95, 87, 87, 72, & 40
இது என்ன என்கிறீர்களா ?
95 – நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர்
87 – கேரள முதல் அமைச்சர் அச்சுதானந்தன்
87 – தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி
72 – காந்தீயவாதி அன்னா ஹஜாரே
40 – எதிர்கால பிரதமர் ராகுல் காந்தி
– எண்கள் அவர்களது வயதைக் குறிக்கிறது.
இவர்களுக்குள் என்ன சம்பந்தம் ?
இவர்கள் எல்லாரையும் இணைக்கும் ராகுல் காந்தி
தான் சம்பந்தம் !
95 வயது மூத்தவரும், முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதியும்
சமூக நல ஆர்வலருமான வி.ஆர்.கிருஷ்ணய்யர் கடந்த வாரம்
ராகுல் காந்திக்கு ஒரு கடிதம் எழுதினார் (விவரங்கள் இப்போது
தான் வெளிவருகின்றன.)
அப்படி என்ன எழுதினார் ?
“72 வயது அன்னா ஹஜாரே சாகும் வரை உண்ணாவிரதத்தில்
உட்கார வேண்டிய அவசியம் ஏன் அய்யா வந்தது ?
எத்தனை எத்தனை ஊழல்கள் வரிசையாக வெளிவந்து
கொண்டிருக்கின்றன. அத்தனையையும்
டெல்லி(அதிகாரத்தில் உள்ளவர்கள்) மௌனமாக வேடிக்கை
பார்த்துக் கொண்டிருப்பது எந்த விதத்தில் சரி ?
காந்தி கண்ட கனவும், நேரு எதிர்பார்த்த
இந்தியாவும் இது தானா ? இந்த ஊழல் கட்டமைப்பை
ஒழித்துக் கட்டும் பொறுப்பை முதலில் நீங்கள் கையில்
எடுத்துக் கொண்டாலன்றி –
எதிர்கால இந்தியாவின் ஹீரோவாக நீங்கள் எப்படி
உருவாக முடியும் ?
எங்கும் – எதிலும் ஊழல்.
இதை நீங்கள் உணர்பவராக இருந்தால்
அத்தனையையும் பார்த்துக்கொண்டு வாய்மூடி
மௌனியாக கிடக்கும் பிரதமர் மன்மோகன் சிங்கை
பற்றியும், உயர்மட்டத்தில் ஊறிக்கிடக்கும் ஊழலைப்பற்றியும்
வாய் திறவாமல் இருப்பதேன் ?”
பட்டத்து இளவரசர் சும்மா இருப்பாரா?
துடித்தது இளம் ரத்தம் (இதற்கு மட்டும் !)
95 வயது முதியவருக்கு எழுதுகிறார் பதில் –
” நான் இத்தனையையும் உணர்ந்திருப்பதால் தான் –
அழுகிக் கிடக்கும் இந்த அரசியலமைப்பையே
அடியோடு மாற்றும் முயற்சியில் இரவு பகலாக
ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன்.
நீங்கள் சொல்வது போல் ஹீரோ ஆவதற்காக அல்ல –
அதில் எனக்கு ஈடுபாடும் இல்லை.
இது என் உணர்வு. நான் உங்களைப் போல் அவ்வப்போது
கடிதம் எழுதி விட்டு ஓய்வு எடுத்துக்கொள்கிறவன் அல்ல !
செயல் வீரன் !”
எப்படி பதில் ?
கடிதம் எழுதி விட்டு தூங்கி விடுவாராம் கிருஷ்ணய்யர்.
இரவு பகலாக உழைக்கிறதாம் இந்த இளம் சிங்கம் !
95 வயது கிருஷ்ணய்யரின் பின்னணி தெரியுமா இந்த
பெரிய வீட்டுப்பிள்ளைக்கு ?
அவர் எங்கே – இவர் எங்கே ?
எத்தனை நாட்களாக இந்த சமுதாயத்தின் மீது
இவருக்கு அக்கரை ?
34 வயது வரை இவர் விளையாடிகொண்டிருந்த
“கேசினோ”க்கள் எத்தனை ? இவருடன் சுற்றிக்கொண்டிருந்த
“கேர்ள் பிரெண்டுகள்” யார் யார் ? –
34 வயது வரை இவர் வாழ்க்கையில் எந்தெந்த நாடுகளில்
என்ன என்ன செய்துகொண்டிருந்தார் என்று வெளிப்படையாக
யாராவது சொல்ல முடியுமா ?
எத்தனை படித்திருந்தாலும்,
எவ்வளவு வசதியான பின்னணியில் பிறந்திருந்தாலும் –
இளம் வயதிலேயே பொதுவுடமைத் தத்துவத்தில் ஈடுபாடு
கொண்டு – நீதிபதி கிருஷ்ணைய்யர் ஆற்றிய பணிகள் எல்லாம்
இவருக்கு தெரிந்திருக்கா விட்டாலும் – பதில் எழுதும் முன்னர்
மற்றவர்களைக் கேட்டாவது தெரிந்து கொண்டிருக்கலாம்
அல்லவா ?
அழுகிப்போன அரசியல் கட்டமைப்பையே மாற்ற
உழைத்துக்கொண்டிருக்கிறாராம். சுதந்திரம் கிடைத்த
65 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் இவர் குடும்பம் தானே
இந்த நாட்டை ஆட்சி செய்தது. அப்படியானால் இந்த
அழுகலுக்கு அடிப்படைக் காரணம் யார் ?
இப்போதும் – இவர்கள் கூட இருப்பவர்கள் தானே
அத்தனை ஊழல்களுக்கும் காரணம் ?
-மும்பை ஆதர்ஷ் அடுக்குமாடி கட்டிட ஊழல்
(ஒரு ஊழல் முதலமைச்சரை அகற்றி விட்டு இன்னொரு
ஊழல்வாதியை முதலமைச்சராக டெல்லியிலிருந்து
டெஸ்பாட்ச்செய்ததோடு சரி !)
-டெல்லி காமன்வெல்த் ஊழல்
(முழு முதல் காரணமான சுரேஷ் கல்மாடியை விட்டு விட்டு –
இளிச்சவாயர்கள் எல்லார் மீதும் நடவடிக்கை எடுப்பதாக
பாவ்லா. ஷீலா தீட்சித் இத்தனை ஊழல்களுடன் இன்னும்
முதலமைச்சராகத் தானே தொடர்கிறார் )
காங்கிரஸ் தலைமைக்கு விசுவாசமாக ஒருவர் இருந்தால்
எத்தனை கோடி சுருட்டினாலும் அவர் மீது நடவடிக்கை
இல்லை என்றால் என்ன அர்த்தம் ?
தலைமைக்கு கட்டப்பட வேண்டிய கப்பம் ஒழுங்காகக்
கட்டப்பட்டு விட்டது என்று தானே ?
முன்னாள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜே.
பாலகிருஷ்ணன் மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்தபோதும்
மனித உரிமை கமிஷனின் தலைவராக நியமிக்கப்படுகிறார்.
பாமாலின் இறக்குமதி வழக்கில் கிரிமினல் குற்றம்
சாட்டப்பட்ட தாமஸ் தலைமை விஜிலன்ஸ் கமிஷனராக
நியமிக்கப்படுகிறார்.
உலகத்திலேயே பெரிய 2ஜி ஸ்பெக்ற்றம் ஊழலைப்பற்றி
ராகுல் காந்தி இது வரை வாய் திறந்தது உண்டா ?
214 கோடி ரூபாய் பங்கு பெற்ற திமுக வுடன் தானே
தேர்தலில் மீண்டும் கூட்டு ?
ஊழல் கட்சி என்று வெளிப்படையாகத் தெரிந்த கட்சியுடன், சிபிஎய்
விசாரணைக்கு உட்பட்ட,
சுப்ரீம் கோர்ட் நேரடி கண்காணிப்பில் உள்ள வழக்கில்
சம்பந்தம் உடையவர்களுடன் தானே கூட்டு ?
அதில் வெட்கப்படவே இல்லையே –
பதவியைப் பிடிக்க வேண்டுமானால் எந்த கொள்ளைக் காரர்களுடன் வேண்டுமானாலும் சேரலாம் என்று ஆகிவிட்ட
பிறகு ஊழல் சமுதாயத்தை ஒழிக்க-
அவதாரம் எடுத்திருப்பதாக வேடம் எதற்கு ?
வெத்து சவடால் தான் எதற்கு ?
மைலாப்பூர் பக்கமே தலைவைத்துக்கூடப் படுக்காத
தன் பெண்டாட்டியை சட்டமன்ற தேர்தலில் மைலாப்பூர்
வேட்பாளராக அறிவித்த தங்கபாலு,
கட்டிய பெண்டாட்டியையும் கடைசியில்
ஏமாற்றி விட்டு தன்னைத் தானே வேட்பாளராகத் தேர்வு
செய்து கொண்ட தங்கபாலு – ராகுல் காந்தியின் தேர்வு தானே?
இல்லையென்றால் – தங்கபாலு மீது இதுவரை எதாவது
நடவடிக்கை உண்டா ? தலைமை பீடத்திலிருந்து இதுவரை
யாராவது இதுகுறித்து வாய் திறந்திருக்கிறார்களா ?
10 நாட்களுக்கு முன்னர் தமிழ் நாட்டிலும், கேரளாவிலும்
தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ராகுல் காந்தி – முதலில்
ஈரோட்டிலும், பிறகு நெல்லையிலும் பேசும்போது தமிழக
முதல் அமைச்சர் அருமையான திட்டங்களை நிறைவேற்றி
இருப்பதாகவும், தமிழ் நாடு அவர் தலைமையில் முன்னேற்ற
பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் – எனவே மக்கள்
திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும்
வலியுறுத்தினார். பாவம் அப்போது அவர் கலைஞர் துள்ளி
விளையாடும் பருவத்தில் இருக்கும் இளைஞர் என்று
நினைத்துக்கொண்டிருந்தார் போலும்.
மறுநாள் கேரளா சென்றதும் முதல் முதலாக அவருக்கு
நினைவிற்கு வந்ததே முதல்வர் அச்சுதானந்தனின்
வயது தான் ! அவர் கேரள மக்களைப் பார்த்து கேட்டது –
“87 வயது முதியவருக்கு ஓட்டுப்போட்டால்
நீங்கள் இங்கு என்ன வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும் ?
உங்கள் வயது மட்டும் தான் வளரும் –
அடுத்த தேர்தலின் போது 92 வயது முதியவரை
நான் இங்கு முதலமைச்சராகக் காண வேண்டி இருக்கும் ” –
தமிழ் நாட்டில் இதே வயது உடைய கலைஞருக்கு ஓட்டு
கேட்டு பிரச்சாரம் செய்த மறு நாளே கேரளாவில் இவ்வாறு
பேசும் இவர் சமுதாயத்தையே அடியோடு மாற்ற உழைத்துக்
கொண்டிருகிறாராம் !
அன்று – ஜனாதிபதி அப்துல் கலாமோ,
அரசியல் சட்டமோ –
“அன்னை” – பிரதமர் ஆவதற்கு
அனுமதி கொடுத்திருந்தால் இன்னும் இவர்
“ப்ளே பாய்” ஆகத்தானே ஊர் சுற்றிக்கொண்டிருப்பார் ?
ஹீரோவா இல்லை ஜீரோவா என்கிற
கேள்வியே எழுந்திருக்காதே !



என்ன சார் நீங்க,அமுல் பேபி மழலைக்கெல்லாம் பதிவு போட்டுண்டு?
குழந்தை ரொம்ப சிணுங்கினா,கொஞ்சம் தூளிய ஆட்டினா சரியாபோய்டும்!
இந்தியாவில் தலை சிறந்த இரண்டு மக்குகள்…
ராகுல் காந்தி,
ஜி.கே வாசன்.
ஒரே வித்தியாசம்…
பின்னவர் பேசா மக்கு;
முன்னவர் பேசும் மக்கு!
வருக கண்பத்,
என்ன செய்வது –
இவர்கள் மீதும் நிறைய பேர் நிஜமாகவே நம்பிக்கை வைத்திருப்பதைப் பார்க்கிறேன் !
விவரமாக எழுதினால் அவர்களில் சிலராவது புரிந்து கொள்ள மாட்டார்களா -என்கிற
நம்பிக்கையில் தான் எழுதுகிறேன்.
-வாழ்த்துக்களுடன்
காவிரிமைந்தன்
ராகுல் காந்தி ஒரு காமெடி பீசு… அவரோட மிகத் துல்லியமான அரசியல் நுண்ணறிவை தான் நாம் பீகார் தேர்தலில் பார்த்தோமே…!!! அதையே தமிழ்நாட்டிலையும் செய்யலாம்னு நெனச்சி முறுக்கி பார்த்தாரு… தாத்தா வச்ச சின்ன அதிர்சிவைத்தியத்துக்கே ஓடி வந்து கெஞ்சாத குறையா 63 சீட்டு வாங்கிட்டு போனாங்க… ஆனால் ரிசல்டு என்னமோ பீகார் ரிசல்ட்டு தான்…. இவர் இந்தியாவின் எதிர்கால பிரதமர் என்றால் அப்போ இந்தியா எந்த அளவுக்கு கேவலப் பட்டுவிட்டது என்று தான் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.