……………………………………………………..

…………………………………………………….
அமெரிக்காவின் சூழ்ச்சியில் சிக்கி – செத்துபோன பல நாடுகளின் தலைவர்களின் பட்டியலில் முக்கியமானவர்கள் – ஈராக்’கின் சதாம் ஹுசேனும், லிபியாவின் கடாபியும் …. கடாபி கொல்லப்படும் முன்னரே
நான் எழுதிவைத்து, பிரசுரிக்கப்படாமல், இடுக்கில் எங்கேயோ சிக்கியிருந்த ஒரு இடுகை இப்போது எதேச்சையாக காணக் கிடைத்தது….
அப்படியே பதித்தால் தான் சுவையாக இருக்கும் என்பதால்,
மாற்றம் எதுவும் செய்யாமல் அப்படியே கீழே பதிவிடுகிறேன்.
கடாபி கொல்லப்பட்டு விட்டார் என்பதை மட்டும் நினைவில்
கொண்டால் போதும் ….!!!
………………………………………………………….…
சுடச்சுட லிபியாவும், முவம்மர் கடாபியும் ! (தமிழ் நாட்டுடன் எதிலாவது ஒப்பிட முடியுமா … ?)
புரட்சி வெடித்துக் கொண்டிருக்கும் லிபியாவையும்,
அதன் (இன்றைய தினம் வரை)சர்வாதிகாரியான
முவம்மர் கடாபியைப் பற்றியும் சில சுவையான
தகவல்கள் !
ஆப்பிரிக்காவின் வடகோடி.
வட எல்லையில் மத்திய தரைக்கடல்.
சூடானுக்கும் – எகிப்துக்கும்,
இடையில் அமைந்திருக்கிறது -லிபியா.
(அது தானோ என்னவோ, சூடானையும்
எகிப்தையும் அடுத்து இங்கும் புரட்சி
வெடித்திருக்கிறது !)
18 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு –
(இந்தியாவின் பரப்பளவு சுமார் 33 லட்சம் சகிமீ.)
ஆப்பிரிக்க கண்டத்தின் 4வது மிகப்பெரிய நாடு,
உலக அளவில் 17வது பெரிய பரப்பளவுள்ள நாடு.
ஆனால் -நாட்டின் மொத்த மக்கள் தொகையே
சுமார் 57 லட்சம் மட்டுமே.
(சென்னை நகரத்தை விட குறைவு !)
29 வயதில் ராணுவப் புரட்சியின் மூலம்
ஆட்சியைப் பிடித்தபோது – இப்படி இருந்தவர் –

70 வயதில் – இப்படி …!!!

முவம்மர் கடாபி –
1969, செப்டம்பர் 1-ந்தேதி ரத்தம் சிந்தாத
ராணுவ புரட்சியின் மூலம் மன்னர் இட்ரிசைத்
தொலைத்து விட்டு 29 வயதில் ஆட்சியைக்
கைப்பற்றியவர், 41 வருடங்களாக தொடர்ந்து
ஆட்சியைத் தன் இரும்புப் பிடிக்குள்
அடக்கி வைத்துக்கொண்டிருக்கிறார்.
அரபு தேசியம் என்றும்,
இஸ்லாமிய சோஷலிசம் என்றும்,
மக்களின் நேரடிக் குடியரசு என்றும்,
பலவிதமாக தன் அரசை சித்தரித்துக்
கொண்டிருக்கிறார்.
பஞ்சாயத்துக்களுக்கு மட்டும்
தேர்தல் நடத்துகிறார் !
நவீன குடியரசு என்று
சொல்லிகொண்டே 41 ஆண்டுகளாக
சர்வாதிகாரம் செய்து கொண்டிருக்கிறார் !
சஹாரா பாலைவனத்தையும் உள்ளடக்கிக்
கொண்டு- அபரிமித்மான எண்ணை வளத்தால்
மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் நாடு.
இரண்டு மனைவிகள்.
எட்டு வாரிசுகள் (7 பையன்கள், 1 பெண்).
அத்தனை பேருக்கும் அரசில் பங்கு !
மூத்த மகன் முஹம்மது அல் கடாபி –
லிபியா ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர்.
2வது மகன் சைப் அல் இஸ்லாம் கடாபி –
அரசாங்கத் தரப்பில் ஒரு பெரிய தர்ம ஸ்தாபனத்தை
நிர்வகித்துக் கொண்டிருக்கிறார்.
3வது மகன் சாதி கடாபி. புட்பால் விளையாடத்
தெரியாத ஆனால் தேசிய புட்பால்
கழகத்தின் தலைவர் !
ஒரு மூத்த ராணுவ தளபதியின் மகளை
மணந்து கொண்டிருக்கிறார்.
4வது மகன் முடாசிம் கடாபி – லிபியா ராணுவத்தில்
உயர்ந்த பதவியை வகிக்கிறார்.நாட்டின் மிக உயர்ந்த
பதவியான – தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
பதவி இவருடையது தான்.
5வது மகன் ஹன்னிபால் கடாபி.
நாட்டின் எண்ணை வளம் முழுவதையும்
மேற்கொண்டிருக்கும் கம்பெனியை
இவர் தான் நிர்வகிக்கிறார்.
6வது மகனான சைப் அலி கடாபியும்,
7வது மகனான காமிஸ் கடாபியும் நாட்டின்
போலீஸ் நிர்வாத்தை கவனிக்கிறார்கள்.
அவரது ஒரே மகளான – ஆயிஷா அல் கடாபி
ஒரு வழக்குரைஞர். நாட்டின் நீதி நிர்வாகத்தில்
முக்கிய பங்கு வகிக்கிறார். முரண்டு பிடிக்கும்
சகோதரர்களை சமாதானப்படுத்துவது
இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கிய பொறுப்பு !
இதில் முக்கியமான விஷயம் – கடாபியின் குடும்பம்
முழுவதும், ராணுவ பாரக்ஸில் தான் வசிக்கிறது
( பாதுகாப்பு ? )
கடாபிக்கு ஆகாயத்தில் – கடலுக்கு மேல் -பறப்பது
என்றாலே பயம். தரை வழியாக பயணிப்பதையே
விரும்புவார். அவருடையை உக்ரேனிய பெண் நர்ஸ்
இல்லாமல் எங்கும் பயணிக்க மாட்டார்.
தனக்குத் தானே ஏகப்பட்ட பட்டங்கள் கொடுத்துக்
கொண்டிருக்கிறார் !
தனக்கு தானே தன்னுடைய படம் போட்ட
தபால் ஸ்டாம்புகளைகூட
வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் !
சில புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார்.
அதை எழுதியது தான் தான் என்றும் சொல்கிறார் !
கடாபியை பற்றிய இன்னொரு சுவாரஸ்யமான
விஷயம் –
அவரது “அமேசானியன் கார்ட்ஸ்” என்று
பெயர் கொண்ட
சொந்த பாதுகாப்பு படை.
40 உறுப்பினர்களைக் கொண்ட இந்தப் படை
முற்றிலும் திருமணமாகாத இளம்பெண்களை
கொண்டது. (ஆண்களை அவர் முழுவதுமாக
நம்புவதில்லை !)
இவர்கள் அத்தனை பேரும் கடாபியால்
நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு,
ராணுவத்தில் விசேஷ பயிற்சி பெற்றவர்கள்.
சகலவிதமான நவீன ஆயுதங்களையும்
கையாள்வதில் சிறந்தவர்கள்.கமாண்டோக்கள் !
சிறப்பாகச் சொல்ல முடியா விட்டாலும்,
மக்கள் வறுமையில் வாடுவதாகச் சொல்ல
முடியாது. மற்ற ஆப்பிரிக்க நாடுகளுடன்
ஒப்பிட்டால் லிபியா ஓரளவு வசதியாக
இருப்பதாகத்தான் சொல்ல வேண்டும்.
பெரிய அளவில் தொழில்கள் இல்லா விட்டாலும்,
இருக்கின்ற மிகப்பெரிய எண்ணை வளம்
நாட்டிற்கு கை கொடுக்கிறது.
(பாதிக்கு மேல் கடாபியின் குடும்ப உறுப்பினர்களால்
சுரண்டப்பட்டு, வெளிநாடுகளில் சொத்துக்களாக
குவிக்கப்படுகிறது )
சரி – லிபியாவில் மக்கள் ஏன் புரட்சி
செய்கிறார்கள் ??
பின் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரே சர்வாதிகாரியை
பார்த்துக் கொண்டிருப்பதாம் …. ? 😊😊😊
(சரி -தலைப்பில் கேட்டிருந்தேனே –
இதில் எந்த விஷயத்தை தமிழ் நாட்டுடன்
ஒப்பிட முடியும் ? சொல்லுங்கள் பார்ப்போம்.)
பி.கு.
கடாபி தன் அரசியல் எதிரிகளை தீர்த்துக் கட்ட
என்று அரசாங்க செலவிலேயே
ஆயுதப் பயிற்சி பெற்ற,
ஒரு பிரெஞ்சு,
ஆப்பிரிக்க கூலிப்படை வைத்திருக்கிறார்.
அவர்களை தன் ஆதரவாளர்கள் என்றும்
கூறுகிறார்.
அவரை எதிர்த்துக் கிளர்ச்சி செய்யும் மக்கள்
மரியாதையாக தங்கள் எதிர்ப்பை நாளைக்குள்,
கைவிடா விட்டால், தன் ஆதரவாளர்கள்
பொங்கி எழுந்து கிளர்ச்சியாளர்களை
வீடு வீடாகப் புகுந்து தாக்குவார்கள் என்று
தொலைக்காட்சி மூலமாகவே எச்சரித்திருக்கிறார் !
– ராட்சஷன் !!!
………………………………………………………………………………………………………………………………………..



நிஜமான சாமியாரா இல்லை ….