” குர்ஜிஃப்’பின் தந்திரம் ” … – ஓஷோ –

………………………………

( photograph of the Greek-Armenian philosopher, mystic, and spiritual teacher G.I. Gurdjieff )

…………………………..

ஒரு நாள் காலை மிகப் பெரிய ஞாளியான குர்ஜிஃப்பைப் பார்க்க ஒரு பத்திரிகை நிருபர் வந்திருந்தார்….

அப்போது குர்ஜிஃப் தேநீர் பருகிக கொண்டிருந்தார்….

அவருக்கு நிருபர்களைக் கண்டாலே பிடிக்காது…. இருப்பதிலேயே அவர்கள்தான் வடிகட்டின முட்டாள்கள் என்பது அவரது தீர்வு….

பத்திரிகை நிருபர்களை விரட்டுவதை ஒரு கலையாகவே செய்துவந்தார் அந்த ஞானி…..

அன்றும் அப்படித்தான் நடந்தது….

தேநீர் கொண்டு வந்து கொடுத்த தனது பெண் சிஷ்யையைப் பார்த்து,

“இன்று என்ன கிழமை?” என்று கேட்டார் அவர்….

நிருபர் அவசர அவசமாகக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்….

“சனிக்கிழமை” அமைதியாகச் சொன்னாள் அந்தப் பெண்….

குர்ஜிஃப்புக்கு பயங்கரமாகக் கோபம் வந்துவிட்டது…. ஆத்திரத்தில் தனது கையில் இருந்த தேநீர் கோப்பையைத் தரையில் தூக்கி எறிந்தார்….

அது நூறு துண்டாகிச் சிதறியது……

நிருபர் இப்போது பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தார்…. அவர் எழுதுவதை நிறுத்திவிட்டு ஞானியைப் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்…. ‘ஓ இன்று சளிக்கிழமை என்பதால் தான் இவர் இப்படிச் செய்கிறாரோ’ என்று நினைத்தார் அந்த நிருபர்…..

குர்ஜிஃப் கோபம் தணியாமல் சொன்னார்…..

“உனக்கு அறிவே கிடையாது, பென்ணே! இப்படித்தான் முட்டாள்தனமாக எதையாவது சொல்லிக் கொண்டிருக்கிறாய்…. நேற்று நான் உன்னை இதே கேள்வியைக் கேட்டேன்…. நீயும் வெள்ளிக் கிழமை என்று சொன்னாய்…. இன்று திடீரென்று சனிக்கிழமை என்று சொல்கிறாயே?

உனக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?

எங்காவது வெள்ளிக்கிழமைக்குப் பின் சனிக்கிழமை வருமா?”

நிருபர் ‘இது மறை கழண்ட கேஸ்’ என்று நினைத்தார்…. குர்ஜிஃப்பை பேட்டி எடுக்காமல், அவரிடம் விடை கூட பெற்றுக் கொள்ளாமல் தலை தப்பித்தது தம்பிரான் புண்ணியம் என்று கம்பி நீட்டி விட்டார்….

நிருபர் ஓடுவதைப் பார்த்து குர்ஜிஃப் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார்….

அந்தப் பெண் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள்…. அவள் பாவம் அன்றுதான் புதிதாகச் சேர்ந்திருந்தாள்…

அவளுக்கு குர்ஜிஃப்பைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது…. நிருபர்களைத் துரத்தத்தான் அவர் இப்படிச் செய்தார் என்று அவளால் புரிந்து கொள்ளமுடியவில்லை…்

“நீங்கள் ஏன் அவ்வளவு கோபப்பட்டீர்கள்?!” என்று ஞானியைக் கேட்டாள் சிஷ்யை….

சிரிப்பை நிறுத்திவிட்டு அமைதியாகச் சொன்னார் குர்ஜிஃப்….

“நீ இப்போதுதான் இங்கே வந்திருக்கிறாய்….இன்னும் கொஞ்ச நாள் இங்கே இருந்தால் உனக்கு இது புரியும். இந்த நிருபர் இனிமேல் நமது ஆசிரமம் பக்கம் தலைவைத்துக்கூட படுக்க மாட்டான்… அவன் உயிருள்ளவரை என்னைத் தொந்தரவு செய்ய மாட்டான்….

அது மட்டுமில்லை… அவன் வெளியே போய் தனது சக நிருபர்களிடம் என்னைப் பற்றி வதந்திகளைக் கிளப்பி விடுவான்… இப்போது பார்….

நான் அவனை மட்டும் தூக்கியெறியவில்லை…. அவனது சக நிருபர்களையும் தூக்கியெறிந்து விட்டேன்…. இனிமேல் அவர்கள் தொந்தரவு இல்லாமல் நான் நிம்மதியாக இருக்கலாம்…”

அவ்வளவு பெரிய ஞானியைப் பைத்தியக்காரன் என்று மக்கள் நினைத்தார்கள்….

ஞானிகளின் முரண்பாடுகளுக்கு ஒரு காரணம் இருக்கிறது…. அறிஞர்கள் கையில் அவர்கள் வார்த்தைகள் சிக்கிக் கொண்டு விடக்கூடாது என்பதில் ஞானிகள் கவனமாக இருந்தார்கள்….

அறிஞர்கள் கையில் சிக்கும் ஞானிகளின் சொற்கள் குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலையாகச் சின்னாபின்னமாகி விடும் என்பதற்காக தான் இந்த முன்னேற்பாடு….

அறிஞர்களின் கண்களுக்கு ஞானிகள் பித்துப் பிடித்தவர்களாகத் தெரிவார்கள்…

அதனாலேயே அறிஞர்கள், ஞானிகள் பக்கம் வராமல் ஓடிவிடுவார்கள்….

ஞானிகள் முரண்பாடுகளைப் பயன்படுத்தியதற்கு இது மட்டும் காரணம் இல்லை… எல்லாம் கடந்த உண்மை நிலையை முரண்பாடுகள் மூலமாகத்தான் விளக்க முடியும்….

அந்த உண்மையை காரண-காரியம் மூலமாக, விளக்க முடியாது….

தர்க்கம் ஒரு பாதியை மட்டும்தான் விளக்கும்…

அதனால் முழுமையை விளக்க முடியாது….

முழுமையின் வேகத்தை அதனால் தாங்கி கொள்ள முடியாது…..

( ஓஷோ….)

………………………………………………………………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக