……………………………………………

…………………………………………….
சுவாமி விவேகானந்தர் ஒவ்வோர் இளைஞனிடமும் முக்கியமாக ஒன்றை ‘நம்பு!’ என்றார். மற்றொன்றைச் சிறிதும் ‘நம்பி விடாதே!’ என எச்சரித்தார். அவை என்ன தெரியுமா?
‘`மனிதா, `நீ எதையும் சாதிக்க முடியும்!’ என்பதை நம்பு. ‘நீ பலவீனமானவன்’ என்றால், ஒருபோதும் நம்பிவிடாதே” என்கிறார்.
நம்ம ஊர் ஆள் ஒருவருக்கு மும்பையில் வேலை கிடைத்தது. மும்பைக்குச் செல்வது இதுதான் அவருக்கு முதல் முறை. அங்கு அவருக்கு நண்பர்களும் கிடையாது. இரண்டு, மூன்று நாள்கள் கழிந்தன. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. ஊர் சுற்றிப் பார்க்கலாம் என வெளியே கிளம்பினார்.
மதியவேளையில் நல்ல பசி. அருகில் தென்பட்ட ஓட்டலுக்குள் சென்றார். இப்போதுதான் மொழிப் பிரச்னை ஆரம்பித்தது. அலுவலகத்தில் பணி அறிமுகம், தமிழ் தெரிந்த அன்பர்களின் உதவியோடு ஏதோ சமாளித்துவிட்டார். இங்கே தனியாக அல்லவா வந்திருக்கிறார்.
தெரிந்தவரைக்கும் சமாளிக்கலாம் என்று முடிவெடுத்தார். வெயிட்டர் வந்ததும் ‘‘பானி பானி!’’ என்று கேட்டார். வெயிட்டர் உடனே தண்ணீர் கொண்டு வந்தார். நம்ம ஆளுக்குச் சந்தோஷம். அடுத்து இவருக்குப் புரோட்டாவும் கோழிக்கறியும் தேவை.
இவர், “புரோட்டோ – ரொட்டி” என்றதும் வெயிட்டர் ஓரளவுக்குப் புரிந்து கொண்டார். ஆனால், கோழிக்கறியை எப்படிக் கேட்பது?!
இந்தியில் கோழி முட்டைக்கு `அண்டா’ என்பது ஞாபகம் வந்தது. கோழிக்கு என்னவாக இருக்கும்? முட்டை போடுறது கோழி. அப்படின்னா முட்டையின் அம்மா கோழி. அம்மாவுக்கு இந்தியில் மாதா. உடனே, ‘‘அண்டா கி மாதா கறி வேண்டும்!’’ என்று எடுத்துவிட்டார். வெயிட்டரும் புரிந்துகொண்டு சிரித்தபடியே கோழிக் கறி கொண்டு வந்து கொடுத்தார்.
ஆக, உறுதியான மனம் கொண்டவர்கள், தன்மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்கள் எதையாவது செய்து, தாங்கள் நினைத்ததை முடித்துவிடுவார்கள்.
நமக்குள் நாம் நம்பிக்கைக் கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் நம்மைச் சார்ந்தவர்களிடத்தில், நம்பிக்கையை வளர்த்தெடுப்பதும் தூண்டுவதும் மிக அவசியம்.
ராமாயணத்தில் ஒரு நிகழ்ச்சி. சீதையை, ராவணன் சிறையெடுத்துச் சென்றதை அறிந்து ராமனுக்கு உதவும் முயற்சியில் வானரப் படைகள் இலங்கைக்குச் செல்ல முடிவு செய்தன. ஆனால், கண் எதிரே கண்ட பெரும் கடல், அவர்களுக்கு பெரும் தயக்கம் அளித்தது. ஒவ்வொரு வானரமும், ‘என்னால் பத்தடி தாண்ட முடியும்… என்னால் இருபதடி தாண்ட முடியும்… முப்பதடி… நாற்பதடி தாண்ட முடியும்…’ எனச் சொல்லிக்கொண்டன.
`முழுக் கடலையும் தாண்டுவேன்’ என எந்த வானரமும் உறுதியாகச் சொல்லவில்லை. உடனே அனுமனைக் கூப்பிட்ட ஜாம்பவான், ‘‘ஆஞ்சநேயா! உன்னால் இந்தக் கடலைத் தாண்ட முடியும். நீ மட்டுமே இந்தப் பணிக்குப் பொருத்தமானவன். உனது சக்தி உன்னுள் மறைந்து கிடக்கிறது. உடனே செல்!’’ என உற்சாகமூட்டி அனுமனைத் தயார் செய்தார்.
சிறுவயதில் குறும்பு மிகுந்தவராக இருந்தார் அனுமன். பழம் என்று நினைத்து சூரியனைப் பிடிக்க விண்ணில் பாய்ந்தவர் அல்லவா? அப்படித்தான் ஒருமுறை, பாலகன் அனுமனின் சேஷ்டைகள், முனிவர்கள் சிலரின் தவத்துக்கு இடையூறாக அமைந்தன.
`அவர்கள் உன் பலம் இன்னதென்று அறியாமல் போவாய்’ என்று சபித்துவிட்டார்கள். பின்னர், “சிறுவன் அறியாமல் செய்துவிட்டான். பிழை பொறுக்கவேண்டும்’’ என்று அஞ்சனை மாதா வேண்டிக்கொண்டாள். முனிவர்களும் அனுமன்மீது பரிவு கொண்டு, “தகுந்த ஒருவர் நினைவூட்டும்போது தன் பலத்தின் வலிமையை ஆஞ்சநேயன் அறிந்துகொள்வான்’’ என்று விமோசனம் தந்தார்களாம்.
அதன்படியே இப்போது அனுமனின் வலிமையை அவருக்கு நினைவூட்டிய ஜாம்பவான், பெரும் நம்பிக்கையையும் அவருக்குள் விதைத்தார். ஜாம்பவானின் வார்த்தைகளால் உற்சாகமடைந்த அனுமன், ராம மந்திரத்தை ஜபித்தபடி வானில் தாவி இலங்கையை அடைந்தார். கொஞ்சம் உற்சாகமும், நிறைய நம்பிக்கையும், வெற்றி மேல் வெற்றியை நம் காலடியில் குவிக்கும்.
ஆகவே, எதைச் செய்தாலும் உற்சாகமாகச் செய்யுங்கள். நடக்கும் என நம்பிக்கை கொள்ளுங்கள் உங்களைச் சார்ந்தோர் மனத்திலும் நம்பிக்கையை விதையுங்கள்; வெற்றி எளிதில் உங்கள் வசமாகும்.
.
………………………………………………………………………………………………………………..



நிஜமான சாமியாரா இல்லை ….