…..

…..
ஒருமுறை ஏ.வி.எம். செட்டியார் வீட்டுக்கு, ஏவி.எம் குடும்ப டாக்டர்
சாரா ராமச்சந்திரன் தன்னுடன் 4 வயது சிறுவன் ஒருவனையும்
அழைத்து வந்தார்.
ஏவி.எம் ராஜேஸ்வரி அம்மையாரும், சரவணன் சாரும் டாக்டரிடம்,
‘‘யார் இந்தப் பையன்?’’ என்று கேட்டார்கள்.
‘‘எனக்கு நடிக்கணும்னு ஆசையா இருக்கு. என்னை ஏவி.எம் ஸ்டுடியோவுக்குக் கூட்டிட்டு போங்கன்னு கேட்டுட்டே இருந்தான்.
அதான் கூட்டிட்டு வந்தேன்’’ என்றார் டாக்டர்.
அருகில் இருந்த ராஜேஸ்வரி அம்மா, ‘‘சரவணா, அப்பச்சிகிட்ட
இந்தப் பையனைக் கூட்டிட்டுப் போய் காட்டு’’ என்றார்.
சரவணன் சார் அப்பச்சியிடம் கூட்டிச் சென்று அந்தப் பையனின்
நடிப்பு ஆசையைச் சொன்னார். செட்டியார் தன் பின்னால் இருந்த
போகஸ் லைட் வெளிச்சத்தை, கமல் முகத்தில் போட்டு
‘எங்கே நடிச்சு காட் டுப்பா’என்றார்.
கமல் பலவிதமாக வசனம் பேசி, ஆடிப் பாடி, நடித்துக் காட்டினார். செட்டியாருக்கு அந்தப் பையனின் நடிப்பு பிடித்துப்போனது.
‘‘சரவணா, பையனை இயக்குநர் பிரகாஷ் ராவ்கிட்ட காட்டு’’
என்றார்.
அதற்கு சரவணன் சார் ‘‘ ‘களத்தூர் கண்ணம்மா’
சிறுவன் பாத்திரத்துக்கு டெய்சி ராணி என்ற குழந்தையைத்
தேர்வு செய்துள்ளோமே’’ என்று சொன்னார்.
உடனே செட்டியார், ‘‘அந்தக் குழந்தையைவிட இவன் பிரஷ்ஷாக இருக்கிறான். இவனை இயக்குநரிடம் காட்டு’’ என்றார்.
ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு சரவணன் சார், கமலை கூட்டிவந்து
விவரம் சொன்னார்.
அப்போது ஜெமினி கணேசன் அந்தப் பையனை தூக்கி ஒரு
சுற்றுச் சுற்றி, ‘‘எனக்கு ஒரு ஜூனியர் வந்துட்டான்’’
என்று மகிழ்ந்தார்.
சாவித்திரி முத்தம் கொடுத்தார். ( தலைவரின் திரை
முத்தங்களுக்கான அஸ்திவாரம் எங்கே துவங்கியது
தெரிகிறதா…!!! _)
இயக்குநர் பிரகாஷ் ராவ் அவன் நடிப்பைப் பார்த்துவிட்டு
‘டபுள் ஓ.கே’ சொன்னார். கமல் ‘களத்தூர் கண்ணம்மா’
படத்தில் குட்டி கதாநாயகன் ஆனார். முதன்முதலில் கமல்
முகத்தில் செட்டியார் போட்ட வெளிச்சம் …… இன்றும்
தொடர்கிறது.
‘களத்தூர் கண்ணம்மா’படத்தில், ஆசிரமத்தில் வளரும்
கமல்ஹாசன் பள்ளியில் படிப்பார். அங்கு ஆசிரியையாக வேலைக்கு
சேரும் சாவித்திரி, அநாதை பையனான கமல் மதியவேளை
சாப்பாடு இல்லாமல் தண்ணீர் குடிப்பதைக் கவனிப்பார்.
அப்போது இந்தப் பையன் தன்னுடைய மகன் என்பது சாவித்திரிக்குத் தெரியாது. கமலுக்கு அங்கே காலை, மாலை மட்டும்தான் சாப்பாடு
என்கிற விஷயம் சாவித்திரிக்குத் தெரிய வர, ‘‘இனிமே நான்
உனக்குச் சாப்பாடு கொடுக்கிறேன்’’ என்று தான் கொண்டு
வந்த உப்புமாவை கமலுக்கு ஊட்டிவிட போகிற மாதிரி ஒரு காட்சி.
அந்தக் காட்சியை படமாக்கும் போது எவ்வளவோ சொல்லியும் கமல்ஹாசன் அந்த உப்புமாவை சாப்பிட மறுத்தார். கமலுடைய
அண்ணன் சந்திரஹாசன் சொல்லிப் பார்த்தார். கேட்கவில்லை.
செட்டுக்கு வெளியே தூக்கிக்கொண்டுபோய் ‘ஏன், சாப்பிட
மாட்டேங்குறே’ என்று கேட்டால், ‘இதுக்கு முன்னால
மாந்தோப்புல நடிச்சேன். அந்தத் தோப்புல தொங்கிய
மாங்காயெல்லாம் பேப்பர் மாங்காய். இங்கே சுத்தி இருக்குற
சுவரெல்லாம் அட்டை சுவர். இந்த உப்புமாவும் மண்ணாத்தான்
இருக்கும். சினிமாவே பொய்; உப்புமாவும் பொய்’ என்றார்(ன்).
நான், சாவித்திரி, இயக்குநர், சந்திர ஹாசன் எல்லோரும்
கமல் முன்னே அந்த உப்புமாவை சாப்பிட்டுக் காட்டி னோம்.
அதன் பிறகே கமல் அதை சாப்பிட்டார். அந்த வயதில் கமலுக்கு
அப்படி ஒரு ….. ஞானம்…..!
படப்பிடிப்புக்கு இடையே கொஞ்சம் பிரேக் கிடைத்தாலும்
மற்ற குழந்தைகள் செட்டுக்கு வெளியே விளையாட ஓடிவிடுவார்கள்.
கமல் மட்டும் ஸ்டுடியோவுக்குள் உள்ள பிரிவியூ தியேட்டரில்
படம் பார்க்க சென்றுவிடுவார். படம் பார்ப்பதோடு நின்றுவிடாமல்,
அங்கே பார்த்த காட்சிகளை செட்டுக்கு வந்து எங்களிடம் நடித்தும் காட்டுவார்.
‘களத்தூர் கண்ணம்மா’ படம் வெளியாகி பெரிய அளவில்
பேசப்பட்ட நாட்களில், தமிழ்நாட்டின் ஒவ்வொரு தியேட்டருக்கும்
சென்று மக்கள் முன் ஆட்டம் பாட்டம் என்று தனியாளாக நடத்திக்
காட்டி மக்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்த பெருமை
கமலுக்கு உண்டு. நட்சத்திர அந்தஸ்தை குழந்தையிலேயே
பெற்றவர் கமல்!
(மூலம் – இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் அவர்கள்
எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து …)
.
………………………………………………
கமலஹாசன் புத்திசாலிக்குழந்தையாக இருந்திருக்கிறார். காட்சித் தொடர்ச்சிப் பிழைகளையும் அந்த வயதிலேயே சுட்டிக்காண்பிக்கும்படியான கூர்மதி அப்போது அவருக்கு இருந்திருக்கிறது. அவருடைய அப்பா, அப்போதே, மற்ற எல்லாரையும்விட கமல், திரையுலகில் கோடிக்கணக்காக சம்பாதிப்பான் (படிக்காவிட்டாலும்) என்று சொல்லியிருக்கிறார். Kamal’s dad had good vision.