பட்டினத்தார் ….!!!

……………………………………….

……………………………………

……………………………………….

தமிழ்பேசிய பண்டைய சிவபக்தர்களில் முக்கியமானவர் பட்டினத்தார், அவர் சித்தர் வரிசையிலும் உண்டு. ஆழமான தத்துவ போதனைகளை, வாழ்வின் நிலையாமையினை, இன்பங்களின் மாயையினை , லவுகீக மயக்கங்களை மிக மிக எளிய மொழியில் பாடி வைத்தவர் அவர்…

ஈசனின் அடியாராக ஒரு கோவணம் மட்டும் கட்டி கையில் கரும்போடு பாரதமெங்கும் சுற்றிவந்து பெரும் ஞானபாடல்களை தந்தவர், அவர் அளவு எளிமையான வகையில் ஒவ்வொரு பிரதான சிவாலயங்களிலும் நின்று அவர் பாடிய பாடல்கள் சிவபெருமையும் வாழ்வின் மயக்கத்தை தாண்டிவரும் போதனையும் தந்தவர் எவருமில்லர்

ஞானகடலில் மூழ்கி அவரெடுத்த முத்துக்கள் கொஞ்சமல்ல, என்றும் சிவனுக்கான பாடல்களிலும் வாழ்க்கை போதனைகளிலும் அவை மகத்தான இடம் கொண்டிருக்கும், அந்த ஞான விளக்கு கோடிகணக்கான மக்களுக்கு வழிகாட்டி கொண்டே இருக்கும்

அவரின் வாழ்வு பல திருப்பங்கள் நிறைந்தது, அற்புதம் பல நிறைந்தது, சுத்தமான சிவனடியாரின் சரியான வாழ்வு, எந்த தராசிலும் முள் சரியாக காட்டும் துறவு வாழ்வு

அவர் பின்னாளில் கடலில் மூழ்கிய காவேரிபூம்பட்டினத்தின் பெரும் வணிகர், செட்டியார்களில் தலைவர்போல் அப்பக்கம் இருந்தவர் , சொந்த ஊர் திருவெண்காடு எனினும் அவரின் தொழில் பூம்புகாரில்தான் இருந்தது

அவர் திருவெண்காடார் என அழைக்கபட்டார், காவேரி பூம்பட்டினத்தில் பெரிய வணிகர் என்பதால் பட்டணத்தார் என்றும் அழைக்கபட்டார்

எல்லா செட்டியார்களை போலவே பெரும் தனவானகவும், சிவநேச செல்வராக இருந்தவர்க்கு பெரும் குறை ஒன்று இருந்தது அது வாரிசு இல்லை, கப்பல் கப்பலாக வந்த தங்கமெல்லாம் வீட்டில் கொட்டி கிடந்ததே தவிர சோற்றை அள்ளிவீசி விளையாட குழந்தையில்லை

எப்போதும் செட்டியார்களின் சாபம் இது அதற்கு அவரும் அக்காலமே தப்பவில்லை, குழந்தையில்லா செட்டியார்கள் சுவீகாரமெடுப்பது வழக்கம், இது பற்றி அவர் சிந்தித்துகொண்டிருக்கும் போதே திருவிடை மருதூர் கோவிலில் இருந்து ஒரு ஆண் குழந்தை கிடைத்தது

அதை சுவீகாரமாக பெற்றுவந்தவர் மிக மிக செல்லமாக வளர்த்தார், பதிவிரதையான அவர் மனைவியும் அவரும் அக்குழந்தையினை உலகம் என கண்டார்கள், அவனும் வளர்ந்தான்

உரியவயதில் அவனை தொழிலுக்கு பழக்கினார் திருவெண்காடார், கப்பலில் அவனை அயல்நாட்டுக்கு அனுப்பிவைத்தார், அவனும் மாபெரும் செல்வத்தொடு திரும்பினான்

வந்தவன் ஒரு பெட்டியினை கொடுத்துவிட்டு சில நாட்கள் கழித்து திறக்கும்படி சொல்லிவிட்டு, இனி என்னை தேடாதீர்கள் என சொல்லி சென்றான், சென்றவன் காணாமலே போனான்

திருவெண்காடார் மனமுடைந்தார் எங்கு தேடியும் அவனை காணமுடியவில்லை, அப்படியே அவருக்கு இனி வாரிசு இல்லாதவர் எனும் பெயரும் உண்டாயிற்று

பழுத்த மரத்தை பறவைகள் சுற்றுவதுபோல், தளர்ந்த யானையினை நரிகள் சுற்றுவதுபோல் அவரின் திரண்ட செல்வத்துக்காய் சொந்தங்கள் சுற்றின, ஒவ்வொருவரின் சாகசத்திலும் அவர் மனம் வெறுத்துபோனார்

அவர் மனம் நிம்மதியினை தேடிற்று, இருக்கும் ஒரே வாழ்க்கையினை மிகுந்த நிம்மதியாக தொல்லையின்றி கழிக்கும்படி நாடிற்று , அவர் மனம் விரக்தி வெறுப்பில் சிக்கிற்று

கொட்டி கிடந்த தங்கம் அவருக்கு நிம்மதி கொடுக்கவில்லை, உலகெல்லாம் ஒடி திரவியத்தை கொட்டிய கப்பல்களும் அவருக்கு நிம்மதி தரவில்லை, அவர் மனம் எதையோ தேடி தேடி அலைந்தது

ஒருநாள் அந்த மகன் கொடுத்த பெட்டியினை திறந்து பார்த்தார் அதில் “காதறுந்த ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே” என எழுதபட்டிருந்தது…

திரண்ட செல்வம் குவித்து வைத்தாலும் உடைந்த ஊசி கூட உன்னுடன் கடைசிவரை வராது என அதற்கு பொருள் உணர்ந்தார்

அப்படியானால் கடைசி வரை வருவது எது என தேடினார், அது சிவம் என கண்டு கொண்டவர் சிவாலயம் தோறும் சென்று வேண்டினார், சிவனை சிக்கென பிடித்து கொண்டார்

ஆனால் அவரின் சொத்துக்களுக்காக விரட்டும் கூட்டம் விரட்டி கொண்டே இருந்தது, அவர்களிடமிருந்தெல்லாம் தப்பி ஓடிகொண்டே இருந்தார், அவர்கள் இலக்கு அவர் அல்ல …. அவரின் சொத்துக்கள் ஏதாவது கோவிலுக்கு சென்றுவிட கூடாது என்பதில் இருந்தது

சொத்துக்காக பாசம் காட்டிய அக்கூட்டத்தில் சொந்த தங்கையே அப்பத்துள் விஷம் வைத்து தன்னை கொல்லபார்த்தபோது மனமுடைந்து போனார் …..”தன்வினை தன்னை சுடும், வீட்டப்பம் ஓட்டைசுடும்” என எரிந்துவிட்டு தாயிடம் சென்றார்

தான் சன்னியாசம் வாங்குவதை சொன்னார், மனைவியும் அவருக்கு விடை கொடுத்தார்

தாய் அவருக்கு தடையாய் இருக்க விரும்பவில்லை, இங்கிருந்தால் இக்கூட்டம் சாக கூட அடித்துவிடும் அதனால் அவன் எங்காவது செல்லட்டுமென முடிவெடுத்தார், சிறு துணியில் அரிசி கொஞ்சம் கட்டி இது எப்போது அவிழுமோ அப்போது நான் இறந்திருப்பேன் கடமை செய்ய வந்துவிடு என கண்ணீரோடு சொன்னார்

கோவணம் கட்டி இடுப்பில் அன்னையிட்ட முடிச்சுடன் திருவோட்டுடன் நகர்ந்தார் , எந்த ஊரில் தங்க ரதத்தில் மன்னர்போல் வந்தாரோ அதே ஊர் வேடிக்கை பார்க்க தெருவில் கோவணம் கட்டிய ஆண்டியாய் நடந்தார்

ஒவ்வொரு ஊர் சிவனாக தரிசித்து யாசகம் பெற்று உண்டபடி காசி நோக்கி சென்றார், திருவோடு மட்டும் அவருக்கு சொந்தமாய் இருந்தது

எல்லா ஆசையினையும் வென்றவர்க்கு திருவோட்டு ஆசை போகவில்லையே என சிலர் பரிகசித்ததும் அதையும் தூர வீசினார்,

ஒருநாள் வயல்வரப்பில் தலைவைத்து படுத்திருந்தார், எல்லாம் துறந்தவனுக்கு தலைவைத்து படுக்கும் சுகம் கேட்கின்றது தன்னைபற்றி யார் என்ன சொல்கின்றார்கள் எனும் ஆசையும் இருக்கின்றது என சிலர் சொல்லி செல்ல அவர் திடுக்கிட்டார்

இன்னும் பற்றற்ற நிலைக்கு சென்றார், கோவணதாரியாய் கரும்பினை கையில் வைத்து கொண்டார்

அதன் அர்த்தம் கரும்பு தோப்பு அப்படியே எரிந்தால் அது நாசம், அந்நேரம் எல்லோரும் அழுவார்கள்…

சக்கையாய் பிழிந்து சருகான பின் எரிந்தால் கவலைபட ஒன்றுமில்லை, அப்படி மானுடன் வாழும் காலத்திலே தன்னுள் இருக்கும் இறைவனை அறியவேண்டும் என குறிப்பால் போதித்தார்…

தேசமெங்கும் சுற்றியவர் உஜ்ஜைனி கோவிலில் படுத்திருந்தபோதுதான் அந்நாட்டு மன்னன் மாறுவேடத்தில் வந்து அங்கு படுத்திருந்தான் அவன் மன்னன் என யாருக்கும் தெரியாது

அவன் விக்ரமாதித்தன் போல் பெரும் அரசன், எதிரிகள் இல்லா வலுவான அரசன், அவன் பெயர் பத்ருஹரி…

பெரும் ரசனைக்காரன் அதுவும் பெண்களிடம் மூழ்கி கிடந்தவன், அவன் எழுதிய “சிருங்கார சதகம்” எனும் பாடல்கள் அங்கு காமசூத்திரம்…

அப்படியானவன் அங்கு மாறுவேடத்தில் பெண்களுடன் கூடியிருக்கும் பாடல்களை பாடி கொண்டிருந்தான்.

பட்டினனத்தார், பெண்கள் மாயைகள் அவர்களை தாண்டி ஈசனை நாடு என பதிலுக்கு பாடினார்…

இந்த பாடல் போட்டியில், ஒருகட்டத்தில் எல்லா பெண்களுக்கும் இருமனம் உண்டு அவளை முழுக்க நம்பாதே என பட்டினத்தார் பாட, அப்படியானால் அரசனின் மனைவிக்குமா என இவர் பாட “ஆமாம், பெண்ணென வந்துவிட்டால் ஏழை என்ன ராணி என்ன எல்லாரும் ஒன்றே, எல்லா பெண்ணுக்கும் இருமனமே” என இவர் பாட மன்னன் கொந்தளித்தான்…

தன் உருவம் கலைத்தவன் “நாட்டின் ராணியினை அவமானபடுத்திய இவனை நாளை காலை கழுவில் ஏற்றுங்கள்” என உத்தரவிட ஆங்காங்கே மாறுவேடத்தில் மறைந்திருந்த அவனின் வீரர்கள் பட்டினத்தாரை பிடித்துச் சென்றார்கள்

உஜ்ஜைனி காள காளேஸ்வரரிடம் சென்று தலையாட்டிவிட்டு “எல்லாம் உன் விருப்பம்” என சொல்லி அவர்களோடு சென்றார் பட்டினத்தார்.

மாளிகை வந்த மன்னன் கொதிப்பில் இருந்தான்… அந்நேரம் அவனின் ஆசை நாயகிகளில் ஒருத்தி ஒரு அபூர்வ கனி ஒன்றை கொடுத்தாள், அதை கண்டவன் ஆத்திரத்தில் அலறினான்…

காரணம் அது காலையில் அவனுக்கு ஒரு முனிவர் கொடுத்த கனி. அதை தன் மனைவிக்கு கொடுத்துவிட்டு அவன் வெளியே சென்றிருந்தான் அவள்மேல் அவன் கொண்டிருந்த மயக்கம் அப்படி…

அவளோ தனக்கு இருக்கும் இன்னொரு நாயகன் மூலம் கிடைத்தது என்றாள். அவளை போக சொல்லிவிட்டு அவன் ராணியினை தேடி சென்றான், அவன் நகர்வலம் சென்றதை அறிந்த ராணி அவன் வரமாட்டான் என கருதி அவளுக்கு பிடித்த குதிரைகாரனை சந்திக்க சென்றாள்…

அங்கே குதிரைகாரனுடன் அவள் குலவுவதை கண்ட மன்னனுக்கு நெஞ்சே வெடித்தது, நாடாளும் ராணி குதிரைக்காரனுக்கு சேவகம் செய்து கொண்டிருந்ததை கண்டவன் வாய்விட்டு அலறினான்.

அவள் ஓடிவந்து பணிந்தாள் …அழுதாள் … நடித்தாள்… அவன் மேல் பழி சொன்னாள்

மன்னன் விரக்தியாய் சிரித்தான், கையிலிருந்த கனியினை காட்டினான் அதை அவனுக்கு கொடுத்ததை அவள் ஒப்புகொண்டாள்.

குதிரைகாரன் அக்கனியினை தன் தனிநாயகிக்கு கொடுத்ததை சொன்னான், மன்னன் விசாரிக்க தொடங்கினால் தலை சுற்றிற்று.

அந்த குதிரைகாரனின் அணுக்கி அதை மந்திரிக்கு கொடுக்க மந்திரி தனக்கு மந்திரமிட்டவளுக்கு கொடுக்க பின் அதுசேனாதிபதிக்கு செல்ல அவன் தன் பணியாட்களில் ஒருத்திக்கு கொடுக்க, அவள் இன்னொரு சமையல்காரனுக்கு கொடுக்க அவன் தன் அணுக்கியிடம் கொடுக்க கடைசியில் மன்னரிடம் வந்தது….

முக்கால் வாசி அரண்மனை அவன் முன்னால் நின்றது … !!!

அவன் ராணியினை கண்டான், கனிகளை கைமாற்றிய பெண்கள் எல்லோரையும் கண்டான், அப்படியே பார்த்து கொண்டிருக்கும் போது “பெண்களை நம்பாதே, எல்லோர்க்கும் இருமனம் உண்டு” என்ற அந்த குரல் கேட்டது

ஆத்திரமானவன் மனைவியினை அங்கே வெட்டிபோட்டான்.

பின் தலையில் அடித்தபடி அந்த அடியாரை கொல்ல சொல்லிவிட்டோமே என அலறியபடி கொலைக் களத்துக்கு ஓடினான்

அங்கே பட்டினத்தார் அவர்போக்கில் இருந்தார்….காரணம் அவரை தூக்கிலிட்ட மரம் எரிந்தது, கயிறு அறுந்தது என காரணம் பல சொன்னார்கள்.

மன்னன் அவர் பாதம் பணிந்தான்….நடந்ததை அறிந்தவர் அவனை நோக்கி புன்னகைத்தார்.

பத்ருஹரி எனும் மாமன்னன் அந்த இடத்தில் அவரின் சீடரனான்.

அவனும் அரண்மனை துறந்தான் அலங்காரம் இழந்தான் அரையாடை அணிந்தான் நெற்றியில் நீறு பூசினான், வெறும் காலோடு அவர் பின்னால் நடந்தான்

இருவரும் காசி முதல் எல்லா இடங்களும் தரிசித்தபோது பட்டினத்தாரின் இடுப்பில் இருந்த முடிச்சு கொஞ்சம் அவிழ்ந்தது.

“உன் கர்மா நீ முடித்துவிட்டாய், என் கர்மா நான் முடிக்கவேண்டும்” என்றவர் அவனோடு தன் ஊருக்கு வந்தார், அங்கே அவர் தாய் இறந்திருந்தாள்.

அவளுக்குரிய கடமையினை அவர் செய்யும் போது மனமொடிந்து போனார். அப்படியே ஒடுங்கிப் போனார்…அந்நேரம் ஒரு வெட்டியான் வந்து அவருக்கு நீர் கொடுத்து தலை தடவி ஆறுதல் சொன்னான், அவர் அவனை நோக்கும் போதே அவன் மறைந்தும் போனான்

அது திருவிடை மருதூர் மகாலிங்கம் என்பதை அறிந்தவர் தலையாட்டி கொண்டார், தாயின் இழப்பை பாடல்களாலே பாடிவிட்டு திருவிடை மருதூர் கோவில் வாசலில் கிடந்தார்… பத்ருஹரி அவர் பக்கம் அமர்ந்து கொண்டான்.

அந்நேரம் ஒரு நாய்குட்டி வந்து பத்ருஹரியிடம் ஒட்டி கொண்டது, பட்டினத்தார் அதை வளர்க்க சொன்னார் அவனும் சில மாதம் வளர்த்தான். அவன் உண்ணும் திருவோட்டு சோற்றில் அதுவும் பங்கு கொண்டது

சில மாதங்களில் அவன் திருவோடு தவறுதலாகபட்டு அது செத்துவிட்டது, அவன் பட்டினத்தாரை நோக்கினான்

“அது உன் மனைவி, மறு பிறப்பாய் வந்து உன்னிடம் பிச்சை வாங்கி கர்மம் தீர்த்தாள், எல்லாம் கழிந்தது” என்றார்.

திருவிடை மருதூரிலே தங்கினார் பத்ருஹரியார்…. பட்டினத்தாரிடம் தமிழ்கற்று அழியா ஞான பாடல்களை கொடுத்தார், தத்துவத்தில் அவற்றை மிஞ்ச யாருமில்லை

அவை பத்ருஹரியார் பாடல்கள் என இன்றும் உண்டு….

திருவிடை மருதூர் ஆலயத்திலே தங்கி கர்மம் கழித்து சிவனோடு கலந்தார் பத்ருஹரியார், உஜ்ஜைனியில் பெரும் அரசனாக இருந்தவன் ஒரு சிவனடியாராக திருவிடை மருதூரில் சிவனோடு கலக்கும்படி அவன் விதி இருந்தது அது பட்டினத்தார் வடிவில் நடந்தது.

பின் பெரும் சிவனடியாராய் பழுத்த பழமாய் சிவாலயம் தோறும் சென்றவர், திருகாளத்திக்கு மீண்டும் செல்லும் போது திருவொற்றியூரில் காலமானார் பட்டினத்தார்…..இன்றும் அவர் சமாதி அங்கு உண்டு

பட்டினத்தாரும், பத்ருஹரியாரும் தமிழக சிவனடியார்களில் மறக்க முடியாதவர்கள் மறக்க கூடாதவர்கள்

மண்ணாசை, பொன்னாசையால் மனம் வெறுத்து இந்த இரு ஆசைகளும் ஒரு மனிதனை எப்படி மயக்குகின்றன என்பதை மனதால் உணர்ந்து, இது மனிதனை கொலை செய்யவும் வைக்கும் உடன் பிறந்தவனையே கொல்ல வைக்கும் என்பதை உணர்ந்து வாழ்வை வெறுத்து சித்தரானவர் பட்டினத்தார்.

பெண்களே இன்பம், தான் படைக்கபட்டதே பெண்களை ரசிக்க என அவர்களை நம்பி அங்கே உழன்று கொண்டிருந்த பத்ருஹரி பெண்ணாசை துறந்து சித்தரானார்….

இருவர் பாடல்களிலும் படிக்க ஏராளம் உண்டு, பின்னாளில் வந்த எல்லா ஞான தத்துவ பாடல்களுக்கும் இவர்கள் இருவருமே முன்னோடி.

அருணகிரிநாதரின் பாடல்கள் முதல் பின்னாளைய சித்தர் பாடல்கள் அனைத்தும் இவர் தொடங்கி வைத்த பாணியே…

மண்ணாசை, பொன்னாசை, பொன்னாசை, புகழாசை என எல்லா ஆசைகளையும் தாண்டி ஈசனை அடையுங்கள் என பாடிவைத்த அந்த பட்டினத்தாரை மறக்கமுடியாது….

கவியரசர் கொடுத்த எல்லா ஞான தத்துவபாட்டும் பட்டினத்தாரின் மூலபாடலை கொண்டது, கண்ணதாசன் பட்டினத்தாரை மனமார வணங்கினார்

ஆடி உத்திராட நட்சத்திரநாள் பட்டினத்தாருக்கு குருபூஜை …!!! ( உதவி – வலைத்தளம் …. )

………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக