ரயிலில் சந்தித்த ஒரு சீக்கிய பயணியும், கனடாவும்….!!!


சில மாதங்களுக்கு முன்பு, டெல்லியிலிருந்து – பதான்கோட் வரை ரெயிலில் சென்றேன் ( ஏசி- 2-ஆம் வகுப்பு )… டெல்லியிலிருந்து நான் இருந்த பெட்டியில் ஒரு சீக்கியரும் பயணித்தார்… என்னருகேயே அவருக்கும் இருக்கை…!!!

எனக்கு நிறைய சீக்கியர்களுடன் நல்ல பரிச்சயம் உண்டு. பொதுவாகவே சீக்கியர்கள் சிவந்த நிறத்தவராக இருப்பர். இவர் இன்னும் கொஞ்சம் கூடவே சிவப்பாக இருந்தார்….அவரையும், அவரது லக்கேஜுகளை பார்த்தால்,
வெளிநாட்டிலிருந்து விமானத்தில் வந்திருப்பார் என்று தோன்றியது.

புதிய இடங்களுக்கு பயணிப்பதும், வித்தியாசமான மனிதர்களை பார்த்து, அவர்களுடன் பேசிப்பழகுவதும் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம்…. அவரிடம் பேச்சு கொடுத்தேன் – ஹிந்தியில் தான்….
மிகவும் ஜாலியான மனிதர்….அவரும் நிறைய பேசினார். நான்
தமிழ்நாட்டை சேர்ந்தவன் என்பதும், ஹிந்தியில் சகஜமாகப் பேசியதும் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது என்பது அவருடனான உரையாடலில் தெரிந்தது. மனிதர் இடையிடையே இஷ்டத்திற்கு ஆங்கிலத்திலும் பேசினார்….!!! வித்தியாசமான அரைகுறை ஆங்கிலம்…!

அவர் கனடாவில் வசிக்கும் சீக்கியர் என்பது தெரிய வந்தது….அவருக்கு 45-50 வயது இருக்கலாம். அவரது வயதான பெற்றோர்கள் தனியே பஞ்சாபில் வசிக்கின்றனர்… அவர்களை பார்ப்பதற்காகவே, சர்வ சகஜமாக, நாலைந்து மாதங்களுக்கு ஒரு முறை, கனடாவிலிருந்து – பஞ்சாப் வரை வந்து செல்கிறார்….!

பொதுவாகவே வட இந்தியர்கள் – ( நம்மைப்போல் அல்லாமல்…!)
-பெற்றோர்களிடம் மிகுந்த அன்பும், மரியாதையும் உள்ளவர்கள் ….அதை ஒவ்வொரு நிமிடமும் வெளிப்படுத்தவும் செய்வார்கள்… கடைசி வரை அவர்களை சந்தோஷமாக வைத்திருப்பது தங்கள்கடமையும், பாக்கியமும் என்று கருதுபவர்கள்.

ஏன் – அவர்களை கவனித்துக்கொள்ள இங்கே உங்கள் சகோதரர்கள் யாரும் இங்கே இல்லையா என்று கேட்டேன்….

மேற்கொண்டு அவரிடம் பேசியதில், கடந்த 15-16 வருடங்களாக அவர் கனடாவில் இருப்பதாகவும், தனது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என்று சுமார் 25 பேர் வரை ஏற்கெனவே கனடாவிற்கு அழைத்துக் கொண்டு போய் செட்டில் செய்து விட்டதாகவும் தெரிந்தது.

ஒரே வியப்பு எனக்கு… என்ன, கனடாவில் போய் செட்டில் ஆவது
அவ்வளவு சுலபமா, குடியுரிமை சுலபமாக கிடைக்கிறதா – என்று கேட்டேன்… அவ்வளவு தான் பிடித்துக் கொண்டு விட்டார் மனிதர்…. !

உங்களை எனக்கு மிகவும் பிடிக்கிறது… நீங்களும் வாங்களேன்… நல்ல வாழ்க்கை…நல்ல standard of living…. நீங்கள் அங்கேயே செட்டிலாகி விடலாம் என்றார்…

எனக்கெல்லாம் குடியுரிமை சுலபமாக கிடைக்குமா என்றதற்கு, உங்களைப்பற்றிய டாக்குமெண்ட்ஸ் எல்லாவற்றையும் கொடுங்கள்… 3 மாதம் டைம் கொடுங்கள்…. உங்களை கனடிய குடியுரிமையோடு என் வீட்டிற்கு பக்கத்திலேயே குடியமர்த்துவது என் பொறுப்பு என்றார்…. சீரியசாகவே…!!!

அப்புறம் அவரிடம் பேசிக்கொண்டிருந்ததில் – எட்டாவது வரை மட்டுமே படித்திருக்கும் அவர் இரண்டு மூன்று வகை வியாபாரங்களில் ஈடுபட்டிருப்பதாகவும், ( முக்கியமாக ஆட்டோமொபைல் ) – இங்கிருந்து அவர் அழைத்துக் கொண்டு போன அனைவரும் (25 பேர்) குடும்பத்தோடு அவரைச் சுற்றியே தான் இருப்பதாகவும், நல்ல standard of living, கல்வி, வேலை
வாய்ப்பு, மருத்துவ வசதி அனைத்தும் கிடைக்கின்றன என்றும் தெரிய வந்தது.

எனக்கு அப்படி எல்லாம் கனடாவில் குடியேற ஆசை எதுவும் இல்லை என்று அவரை கன்வின்ஸ் செய்வதற்குள் எனக்கு போதும் போதுமென்றாகி விட்டது…!

கனடா குறித்த சில விவரங்களை நான் ஏற்கெனவே அறிவேன்…

உலகிலேயே பரப்பளவில் 2-வது பெரிய நாடாக இருந்தாலும், ஜன-அடர்த்தி மிகக்குறைந்த நாடு…

மொத்த மக்கள் தொகையே தமிழ்நாட்டில் பாதிதான்
( சுமார்மூன்றரை கோடி…? ) என்பதும், இயற்கை வளங்கள் நிறைய உள்ள நாடு என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

சில வருடங்கள் முன்பு கனடாவிற்கு ஒரு சுற்றுப்பயணம் போகலாமா என்று கூட நினைத்தேன்…. பல இடங்களையும் பார்ப்பதோடு, கனடாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் சிலரையாவது நேரில் சந்தித்து அவர்களது தற்போதைய வாழ்க்கை பற்றி அறிய விரும்பினேன்.

ஆனால், கனடாவின் குளிர் பற்றி நான் கேள்விப்பட்டவை என்னை மிகவும் பயமுறுத்தியிருந்தது…. பின்னர், பல காரணங்களால் அது கைகூடவில்லை…

இப்போது இந்த இடுகையை எழுதத் தூண்டியதற்கு ஒரு காரணம் –
குளிர்காலத்தில் – நயாகரா நீர்வீழ்ச்சியும், வட-கனடாவில்
ஆறுகளும், எப்படி உறைந்து போயிருக்கின்றன என்பது குறித்த
ஒரு செய்தியையும், சில வீடியோக்களையும் பார்த்தது –
அந்த வீடியோக்களை நீங்களும் பார்க்க கீழே தந்திருக்கிறேன்.

snow storm –

நயாகரா-


MELTING RIVER –

மற்றொரு காரணம், கனடாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் தற்போதைய நிலையைப்பற்றி நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். கிட்டத்தட்ட 3 லட்சம் தமிழர்கள் அங்கே வசிப்பதாக உணர்கிறேன்.

அவர்களது வாழ்க்கை, பொருளாதார நிலை, எப்படி இருக்கிறது…?
அவர்களின் அடுத்த தலைமுறைக்கு நல்ல கல்வி கிடைக்கிறதா..?
அவர்கள் தங்கள், மொழி, பண்பாடு, பழக்க வழக்கங்களை
இன்னமும் தொடர்கிறார்களா..? தொடர முடிகிறதா…?
தமிழ்நாட்டிலிருந்து அவர்கள் எதையாவது எதிர்பார்க்கிறார்களா..?
இவ்வாறு எனக்கு பல கேள்விகள்…!!!

இந்த விமரிசனம் தளத்தை உலகம் முழுவதுமிருந்து தமிழர்கள் படிப்பதை என் dash-board -லிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

கனடா நாட்டிலிருந்து தினமும் குறைந்தது 25-30 பேராவது படிப்பதும் தெரிகிறது… ஆனால் அவர்கள் யாரென்பது குறித்த விவரங்கள் எதையும் என் தளத்திலிருந்து அறிய முடியாது… அவர்களாகவே தெரிவித்தால் தான் உண்டு.

அங்கு வாழும் தமிழர்கள் யாராவது, இந்த தளத்தில் பின்னூட்டம் மூலம் தொடர்பு கொண்டு, தங்களது தற்போதைய சமூக, வாழ்க்கை நிலை பற்றி தெரிவித்தால் மகிழ்ச்சியடைவேன்….

ஒருவேளைதமிழில் எழுதக்கூடிய நிலையில் இல்லையென்றால் –
ஆங்கிலத்தில் கூட எழுதலாம்…. ஒருவேளை பின்னூட்டத்தில்
வெளிப்படையாக எழுத தயக்கம் இருந்தால், தனிப்பட
kavirimainthan@gmail.com என்கிற என் மின்னஞ்சலுக்கு கூட எழுதி அனுப்பலாம்…..

கனடா மட்டும் அல்லாமல், நார்வே, ஸ்வீடன், ஸ்விஸ், ஜெர்மனி,
ஃப்ரான்ஸ், ஆஸ்திரேலியா என்று பல நாடுகளிலிருந்தும் இலங்கை
தமிழர்கள் இந்த தளத்தின் மூலம் தினமும் என்னை வாசிக்கிறார்கள்…. அவர்கள் யாராவது என்னுடன் மெயிலில் தொடர்பு கொண்டால் மகிழ்வேன்…..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to ரயிலில் சந்தித்த ஒரு சீக்கிய பயணியும், கனடாவும்….!!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    அங்கே வசிப்பவர்கள் (புலம் பெயர்ந்தவர்கள்) எழுதுவதை நான் வாசிக்கக் காத்திருக்கிறேன். எனக்குத் தெரிந்தவரை,
    1. கனடா வசிப்பதற்குக் கொஞ்சம் கடின நாடு. அதிகமான குளிர்.
    2. அரசாங்கம், மிக மிக முன்னேறிய, குடி மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளும் அரசாங்கம். சட்டத்தின்படி எல்லோரும் நடக்கவேண்டும் (அரசு அதிகாரிகள், போலீஸ் முதற்கொண்டு). எனக்குத் தெரிந்தவர் USB Hard Diskல், download செய்த நிறைய படங்களோடு அங்கு இறங்கினார். ஏர்போர்ட்டிலேயே, Hard Diskஐ confiscate செய்துவிட்டார்கள்.
    3. என் Boss 20 வருடங்களுக்கு முன்பு கனடாவில் குடியேறினார். அவர் சொன்னது.. அவருடைய பையன் படிக்கும் பள்ளியில், ஒரு மாணவன் காலில் அடிபட்டுக்கொண்டான் (விபத்து). அவனால் நடக்க முடியாது. பள்ளி, அந்த ஒரு மாணவனுக்காக, தன் பேருந்தில், அவன் ஏறுவதற்கு சாய்தளமும், உட்கார தனிப்பட்ட சீட்டு வசதியும் செய்துகொடுத்தது.
    4. ஒரு மாகாணத்தில் (அல்லது மாவட்டத்தில்), இலங்கைத் தமிழர்கள் மிக அதிகமாக இருக்கிறார்கள் என்பதை அறிந்து, அந்தத் தொகுதியைப் பரவலாகப் பிரித்துவிட்டார்கள் (நாளைக்கு, அது தமிழர் தொகுதி போன்று ஆகிவிடக்கூடாது, அங்கு இவர்கள்தான் வெற்றிபெறமுடியும் என்பதுபோல் ஆகிவிடக்கூடாது என்று. இதைப்பற்றி செய்திகளில் படித்தேன்.

    இதைத்தவிர, பொதுவாக நான் observe செய்ததைச் சொல்லுகிறேன் (வெளி’நாடுகளில்).
    1. அங்கு குழந்தைகள் என்பது பெற்றோருக்கு உரிய உடமைகள் அல்லர். அவர்கள் நாட்டின் எதிர்கால சந்ததியினர். இந்த கான்செப்ட் நான் பார்த்த அனேகமான நாடுகளில் இருக்கிறது. They are another human being like his father, mother. அவர்கள் இப்படித்தான் treat செய்யப்படவேண்டும் என்பதற்கு நிறைய நாடுகளில் வழிமுறைகள் இருக்கின்றன (LAW). அந்த அந்த வயதில் தனி அறை, சுதந்திரம் என்றெல்லாம் அவர்களுக்குக் கொடுக்கவேண்டும்.
    2. எதிர்கால சந்ததியினரின் படிப்பில் அவ்வளவு கவனம் மேற்கத்திய, ஐரோப்பிய (even CHINA) ‘நாடுகள் கவனக் செலுத்துகின்றன. பாரிஸ் லூவர் மியூசியத்தில், ஒரு ஆசிரியர், 6-7 வயதுடைய 30 பேர்களுக்கு மியூசியத்தில் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். (related to museum or history). அது முடிந்தபின்பு அவர்களுக்கு அது சம்பந்தமான ஓவியங்கள் அல்லது சிற்பங்களைக் காட்டுவார். இதுபோலவே ஓவியம் வரைபவர்களுக்கு, அந்த மியூசியத்தில் எந்த ஓவியத்தின் முன்பும் இருந்து வரைகிறார்கள். எல்லோருக்கும் விளையாட்டு அத்தியாவசியம், அவர்கள் திறமையை இனம் கண்டு வாய்ப்புகள் கொடுக்கிறார்கள். இதைப்பற்றி நீங்கள் நிறைய படித்திருப்பீர்கள். (நம்ம ஊரில் ஒருவனை அடையாளம் கண்டுபிடித்து அவன் மேலே வருவதற்குள் அவனுக்கு 20 வயதுக்கு மேல் ஆகிவிடுகிறது.
    3. போலீஸ், கல்வி, நகராட்சி, ஆஸ்பத்திரி, அதிகாரம் போன்றவை பெரும்பாலும் மக்களுக்காகத்தான் செயல்படுகின்றன.

    பின்னூட்டம் ரொம்ப நீளமாகிறது. இது இடுகையைவிட்டு விலகியிருந்தால் நீக்கிவிடுங்கள்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      ஏன் நீக்க வேண்டும்… ?
      அருமையான பல தகவல்களை தந்திருக்கிறீர்கள்…
      நான் உங்களுக்கு நன்றி அல்லவா சொல்ல வேண்டும்…!
      மிக்க நன்றி புதியவன்.

      .
      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  2. Vijay's avatar Vijay சொல்கிறார்:

    நல்ல சர்தார்ஜி; உங்கள் பயணம் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.
    அடிக்கடி பயணம் செல்லுங்களேன் சார். எங்களுக்கும் சுவரஸ்யமாக எதாவது கிடைக்கும்.

  3. Mercy's avatar Mercy சொல்கிறார்:

    Yes Mr. Puthiyavan you are right. We are here in Australia for 18 years and some relatives there in Canada.

  4. மோகன்'s avatar மோகன் சொல்கிறார்:

    கனடா வின் தமிழ் HD வானொலி தளத்தின் வெப் பக்கம்
    http://tamilfm.cmr24.net

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.