………………………………………………………………………..

………………………………………………………………………..

………………………………………………………………………..
சுமங்கலி பிரார்த்தனை என்பது, பெண்களால், தங்கள் கணவர் உயிரோடு இருக்கும்போதே,
தாங்கள் – மஞ்சள், குங்குமத்தோடு சுமங்கலியாகவே போய் விட வேண்டும் என்பதற்காக நடத்தப்படுவது …. இந்தக் கதையில் – ???
…………………………………………….
மஞ்சள்நீரில் கால்கழுவி, குங்குமம் இட்டுப் பூச்சூடிக் கொண்ட பெண்டுகள் அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்ட உடன், பட்டுப் பெரியம்மா “ஷ்…” என்று எல்லோரையும் அமைதிப்படுத்தினாள். உதடுகள் நோக்கி அவள் விரல் பயணிக்கும் பொழுதுக்குள் அங்கு அமைதி நிலவிவிட்டது. குழந்தைகள் எல்லோரும் வாசலில்தான் விளையாடிக் கொண்டிருந்தனர். ஹாலில் பேசிக்கொண்டிருந்த ஆண்களையும் ஒருத்தி அமைதிப்படுத்தினாள்.
அறையின் சுவாமி அலமாரிக்குப் பக்கத்தில் சிவப்பு நிறப் புடவை. சிவப்பு என்றால் அப்படி ஒரு சிவப்பு. அதிலிருந்து சிவப்பு ஒளி சிதறி அந்த அறையை நிரப்புவது போல இருந்தது. நீளவாக்கிலான நோட்டுப் புத்தகம்போல மடிக்கப்பட்டிருந்த அந்தப் புடவைக்கு பெரியம்மா அழகாய் அலங்காரம் செய்திருந்தாள். சிவப்பு நிறத்துக்கு எடுப்பான பச்சை மரகதம் பதித்த நகைகள், சிவப்பும் வெள்ளையும் மாறி மாறித் தொடுத்த கனகாம்பர மாலை. புடவைக்கு மேல் பார்டரில் சந்தனமிட்டு பொட்டு வைத்திருப்பதைப் பார்க்கும் போது, அது வெறும் புடவை என்று தோன்றவில்லை. மாறாக ஏதோ தேவியின் திருமுகம் போலத் தோன்றியது.
“அகல்யா… அகல்யா…”
பட்டு உரத்த குரலில் அழைத்துக் கைகளைத் தட்டினாள்.
“சொர்ணா… சொர்ணா…”
சில நொடிகள் விட்டு மீண்டும் கைதட்டினாள்.
“கற்பகம்… கற்பகம்…”
மீண்டும் கைதட்டல்.
மாமியின் அழைப்புகள் சுவரில் மோதி, ‘ரும்’ என்ற ஒலிச்சேர்க்கையுடன் எதிரொலித்தன.
மாமி குரலை உயர்த்துவதற்காகச் செருமிக் கொண்டாள்.
“அறிந்தும் அறியாதவங்க…
தெரிந்தும் தெரியாதவங்க…
ஒரு பானை சோத்துக்கு உள்பட்டவங்க…
யாராயிருந்தாலும் வாங்க” என்று சொல்லி கைகளை பலமாகத் தட்டினாள்.
கதவு திறந்துகொண்டது.
முதல் பெண் எதிரில் வந்தாள். மாமி அவளை நெருங்கினாள். எல்லோரும் அந்தப் பெண்ணின் முகத்தையே பார்த்தனர். அவள் முகம் ஒளியேறி இருந்தது.
“யாரு நீங்க… அகல்யாவா…” அந்தப் பெண் பதில் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டினாள். அந்த வீட்டுப்பெண் அகிலாவுக்கு உடல் சிலிர்த்தது. அவள் அகல்யா பாட்டியைப் பார்த்திருக்கிறாள். அகல்யா பாட்டி அவ்வளவு அழகு, அவ்வளவு அமைதி. அகிலா மட்டும்தான் இந்தத் தலைமுறைப் பெண்களில் அகல்யா பாட்டியைப் பார்த்திருப்பவள்.
அகல்யா பாட்டி என்றதும் அவளுக்கு எப்போதும் நெய் மணக்கும் அவள் கரங்கள்தான் நினைவுக்கு வரும். குழந்தையாக இருந்தபோது அவள் பாட்டியின் கரங்களை அடிக்கடி வாசனை பிடித்தபடி இருப்பாள். அவள் எப்போது தூங்குவாள், எப்போது எழுந்திருப்பாள் என்பது யாரும் அறியாத ரகசியம்.
சூரிய உதயம் தாண்டியும் உறங்கிய ஒருநாளில் அவள் இறந்திருந்தாள்.
பட்டுப் பெரியம்மா ஒவ்வொருவரையாக அழைத்து விசாரித்து அமரவைத்தாள்.
“எல்லாருக்கும் நலுங்கிட்டு… சாப்பிடச் சொல்லுங்கோ” என்று சொல்லிவிட்டு பால்கனிக்குப் போனாள். அங்குதான் பட்டுப் பெரியம்மாவின் கணவர் மூர்த்தி அமர்ந்திருந்தார். வேலை மும்முரத்தில் அவரை மறந்திருந்தாள்.
மாமாவிடம் மாமி கொஞ்சம் உரக்கத்தான் பேச வேண்டியிருந்தது. “ஏண்ணா… காப்பி சாப்ட்டேளா… பசிக்கிறதா…” சொல்லிக் கொண்டிருக்கும்போதே அகிலாவின் அம்மா கமலா பின்னால் வந்து நின்றாள்.
“அக்கா, அத்திம்பேருக்கு ஏற்கெனவே மூணு காபி ஆச்சு. போதும். பெண்டுகள் எழுந்ததும் நான் உனக்கும் அவருக்கும் சாதம் போடுறேன். சாப்ட்டுருங்கோ. பத்து நிமிஷம் ரெஸ்ட் எடுங்கோ. கால் டாக்ஸி சொல்றேன். மூணு மணிக்கு முன்னமே ஆத்துக்குப் போயிடலாம். புரியறதா.”
மூணு மணிக்கு பட்டுவின் பேரனின் ஸ்கூல் வேன் வந்துவிடும். தெரு முனையிலேயே இறக்கிவிட்டு விடுவான். வரும்போது யாரும் இல்லை என்றால் அந்த டிரைவர், மருமகள் கிரிஜாவுக்குப் போன் செய்வான். அதுதான் பிரச்னை. அவளோ என்ன ஏது என்று தெரியாமல் கத்துவாள்.
“ஆத்துல என்ன பண்ணிண்டுருக்கேள்… அங்க எம்புள்ள நடுத்தெருவுல நிக்கிறான்.”
பட்டுவுக்கு சகலமும் கசந்துபோகும்.
‘என் புள்ளைங்கிறவளுக்கு உங்க பேரன்’னு சொல்ல வாய்வரலையே. என்னவோ நரம் பில்லாத நாக்கு’ – பட்டு தனக்குள்ளாகவே மருகிக்கொண்டாள்.
கமலா பட்டுவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“கமலா, நான் வாக்கப்பட்டு வந்தபோது எனக்கு வயசு பதினஞ்சு. அன்னிலேர்ந்து எம் மாமியார் போறவரைக்கும் ஒரு நாள்கூட எனக்கு அவகூட சண்டைன்னு வந்ததில்ல. என்னை அவ ஒரு சொல் கடிஞ்சிண்டதும் இல்ல. ஆனா, இன்னிக்கு எல்லாம் மாறிடுத்து. பெரியவா, சின்னவா எதாவது சொல்லிடு வாளோன்னு பயந்து பயந்து நடக்க வேண்டியிருக்கு.”
கமலா எதுவும் பேசவில்லை. தேவையில்லாமல் ஏதாவது சொல்லப்போய் பட்டுவின் மன வருத்தத்தைக் கிளறி விட்டுவிடக் கூடாது என்று நகர்ந்து போனாள்.
பட்டு கிரிஜாவை நினைத்துக்கொண்டாள்.
`கிரிஜா கெட்ட பெண் இல்லை. கொஞ்சம் துடுக்கான பெண். எதையும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்று பேசுகிற ரகம். வெளில போய் ஆம்பளைக்கு சமானமா சம்பாரிக்கிறா. காசு சம்பாரிக்கிறதுன்னா லேசுக் காரியமா. எவ்வளவு வேலைகள், டென்ஷன்கள், சங்கடங்கள்… எல்லாம் பொறுத்துண்டாத்தான் சம்பளம். புரியறது… அதுக்காக அடுத்தவாள தூக்கியடிச்சுப் பேசுவானேன்’ என நினைத்துக்கொண்டாள்.
பட்டுவின் மனம் காற்றில் ஆடும் விளக்கின் சுடரைப்போல் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது.
சூடாக சாதம் பரிமாறும் வாசனை காற்றில் மிதந்து வந்தது. “பொண்டுகள் எல்லாம் இருந்து நிதானமா சாப்பிடணும்னு சொல்லிப் பரிமாறுங்கோ…” – பட்டு இருந்த இடத்திலிருந்து குரல் கொடுத்தாள்.
சுமங்கலிப் பிரார்த்தனைக்கு வருவதை எவ்வளவோ சொல்லி மறுத்துப் பார்த்தாள் பட்டு. ஆனால், கமலா பிடிவாதமாக, `நீ வந்தால்தான் ஆயிற்று. நீ வரலேன்னா நான் பொண்டுகளே பண்ணல’ என்றாள் நிர்தாட்சண்யமாக.
‘இதென்ன வம்பு. இருக்கும் பாவம் போதாதென்று பித்ருக்கள் பாவத்தை வேறு கட்டிக்கொள்ள வேண்டுமா.’
பட்டு, ‘சரி’ என்று சொன்னாள்.
இதுகுறித்து பட்டு வீட்டில் பேசினாள்.
“அம்மா, நீங்க எப்போ பாரு அவ ஆத்துல இது, இவ ஆத்துல அதுன்னு சொல்றேள். ஆபீஸ்ல இதெல்லாம் சொன்னால் சரி லீவு எடுத்துக்கோன்னு சொல்லுவானாக்கும்? சரிம்மா… நீ ஆத்தோட இருந்துக்கோன்னு வான்.”
கிரிஜாவின் பதில் பட்டுவுக்குக் கோபத்தை வரவைத்தது.
“என்ன அப்படிச் சொல்லிட்ட… கமலா ஒண்ணும் வேத்து மனுஷியில்ல. என் அம்மாவும் அவ அம்மாவும் கூடப் பொறந்தவா. பங்காளிகள்தான். ஒரு பானை சோத்துக்கு உள்பட்டவாதான்.”
“சரிம்மா. சரிம்மா. ஆனா, லீவு இல்லையே. உங்க புள்ளையக் கேட்டேளா, அவர் லீவு போட முடியுமான்னு விசாரிச்சேளா?”
அவன்தானே? இவளாவது நின்று பேசுகிறாள். அவன் எப்போதும் அந்த செல் போனைக் கட்டிக்கொண்டு அழுகிறான். எல்லாம் தலையெழுத்து.
பட்டு காலையில் எழுந்து அவர்களுக்குச் சமைத்துவைத்து கைக்கு வேண்டியதையும் கட்டிவைத்து, பதினோரு மணிக்கு குடிக்க மோர் கரைத்துவைத்து, எல்லாம் ஏழரை மணிக்குள்ளாய் தயார் செய்துவிட்டாள். பேரனுக்கு யாரோ சொல்லியிருந்தார்கள்.
“பாத்தி, நீ கமலா பாத்தி வீத்துக்குப் போறியா, நானும் வரவா…” பிள்ளைகளுக்குக் குறைந்திருக்கும் பாசமும் அன்பையும் சேர்த்து பேரப்பிள்ளைகளுக்கு வைத்துவிட்டான் பகவான். பட்டு அவனைக் கட்டிக்கொண்டாள். இந்தப் பிள்ளையிடம், ‘ஆமாம்’ என்று சொன்னால் அவ்வளவுதான். ஸ்கூல் கிளம்ப மாட்டான். அழைத்துப்போனால் கமலாவும் சந்தோஷப்படுவாள். ஆனால், கிரிஜா சம்மதிக்கணுமே.
“இதோ பாருங்கோ, நீங்க எங்க வேணா போங்கோ. அவனை இழுக்காதீங்கோ” என்றாள். பட்டு பேரனை அழைத்து வரும் எண்ணத்தைக் கைவிட்டாள்.
பட்டு, ஆத்துக்காரர் முகத்தைப் பார்த்தாள். பசி வந்து விட்டதுபோல. முகம் வாடியிருந்தது. குழந்தையாட்டம்… ஒருகணம் பசி பொறுக்காத மனிதர். அவளுக்கு அவரைப் பார்க்கவே பாவமாக இருந்தது.
இப்படித்தான் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஏ பிளாக்கில் ஒரு மாமி வீட்டில் பஜனை. ஞாயிற்றுக்கிழமை தானே, இரண்டு பேரும் இருக்கிறார்களே என்ற நம்பிக்கையில்தான் சமையலை முடித்துவிட்டுக் கிளம்பினாள் பட்டு. கூடவே பேரனும்.
அவனை அழைத்துப் போவது மகிழ்ச்சிதான். ஆனால், கொஞ்ச நடையிலேயே, ‘பாத்தி தூக்கு’ என்பான். நாலு அடியிலேயே மூச்சு வாங்கும். சொன்னால் விடமாட்டான். வேறு வழியின்றி அழைத்துப் போவதாயிற்று.
திரும்ப வரும்போது மணி இரண்டு. கிரிஜாவும் மகனும் ஆளாளுக்கு ஒரு லேப்டாப் போடு அமர்ந்திருந்தனர்.
சாப்பிட்டார்களா, இல்லையா என்று சந்தேகத் தோடு சமையல் கட்டுக்குள் சென்று பார்த்தாள். சமைத்தது அப்படியே இருந்தது.
‘அப்படியானால் இவர்…’ – பட்டு விரைவாக தன் அறைக்கு ஓடினாள்.
கண்ணில் நீர் வடிய அந்த மனுஷன் தரையில் படுத்துக் கிடக்கிறார்.
முன்பெல்லாம் தானே எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிட்டுவிடும் மனுஷன் தான். இப்போதெல்லாம் ரொம்பவே முடியவில்லை.
எதையாவது கொட்டிக் கிளறி விடுவோமோ என்று தனக்கே பயம் வந்தாகி விட்டது. அவர் தானாய்ச் சாப்பிடுவதில்லை. சரி, ஒரு குரல் கொடுத்து, ‘சாப்பாடு போடு’ன்னு கேட்கக் கூடாதோ.
‘வீட்டில் இருக்கும் பெரியவர் களுக்குப் பசிக்கிறதா இல்லையா என்று ஒருவேளை கூட விசாரிக்க நேரமில்லாமல் உழைக்கிறவர்களை என்ன சொல்ல.
வாயில்லாப் பூச்சிபோல வாய்விட்டுக் கேட்காமல் தன்னால் மருகிக்கொண்டு கிடக்கிறாரே இந்த மனுஷன். அவர்கள் பிள்ளையை அழைத்துப்போய் அதற்கு உரிய காலத்தில் பூஜைக்குப் போன வீட்டிலேயே சாதம் கேட்டு வாங்கி ஊட்டிப் பசியாற்றித்தானே கூட்டி வந்தேன். இங்கு என் கணவரைப் பட்டினி கிடக்க விட்டு விட்டார்களே’ என்று பட்டு வுக்கு கோபம் வந்தது.
அவளால் தன்னைக் கட்டுப் படுத்திக்கொள்ள முடிய வில்லை. ஹாலுக்கு வந்து ஒரு சப்தம் கொடுத்தாள். இரண்டுபேரும் காலையிலிருந்து குளிக்கவே இல்லை. இரவு உடையோடு அப்படியே வந்து நின்றார்கள். பட்டு நன்றாகத் திட்டித் தீர்த்தாள். கிரிஜா அதை உணர்ந்தவளாகவே இல்லை.
பட்டு பாதி பேசிக்கொண்டிருக்கும்போதே உள்ளே போய் உடை மாற்றிக்கொண்டு வந்தாள். பின்னாலேயே பையனும் கிளம்பினான். இரண்டுபேரும் சொல்லிக்கொள்ளாமல் வெளியே கிளம்பிப் போயினர். குழந்தையை அழைத்துக்கொண்டு கூடப் போகவில்லை. அவர்களுக்குத் தெரியும் பிள்ளை அவர்களிடத்தில் இருப்பதைவிட சௌகர்யமாகவும் சந்தோஷமாகவும் இங்கு இருப்பான் என்று.
‘சமைத்துப்போட பிள்ளையைப் பார்த்துக் கொள்ள சம்பளமில்லாத வேலையாளா என்ன…’ பட்டுவுக்கு மனம் விட்டுப்போயிற்று. இதென்ன வாழ்க்கை, இதைவிட ஏதாவது ஆதாரவற்றோர் இல்லத்தில்போய் இருந்து விடலாம் என்று தோன்றியது. உள்ளே இருந்த வந்த பேச்சு சத்தம் நினைவுகளைக் கலைத்தது.
பெண்டுகள் சாப்பிட்டு எழுந்தாயிற்று. பட்டு அவர்களை உபசரித்தாள். அவர்களுக்கு தாம்பூலம் தர ஏற்பாடு செய்தாள். அவர்களில் ஒருத்தியோடு வந்த சின்னப்பெண்ணுக்குப் பேரன் வயதுதான் இருக்கும். பட்டுப் பாவாடையில் ரோஜாப்பூ போல இருந்தது. தூக்கிக் கொஞ்சினாள் பட்டு. எல்லோரும் கிளம்ப பட்டுவும் மூர்த்தியும் சாப்பிட்டு எழுந்தனர்.
சொன்னாற்போல கால் டாக்ஸி தயாராய் இருந்தது. மூர்த்தி மெள்ள அடியெடுத்து வைத்துக் காரில் ஏறி அமர்ந்து கொண்டார். பட்டுவும் ஏறி அமர்ந்தாள். கமலா, பட்டுவின் கையைக் கோத்துக் கொண்டாள்.
“பட்டு நீ வந்தியா கண்டு எல்லாம் நல்லபடியா முடிஞ்சது. இல்லைன்னா நான் திண்டாடிப் போயிருப்பேன்.”
“இதுல என்ன இருக்கு. நாமளா நடத்துறோம். பெரியவா நம் மூலமா அவாளுக்குத் தேவையானதை அவாளே நடத்திக்கிறா…”
“சரிதான்க்கா, அவா ஆசீர்வாதம்தான் நம்மள நல்லமாதிரி வச்சிருக்கு. நம்ம பித்ருக்கள்ல எல்லாரும் சுமங்கலிப் பொண்டுகள்தான். எங்கம்மா அகல்யா அடிக்கடி சொல்லுவா, இந்தப் பரம்பரைப் பெண்களுக்கெல்லாம் பூவும் பொட்டும் நிரந்தரம்னு. அது நமக்கும் வாய்க்கணும்னு தானே வேண்டிக்கிறோம்.”
பட்டு ஒரு நொடி பேசாமல் இருந்தாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் உருண்டது. கமலா பதறிப்போனாள்.
“அக்கா என்ன ஆச்சு சின்னக் கொழந்தையாட்டம்… ஏன் அழற…”
“வேணாம்டி எனக்கு அந்த பாக்கியமே வேண்டாம்.
நான் இருக்கிறப்பவே அவர் வயறக் காயப்போட்டுக் கண்ணீர் விட்டுப் பார்த்தாச்சு. உசுரோட இருந்தேன். கண்ணீரைத் தொடச்சு விட்டு சாதமும் போட்டுத் தேத்தினேன்.
அதுவே நான் இல்லைன்னா… ??
வேணாம்டி, எனக்குப் பின்னாடி அவர் இருந்து வயத்துக்கு இல்லாமச் சீரழிய வேணாம்.
ஒரு க்ஷணமானாலும் அவர் முன்னாடி போயிடணும். அதுதான் நேக்கு சந்தோஷம். அதத்தாண்டி இன்னிக்கு பெண்டுகள்ட்டயும் நான் மனசார வேண்டிண் டேன்.”
பட்டு கதவைச் சாத்தினாள்….கார் கிளம்பியது. ( நன்றி – இல.சைலபதி, விகடன் தளம் …)
……………………………………………………………………………………………………………………………………………………



கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…