தாமஸ் ஏன் விஜிலன்ஸ் கமிஷனர் ஆக்கப்பட்டார் ? ப.சி.விளக்குவாரா அல்லது பதவி விலகுவாரா ?

தாமஸ் ஏன்  விஜிலன்ஸ் கமிஷனர்
ஆக்கப்பட்டார் ?
ப.சி.விளக்குவாரா அல்லது
பதவி விலகுவாரா ?

பி.ஜெ.தாமஸை  தலைமை விஜிலன்ஸ்
கமிஷனராக மத்திய அரசு நியமித்தது
செல்லாது என்று உச்ச நீதி
மன்றம் நேற்று தீர்ப்பு அளித்து விட்டது.

இதைத் தொடர்ந்து தாமஸ் நியமனம்
எப்படி நடந்தது என்பது குறித்த
சில விவரங்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன.

விஜிலன்ஸ் கமிஷனரை தேர்ந்தெடுக்கும்
கமிட்டியில் -பிரதமர், உள்துறை அமைச்சர்,
எதிர்க்கட்சித் தலைவர் – அதாவது
மன்மோகன் சிங், ப.சிதம்பரம்,
சுஷ்மா ஸ்வராஜ்  ஆகிய மூவர் மட்டுமே
உறுப்பினர்கள்.

கமிட்டி கூடுவதற்கு முன்பாக –
தயாரிக்கப்பட்டுள்ள பட்டியலில் யார் யார்
பெயர் இருக்கிறது என்பது
குறித்த விவரங்கள் சுஷ்மா ஸ்வராஜிற்கு
தரப்படவில்லை.

கமிட்டி கூட்டம் மொத்தம் 45 நிமிடங்களில்
முடிக்கப்பட்டு விட்டது. கூட்டம் துவங்கிய பிறகு
மூன்று பெயர்களைக் கொண்ட பட்டியல் ஒன்று
சுஷ்மாவிடம் காட்டப்பட்டிருக்கிறது.

பி.ஜெ.தாமஸ், பிஜோய் சாட்டர்ஜி,
சுப்பராயன் கிருஷ்ணன் ஆகிய 3 பெயர்கள்
அதில் இருந்திருக்கின்றன.
(இதில் வேடிக்கை என்னவென்றால் –
இந்த 3 பேருமே யாராவது ஒரு திமுக
மத்திய அமைச்சருக்கு செயலாளராகப் பதவி
வகித்தவர்கள் – இதை தற்செயல் என்று
கூற முடியுமா ? – சரி இதை அப்படியே
விட்டு விட்டு மேலே செல்வோம் !)

பி.ஜெ.தாமஸ் ஏற்கெனவே ராஜா தொலை
தொடர்பு  அமைச்சராக இருந்தபோது,
அவரிடம் செயலாளராக இருந்தார் என்கிற
வகையில், அவருக்கும் 2ஜி
விவகாரத்தில் ஏதோ ஒரு வகையில் தொடர்பு
இருக்கிறது என்கிற வரை சுஷ்மா அறிந்திருந்தார்.

தாமஸ்  மீது ஏற்கெனவே,கேரள அரசு
செயலாளராக இருந்தபோது நிகழ்ந்த பாமாலின்
இறக்குமதி தொடர்பாக ஒரு ஊழல் வழக்கு,
பல வருடங்களாக நிலுவையில் இருப்பதையும்
சுஷ்மா அறிந்து வைத்திருந்தார்.

எனவே சுஷ்மா – ஏற்கெனவே பாமாலின் ஊழல்
வழக்கு நிலுவையில் உள்ள நிலையில்  தாமஸ்
விஜிலன்ஸ் கமிஷனராக தேர்ந்தெடுக்கப்படுவதை
ஏற்க மறுத்துள்ளார்.

இந்நிலையில், ப.சிதம்பரம் தாமஸின் மீதுள்ள
வழக்கு தீர்ந்து போன மாதிரி தான்
என்று பலவகையிலும் கூறி சுஷ்மாவை தேர்வை
ஏற்றுக்கொள்ள வைக்க முயற்சி செய்திருக்கிறார்.

இதை ஏற்றுக்கொள்ளாத சுஷ்மா – தாமஸைத்தவிர
பட்டியலில் உள்ள மீதி இரண்டு பெயர்களில்
யாரை வேண்டுமானாலும் அரசு தேர்ந்தெடுக்க
தான் ஒப்புக்கொள்வதாகவும் – தாமஸை
தேர்ந்தெடுக்கப்படுவதை, தான் ஏற்றுக் கொள்ள
இயலாது என்றும் கூறி இருக்கிறார்.

பிரதமரும், உள்துறை அமைச்சரும் சுஷ்மாவின்
மாற்று யோசனையை ஏற்றுக் கொள்ள மறுத்து
தாமஸ் விஷயத்திலேயே உறுதியாக
இருந்திருக்கிறார்கள்.

அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க
விரும்பாத  சுஷ்மா இது பற்றி மேலும் யோசித்து
தீர்மானிக்கலாம் என்றும்,
முடிவெடுப்பதை ஒரு நாள் தள்ளிப் போடும்படி
கூறி இருக்கிறார்.

இதற்கு பிரதமர் – விஜிலன்ஸ் கமிஷனர்
அன்றைய மாலையே பதவி ஏற்கும் விதத்தில்
ஏற்கெனவே விழா நிகழ்ச்சி அமைக்கப்பட்டு விட்டது
என்றும் எனவே முடிவெடுப்பதை ஒத்திப்போட
இயலாது என்றும் கூறி இருக்கிறார்.

அவர்கள் ஏற்கெனவே ஒரு முடிவிற்கு வந்து
பதவி ஏற்பு விழா வரை ஏற்பாடு செய்து விட்டு,
ஒரு சம்பிரதாய கடமைக்காக எதிர்க்கட்சித்
தலைவரை ஆலோசித்திருக்கிறார்கள்
என்பது இதன் மூலமே வெட்ட வெளிச்சமாகி
இருக்கிறது.

இதன் பிறகும் சுஷ்மா, தாமஸ் நியமனத்தை
ஏற்க மறுக்கவே – சுஷ்மா ஏற்றாலும் சரி,
ஏற்க மறுத்தாலும்  சரி, மற்ற இரு
உறுப்பினர்களும் (பிரதமர், உள்துறை
அமைச்சர்) சேர்ந்து – மெஜாரிடி தீர்மானம்
என்கிற முறையில் தாமஸ் தான் நியமிக்கப்படுவார்
என்று கூறி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் சுஷ்மா தன் எதிர்ப்பை பதிவு
செய்ய விரும்புவதாகக் கூறவே – கூட்ட நிகழ்வு
பற்றிய பதிவேடு தயாரிக்கப்பட்டு அதில்
சுஷ்மா தன் எதிர்ப்பை பதிவு
செய்து கையொப்பம் இட்டிருக்கிறார்.

இத்தனைக்கும் பிறகு தான் தாமஸ் நியமனம்
நடந்திருக்கிறது.

எனவே – பிரதமரோ,உள்துறை அமைச்சரோ
தாமஸ் மீது வழக்கு நிலுவையில் இருந்தது
தங்களுக்கு தெரியாது என்று காரணம் காட்ட
முடியாது.

வழக்கு நிலுவையில் இருந்தபோது தாமஸை
தலைமை விஜிலன்ஸ் கமிஷனராக
நியமித்தது சட்ட விரோதம் என்று உச்ச நீதி மன்றம்
தீர்ப்பு அளித்து விட்ட நிலையில் –

உள்துறை அமைச்சர் இதுவரை யாரையும்
சந்திக்கவும் இல்லை. எந்த கருத்தும் கூறவும்
இல்லை.

பிரதமர் உச்ச நீதி மன்ற தீர்ப்பை தான் மதிப்பதாக
கருத்து கூறி இருக்கிறார். வேறு வழி ?
ஏற்காமல் இருக்க சட்டத்தில் வழி இல்லையே !

தீர்ப்பை மதிக்கிறாரா இல்லையா என்பது
கேள்வியே இல்லை.எனவே இது ஒரு
பதிலும் இல்லை.

தவறை சரி செய்கிறோம் என்கிற பேச்சுக்கும்
இடமில்லை. நீதிமன்றமே அதைச்செய்து விட்டது.
தாமஸை பதவியிலிருந்து நீக்கி விட்டது.

நடந்த தவறுக்கு- மன்னிக்கவும் –
செய்த தவறுக்கு யார் பொறுப்பு ஏற்கப்போகிறார்கள்
என்பது தான் கேள்வி.

நடந்தது தெரிந்தே செய்யப்பட்ட தவறு –
தவறு என்று கூட கூற முடியாது.
திட்டமிட்ட ஊழல் மறைப்பு முயற்சி.

ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் ராஜாவைக் காப்பாற்ற
கலைஞர் முயற்சிப்பது நமக்கு புரிகிறது.

ஆனால் -இத்தனை பேர் இருக்கும்போது இவ்வளவு
மெனக்கெட்டு தாமஸை கொண்டு வருவதில்
காங்கிரஸ் தலைமையும், அரசும் – இவ்வளவு
முனைப்பு காட்டியது  ஏன் ?

அதை மேற்கொண்டு விவகாரமாகாமல்
பாதுகாப்பதில் காங்கிரஸ் தலைமைக்கு
ஏன் இத்தனை அக்கரை ?
உண்மையில் யாருக்காக  தாமஸைக்
கொண்டு வர முயற்சித்தார்கள் ?

தாமஸ் விவகாரத்தில் மூன்று பேருக்கு
பொறுப்பும், சம்பந்தமும்  இருக்கிறது –
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
பிரதமர் மன்மோகன் சிங்.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

இதில் அதிகாரபூர்வமாக அரசு பதவி
எதிலும் இல்லாத சோனியா காந்தி கட்சிப்
பதவியில் இருந்தாலும் – இறங்கினாலும்
நமக்கு கவலை இல்லை.

அரசுப் பதவியில் இருக்கும்
மீதி இரண்டு பேரில் யாராவது ஒருவர்
இந்த ஊழலுக்கு பொறுப்பேற்று பதவி விலகுவது
தான் ஜனநாயக  நாட்டில்
சரியான முறையாக இருக்கும்.

யார் போகப் போகிறார்கள் ?

போவார்களா ?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, சிதம்பரம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மன்மோகன் சிங், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to தாமஸ் ஏன் விஜிலன்ஸ் கமிஷனர் ஆக்கப்பட்டார் ? ப.சி.விளக்குவாரா அல்லது பதவி விலகுவாரா ?

  1. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    நம்மை ஆண்ட11 இந்திய பிரதமர்களில் ,
    வெட்கம்,
    மானம்,
    சூடு,
    சொரணை
    எதுவும் இல்லாத ஒரே பிரதமர் என்ற
    “பெருமையை”
    உபயோகமத்த சிங் பெறுகிறார்.
    Chief of army staff ஆக திரு.பித்துக்குளி முருகதாஸ் அவர்களை நியமிப்பதை விட ஒரு முட்டாள்தனமான முடிவு ,
    MMS இந்திய பிரதமராக தேர்வு செய்தது

  2. Rishi's avatar Rishi சொல்கிறார்:

    பிரதமர் பொறுப்பேற்றுக் கொள்வதாகக் கூறியிருக்கிறார்.
    “நாந்தான் தப்பு செஞ்சேன்.. இப்போ இன்னான்ற… ” என்பது போலத்தான் இருக்கிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.