ஆணாவது, பெண்ணாவது, குடும்பமாவது – என்ற ஒரு பெண்ணின் சரித்திரம் …..!!!

……………………………….

……………………………

……………………………………….

ஆண்-பெண் -செக்ஸே தேவையில்லை என்று ஒருவர் தத்துவம் பேசினால், அவரது கதி என்னாகும் … ? அபத்தமான கருத்துகள், அப்போதைக்கு பரபரப்பை ஏற்படுத்தலாமே தவிர, உருப்படியான விளைவுகளை விளைவிக்காது என்பதற்கான ஒரு உதாரணம் ஷூலமித் பயர்ஸ்டோன் –

ஆண்-பெண் சமத்துவம் என்பது வேறு … அது வரவேற்கத்தக்கது….. ஆனால், இவர் வலியுறுத்தியது அதையல்ல…..

1970-ல் “பாலின முரண்பாடுகள்” (The Dialectic of Sex) எனும் அந்தப் புகழ்பெற்ற நூல் வெளிவந்தது. அதை எழுதியவர், 25 வயதே ஆன யூத பெண்ணியவாதியான ஷூலமித் பயர்ஸ்டோன் (Shulamith Firestone).

ஷூலமித் மிகவும் கட்டுப்பாடான ஒரு யூதக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர். தன் தந்தையும், தன் சமூகமும் தன் மீது திணித்த கட்டுப்பாடுகள் அனைத்திற்கும் அடிப்படைக் காரணம் ‘குடும்ப அமைப்பு’தான் என்பதை அவர் கண்டறிந்தார்.

மனித வரலாற்றின் முதல் ஒடுக்குமுறை வர்க்கமே ஆண்–பெண் பிரிவுதான்; பெண்களின் அடிமைத்தனத்திற்கு அடிப்படைக் காரணம் பொருளாதாரம் அல்ல, மாறாக உயிரியல் ரீதியான இனப்பெருக்கம்தான் என்று அந்த நூல் வாதிட்டது.

மனிதன் நிலவில் காலடி எடுத்து வைத்த அந்தக் காலகட்டத்தில், தொழில்நுட்ப வளர்ச்சி குடும்ப அமைப்பையே மாற்றிவிடும் என்று அவர் நம்பினார். வருங்காலத்தில் செயற்கைக் கருப்பைகள் உருவாகும்; ஆண்களின் தேவையே இல்லாமல் குழந்தைகள் பிறக்கும் என்று கணித்தார்.

இதனால் திருமணத்தின் தேவை குறையும்; “தந்தை”, “தாய்” என்ற பாரம்பரிய அடையாளங்கள் மறையும். குழந்தைகள் ஒரு பெரிய சமூகக் கூட்டு அமைப்பால் வளர்க்கப்படுவார்கள்; குடும்பம் என்ற நிறுவனம் முற்றிலுமாக பலவீனமடையும் என்றார்.

அவர் எழுதிய காலத்தில் இவை யாவும் தீவிரமான கற்பனைகளாகவே பார்க்கப்பட்டன. அக்காலப் பெண்ணிய இயக்கங்கள் “சம ஊதியம்”, “பணிப் பாதுகாப்பு” போன்ற கோரிக்கைகளுக்காகப் போராடிக் கொண்டிருந்தபோது, வெடிகுண்டு போல வந்து விழுந்த இந்த நூல் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியது.

முதலில் இது அறிவியல் புனைகதையா அல்லது பெண்ணிய நூலா என்று புரியாமல் பலர் குழம்பினர்.

விமர்சகர் ஒருவர் இதனை, *”மார்க்ஸும் ஃபிராய்டும் ‘ஸ்டார் ட்ரெக்’ (Star Trek) பார்த்த பிறகு எழுதிய புத்தகம் போல இருக்கிறது”* என்று வர்ணித்தார்.

இன்று அதன் விற்பனை விவரங்கள் துல்லியமாகத் தெரியவில்லை என்றாலும், அக்காலத்தில் அதிகம் விற்பனையான (Best Seller) நூல்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. 1970களில் கேட் மில்லட்டின் Sexual Politics நூலோடு இணைந்து, தீவிரப் பெண்ணியத்தின் (Radical Feminism) இரு முக்கிய தூண்களாக வரலாற்றாசிரியர்கள் இதைக் குறிப்பிடுகிறார்கள்.

25 வயது இளம் பெண் ஒருவர், தனது முதல் நூலின் மூலமாகவே அமெரிக்க அறிவுசார் மற்றும் அரசியல் விவாதங்களின் மையப்புள்ளியாக மாறினார். ஆனால், புகழோடு சேர்த்து சிக்கல்களும் அவரைச் சூழ்ந்தன.

அவரது கருத்துக்கள் முதன்மைச் சிந்தனைகளில் இருந்து மிகவும் விலகியிருந்ததாலும், அவருக்கு 25 வயதே ஆகியிருந்ததாலும், அவரது தலைமையை ஏற்கப் பலர் தயங்கினர்.

மற்ற பெண்ணிய இயக்கங்கள் முன்வைத்த “சம ஊதியம்”, “சம உரிமை” போன்ற கோரிக்கைகள் எல்லாம் இவருக்கு மிகச் சாதாரண விஷயங்களாகத் தெரிந்தன. “குடும்ப அமைப்பையே வேரறுக்கப் போராடுவதை விட்டுவிட்டு, எதற்காக எதிரிகளிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறீர்கள்?” என்பதே அவரது காரசாரமான கேள்வியாக இருந்தது.

இதன் விளைவாக, பெண்ணிய அமைப்புகள் மெதுவாக அவரை ஒதுக்கின; அல்லது அவரே அவற்றிலிருந்து விலகிக் கொண்டார் என்றும் கூறலாம்.

அதன்பின் அவர் வேலைக்குச் செல்லாமல், திருமணம் செய்யாமல், குழந்தைகளோ, துணையோ இல்லாமல் சமூக வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாகத் தனிமைப்படுத்திக் கொண்டார். பல ஆண்டுகள் வறுமையிலும் ஏழ்மையிலும் கழிந்தன. ஒரு பெரும் அரசியல் புரட்சியை ஏற்படுத்தக் கனவு கண்டவர், தன் அன்றாட வாழ்க்கையை ஓட்டவே போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

காலப்போக்கில் ஷூலமித் பயர்ஸ்டோன் யார் என்பதையே உலகம் மறந்துபோனது.

எப்போதாவது அவரது நூலை வாசிக்கும் யாரோ ஒருவர், “இப்போது ஷூலமித் எங்கே இருக்கிறார்?” என்று தேடிப் புறப்படுவார்.

நியூயார்க்கின் ஏதோவொரு சிறிய அடுக்குமாடி குடியிருப்பில், காப்பகத்தில் எனத் தேடி அலைந்து, தனிமையில் வாடும் அவரை எட்டிப் பிடித்துப் பேட்டி எடுப்பார்கள். அது ஏதோ ஒரு சிறிய இதழில் வெளியாகும்; அதற்குப் பின் மீண்டும் அவர் மறதிக்குள்ளாவார்.

தன் வாழ்நாளிலேயே செயற்கைக் கருவூட்டல், விந்து தானம், ஒற்றைப் பெற்றோர் (Single Parenting) போன்ற தன் நூலில் கணித்த பல விஷயங்கள் நடைமுறைக்கு வருவதை ஷூலமித் கண்டார். அதைத் தன் கண்களால் பார்த்தபோது அவரது மனதில் என்ன ஓடியிருக்கும்? அதை யாரறிவார்!

2012

நியூயார்க்கில் அவர் வாழ்ந்த குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, பல நாட்களுக்கு முன்பே இறந்து அழுகிய நிலையில் அந்தப் பெண்மணியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

தனிமையில் வாழ்ந்து, தனிமையிலேயே மடிந்து, யாருடைய கவனமும் இன்றி அவர் கிடந்தார். இறந்தவர் யார் என்று விசாரித்தபோதுதான்,

அது ஒருகாலத்தில் உலகையே உலுக்கிய ஷூலமித் பயர்ஸ்டோன் என்பது தெரியவந்தது.

அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக The New Yorker இதழில் “Death of a Revolutionary” (ஒரு புரட்சியாளரின் மரணம்) என்ற புகழ்பெற்ற கட்டுரை வெளியானது. அதில் எழுத்தாளர் ஒரு கனத்த கேள்வியைக் கேட்டிருந்தார்:

“ஒரு இயக்கத்தையே மாற்றியமைத்த சிந்தனையாளர்களை நாம் கொண்டாடுகிறோம். ஆனால், அவர்கள் மனதளவில் உடைந்துபோகும்போது யார் அவர்களைக் கவனித்துக் கொள்கிறார்கள்?”

இயல்புப்படி பார்த்தால் குடும்பம்தான் கவனித்திருக்க வேண்டும்; ஆனால் அவரோ குடும்ப அமைப்பே வேண்டாம் என்றவர். அப்படியென்றால் அவர் சார்ந்த இயக்கமாவது கவனித்திருக்க வேண்டாமா?

ஆனால், இயக்கங்களுக்கு ஆயிரம் லட்சியங்களும் கொள்கைகளும் இருக்கின்றனவே தவிர, ஒரு தனிமனிதனின் தனிமையையும் துயரத்தையும் சுமந்து செல்லும் பொறுப்போ, ஈவிரக்கமோ அதற்கு இருப்பதில்லை. ( உதவி – The Monstrous Regiment of Women & நியாண்டர் செல்வன் …)

…………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக