அண்ணன் சீமான் – குணாதிசயங்களும், தேர்தல் வெற்றி-தோல்விகளும் .… !!!

…………………………………………………………

……………………………………………………………..

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்களைப்பற்றி இந்த தளத்தில் இதுவரை பெரிதாக விமரிசனங்கள் எதுவும் வந்ததில்லை… நான் வியப்போடு பார்க்கும் ஒரு அரசியல்வாதி சீமான்…அதற்கு பல காரணங்கள் உண்டு.

இது குறித்தெல்லாம் விவரமாக இந்த வலைத்தளத்தில் ஒரு நாள் எழுத வேண்டும் – அதுவும், வரவிருக்கின்ற தேர்தலுக்கு முன்பாகவே – என்று நினைத்திருந்தேன்…

என் கருத்துகளுக்கு மிக நெருக்கமாக ஒரு முகநூல் கட்டுரையை அண்மையில் பார்த்தேன்…95% அவை என் கருத்துகளை ஒட்டியே இருக்கின்றன… எனவே நான் தனியே எழுதுவதற்கு பதிலாக, அந்த கட்டுரையையே
இங்கு பதிவிடலாமென்று தோன்றியது… நண்பர் அராத்து அவர்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டு அந்த கட்டுரையை கீழே தருகிறேன்….

…………………………………………………………

அரசியலில் பல தேவைகள் இருக்கும். ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டும் எனில் எப்போதும் வென்று ஆட்சியமைக்கும் தலைவர்கள் மட்டுமே போதாது. ஒரு ஜனநாயக நாட்டில் மாறி மாறி வெல்லும் கட்சித் தலைவர்களைத் தாண்டி, முட்டுக்கட்டை போடும் தலைவர்கள், குடைச்சல் கொடுக்கும் தலைவர்கள் , கொட்டும் தலைவர்கள், மக்கள் திரள் கருத்துக்களை உருவாக்கும் தலைவர்கள் என பலத் தேவைகள் உள்ளன.

எந்தத் தலைவர் ஆள வேண்டும் என்பாத்ற்கு அப்பால் அவர் எப்படி ஆட்சி புரிய வேண்டும் என்பதில் தாக்கத்தை ஏற்படுத்த வல்லவர்கள் இதைப்போன்ற தலைவர்கள்.

இதைப்போன்ற தேவைக்கு ஒரு மாநிலத்தில் அரசியல் கட்சியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இயக்கமாகவும் இருக்கலாம். அந்த இயக்கம் தேர்தலிலும், தேர்தலுக்குப் பின்னான ஆட்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

பெரியார் இதற்கு சரியான உதாரணம். அரசியல் கட்சியாக இருந்தாலும் சில ஆண்டுகள் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த வேலையைச் செய்து வந்தன. இப்போது அவை சொற்ப எமெல்லே சீட் களோடு திருப்தி அடைந்து விடுகின்றன. மக்களிடையே இருந்த தி.க வின் செல்வாக்கும் ஸ்டிக்கர் போட்டு போல ஆகி விட்டது. தி.க தன்னளவில் செட்டில் ஆகி தொட்டிலில் தூங்கிக்கொண்டு இருக்கிறது. யார் ஆட்சிக்கு வந்தாலும், வந்த பின் ஆதரிப்பது அதன் முக்கியக் கொள்கையாகி விட்டது. கொள்ளுத் தாத்தா ஆசீர்வாதம் போல ஜெயித்த முதல்வர்களும் அதனிடம் போய் வாங்கிக்கொள்கிறார்கள்.

தி.க , கம்யூனிஸ்ட் மற்றும் பல்வேறு சிறு சிறு இயக்கங்கள் ஏற்படுத்திய வெற்றிடத்தில் இருந்துதா சீமான் தோன்றுகிறார் என்பது என் தனிப்பட்டக் கருத்து. ஆனால் இந்த இயக்கங்கள் கொண்டிருந்த சித்தாந்த பலம் மற்றும் முதிர்ச்சி இவரிடம் இருக்கிறதா என்றால் இல்லை.

இது காலத்தின் கோலம். அமெரிக்க அதிபர் உள்ளிட்ட உலகம் முழுக்க இருக்கும் பெரும் பதவியில் இருப்பவர்களே அந்தப் பதவியின் மதிப்புக்குக் குறைவாக நடந்து கொண்டு காமடி செய்துகொண்டு கோமாளித்தனமாக நடந்துகொண்டு இருக்கையில், இங்கு ஒரு மாற்று சக்தியாக உருவாகுபவரும் காமடி செய்பவராகத்தான் உருவாக முடியும்.

அதாவது ஃபார்முலா அண்ட் ஈக்குவேஷன் மாறவில்லை. எப்போதும் அது ஒரே மாதிரிதான் இருக்கிறது. ஆனால் அதனுள் கொடுக்கப்படும் டேட்டா மாறி இருக்கிறது. டேட்டா கோமாளித்தனமாக இருந்தால் ரிஸல்டும் கோமாளித்தனமாகத்தான் வரும்.

சீமானின் சிறப்புகள்.

அதைச் சொல்வதற்கு முன்பு முதலில் ஒன்றைச் சொல்லி விடுகிறேன். மாநில அரசியலில் சீமானின் பங்களிப்பு எப்போதும் தேவை. ஆனால் அவர் ஒருநாளும் முதல்வராகி விடக்கூடாது.

1. வெற்றியே இல்லாமல் அரசியலில் ஒருவர் இவ்வளவு ஆண்டுகள் தாக்குப் பிடிக்க அபாரமான மனவலிமையும், ஸ்டமினாவும் தேவை.

2. தனக்கும் தன் கட்சிக்கும் இத்தனை ஆண்டுகள் சிதறிப்போகாத தொண்டர் கூட்டத்தை கட்டிக் காத்து வருவது.

3. வெளிப்படையாக இல்லாவிடினும், சினிமா பிரபலங்கள் மற்றும் மற்ற அரசியல் கட்சித் தலைவர்களிடமும் தனக்கென ஒரு சாஃப்ட் கார்னர் உருவாக்கி வைத்திருப்பது.

4. பொதுமக்கள் இடையே நம்பிக்கை பெற்று ஓட்டை வென்றெடுக்க முடியாவிட்டாலும், கெட்ட பெயர் சம்பாதிக்காமல் இருப்பது.

5. அயராத உழைப்பு.

6. மிகச் சிறந்த மேடைப் பேச்சு. ஒரு மணி நேரம் என்றாலும் அனைவரையும் கட்டிப் போடும் திறமை.

7. எங்கே தடுத்து பேட்டி எடுத்தாலும், இயல்பாக எதிர்கொண்டு சிக்ஸர் அடிக்கும் திறமை.

8. குறுக்கு வழியில் ஜெயிக்க ஓட்டுக்குப் பணம் கொடுக்காமல் இருப்பது.

9. மிக மிக முக்கியமான விஷயம். இதுவரை எந்தக் கூட்டணியிலும் சேராமல் இருப்பது. மிகப் பெரிய சாதனை இது.

10. திராவிடம் – தமிழ் தேசியம் என்ற விவாதத்தை மாநிலத்தில் முன்னெடுத்தது. திராவிடக் கட்சிகளை தர்மசங்கடப் படுத்தியது. பொது மக்களும் அதை பேச ஆரம்பித்தது.

11. விஜய லட்சுமி , போலீஸ் விசாரணை, கோர்ட்டு , கேஸ் என தனிப்பட்ட முறையில் என்னதான் அசிங்கப்படுத்த நினைத்தாலும் தளராமல் நின்று , மீண்டு வருவது.

——–

சீமானின் வீக்நெஸ்

1. ஜனநாயகத்தில், சீமான் ஒரு முதிர்ச்சியான தலைவர் அல்ல. ஒரு மென்மையான சர்வாதிகாரி போல. சர்வாதிகாரியில் நல்ல சர்வாதிகாரி, கெட்ட சர்வாதிகாரி என்றெல்லாம் இல்லை அல்லவா? ஒருக்கால் அவர் தலைவராக ஏற்றுக்கொண்ட பிரபாகரனின் தாக்கம் இதில் இருக்கலாம்.

2. சினிமா ஹீரோ போல தன்னை மட்டுமே முன்னிறுத்திக் கட்சியை நடத்திக்கொண்டு இருப்பது.

3. குறுகிய கால கவனம் பெற வேண்டி, பொய்களையும் , ஆதாரமற்ற விஷயங்களையும் பேசி நம்பகத்தன்மையைக் குறைத்துக்கொள்வது.

4. சின்னப்பிள்ளைகள் போல – வரலாற்றில் இருந்து ஏதோ ஒரு சின்ன விஷயத்தை எடுத்து வந்து – தான் தான் அதைக் கண்டுபிடித்தது போல ஊதிப் பெரிதாக்குவது.

5. தமிழ் இனம் என்ற பெயரில் பிரிவினை வாதம் பேசுவது. இதுதான் சீமானிடம் மிக மிக ஆபத்தான போக்கு. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இதனால்தான் இவரிடம் பெருமளவு தொண்டர்கள் இணைந்தார்கள்.

6. தலைவருக்கென்ற மரியாதை இல்லாமல் இஷ்டத்துக்கு கோமாளி போல அடித்து விடுவது.

7. ஆடு மேய்ப்பது அது இது என நாஸ்டால்ஜிக் பிற்போக்கு வாதம் பேசுவது.

8. கட்சிக்குள் கொஞ்சமாக முன்னேறி வருபவர்களை அரவணைக்கத் தெரியாமல் அடித்து விரட்டுவது. அரசியல் கட்சி என்பது டீம் ஒர்க் அல்லவா? அது தெரியாமல் இருப்பது.

————

எனக்குத் தனிப்பட்ட முறையில் சீமானிடம் பிடித்த விஷயம் என்னவென்றால், மாற்றுக் கட்சியோ அல்லது வேறெவராக இருந்தாலும் , தமிழராக இருந்தால், திட்டுவது என்றாலும், பாராட்டுவது என்றாலும் பாசமுடன் …

எங்க அண்ணன் சொன்னார், எங்க ஐயா சொல்லிருக்கார் , நம்ம தங்கச்சி பேசிருக்கு , எங்க அக்கா சொன்னாங்க , என உரிமையுடன் உறவு சொல்லி அழைப்பது.

இதற்கு முன்பும் திராவிடக் கட்சிள் , மதிப்பிற்குரிய அண்ணன் சொன்னார்கள் , என் இளவளின் ஆற்றலைப் பாருங்கள் என்றெல்லாம் பேசுவார்கள். ஆனால் அதிலெல்லாம் ஒரு நாடகத்தன்மை வெளிப்படும். ஒட்டாது.

இந்த விஷயத்தில் சீமான் மனதில் இருந்து பேசுகிறார். அது கேட்பதற்கு அவ்வளவு நன்றாக இருக்கிறது. இது ஒரு நல்ல அரசியல் கலாச்சாரம். தமிழர்கள் என்றொரு கூட்டுணர்வு மேலோங்குகிறது.

சீமான் பல விதமாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள முயற்சித்தாலும் அது எல்லாம் போலி சீமான்.

புஹ்ஹாஹ்ஹா என அவ்வப்போது சிரிக்கிறார் அல்லவா ? அதுதான் உண்மையான சீமான். அந்தச் சீமானை எனக்குப் பிடித்திருக்கிறது. மனதுக்கு நெருக்கமாக இருக்கிறார்.

சீமான் பாணியிலேயே சொல்வதானால்….

நம்ம அண்ணன் தான். அண்ணன் எப்பவும் தமிழ் நாட்டு அரசியலில் இருக்கட்டும், இருக்கணும். அண்ணன் வென்று சட்டமன்ற உறுப்பினர் இலல் , எதிர்கட்சித் தலைவர் கூட ஆகட்டும். ஆனா என் அண்ணன் கிட்ட கேட்டுக்கறேன், முதல்வர்லாம் வேண்டாண்ணே ….அதுக்கு நீங்க ஒத்துவர மாட்டீங்கண்ணே….என்ன நான் சொல்றது…எங்க ஐயா பிரபாகரன் இருந்தாலும் இதைத்தான் சொல்லுவாரு. நீங்க இப்டியே போய்கிட்டு இருங்கண்ணே…அதுதான் உங்களுக்கும் நல்லது, தமிழ்நாட்டுக்கும் நல்லது ..

புஹ்ஹாஹ்ஹாஹ்.

……………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக