‘உனக்கு முன்னாடி நான் போயிட்டா…’ – கணவன்/மனைவி சொல்லிக் கொள்வது பத்தாம்பசலித்தனமா .. ?… பகுத்தறிவா?

……………………………….

…………………………………………………….

பத்து வருடத்துப் பழைய புடவையென்றாலும் அந்த இஸ்திரி கடையின் பெரிய பிடிபோட்ட பித்தளை இஸ்திரிப் பெட்டியின் கீழே ஒருமுறை போய் வந்ததும் புதுசு போல ஆகிவிடும். அவசரமாக ஒரு சட்டையை இஸ்திரி செய்வதற்காக வருபவர்கள், கஞ்சி போட்ட துணிகளை மட்டும் இஸ்திரி செய்ய வருபவர்கள், பழைய வாடிக்கையாளர்கள் மூலம் சிபாரிசு செய்து வரும் புதிய வாடிக்கையாளர்கள், தொலைவாக வீடு மாறி போன பின்னும் காரில் வந்து வாரம் ஒருமுறை மூட்டைத் துணியை கொண்டு வருபவர்கள் என பல வகையான வாடிக்கையாளர்கள் அந்தக் கடைக்கு. அவர் களிடமிருந்து ஒருமுறைகூட இஸ்திரி செய்த துணியில் கசங்கல் இருப்பதாகவோ, சூடு அதிகமானதால் துணியில் பொத்தல் விழுந்த தாகவோ புகார் வந்ததில்லை.

காலை ஆறு மணிக்கு ஒற்றை ஆளாக கடை யைத் திறந்து , கூட்டி முடித்து பித்தளை இஸ்திரி பெட்டியை செங்கல் துகள் வைத்து தேய்த்து, கழுவி, காய வைப்பான். வீடு வீடாகச் சென்று துணிகளைச் சேர்த்தபின்பு, சுழற்றிவிட்ட பம்பரமாக இரவு எட்டு மணி வரையிலும் இயங்கும் அவனுக்குத் துணை அந்த இஸ்திரி பெட்டியும், எஃப் எம் ரேடியோவும்தான்.

சொன்ன நேரத்திற்கு துணியை இஸ்திரி செய்து தருவதும் வாடிக்கை யாளர்களிடம் அள வான பேச்சும்தான் அவனின் தர முத்திரைகள்.

தந்தை இஸ்திரி செய்த காலத்தில் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் இதே கடையில் ஒத்தாசையாக பெட்டி தேய்க்க ஆரம்பித்தவனுக்கு தந்தை மறைவுக்குப் பிறகு அதுவே வாழ்வாதாரமானது. இரவு எட்டு மணிக்கு கடை அடைத்ததும் பக்கத்து டிபன் கடையில் தனக்கும் அம்மா வுக்கும் பார்சல் வாங்கிக் கொண்டு வீட்டுக்குச் செல்வது அவன் வாடிக்கை.

‘கிராமத்துப் பொண்ணு. அவங்க அப்பா விவசாயம் பார்க்கறாரு. மெட் ராஸுன்னாலே பயப்புடுது. போன்ல என்கிட்ட பேசக்கூட கூச்சப்படுது. கல்யாணம் முடிஞ்சு கூட்டி வந்ததும் நம்ம ஊரை எப்படி பழகிக்கும்னு தெரியலே’ என்ற முன்னுரையோடு தன் திருமண அழைப்பிதழை தன் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் கொடுத்தான். தொடர்ந்து சில நாள்கள் கடையைப் பூட்டியது, அவன் திருமணத்தின்போது தான். திருமணம் முடித்து கடை திறந்தவனுக்கு முதல் பத்து நாள்கள் நலம் விசாரிப்பிலும், ‘கல்யாணத் துக்கு வர முடியலப்பா’ என பரிசுப் பொருள்களோடு வந்த வாழ்த்துகளிலும் பகல் பொழுதுகள் வேகமாகக் கரைந்தன.

“நாளையிலிருந்து துணி வாங்க இது தாங்க வரும்” – ஞாயிற்றுக்கிழமைகளில் தன் மனைவியை வாடிக்கையாளர்கள் வீடு வரை சென்று வாசலோடு அறிமுகப் படுத்தி வைத்தான்.

சிறிய உருவம். களையான சிரித்த முகம். எண்ணெயில் படிந்து வாரிய தலையும், முகத்திலும் கழுத்திலும் அடர்த்தியாகப் பூசிய மஞ்சளும், கைகளில் கருஞ்சிவப்பு மருதாணியும், கண்ணாடி வளையல்களும், கெட்டி கொலுசும், குளித்து முடித்து நேர்த்தியாக உடுத்தாமல் ஒரு நாளும் வீடுகளுக்குச் சென்று துணி வாங்கியதில்லை அவள்.

காலை ஆறு மணிக்கு பல வீடுகளில் தூக்கம் கலையாமலும் பல் துலக்காமலும் துணி கொடுப்பவர்கள் உண்டு. துணிகளை வகைப் படுத்தி எண்ணி எடுத்து மூட்டை கட்டும் லாகவமும், வேகமும் அவள் சாமார்த்தியத்திற்குச் சான்று. எட்டு மணிக்குள் துணி மூட்டைகளைச் சேகரித்து கடையில் சேர்க்கும் படலம் அவளு டையதாகிப் போனது. எட்டு மணியிலிருந்து பத்து மணி வரை அவன் அம்மாவோடு சேர்ந்து வீட்டு வேலையும் சமையலும் முடித்து, ஒயர் கூடையில் இருவருக்கும் சாப்பாடு, தண்ணீர் சகிதம் பத்தரை மணி வாக்கில் கடைக்கு வந்ததும், சின்னச் சின்ன துணிகளை இஸ்திரி செய்ய அவனோடு நின்று கற்றுக் கொண்டாள். கனத்த பித்தளைப் பெட்டியை குறுக்கும் நெடுக்குமாகத் துணியில் ஓட்டும்போது தன் கணவனை பெரும் பலசாலியாக நினைத்துக்கொள்வாள்.

“நல்லாருக்கீங்களா அண்ணே… நல்லாருக்கீங்களா அக்கா…” கடை வாசலை மிதிக்கும் முன்னரே அவளின் வார்த்தைகள் வரவேற்கும்.

“உன் புருஷன் ஒருநாளும் இப்படிக் கேட்டதில்லை . நல்ல பயதான். ஆனா, அதிகம் பேச மாட்டான்” என சிரித்த படி வாடிக்கையாளர்கள் சொல்வதுண்டு.

மனைவி மாசமாக இருந்த நாள்களில் வீடுகளில் இருந்து மீண்டும் துணிகளை வாங்கும் வேலையை அவனே ஏற்றுக்கொண்டான். அவன் சாடையி லேயே சுருண்ட முடியும் கூர்மூக் கோடும் ஒரு மகன் பிறந்ததும் மகனின் பெயரையே கடைக்கும் வைத்தான்.

துணி மூட்டைகள்தான் அவன் பிள்ளைக்கு விளையாட்டு பொம்மைகள்.தன்னைப் போலவே தன் மகன் கையில் இருக்கும் பிஸ்கட்டினை இஸ்திரி செய்வதுபோல துணியில் தேய்த்து விளையாடும் அழகைப் பார்த்து ரசிப் பான்.

வியாபாரம் முன்பைவிட அதிகம் சூடு பிடித்தது. அவசர தேவைக்கென்று கடை வாசலிலேயே தள்ளுவண்டியில் இஸ்திரி செய்து தர ஓர் ஆளை நியமித்தான். மின்சாரத்தில் வேலை செய்யும் இஸ்திரி பெட்டியை மனைவிக் கும் எப்போதும் போல பித்தளை இஸ்திரி பெட்டி தனக்குமாக வைத்துக் கொண்டான்.

அன்று கடை திறக்க தாமதமானது. காலை எட்டு மணிக்கு மேல் அவன் சொந்தக்காரன் எனச் சொல்லிக் கொண்டு ஒருவன் கடையைத் திறந்தான். இரவில் இருந்து வயிற்றுவலியால் துடித்ததாகவும் பெரிய ஆஸ்பத்திரிக்கு அவன் மனைவி அழைத்துப் போனதாகவும் வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தினான். இரண்டு நாள்களுக்கு அந்தச் சொந்தக்காரன்தான் கடை நடத்தினான். மூன்றாவது நாள் மழிக்காத முகத்தோடு சோர் வாக அவன் மனைவியோடு கடைக்கு வந்தவன் இஸ்திரி பெட்டியைத் தொடவில்லை. மனைவி தான் மொத்த துணிகளையும் தேய்த்தாள்.

“ரெண்டு கிட்னிலேயும் பெரிய கல்லு இருக் குது. ஆபரேஷன் பண்ணணும் சொல்றாங்க சார். எனக்குத் தெரிஞ்சவங்கெல்லாம் இது ரொம்ப பெரிய ஆபரேஷன். பொழைக்கறது கஷ்டம்னு சொல்றாங்க. நான் செத்துடுவேனோன்னு பய மாயிருக்கு” என தன் நலம் விசாரித்த ஒரு வாடிக்கையாளரிடம் உடைந்து அழுதான்.

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுன்னு தைரியம் சொல்லுங்கண்ணே. நான் எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்டேங்கறாரு” – தன் பங்குக்கு நம்பிக்கையூட்டினாள் அவள்.

அடுத்த பதினைந்து நாள்களில் அந்த அகண்ட தெருவின் சுவர்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அவன் படம் தாங்கிய கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள். தன் அப்பாவுக்குப் பிறகு தனி ஆளாக பதினைந்து வருடங்களாகக் கடை நடத்தியவன் சட்டென இல்லாமல் போனதில் மொத்த தெருவும் துக்கத்தில் உறைந்தது.

‘முப்பத்திரெண்டு வயசெல்லாம் சாகற வயசா? இனி அந்த இஸ்திரி கடையை யார் நடத்துவாங்களோ? வளர்ற புள்ளைய வச்சிக்கிட்டு அந்தப் பொண்ணு மட்டும் தனியா என்ன செய்யும் பாவம்…’ – எல்லோர் வீட்டிலும் இந்தப் பேச்சு ஒரு முறையாவது வந்து போனது.

சியாமளா ரமேஷ்பாபு

ஒரு மாதம் கழித்து மீண்டும் தன் மகனோடு வந்து துணி மூட்டை வாங்கிப் போனாள்.

கடையினுள்ளே பெரிதாக வாடிக்கை யாளர்களை வரவேற்பது போல குங்குமப் பொட்டு வைத்து மல்லிகைப்பூ போட்ட அவனது உருவப்படம். யாரெடுத்த புகைப்படமோ தெரியவில்லை.அதில் மட்டும் லேசாகச் சிரித்தபடி இருந்தான்.

யாருடைய அனுதாபத்தையும் ஆறுதலையும் எதிர்பார்த்தவளாக இல்லை அவள். அவன் கற்றுக்கொடுத்த தொழிலில் முழுநேரமும் மூழ்கிப் போனாள். புதிதாக இரண்டு ஆட்களை வேலைக்கு நியமித்தாள்.

இப்போதெல்லாம் அவனைப் போலவே அளந்துதான் பேசுகிறாள். வருடங்கள் உருண் டோடின. கல்லூரியில் படிக்கும் மகனும் தன் கடையும் இருக்கும் தைரியத்தில் மஞ்சள் பூசா மலும் கண்ணாடி வளையல்கள் இல்லாமலும் கம்பீரமாகத் தெரிகிறாள்.

கடையை மூடிவிட்டு வீடு திரும்ப தனியா ளாகச் செல்வதும், சிலிண்டர் தீரும் போதும், வீட்டு வரி, தண்ணீர் வரி, மின் கட்டணம், சேமிப்பு, ஆயுள்காப்பீடு, பிள்ளையின் படிப்பு என சகலத்திற்கும் கணவனை உணர்வுபூர்வமாக சார்ந்தும் , எதிர்பார்த்தும் இருக்கும் மனைவி களின் மத்தியில் அவள் துருவமாகத் தெரிகிறாள்.

அப்படி என்ன புரிதல் அவளுக்கும் அவனுக்கு மிடையே… நகர வாழ்க்கைக்குள் அவள் தன்னைத் தனியாக, தைரியமாக பொருத்திக் கொள்ள எப்படி பக்குவப்படுத்தியிருப்பான் அவன்? எவ்வளவு பேசியிருப்பார்கள் தங்களுக் குள்ளே?

‘உனக்கு முன்னாடி நான் போயிட்டா என்ன பண்ணுவே?’ என பத்தாம்பசலித்தனமாகப் பேசிக்கொள்வதற்கு பதில், ‘உனக்கு முன்னாடி நான் போயிட்டா இப்படி செய், அப்படி செய்’ என பகுத்தறிவோடு பேசியிருப்பார்களோ?

இருக்கும்போது அன்பு செய்வதற்கு வலிமை தேவையில்லை. நமக்கானவர்கள் இல்லாத போதும் அவர்கள் மீது அன்பு செய்யத்தான் மலை அளவு வலிமை தேவை.

‘இதே நிலைமை எனக்கு வந்தா… இதே தைரியத்தோடும், இறந்த கணவன் மீது மாறாத அன்போடும் வாழ்க்கையை நடத்துவேனா?’

அந்த இஸ்திரி கடையைக் கடக்கும் ஒவ்வொரு பெண்ணும் தனக்குள் பயந்தபடியே கேட்டுக்கொள்ளும் கேள்வி இதுவாகத்தானேஇருக்கும் ? (நன்றி – டாக்டர் சியாமளா ரமேஷ்பாபு …)

………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.