வைரமுத்துவுக்கு – ஜெயமோகனின் பாராட்டு மழை … !!!!!!!!!!!!!!!!!!!

……………………………

…………………………….

………………………………

ஜெயமோகன், மிகவும் மென்மையாகத்தான் செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன்……சூடு சொரணை உள்ளவர்களுக்குத் தான் இத்தகைய மென்மையான தாக்குதல் எல்லாம் தகும்……!!! நம் நாயகன் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் – சகோத்ரி சின்மயி போன்றவர்களின் உரைகளே அவருக்கு உரைத்ததில்லையே …..

……………………………………………….

தமிழுக்கு அவமானம்….

சென்ற ஓராண்டாகவே செய்திகள் காதில் விழுந்துகொண்டிருந்தன. பாரதிய ஜனதாவின் சிலருடன் வைரமுத்து மிக அணுக்கமாகச் செயல்பட்டு ஞானபீடத்திற்கு மீண்டும் முயல்கிறார் என்று.

ஆனால் விசாரித்தபோதெல்லாம் அப்படியில்லை என அவர்களில் சிலர் ஆக்ரோஷமாக மறுக்கவும் செய்தனர். வைரமுத்து ஒரே சமயம் திமுகவுக்கு வேண்டியவர், கருணாநிதியின் நண்பர், மோடி கவிதைகளை மொழியாக்கம் செய்யும் ஆர்.எஸ்.எஸ்.அனுதாபி, பாரதிய ஜனதாவின் கலாச்சாரத்துறை முகவர்களின் அணுக்கர். எல்லாமும்தான்.

அது ஒரு தனிக்கலை. தமிழ்நாட்டில் இந்த தலைமுறையில் அவர் அதில் மாபெரும் நிபுணர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஞானபீடத்தை அணுகிவிட்டார் என்பதை உள்வட்டம் வழியாகவே அறிந்தேன். கடுமையான கண்டனத்தை பதிவுசெய்தேன். நண்பர்களும் திரண்டு எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

அப்போது அந்த விருதை வைரமுத்துவுக்காகப் பரிந்துரைத்தவர் வெங்கையா நாயுடு.

ஞானபீட நிறுவனம் அப்போது மறுத்தது. வைரமுத்துவுக்கு பின்னடைவு உருவானது.பிறகு அவர்மேல் வந்த பாலியல்குற்றச்சாட்டுக்களால் மேலும் பின்னடைவு.

ஆனால் கல்வித்துறையிலுள்ள தன் நண்பர்கள் (பெரும்பாலானவர்கள் சாதி ஆதரவாளர்கள்) வழியாக கி.ராஜநாராயணன் போன்று ஞானபீடத்திற்கு முற்றிலும் தகுதியானவர்களுக்கு அது கிடைக்காமல் பார்த்துக்கொண்டார்.

இந்திய துணைஜனாதிபதிக்கு ஞானபீடப்பரிசில் பெரும் பங்களிப்புண்டு என அறிந்திருக்கலாம். இந்த தேர்தலை ஒட்டியும் ஏதேதோ கணக்குகள் இருந்திருக்கலாம்.

இந்த ஞானபீட விருது அந்த அமைப்பு தமிழ் நவீன இலக்கியத்தின் முகத்தில் காறி உமிழ்ந்தமைக்குச் சமம். நீ என்னவாக வேண்டுமென்றாலும் இரு, நீ என்னென்ன சாதனைகளை வேண்டுமென்றாலும் செய், நாங்கள் உன்னை தெருப்புழுதியின் தரத்தில்தான் மதிப்பிடுவோம்,

உங்களில் சிறந்தவர் என உங்களில் கடையரைத்தான் நாங்கள் ஏற்போம், பிறர் அனைவரையும் அவரைவிட கீழேதான் வைப்போம் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த அவமதிப்புக்கு தமிழர்களாகிய நாம் பொறுப்பேற்கவேண்டும். எந்த பேரிலக்கியவாதியையும் நாம் ஏற்றுக்கொண்டு முன்னிறுத்தியதில்லை. அவர்களை அவமதிக்கும் தருணங்களை தவறவிட்டதுமில்லை.

ஞானபீடப்பரிசு என்பதை தீர்மானிப்பதில் பரிந்துரை முதல் இறுதிவரை தமிழகக் கல்வித்துறையினர் ஒரு பங்களிப்பாற்றுகின்றனர். அவர்களில் இலக்கியமறிந்தவர்கள், அடிப்படை அறிவுத்திறன் கொண்டவர்கள் அரிதினும் அரிது. பெரும்பாலும் சாதிக்கணக்குகள், அரசியல் கணக்குகள் கொண்டவர்களே மிகுதி.

ஒவ்வொரு இடத்திலும் எந்த தகுதியுமற்றவர்களை, வெற்றுச்சூழ்ச்சியாளர்களை மேலே தூக்கி வைத்திருக்கிறோம். கொண்டாடுகிறோம். அப்போது அவர்களில் ஒருவரைத்தான் அவர்கள் முன்னிறுத்துவார்கள். அது நிகழ்ந்துள்ளது. தமிழ் தனக்குரிய அவமதிப்பையே ஈட்டிக்கொண்டிரள்ளது.

இந்த விருதை ஏன் இப்படிக் கண்டிக்கிறோம்?

அகிலனுக்கு அளிக்கப்பட்ட் ஞானபீடம் ஏறத்தாழ அரைநூற்றாண்டுக் காலம் தமிழ் நவீன இலக்கியத்தையே இந்திய இலக்கியச் சூழலில் இருட்டடிப்பு செய்தது. அகிலனே இந்த தரம் என்றால் தமிழில் என்ன நவீன இலக்கியம் இருக்கப்போகிறது என்று சொல்லப்படுவதை ஏறத்தாழ இருபது மேடையிலாவது நானே என் காதால் கேட்டிருப்பேன்.

தமிழில் நவீன இலக்கியமே இல்லை என்றுதான் இன்றும் இந்தியச்சூழலில் பிற மொழியினரில் கணிசமானவர்கள் எண்ணுகிறார்கள். ஆங்கில மொழியாக்கங்கள் வழியாக மெல்ல மெல்ல அந்தச் சித்திரம் ஒரு சிறு வட்டத்தில் மாறுகிறது. ஆனால் இந்திய மொழிகளுக்கு செல்லும் மொழியாக்கங்களே இந்திய இலக்கியங்கள் பற்றிய சித்திரங்களை இந்தியச் சூழலில் உருவாக்குகின்றன.

இங்கிருந்து செல்பவை நாம் பரிசளிக்கும் படைப்புகளே… வைரமுத்துவுக்கு கிடைத்த இந்த விருது தமிழுக்கு அளிக்கும் சிறுமை இன்னும் நம்மை முப்பதாண்டுகள் பின்னடைவுக்கு உள்ளாக்கும். ஒவ்வொரு மேடைகளிலும் நாம் இளம்கேலியுடனும் அதன் விளைவான பரிந்துநோக்கும் மேட்டிமைப்பார்வையுடனும் அணுகப்படுவோம்.

இச்சூழலில்தான் தரமான தமிழ்ப்படைப்பாளிகளை முன்வைக்கும் வாழும் தமிழ் இலக்கிய விழா போன்ற எங்கள் முயற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

அதிகாரபீடங்கள் நம்மை தொடர்ச்சியாக சிறுமைசெய்துகொண்டே இருக்கின்றன. அடிவிழுந்தோறும் நாம் நிமிர்ந்தாகவேண்டும்.நம் முன்னோடிகளை, நம்மை முன்வைக்கவேண்டும். நாம் மனம்தளராமலிருக்கவேண்டிய சூழல் இது.

வைரமுத்து போன்ற சிறுமையாளர்கள் வருவார்கள் போவார்கள், சூழ்ச்சிகள் வழியாக அற்பவிருதுகளை ஈட்டுவார்கள், இலக்கியம் என்றும் வெல்லும்.

தமிழ் இலக்கியத்திற்கு எல்லாவகையிலும் அவமதிப்பு இச்செய்தி.

இந்த அவமானத்தை செயல்வழியாகக் கடந்துசெல்வோம். இனி இதைப்பற்றி விவாதிக்கவேண்டியதில்லை. அருவருப்பும், கூச்சமும் நிறைகிறது..

உள்ளத்தில். ஒரு கீழ்த்தரக் கவிஞர் என்ற வகையில் வைரமுத்து மேல் ஒரு மதிப்பின்மையே இதுவரை இருந்தது. இப்போது அவர் மேல் ஆழ்ந்த அருவருப்பே அடைகிறேன்.

அவர் தன் நாலாந்தரச் சூழ்ச்சிகள் வழியாக தமிழுக்கு தலைமுறைகளுக்கு நீளும் இழிவை சேர்த்தளித்துவிட்டார்.

( நன்றி – ஜெயமோகன் அவர்களுக்கு …….)

……………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to வைரமுத்துவுக்கு – ஜெயமோகனின் பாராட்டு மழை … !!!!!!!!!!!!!!!!!!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.

    என்னுடைய சந்தேகம்… இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு, பள்ளி மாணவர்களிடையே மிகவும் புகழ் பெற்று இலக்கியம் வளர்த்த சரோஜாதேவி மற்றும் பி.டி.சாமிக்கு ஏன் ஞானபீடப் பரிசு கொடுக்கவில்லை? தமிழர்களில் அவர்கள் தாழ்ந்த சாதி என்று நினைத்ததா ஞானபீடப் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கும் குழு?

புதியவன் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி