கல்கி’யை அமைச்சராக்க விரும்பியஓமாந்தூராரும், மறுத்து விட்ட கல்கி அவர்களும்….

………………………….

…………………………………

………………………………..

……………………………….

1947-ல் அப்போதைய சென்னை ராஜதானியின் பிரதமராக
(அப்போதைய சென்னை ராஜதானியின் முதல்வர் – பிரதமர் என்றே அழைக்கப்பட்டார்…!) இருந்த டி.பிரகாசம் பதவி விலகியதை தொடர்ந்து,

மாகாண காங்கிரஸ் தலைவர் காமராஜ், ராஜாஜி, மற்றும் மத்திய
உள்துறை அமைச்சர் சர்தார் படேல் ஆகியோர் –

`ஓமந்தூரார்’ என்று அறியப்படும், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்
அவர்களை முதல்வர் பொறுப்பினை ஏற்கும்படி வற்புறுத்தி இருக்கிறார்கள்.

பதவியாசை சிறிதும் இல்லாத, பற்றற்ற மனிதர், ஆன்மிகவாதி
ஓமாந்தூரார் அவர்கள்….. அவர் இந்த பொறுப்பை ஏற்க மறுத்திருக்கிறார்.

ஆனால் மற்றவர்கள் தொடர்ந்து வற்புறுத்தியதன் விளைவாக,
தான் மறுப்பதற்கான காரணத்தை இப்படிச் சொல்லிப் பார்த்தார்…
“ஐயா… நீங்க சொல்றதைச் சொல்லிட்டீங்க. முதலமைச்சரா
இருக்கணும்னா ஆங்கில மொழி அறிவு சிறப்பா இருக்கணும்.
எனக்கோ ஆங்கிலத்துல பேச மட்டும்தான் தெரியும். பிழையில்லாம
எழுதத் தெரியாது’’. ஆனால், முதலமைச்சர் ஆவதற்கு மொழிஞானம்
ஒரு பிரச்னையே இல்லை என்று அவர்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்த,
கொஞ்சம் அவகாசம் கேட்டுக்கொண்டு, திருவண்ணாமலைக்குப் போனார்.

ரமண மகரிஷியைப் பார்த்து, தனது இக்கட்டான நிலையை சொல்லி
இருக்கிறார். ஆனால், ரமணர், ஓமாந்தூராரை பதவியேற்கச்சொல்லி
ஆசி வழங்கி இருக்கிறார்….. அதன் பிறகே முதல்வர் பதவியை ஏற்றிருக்கிறார் சிறந்த ஆன்மிகவாதியான ஓமாந்தூரர்.

ஓமந்தூராருக்கு `கல்கி’ வாரப் பத்திரிகையின் ஆசிரியர் கல்கி கிருஷ்ணமூர்த்தியை மிகவும் பிடிக்கும். கல்கி அவர்கள் ஓமாந்தூரரின்
சிறந்த நண்பர். அறிவாளி. அற்புதமான எழுத்தாளர். ஒரு சுதந்திர
போராட்ட தியாகியும், சிறை சென்ற தேசபக்தரும் கூட… தனது
அற்புதமான எழுத்தாற்றல் மூலம், மிகப்பெரிய வாசகர் கூட்டத்தையும்
பெற்றிருந்த கல்கி அவர்கள் தனது மந்திரி சபையில் ஒரு அமைச்சராக
அங்கம் பெற வேண்டுமென்று விரும்பினார் ஓமாந்தூரர்.

கல்கி அவர்களிடம், முறைப்படி அமைச்சராக வரும்படி எழுத்து வடிவிலும்
அழைப்பு விடுத்தார் ஓமந்தூரார்… ஆனால், கல்கி அவர்களுக்கு இதில் விருப்பமில்லை. நாசூக்காக மறுத்து பதிலெழுதி விட்டார்.

கல்கியின் அந்த கடிதத்திற்கு பதிலெழுதிய ஓமாந்தூரர், அந்தக் கடிதத்தில்
இப்படிக் குறிப்பிட்டார்…
`சில பேர் மந்திரி உத்தியோகம் கிடைக்காவிட்டால் கடலில் விழுந்துவிடுவார்கள்போல் தெரிகிறது. நீங்கள் என்னவென்றால்,
நானாகக் கொடுக்கின்ற மந்திரி பதவியைக்கூட வேண்டாம் என
மறுத்துவிட்டீர்கள். ஆகையினாலே, உங்கள்மீது எனக்குள்ள மதிப்பு
இன்னுமும் அதிகமாகிறது…’
…………..

குறுகிய காலத்திற்கே பதவி வகித்த ஓமாந்தூரார், அதற்குள்ளாக –
தன் பதவிக் காலத்தில் செய்த மிகச்சிறந்த சாதனைகளில் சில –

  • இவரது பதவிக் காலத்தில், சென்னை கோயில் நுழைவு
    அதிகாரமளிப்புச் சட்டம் 1947 இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம்
    தலித்துகள், தாழ்த்தப்பட்டோர் என்று அனைவருமே
    இந்து கோயில்களுக்குள் செல்ல உரிமையளிக்கப்பட்டது.
  • இவரது ஆட்சியின் போது மடங்கள், ஆதீனங்கள், கோயில்கள்
    ஆகியவற்றின் சொத்துக்களை சில தனியார் சுரண்டி வருவதைத் தடுக்க
    இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
  • பூரண மதுவிலக்கு கொண்டு வரப்பட்டது.
  • ‘தேவதாசி முறை’ – ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

ஏப்ரல் 1949-ல் அரசியலில் இருந்து விலகி வடலூரில் விவசாயப் பணியை மேற்கொண்டார். பின்னர் தன்னை முழுவதுமாக வடலூர் ராமலிங்க
அடிகளாரின் பணிகளோடு இணைத்துக் கொண்டார்.
வள்ளலார் குருகுலப் பள்ளி, அப்பர் அநாதைகள் மற்றும்
ஏழை மாணவர் இல்லம், அப்பர் சான்றோர் இல்லம், இராமலிங்க தொண்டர்
இல்லம் என பல நிறுவனங்களை தொடங்கினார்

……………….

இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கல்கி அவர்களைப்பற்றிய
சில சிறப்புகள் –

பொன்னியின் செல்வனுக்கு முன்னதாகவே, சிவகாமியின் சபதம்,
பார்த்திபன் கனவு போன்ற சரித்திர தொடர்களின் மூலமாகவும்,
அலை ஓசை, தியாகபூமி போன்ற சமூகத் தொடர்களின் மூலமாகவும்
மிகுந்த புகழ் பெற்றிருந்த –

கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் தொடர்கதை –
கல்கி வார இதழில், 1951-ல் துவங்கி 1954 வரை தொடர்ந்து
வெளிவந்தது…( நான் 8 வயதுச் சிறியவனாக இதை கல்கி இதழில்
தொடர்கதையாக வெளியான காலத்திலேயே படிக்கத் தொடங்கி
இருந்தேன். தொடர்கதை முடியும்போது – 11-12 வயதிலிருந்தேன்….!!!)
வாராவாரம் கல்கி இதழ் கிடைத்தவுடன், எங்கள் வீட்டில் பெரிய
அடிதடி சண்டையே நடக்கும் யார் முதலில் படிப்பது என்று ..
வீட்டில, அப்போதே – நாங்கள் அண்ணன்-தம்பிகள் 5 பேர்……!!!)

கல்கியும், என் அப்பாவும் –
ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த இளம் வயது நண்பர்கள்.
ஒரே வயதுக்காரர்கள் (1899…!!!)
இருவரும் (காந்திஜியின்) காங்கிரசில் ஒன்றாகச்சேர்ந்து சுதந்திரப்
போராட்டதில் கலந்துகொண்டவர்கள்.
பின்பு 1930-வாக்கில், இருவரும் பத்திரிகையுலகில் சேர்ந்தனர்.
என் அப்பா சுதேசமித்திரன் நாளிதழில் சில வருடங்கள் இருந்தார்.
(ராஜாஜி அவர்களின் ஆலோசனைப்படி – சம்பளம் இல்லாத வேலை…!!!)

இருவரின் குடும்பமும் சென்னையில், (அப்போது தான் புதிதாக உருவாகி
வந்த, தற்போதைய தியாகராய நகரில்) அடுத்தடுத்த வீடுகளில் வசித்து
வந்தன. இவர்களுடன் – உடன் சேர்ந்து இருந்தது ஜெமினி-விகடன் வாசன் அவர்களின் குடும்பமும்….

பின்னர் காலப்போக்கில், ( குடும்பம் பெருகவே, சம்பளம் கிடைக்கக்கூடிய
வேலை தேடி ) எங்கள் அப்பா, ஹைதராபாத் சென்று விட்டார்.
கல்கி தொடர்ந்து பத்திரிகையுலகிலேயே இருந்து பெரும் புகழ்
பெற்றார். எஸ்.எஸ். வாசன் திரையுலகிலும், பத்திரிகையுலகிலும்
பெரும் வெற்றி பெற்று செல்வம், செல்வாக்கோடு இருந்தார்.

( இந்த விவரங்களை எல்லாம், என் அப்பா என்னிடம் ஒருபோதும்
கூறியதே இல்லை; மிகவும் வறிய சூழ்நிலையில் இருந்தது எங்கள்
குடும்பம்; அந்த சமயத்தில் வசதியாக இருந்த தன் பழைய நண்பர்களைப்
பார்க்க என் அப்பா விருப்பப்படவில்லை…..அப்பா எங்கே இருக்கிறார்
என்பது பற்றி அவரது நண்பர்களுக்கும் தெரியவில்லை…..
தன் இறுதிக்காலம் வரை, என் அப்பா இவர்களை சென்று
பார்க்கவே இல்லை….. )

நான் கொஞ்சம் வளர்ந்து பெரியவனான பிறகு,
என் அம்மா மூலமாக நான் தெரிந்துகொண்ட தகவல்கள் இவை…!!!
இந்த செய்திகளின் முக்கியத்துவம் குறித்து, நான் புரிந்து கொள்ள இன்னும்
கொஞ்சம் காலம் பிடித்தது….!!! அதன் பிறகு நான் இவற்றைப்பற்றியெல்லாம்
அப்பாவுடன் பேச வாய்ப்பே கிடைக்காமல் போய் விட்டது…….!!! )

.
……………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to கல்கி’யை அமைச்சராக்க விரும்பியஓமாந்தூராரும், மறுத்து விட்ட கல்கி அவர்களும்….

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
    நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
    கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே – சங்கு
    சுட்டாலும் வெண்மை தரும்

    பாலினை எவ்வளவு காய்ச்சினாலும் சுவை குறையாது. எவ்வளவு ஒட்டி உறவாடி நட்புச் செய்தாலும் நட்புடனிருக்கும் நல் குணம் இல்லாத கீழோர், நல்ல நண்பராக மாட்டார்கள். சங்கை எவ்வளவு சுட்டாலும் அது வெண்மையையே தரும் (சாம்பலானாலும் என்று அர்த்தம்). அதுபோல மேன்மைக் குணம் பொருந்தியோர், வறுமையைத் தழுவினாலும் அவரது மேன்மைக் குணம் போகாது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.