைகளைப்
பெற  ஒரு வலைத்தளத்தை உருவாக்கி இருக்கிறார்கள் –
இந்த வலைத்தளத்தில் –
தயாரிக்கப்பட்டுள்ள  மாதிரி வரைவு மசோதாவை  வெளியிட்டுள்ளார்கள் –
http://www.lokpalbillconsultation.org
பொதுமக்கள், சமூக நல இயக்கங்கள், இப்படி யாராக இருந்தாலும், அவர்களுக்கு இது குறித்து
நல்ல யோசனைகள்  எதாவது இருப்பின் இந்த வலைத்தளத்திற்கு சென்று தங்கள் கருத்தைக் கூறலாம்.

கட்டுரை  நீண்டு விட்டது – தவிர்க்க முடியவில்லை  .
இறுதியாக  –
ஞானியின் அன்னா ஹஜாரே பற்றிய கட்டுரையின் மூலம்  அவரது எழுத்து வலிமையோ, அறிவுஜீவித்தனமோ வெளிப்படுவதற்கு பதிலாக  அவரது அகங்காரமும், ஆணவமும் தான் வெளிப்படுகின்றன. பொதுமக்களைக் குறித்தோ,  சமுதாய நலனைக்குறித்தோ
எத்தகைய அக்கரையையும் அதில் காணமுடியவில்லை.
நான் உங்களிடமிருந்து வித்தியாசமானவன், விசேஷமானவன்
என்று காட்டிக்கொள்ளும் முயற்சி மட்டுமே தெரிகிறது.

பொது நலனில் அக்கரை இல்லாத –
பொது நலனுக்கு விரோதமான எழுத்தை –
எவ்வளவு புத்திசாலித்தனமாக எழுதப்பட்டு
இருந்தாலும் என்னால் ஏற்க முடியவில்லை.

உங்களில்  பலரும் இந்த  கருத்தைத்தான்
கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
நான்  சரி தானா ?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, தமிழ், தேர்தல், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

12 Responses to ஞானி – யார் ?

  1. yatrigan's avatar yatrigan சொல்கிறார்:

    ஞானியும் மாட்டினாரா ?

    ஞானி சரக்குள்ளவர் தான் –
    ஆனால் நீங்கள் சொல்வது போல்
    “கனமும்” அதிகம் தான்.

    அவருக்கு இது தேவை தான் !

  2. viswamitra's avatar viswamitra சொல்கிறார்:

    அருமையான பதில்கள் காவிரி மைந்தன். நான் அண்ணா ஹசாரேயின் போராட்டத்தின் மீது பிற சந்தேகங்களைத் தெரிவித்திருந்த போதிலும், அவரது போராட்டத்தை சோனியாவும் மாவோயிஸ்டுகளும் தங்க்ளுக்குச் சாதகமாக கடத்திச் செல்கிறார்களோ என்ற என் அச்சத்தைத் தெரிவித்திருந்தாலும் அண்ணா குறித்தோ அவரது கோரிக்கைகள் குறித்தோ அவற்றின் அவசியங்கள் குறித்தோ எவ்வித குறையும் சொல்லவில்லை. ராகுல் போன்ற முதிர்ச்சியில்லாத மூடனின் வருகைக்காக இரண்டு மணி நேரம் கொஞ்சம் கூட சுய மரியாதை இன்றி காத்திருந்த ஞானி வேறு விதமாக எழுதியிருந்தால்தான் ஆஅச்சரியம். ஞானிக்கு ஜெயமோகன் தெளிவான ஒரு பதிலை எழுதியுள்ளார். இருந்தாலும் ஞானி போன்ற போலி அறிவு ஜீவிகளுக்கும் இந்திய விரோதிகளுக்கும் மூளையில் எதுவும் ஏறாது. குஜராத்தின் இன்றய வளர்ச்சிக்கு மோடி காரணம் இல்லை அது தானாகவே நடந்தது என்பது இந்த அறிவுக் கொழுந்து கண்டு பிடித்துள்ள மற்றுமொரு அரிய கண்டுபிடிப்பு. ஜன்நாயகம் குறித்தும் உரிமைகள் குறித்தும் பேசத் தகுதியில்லாத ஒரு மனிதர் இந்த அஞ்ஞானி. தனனை விமர்சித்தால் கேஸ் போடுவேன் என்று திண்ணை இணைய இதழை மிரட்டிய ஜன்நாயகவாந்திதான் இந்த ஞானி

    விஸ்வாமித்ரா

  3. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    ஞாநி சில தவறுகள் செய்திருக்கிறார் என வைத்துக்கொண்டால் கூட,அவர் மேல் உங்களுக்கு இந்த க்ஷாத்திரம் ஏன்,விஸ்வாமித்திரரே?
    உங்களுக்கு,சோனியா,ராகுல்,மு.க போன்றவர்கள் மேல் உள்ள கோபத்தை விட,ஞாநி மேல் அதிகமாக உள்ளதாக தோன்றுகிறதே!
    இதுதான் நம் நாட்டில் உள்ள பெரும்குறை.
    கொள்ளைக்காரர்களும்,கொலைகாரர்களும் ஒற்றுமையாக இருப்பார்கள்.நல்ல எண்ணம கொண்டோர் ஒருவரை ஒருவர் ஏசிக்கொண்டு இருப்பர்.

  4. RAVICHANDRAN G's avatar RAVICHANDRAN G சொல்கிறார்:

    ஞானி யின் எழுத்துக்களை படிப்பவர்களெல்லாம் அவருடைய விருப்பத்தை ,ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கின்ற கட்டாயம் இல்லை.ஞாநியின் இந்த செயல் ,தன் மதிப்பை தானே குறைத்துக்கொள்வது ஆகும்.அதை நாம் ,பொருட்படுத்த தேவையில்லை.

  5. Kalyan's avatar Kalyan சொல்கிறார்:

    மிக மிக அருமையான பதிவு. தொடர்க உங்கள் பணி.

  6. thiru's avatar thiru சொல்கிறார்:

    You tied the bell to the Cat. The day is not far off for people to ignore GNANI….

  7. Sivashankar's avatar Sivashankar சொல்கிறார்:

    ஞாநி மட்டும் அல்ல மொத்த பத்திரிக்கை துறை மேல் மக்களுக்குள்ள நம்பிக்கையும் போய் கொண்டிருக்கிறது. ஞாநி ராகுல் காந்தியை ஆதரிப்பதும், அன்னாவை எதிர்ப்பதும் நிச்சயம் அவரது வழக்கமான வித்தியாசமான முயற்சி என்று தோன்றவில்லை. “கவர்”வாங்கி கொண்டு எழுதியது போல் தான் தோன்றுகிறது. ஊரே கொள்ளை போகும் போது ஆற்று நீரை யார் மொண்டு குடிச்சா என்ன என்ற போக்கு தான் இது.

  8. ashok's avatar ashok சொல்கிறார்:

    I was thinking off, someone need to put break for Gani (Kooni)…he was writing something which many people dislike, and some of his friends in media is encouraging……..thanks for this nice comments about him

  9. Ponraj Mathialagan's avatar Ponraj Mathialagan சொல்கிறார்:

    ஞானியோட லாஜிக் ரொம்ப சிம்பிள். நீங்கள் வடக்கே போனால், அவர் தெற்கே போவார். நீங்கள் தி.மு.க என்றால், அவர் அதிமுக என்பார். நீங்கள் புலிகள் என்றால் அவர் ராஜபக்ஷே என்பார். நீங்கள் ராஜபக்ஷே என்றால் அவர் புலிகள் என்பார். அவ்வளவு தான் விஷயம். “பொது இடத்தில் ஒரு மனிதனை கடிக்க வந்த ஒரு சொறிநாயை கொன்றார் ஒரு தீரப் பெண்” என்று நீங்கள் எழுதினால் “ஒரு தீவிரவாதியை கையும் களவுமாக பிடிக்க முயன்ற ஒரு அப்பாவி நாயினை கொன்ற முஸ்லீம் பெண்” என்று ஞானி எழுதுவார். விஷயம் என்னவோ ஒன்று தான். ஆனால் அவர் தன்னை முன்னிருத்துவதற்காக யாரையும் முன்னிருத்துவார் என்பது தான் உண்மை.இப்படியும் சில ஜென்மங்கள்.

  10. bandhu's avatar bandhu சொல்கிறார்:

    நூற்று நூறு உங்கள் கருத்துக்களுடன் ஒத்து போகிறேன்! இது எல்லா ‘அறிவு ஜீவி’ களுக்கும் கிட்ட தட்ட பொதுவானது. தாங்கள் எப்போதும் கவனிக்கப்படவேண்டும் என்ற பேராசையின் விளைவுதான் இது!

  11. praveen's avatar praveen சொல்கிறார்:

    Hi,

    I think u r not a good writer,dont post any wrong information about any writer to get a name…think youself about what u speak…we always like gnani and his writings..u people always want to get a fame…

  12. பிரபாகர்'s avatar பிரபாகர் சொல்கிறார்:

    இது மட்டுமல்ல ஈழப் பிரச்சினைகளிலும் அவரது நிலைப்பாடு மற்றும் இந்திய அரசை அவர் எதுவும் குறைபடாமல் விமர்சிக்காமல் இருப்பது ராகுளையும் ஸ்டாலினையும் தூக்கிப் பிடிப்பது போல இன்னும் சில விசயங்களை சீரணிக்க முடியவில்லை.

    ஈழப் பிரச்சினை என்பது மத்திய அரசின் கீழ வரும் வெளியுறவுத்துறையின் செயல்பாட்டால் எவ்வாறு கையாளப்பட்டது என எப்போதாவது விமர்சித்திருப்பாரா அல்லது ஆதரித்துதான் எழுதியிருப்பாரா?

    ஆனால் விஷயம் உள்ளவர்தான் அவரது சில நிலைப்பாடுகள் பொருந்தி வருவதில்லை.

    பல சமயம் தோன்றுவது அவர் காங்கிரஸ்காரரோ என்று.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.