அநாவசியமாக விவாதங்களை உருவாக்கி விட்டார்கள்…


நூறு சதவீதம் நல்லவர் என்றோ, நூறு சதவீதம் கெட்டவர் என்றோ
உலகில் யாருமே இல்லையென்று தான் சொல்ல வேண்டும்.

நல்லதும் கெட்டதும் கலந்தவன் தான் மனிதன்…
பலவீனங்கள் இல்லாத,
தவறுகள் செய்யாத – மனிதர் உலகில்
யார் இருக்கிறார்கள்…? எப்போது இருந்தார்கள்…?
அரிச்சந்திரன், மஹாத்மா காந்தி – உட்பட…?

நேற்று நான் எழுதிய “மீளாத்துயிலில் ஆழ்ந்த கலைஞர்”
இடுகையைத் தொடர்ந்து எனக்கு
சில மெயில்கள் வந்திருக்கின்றன…
(அவற்றை நான் வெளியிடவில்லை…)
முன்பு நீங்கள் எழுதிய இடுகைகளை மறந்து விட்டீர்களா –
இப்போது எப்படி மாறினீர்கள் ….? என்று கேட்டு…

நான் முன்னதாக எழுதிய சில இடுகைகள் நூற்றுக்கணக்கான
வாசகர்களால் இப்போது திரும்ப எடுத்து பார்க்கப்பட்டிருக்கின்றன.
(இந்த இடுகைப் பக்கத்தின், வலது margin-ல்
முன்னணி இடுகைகள் தலைப்பில் பார்த்தால் –
அவை எவை எவை என்பதை தெரிந்து கொள்ளலாம்….)

அவர்கள் எல்லாருக்கும் நான் சொல்லிகொள்ள விரும்புவது
ஒன்று தான்… ஒருவர் மறைந்து விட்ட நிலையில் அவரைப்பற்றிய
‘நெகடிவ்’ விஷயங்களை நினைவிற்கு கொண்டு வருவதும்
அவற்றைப்பற்றி விவாதிப்பதும் – பண்பாடு அல்ல…

நல்லனவற்றைப் பற்றி மட்டுமே நினைவுகூர்வது தான்
நாகரிகமாக இருக்கும்….

உண்மையில் – நேற்றிரவும், இன்று காலையும் – கலைஞருக்கு

அண்ணா நினைவிடத்தில் இடம் கொடுப்பது பற்றிய விஷயம்
இவ்வளவு தீவிரமாக விவாதிக்கப்பட்டதே தவறு என்பது என் கருத்து.

தமிழக அரசு –
திமுக தரப்பில், அனுமதி கேட்டவுடனேயே,
அண்ணா சதுக்கத்தில் –
இடம் கொடுத்திருக்கலாம்…
அது இத்தகைய விவாதங்கள் எழுவதை முற்றிலுமாக தவிர்த்திருக்கும்…

எப்போது அரசின் அனுமதி கிடைக்கவில்லையோ, திமுக
தலைமையாவது அதை பெரிது படுத்தாமல் – இதற்கு மாற்று
ஏற்பாடுகளை செய்திருக்கலாம்..

என்னைப்பொருத்தவரை – திமுக தலைமையகம் அமைந்துள்ள
“அண்ணா அறிவாலயம்” தான் கலைஞருக்கான மிகச்சிறந்த
நினைவிடமாக இருக்க முடியும்…. மிகுந்த முயற்சிகளை மேற்கொண்டு –
பொதுமக்களிடமிருந்தும், திமுக தொண்டர்களிடமிருந்தும் நிதி திரட்டி,
செங்கல் செங்கல்லாக கலைஞர் பார்த்து பார்த்து செதுக்கிய இடம்
அண்ணா அறிவாலயம்… கலைஞர் இதற்காக பட்டபாடுகளை நான்
இளைஞனாக இருந்தபோது – நேரில் பார்த்துக்கொண்டு தானிருந்தேன்.

..

..

..

..

அந்த வளாகத்தில் இன்னும் நிறைய வெற்றிடம் இருக்கிறது….
அந்த அரங்க வளாகத்திற்குள், கலைஞரை அடக்கம் செய்தால்,அங்கே
கலைஞருக்கு மிகச்சிறந்த முறையில் ஒரு நினைவு மண்டபத்தையும்
கூட எழுப்ப வசதியாக இருந்திருக்கும்…

ஏனோ தெரியவில்லை – திமுக தலைமை இதைப்பற்றிய
பேச்சே எழாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்…

திமுக தலைமை –
இதை ஒரு அரசியல் பிரச்சினையாக உருவாக்கியது தான் –
கலைஞர் சம்பந்தப்பட்ட பல பழைய விஷயங்களையும்
விவாதத்திற்குரிய விஷயங்களாக்கி விட்டது.
( திருமதி ஜானகி அம்மையாருக்கு – தன் கணவர் எம்.ஜி.ஆர் அருகே
இடம் கொடுக்க கலைஞரே மறுத்த விஷயம் உட்பட…)

மொத்தத்தில் இவையெல்லாமே தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய
விஷயங்கள்…

நல்லவேளையாக, உயர்நீதிமன்றம் ஒரு புத்திசாலிதனமான
தீர்ப்பைக் கொடுத்து
பிரச்சினையை முடிவிற்கு கொண்டு வந்து விட்டது.

அரசியல்வாதிகள் –
(திமுகவாக இருந்தாலும் சரி,
அதிமுகவாக இருந்தாலும் சரி ) –

சாவை வைத்து கூட –
அரசியல் செய்யவும்,
அதையும் தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ளவும் தான்
முயற்சிப்பார்கள் என்பதை மீண்டும் ஒரு முறை தமிழகம்
இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறது.

.
————————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

28 Responses to அநாவசியமாக விவாதங்களை உருவாக்கி விட்டார்கள்…

  1. mekaviraj's avatar mekaviraj சொல்கிறார்:

    திருமதி ஜானகி அம்மையாருக்கு – தன் கணவர் எம்.ஜி.ஆர் அருகே
    இடம் கொடுக்க கலைஞரே மறுத்த விஷயம் உட்பட…

    இது உண்மையா ? உண்மையானால் 😦

  2. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    உண்மை தான்….நேற்றிரவு, உயர்நீதிமன்ற விசாரணையின்போது, இந்த விவரம்,
    அரசுத்தரப்பிலிருந்து, ஆவண ஆதாரங்களுடன் முன் வைக்கப்பட்டிருக்கிறது.

    • Raja's avatar Raja சொல்கிறார்:

      மன்னித்துக் கொள்ளவும் கே.எம்.சார்,

      அவ்வுலகில் வரவேற்க புன்னகையுடன் சிவாஜி காத்திருப்பாரென்று
      எழுதினீர்கள். கூடவே, கொத்து கொத்தாக கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களும்
      கண்ணீர் கொட்டும் கண்களோடும், சோகம் வழியும் முகத்தோடும்
      அப்பாவிகளாக, அங்கும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தபடி
      காத்திருப்பார்கள் என்பதையும் சேர்த்தே எழுதி இருக்கலாமே. மறந்து விட்டீர்களா ? அல்லது பண்பாடா ?

  3. Raja's avatar Raja சொல்கிறார்:

    தன் கடைசி மூச்சு வரை, தனது இடத்தில் வேறு யாரும் வந்துவிடாமல்
    பார்த்துக் கொண்ட மிக புத்திசாலியான தலைவர்.
    தனது நாற்காலியில் கடைசி நாள் வரை தனது மகனைக்கூட உட்கார
    விடாமல் தடுத்துக் கொண்டிருந்தவர்.

  4. Raja's avatar Raja சொல்கிறார்:

    நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த அறிஞர் அண்ணாவின் இடத்தை
    பங்கு போட்டுக் கொள்ள இவர் அங்கே போகிறார். இனி அது எப்படி ‘அண்ணா நினைவிட’மாக இருக்க முடியும் ?

  5. shiva's avatar shiva சொல்கிறார்:

    இது தொடர்ந்தால் இன்னும் 100 / 150 வருடங்களில் மரினா கடற்கரை சமாதிகளால் நிரப்பப் படும். நீங்கள் சொல்வது போல் அண்ணா அறிவாலயத்தில் சமாதி செய்திருக்கலாம்.
    நீதி மன்றமும் இதையே வைத்து எல்லா சமாதியையும் – அண்ணா, MGR, ஜெயா – marinaவிலிருந்து மாற்ற செய்திருக்கலாம்

  6. Raja's avatar Raja சொல்கிறார்:

    ‘ இறந்த பின்பும் கூட இட ஒதுக்கீட்டுக்காக போராடிய தலைவர்’
    (அண்ணா சமாதியில் தனக்கு இட ஒதுக்கீடு )

    • தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

      ராஜா… இதை வேறு வரிகளில் சொல்லியிருந்தால் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும்.

      இறந்த பின்பும் ‘தன்னுடைய நலம்’ ஒன்றையே கருதிப் போராடும் குணத்தை தலைவர் விட்டுவிடவில்லை. – இது எப்படி இருக்கு!

  7. பிங்குபாக்: அநாவசியமாக விவாதங்களை உருவாக்கி விட்டார்கள்… – TamilBlogs

  8. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    காமராஜருக்கு ‘முன்னாள் முதல்வர்’களுக்கெல்லாம் மெரீனாவில் இடம் கிடையாது என்று சொன்னது, ஆதாரம் இல்லாததால் (அதாவது உண்மை பேசுபவர்கள் மவுனித்ததால்) இல்லாமல் போய்விடுமா? ஜானகி அவர்களுக்கு மறுத்தது ஆவணப்படுத்தப்பட்டிருப்பதால் ‘மறுக்க’ இயலாமல்போய்விட்டது.

    பொதுவாக கருணாநிதி மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ‘வரவு’க்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பார்கள். அவர்களுக்கு ‘உறவு’ என்பது தான், தன் குழந்தைகள் என்பதோடு முடிந்துவிடும். அதனால்தான் கருணாநிதிக்கு அறிவாலயத்தில் இடமில்லை (கொடுத்திருந்தால் நல்ல காரியங்கள் அங்கு எப்படி நடத்தமுடியும்? திருமணம் மற்ற நிகழ்ச்சிகள். அவைகள் இல்லாவிட்டால் வரவு குறைந்துவிடாதா?)

    ஜெ.வுக்கு சமாதி அமையக்கூடாது என்று திமுகவைச் சேர்ந்த துரைசாமி முதல் டிராபிக் ராமசாமி வரை (அவரும் திமுகதான் என்பது நேற்று இரவு வெட்டவெளிச்சமாகிவிட்டது) எத்தனை வழக்குகள் போட்டுத் தொல்லைகொடுத்தார்கள்? இத்தனைக்கும் மக்களின் மகத்தான ஆதரவைப் பெற்ற முதலமைச்சராக இருந்து ஜெ. அவர்கள் மறைந்தார். தங்களுக்குத் தேவைப்பட்டபோது, எல்லா வழக்குகளையும் திமுகவினர் வாபஸ் பெற்றனர். இதனைவிட கேவலமான செய்கை இருக்கமுடியுமா?

    மற்றவர்களை உதாசீனப்படுத்தியபோது கருணாநிதிக்குத் தெரியவில்லை, காலம் தனக்கு பெரிய பாடம் புகட்டப்போகிறது என்று. இதனைப் பற்றி ஏராளமாக எழுதலாம்.

    மறைந்ததால் ஒருவருக்கு மாண்பு சேர்வதில்லை. அவரவர் நடந்துகொண்ட விதத்தால்தான் புகழ் ஒருவருக்கு வந்துசேரும். பொதுமக்கள் எப்போதும் கருணாநிதியை ஏற்றுக்கொண்டதில்லை, அதிமுக தவறு செய்யாத பட்சத்தில் என்பது எத்தனையோ முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

    தன் வினை தன்னைச் சுடும். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதுதான் கருணாநிதி விஷயத்தில் நடந்தது என்று நான் நம்புகிறேன். தீர்ப்பிலும் ‘சட்டம்’ என்பது இல்லை.

    • rajshree_cmb's avatar rajshree_cmb சொல்கிறார்:

      இத்தோடு சேர்த்து ஊருக்கு ஒரு பெண் கிளம்பி வந்து நான் தான் இவருடைய மகள் என்று சொல்லாமல் இருக்கணும்.

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        கிளம்பியதே… அப்போது கோர்ட்டில், எனக்கு கனிமொழி என்று ஒரு மகளும் கிடையாது, ராசாத்தி என்று ஒரு மனைவியும் இல்லை என்று கோர்ட்டில் தாக்கல் செய்தது கருணாநிதி தானே. பிறகு நிறைய பதவிகள் காலியானபோது, கனிமொழி என் இணைவிக்குப் பிறந்தவர் என்று சொல்லி எம்.பி ஆக்கியதும் அவரே அன்றோ.

      • Raja's avatar Raja சொல்கிறார்:

        இவருக்குத் தான் ஏற்கெனவே இருக்கிறார்களே
        ஒன்று, இரண்டு, மூன்று என்று. கோர்ட்டில் சொன்னாரே –
        என் மகள் ————-யின் தாயார் ———- என்று.
        போதாதா ?

    • rajshree_cmb's avatar rajshree_cmb சொல்கிறார்:

      //இத்தனைக்கும் மக்களின் மகத்தான ஆதரவைப் பெற்ற முதலமைச்சராக இருந்து ஜெ. அவர்கள் மறைந்தார். //

      உலகம் இன்னுமா இதை நம்புகிறது?

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        ஜெ. மக்களின் மகத்தான ஆதரவு பெறவில்லை என்றால் வேறு யார்? பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடுமா? 2011 லிருந்து தொடர்ந்து இரு முறை முதலமைச்சர், எம்ஜியாருக்கு அப்புறம் ஜெ. தான். ஏனென்றால் அவருடைய கட்சியினர் பெற்ற வாக்கு அதிமுக வாக்கு மட்டும்தான்.

      • Raja's avatar Raja சொல்கிறார்:

        நிச்சயமாக. கடைசியில் ஜெயலலிதாவின் மீது போடப்பட்ட அத்தனை
        வழக்குகளையும் வாபஸ் பெற்ற பிறகு தானே மெரினாவிற்குள் நுழையவே
        முடிந்தது ?

  9. rajshree_cmb's avatar rajshree_cmb சொல்கிறார்:

    // mekaviraj சொல்கிறார்:
    9:26 முப இல் ஓகஸ்ட் 8, 2018
    திருமதி ஜானகி அம்மையாருக்கு – தன் கணவர் எம்.ஜி.ஆர் அருகே
    இடம் கொடுக்க கலைஞரே மறுத்த விஷயம் உட்பட…
    இது உண்மையா ? உண்மையானால் 😦

    vimarisanam – kavirimainthan சொல்கிறார்:
    9:58 முப இல் ஓகஸ்ட் 8, 2018
    உண்மை தான்….நேற்றிரவு, உயர்நீதிமன்ற விசாரணையின்போது, இந்த விவரம்,
    அரசுத்தரப்பிலிருந்து, ஆவண ஆதாரங்களுடன் முன் வைக்கப்பட்டிருக்கிறது.//

    படித்தவுடன் பக்கென்று சிரித்து விட்டேன். கருணாநிதி செய்த நல்லதும் கெட்டதும் ஒருபுறம் இருக்கட்டும். யாரோடு யாரை ஒப்பிடுவது என்று ஒரு வரைமுறை இல்லையா??

    • Raja's avatar Raja சொல்கிறார்:

      ஏன் – தத்தெடுத்த அண்ணாவின் சமாதியில் பாகம் பிரிக்கலாம், இடம் பிடிக்கலாம் என்று ஒரு கூட்டம் சாதித்தால்,
      சொந்த மனைவி, அவரும், ஒரு முன்னாள் முதல்வர் என்கிற முறையில் கேட்டது என்ன தவறு ?
      முடியாது என்று தன் கைப்படவே அரசாங்க கோப்புகளில் எழுதிய
      சின்னபுத்தியை காலம் இப்போது வெளிப்படுத்தி விட்டதே.
      அப்புறம் என்ன இளிப்பு -சிரிப்பு ?

    • சி்வா's avatar சி்வா சொல்கிறார்:

      ‘எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு’ என்ற வரிகள்தான் நினைவிற்கு வருகிறது, கலைஞர் செயலால், கணவருக்கு அருகில் மனைவிக்கு பெரிய மனதுடன் இடமளித்திருக்கலாம். அவர் ஆட்சியில் ஜெயல‍லிதா அம்மையார் மரணித்திருந்தால் என்ன செய்திருப்பாரே அவருக்கே வெளிச்சம். அந்நிலை வராமல் ஜெ செய்த தர்ம‍ம்தான் காப்பாற்றியுள்ளது.

      ஆனால் காமை போன்ற ஜெ அபிமானிகளும் கலைஞருக்கு மெரினாவில் இடமளிக்க பேசுவது இன்னமும் மனிதம் உயிர்ப்புடன் இருக்கின்றது என்பதை காட்டுகிறது.

  10. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்ததை பாேல இந்த வழக்கின் முலம் ஜெயலலிதா சமாதி தாெடர்பான வழக்கு வாபஸ்களும் , கலைஞருக்கு மெரினாவில் இடமும் கிடைத்தது அரசுக்குதான் வெற்றி என்பாரும் ..கலைஞருக்குதான் வெற்றி என்பாரும் இருந்தாலும் உண்மையான வெற்றி ஜெயாவுக்குதான் என்தை மறுக்க முடியாது …

    இந்த தேசியக் காெடி பாேர்த்தப்பட்டு அரசு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறார் கலைஞர் என்றால் அவர் முன்னாள் முதல்வர் என்பது சரி ..ஆனால் அவரை முதல்வர் என்கிற ஆசனத்தில் அமர வைத்தவர் மறைந்த எம் ஜி . ஆர் . என்பதுதான் உண்மை …! அண்ணாவின் மறைவிற்கு பிறகு முதல்வராகுவதற்கு முழு தகுதியுடன் இருந்த நெடுஞ்செழியனுக்கு பதிலாக இவரை முதல்வராக்க அனைத்து முயற்சிகளையும் மேற்காெண்டு அந்த நாற்காலியில் அமர வைத்தவர் எம்.ஜி.ஆர் என்பதை மறக்கவாே மறைக்கவாே முடியாத வரலாறு தானே …?

  11. மெய்ப்பொருள்'s avatar மெய்ப்பொருள் சொல்கிறார்:

    கருணாநிதி மறைவுக்கு பிறகு இது மாதிரி நடந்திருக்க வேண்டியதில்லை .
    மூத்த தலைவர் – வயதுக்கு மரியாதை கொடுத்து இருக்கலாம் .
    கடற்கரையில் இடம் கொடுக்க முடியாது என்று சட்டம் பேசியிருக்க வேண்டாம் .
    இது காழ்ப்புணர்ச்சி என்றுதான் பார்க்கப்படும் .

    லட்சக்கணக்கில் மக்கள் கூட்டம் கூடி இருந்தது .
    எதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் யார் பொறுப்பு ?
    அரசு செயலர் , குருமூர்த்தி போன்றவர்கள் யோசித்து இருக்க வேண்டும் .

    மக்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று பார்த்திருக்க வேண்டும் .
    பொறுப்பு இல்லாமல் மாநில மத்திய அரசுகள் நடந்து கொண்டன
    என்றுதான் மக்கள் நினைப்பார்கள் .

    இன்னொன்று – ஜெயா இறந்த போது அவர் முதல்வர் இல்லை .
    ஓ பி எஸ் தான் முதல்வராக இருந்தார் .

  12. ravikumar r's avatar ravikumar r சொல்கிறார்:

    TN in rotten condition due to MK and JJ

  13. tamilmani's avatar tamilmani சொல்கிறார்:

    Two big political forces have vanished now. I dont think there will be any election as of now.probably the next elections will be for the parliament in 2019. Tamilnadu people should elect good parliamentarians irrespective of their political affiliations so that they can do something for Tamilnadu and its people. Both DMK and AIDMK have done nothing for the tamil people and should be avoided and any new dispensation which can do something for tamilnadu should be given preference.

  14. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர்களுக்கு,

    மன்னிக்கவும். இத்தனை பின்னூட்டங்களுக்கும் பதில் எழுதக்கூடிய மன நிலையில் இப்போது நானில்லை…

    இறுதி ஊர்வலம் (கிட்டத்தட்ட) முழுவதுமாக பார்த்தேன். சில விஷயங்கள் என்னை உருட்டுகின்றன –

    – 94 வருட உழைப்பிற்கு பின்னர் இறுதியில் இது தானா…? கட்சிக்காரர்களின் அன்பை விடுங்கள்…
    ஏன் இத்தனை பேரின் வெறுப்பை சம்பாதிக்க நேர்ந்தது…? தவிர்த்திருக்க முடியாதா …?

    – தன் கணவர் இறந்து விட்டார் என்பதைக்கூட புரிந்து கொள்ளாத / அறிந்துகொள்ள முடியாதை ஒருநிலை அவரது மனைவிக்கு ஏற்பட்டது ஏன்…? யார் செய்த பாவம்…?
    இது விதியா அல்லது இதற்கு வேறேதும் பெயர்… காரணம் உண்டா ….?

    – அவருக்கு அரசாங்கத்தின் சார்பில் செய்யப்பட்ட இறுதி மரியாதை-
    அவர் திமுக தலைவர் என்பதற்காகவா – அல்லது
    ஐந்து முறை முதல்வராக இருந்து மக்களுக்கு அரிய தொண்டாற்றியதை
    கௌரவிக்கும் விதமாகவா ?

    இரண்டாவது தான் காரணம் என்றால், இறுதி மரியாதையின்போது,
    அவர் மீது போர்த்தப்பட்ட மூவர்ண தேசியக்கொடி யாரிடம் அளிக்கப்பட்டிருக்க
    வேண்டும்…. அவரது குடும்பத்தின் மூத்த வாரிசு / மகன் அங்கேயே பக்கத்தில் நின்று கொண்டிருக்கும்போது, அந்த கொடி, 2-வது மகனிடம் கொடுக்கப்பட்டது எப்படி….?
    மூத்த மகன் கட்சியினரால் புறக்கணிக்கப்பட்டவராக இருந்திருக்கலாம்.
    ஆனால், குடும்பத்துக்கு மூத்த வாரிசு அவர் தானே…? மிகுந்த கௌரவத்திற்குரிய அந்த மரியாதை யாருக்கு கொடுக்கப்பட்டிருக்க
    வேண்டும்… கட்சி புறக்கணிக்கலாம்…. ஆனால் ராணுவம் புறக்கணிக்க காரணமென்ன….? அதை வழிநடத்திச் சென்றவர் புறக்கணிக்க
    காரணமென்ன … ?

    அத்தனை தொலைக்காட்சிகளும் கூட அவரை புறக்கணிக்க காரணம் என்ன…?
    இது சரியா…?

    -தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      இதற்கு திமுக சார்பானவர்கள் பதில் சொல்லமாட்டார்கள்.

      இந்த மாதிரி கவுரவம், கருணாநிதிக்காக அளிக்கப்படவில்லை. திமுகவின் வாக்குகளுக்காக அளிக்கப்பட்டது. அதனால்தான் தற்போதைய செயல் தலைவரிடம் மூவர்ணக்கொடி கொடுக்கப்பட்டது. (இந்த சமயத்தில், ஜெ. மரணத்தின்போது, சம்பந்தமே இல்லாத நடராஜனுக்கு மோடி அவர்கள் ஆறுதல் கூறியது நினைவுக்கு வந்திருக்கணுமே, மூவர்ணக்கொடி சசிகலாவிடம் அளிக்கப்பட்டதற்கும் அரசியல் காரணம் அன்றி வேறு என்ன உண்டு)

      நீங்கள் கூறியபடி நியாயம் வேண்டுமென்றால், முக முத்து அவர்களிடம்தான் மூவர்ணக்கொடி அளிக்கப்பட்டிருக்கவேண்டும், அவரால் வாங்கிக்கொள்ள முடியும் என்றால்.

  15. D. Chandramouli's avatar D. Chandramouli சொல்கிறார்:

    I too wished that the government should have right away agreed to the request of Stalin for allotting space in Marina for MK. .

  16. jksm raja's avatar jksm raja சொல்கிறார்:

    நம்மை அடிமை படுத்தி ஆண்ட தெலுங்கனும், வெள்ளைக்காரனும் செய்ய முடியாத அளவிற்கு, சாதி வெறியை தூண்டி, தமிழர் சாதிக்குள் பகைமையை ஏற்படுத்தி, அதன்முலம் ஆட்சி அதிகாரத்தை பிடித்த கூட்டம் ஒழிந்தது இனிமேலாவது சாதி வேற்றுமையை மறக்க முயல்வோம்.

  17. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    //இன்னமும் மனிதம் உயிர்ப்புடன் இருக்கின்றது//
    சிவா – இப்படி எழுதியதன்மூலம், கருணாநிதிக்கு ‘மனிதம்’ இல்லை என்பதை ஒப்புக்கொள்வதுபோல் தெரிகிறதே.

    திமுகவினருக்கு நாகரீகமோ, மனிதமோ (அதாவது, வரவு எதிர்பார்க்கும் திமுக பிரமுகர்களுக்கு) கிடையாது என்று இன்னும் ஒரு முறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே இரவில் தாங்கள் போட்ட வழக்குகளை வாபஸ் பெற்றார்கள் என்றால், அவர்கள் வழக்குப்போட்டதே, பொதுநலத்தில் இல்லை, வெறும் காழ்ப்புணர்ச்சிதான் காரணம் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டதே.

    எம்ஜிஆர் எப்போதும், கருணாநிதியை, திமுகவை, ஒரு ‘தீயசக்தி’ என்றே குறிப்பிட்டது என் நினைவுக்கு வருகிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.