கடவுளை நினை – ஆனால் ……!!!


“கடவுளை மற – மனிதனை நினை” –
புகழ்பெற்ற quote இது….

மனிதனை நினைப்பதற்காக
கடவுளை மறக்க வேண்டுமா என்ன…?

அந்த கடவுள் உண்மையில் எதை விரும்புவார் என்பதை –
நாம் உணர்ந்து கொண்டாலே போதும் அல்லவா… ???

எந்த கருத்தையும், சொல்பவர் சொன்னால் தான்,
அதையும் சொல்கிற விதத்தில் சொன்னால் தான்
– சரியான விதத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

திரு.சுகி சிவம் – ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் பேசினாலும்,
அதில் ஒரு நிமிடம் கூட பயனற்றதாக இருக்காது…
அத்தனையும் கருத்து முத்துக்கள்.

ஒரே நிமிடத்தில் ‘நச்’சென்று ஒரு விஷயம் கூறுகிறார்
பாருங்கள்….
———————–

———————–

சில ஆண்டுகளுக்கு முன்னர், விமரிசனம் வலைத்தளத்தில்
எழுதத் துவங்கிய தொடக்க காலத்தில், இந்த கருத்தை ஒரு
இடுகையில் நான் வேறு விதமாக வெளிப்படுத்தி இருந்தேன்…
எப்படி…? கீழே…..

விமரிசனம் – தேதி 29/07/2009 –
(திமுக ஆட்சியில் இருந்தபோது எழுதப்பட்ட இடுகை இது…)
———————–

ஆலயப் பணிகளும் -சமுதாய நலனும்

தமிழ் நாட்டைப் பொருத்தவரை – மிகப்பெரும்பாலான மக்கள் – ஆன்மீக உணர்வும், தெய்வ நம்பிக்கையும் உள்ளவர்கள்.

மக்களின் தெய்வ நம்பிக்கையை தவறாகப் பயன்படுத்தி, அதிலும் லாபம் சம்பாதிக்க என்றே ஒரு கூட்டம்உருவாகியுள்ளது.

அறங்காவலர் பதவி இப்போது அரசியல்வாதிகளின் பிழைப்புக்கான பதவியாகி விட்டது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கோவிலில் என்ன வேலை ?

பெரும்பாலானோர் – வசதி படைத்தவர்களாக இருந்தாலும் சரி, சாதாரண மக்களாக இருந்தாலும் கூட சரி – வெவ்வேறு தருணங்களில் கோவில்களுக்கு காணிக்கை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். பிரசித்தி பெற்ற
கோவில்களில் இத்தகைய காணிக்கைகள் வந்து குவிவதைப் பார்க்கிறோம்.

சில சமயங்களில் பணமாகவும், பல நேரங்களில்பொருட்களாகவும்,
நகைகளாகவும், சில சமயங்களில் கால்நடைகளாக/பிராணிகளாக கூட இவை காணிக்கையாக குவிகின்றன.
விழாக்காலங்களில் உண்டியல்கள் நிரம்பி வழிகின்றன.

கால்நடைகள் ஏலத்திற்கு விடப்பட்டு, பணமாக மாற்றப்படுவதைப்போல்,
நகைகளும் மற்ற பொருட்களும் கூட ஒரு முறை கடவுளின்
திருவுருவத்திற்கு அணிவிக்கப்பட்ட பிறகு ஏலத்தில் விடப்பட்டு,
பணமாக்கப்பட்டு கோவில் நிதியில் சேர்க்கப்படலாம்.

கடவுளுக்கு படைக்கப்பட்டவை என்பதால் இவை அனைத்தும் அசல் விலையை விட அதிகமாகவே ஏலத்தில் எடுக்கப்படும்.

வழக்கமாக கோவில் பராமரிப்புக்கு தேவைப்படும் நிதியைத் தாண்டி, மிகுதியாக உள்ள பணம் கோவிலிலும், அதைச்சுற்றி உள்ள பகுதிகளிலும், பக்தர்களுக்கான வசதிகளை செய்து கொடுக்க பயன்படுத்தப்படவேண்டும். கோவில் நிலங்களில் இருந்தும், கோவிலுக்கு சொந்தமான கட்டிடங்களிலிருந்தும் கிடைக்க
வேண்டிய வருமானங்கள் உரிய முறையில் வசூலிக்கப்பட வேண்டும். கோவில் சொத்துக்கள் சுரண்டல்களிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.

உபரி வருவாய் / நிதி வசதிகளைக் கொண்டு கோவிலைச்சுற்றி உள்ள கிராமங்களில்/நகரங்களில் மக்கள் பயன்பெறும் வகையில் – இலவச மருத்துவ மனைகள், பள்ளிகள்,கல்லூரிகள், நூலகங்கள் – போன்றவை நிறுவப்பட்டு நன்கு பராமரிக்கப்பட வேண்டும்.

மக்கள் சேவையே மகேசன் சேவை என்பது மேடையோடு
நின்று விடாமல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

இந்தப் பணிகள் செவ்வனே நடைபெற வேண்டுமானால் கோவில்
அறங்காவலர்களாக ( டிரஸ்டிகளாக) அரசியல்வாதிகளும், தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களும் நியமிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

உள்ளூரைச் சேர்ந்த, கடவுள் நம்பிக்கையுள்ள, மக்களின் நம்பிக்கையை பெற்ற, நாணயமான பெரிய மனிதர்கள் கோவில் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

ஊருக்கு, ஊர் மக்களுக்கு – இயற்கையால் எதிர்பாராத இழப்புகள்/இடர்ப்பாடுகள் ஏற்படுகின்ற நேரங்களில் கோவில்கள் தான் புகலிடமாக இருக்க வேண்டும். கோவில்கள் உருவாக்கப்பட்டதின் முக்கியமான குறிக்கோள்களில் இதுவும் ஒன்று.

கோவில்கள் கொடியவர்களின் கூடாரங்களாக உருமாறுவது
தடுக்கப்பட வேண்டும் – என்பது திரைப்பட வசனமாக மட்டும்
இருந்து விடக்கூடாது !

——————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to கடவுளை நினை – ஆனால் ……!!!

  1. ravikumar's avatar ravikumar சொல்கிறார்:

    It was looted after DMK and ADMK regime

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.