மோக’த்தை இப்படி வார்த்தைகளிலேயே காட்டி விட இவரைத்தவிர வேறு யாரால் முடியும் …???

……………….

……………….

காலையிலேயே நந்திதாவை மேரி குளிப்பாட்டி பவுடர் அப்பி கூந்தலை இரட்டைப் பின்னி வாசனையாக அழைத்து வர பைஜாமாவும் சண்டே ஹிண்டு வுமாக ராஜேஷ் ‘‘கன்னுக்குட்டி சக்கரக்கட்டி நந்தும்மா’’ என்று கன்னத்தில் முத்தமிட்டான்.

‘‘என்னப்பா இப்பதான் குளிச் சேன். எச்சப் பண்ணிட்ட’’ என்ற அதட்டலில், கொஞ்சம் சங்கீதாவின் தோரணை தெரிய திடுக்கிட்டான்.

அவன் பாசாங்காக முகத்தைச் சுளித்துக் கொள்ள ‘போனாப் போறது’ என்று குழந்தை மறு முத்தம் கொடுத்தது. ஐந்து வயசுக்கு என்ன சாமர்த்தியம். தாயில்லாத வாழ்க்கைக்கு இப்போதே செய்து கொள்ளும் ஏற்பாடா? என்ன பேச்சு பேசுகிறாள். இவளை விட்டுவிட்டு நான் எப்படி வாழப் போகிறேன்? என்ன நியதி இது? தாய் இறந்தபின் பெண் குழந்தை தந்தையிடம் வாழக்கூடாதா?

‘‘காலைலயே எல்லாத்தையும் எடுத்து வெச்சிக்கிட்டாங்க’’ என்றாள் மேரி.

‘‘காட்டு?’’

தரையில் வைத்து சிறிய அலுமினிய பெட்டியைத் திறக்க நந்திதாவின் சகல உடமைகளும் அதில் இருந்தன. கலர் பாக்ஸ், நூல் பந்து, ஐந்து வித கைகுட்டைகள், ஹேர்பின், ப்ருச், ப்ளாஸ்டிக் வளையல், பீச்சில் வாங்கின இருட்டில் ஜொலிக்கும் பம்பரம், ஜிலுஜிலு கண்ணாடி நகை, குட்டி டயரி, தீப்பெட்டி!

‘‘இது எதுக்கு கண்ணு?’’

‘‘இதுக்குள்ள தங்கராசு இருக்கான்.’’

‘‘பொன்வண்டுங்க… வெளிய விட்டுரும்மா. மூச்சுவிட முடியாம செத்துப்போய்டும் கண்ணு.’’

‘‘திறந்தேன், போகமாட்டங்கறது.’’

இந்நேரம் செத்திருக்கலாம்.அதை ஏன் சொல்லவேண்டும்? அழ ஆரம்பித்து விடுவாள் ராகம் போட்டு. அற்ப காரணத்துக்கெல்லாம் அரைமணியாவது அழுவாள்.

டாக்டர் சாந்தா சொன்னபடி ‘தாய்க்கு ஏங்கிருக்கு. அதான் காரண மில்லாம அழுது.’

‘‘என்ன செய்யணும் டாக்டர்?’’

‘‘உங்க மனைவிக்கு தங்கச்சி இருக்காங்களா?’’

‘‘வினோதா.’’

‘‘அவங்க மாதிரி இருப்பாங் களா?’’

‘‘ஆமாம். ரெண்டு குழந்தைங்க இருக்கு.’’

‘‘அவங்க ஹஸ்பண்டு.’’

‘‘இந்திக்காரர், ராஜஸ்தான்.’’

‘‘ஓ! கேட்டுப் பாருங்களேன்.’’

‘‘நான்கூட யோசிச்சேன்.’’

‘‘அவங்க புருசன் ஒப்புத்துப் பாரா?’’

‘‘அவர் ஒண்ணும் சொல்லமாட்டார். ஜாலி யான டைப். கொஞ்சம் பாஷை ப்ரச்னை. அவ்வளவு தான்.’’

‘‘யோசிக்காதிங்க. தாய் இறந்துபோன மனநிலையில் ஒரு தாய்போல ஒரு பதில் பிம்பம் இவளுக்குத் தேவைப்படுது. குழந்தைக்கு இதுதான் நல்லது. கஸின்ஸ் கூட கலகலப்பா இருக்கறதும் மறக்கறதுக்கு உதவும்.’’

நந்திதா சமர்த்தாக டி.வி.யில் ‘போகோ’ பார்த் துக் கொண்டிருந்தாள்.

அவள் பெட்டியில் மேலாக இருந்த பொம்மை புத்தகத்தில் சங்கீதாவின் கன்னத்தோடு ஒட்டியபடி போட்டோ இருந்தது. கண்ணீரைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு ‘‘இது எப்ப எடுத்தது?’’ என்றான்.

‘‘நீதாம்பா. டிஸிவேர்ல்டு போயி ருந்தமே. நான்கூட ஷர்ட்ல வாந்தியெடுத்திட்டேனே. நீகூட கோவிச்சுண்டியே.’’

‘‘இத்தனை விவரங்கள் வேண்டாம்டா கண்ணு. வெரிகுட் எல்லாம் ரெடியாக்கும். அப்பாவை விட்டுட்டுப் போகப் போறியாக்கும். வினோதா சித்தி வந்துண்டே இருக்கா.’’

‘‘அய்யா!’’

‘‘என்ன மேரி?’’

‘‘நந்துக் கண்ணுவை நீங்களே வெச்சுக்கலாமே, தினம் குளிப்பாட் டிர்றேன். சட்டைகவுனு போட்டு ப்ரேக்ஃபாஸ்ட் கொடுத்து ஸ்கூல்ல கொண்டு விட்ருவேன். சாயங்காலம் நீங்க வர்றவரைக்கும் பாத்துக்கறேன்!’’

‘‘இல்லை மேரி. வினோதாம்மா கிட்ட இருக்கறதுதான் இப்போதைக்கு சரியான முடிவு. அவங்க வீட்டில நிறைய கஸின்ஸ் இருக்காங்க. அவங்ககூட இருந்தாத்தான் மெல்ல மறப்பாங்க.’’

‘‘மறக்கணுங்கறிங்களாய்யா?’’

அவன் சற்று திகைத்தான்.

‘‘அவங்க நல்லா பாத்துப்பாங்க. படிக்க வெப்பாங்க. அதான் எதிர் காலத்துக்கு நல்லது. பொம்பளைப் பிள்ளையில்லையா? ஏன் உங்கிட்ட ஏதாவது சொல்லித்தா?’’

‘‘இல்லைங்க ஆனா முகம் வாடியிருக்குதுங்க. பாப்பா முன்ன மாதிரி இல்லை. உங்க மேல ரொம்ப உசிரு, ஒட்டுதல்ங்க.’’

‘‘அடிக்கடி போய் பார்த்துக்கப் போறேனே. இதபாரு… ஏற்பாடெல் லாம் செய்தாச்சு. டி.சி. வாங்கி ஸ்கூல் மாத்தியாச்சு. இப்ப என்னைப் போட்டுக் குழப்பாதே. எதுக்கு நீ அழுவறே?’’

ஸ் ஸ் ஸ்

வாசலில் கார் வந்து நிற்க, வினோதாவும் குழந்தைகளும் உள்ளே ஓடிவந்து நந்திதாவை அணைத்துக் கொள்ள ‘‘நந்து நீ என் ரூம்லதானே படுத்துக்கப் போறே?’’

‘‘இல்லை என் ரூம்ல. அவ கர்ள்.’’

‘‘மாத்தி மாத்தி படுத்துப்பா.’’

வினோதா நந்திதாவின் நெற்றியில் படிந்த கீற்றைப் பரிவுடன் தள்ளியபடி ‘‘என்ன மேரி எல்லாம் ரெடியா?’’ என்றாள்.

‘‘உங்க வூட்டுக்காரரு வரலிங் களா?’’

‘‘கார்ல இருக்கார்.’’

‘‘காலைலிருந்தே ரெடிம்மா.’’

வினோதா அவனைக் கண்ணுக்குக் கண் பார்த்தாள். ராஜேஷ் அவள் பார்வையைத் தவிர்த்தான்.

‘‘ப்ரகாஷை உள்ள கூப்பிடேன்.’’

‘‘அது அங்கயே இருக் கட்டும். செல்போன் பேசி முடிக்கலை இன்னும். கவலைப்படாதீங்க. எல்லாருக்கும் இதுதான் நல்லது அத்திம்பேர்!’’

‘‘உங்களுக்குத்தான் நல்லது நடக்கணும்னு அம்மா சொன்னா… சீக்ரமா…’’

‘‘அந்தப் பேச்சே இல்லைன்னு சொல்லு.’’

‘‘எத்தனை நாள் தனியா இருப்பீங்க அத்திம்பேர்?’’

‘‘அந்தக் கவலையை நீங்க படவேண்டாம்.’’

‘‘உங்களுக்கு இருக்கற அந்தஸ்துக்கு தயக்கமில்லாம குடுப்பா. அப்பவே பலபேர் விசாரிச்சிண்டிருந்தா.’’

‘‘நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கறியா? சம்மதிக்கறேன்.’’

‘‘எனக்குக் கல்யாணம் ஆய்டுத்தே. கொஞ்சம் லேட்டு அத்திம்பேர்.’’

‘‘ப்ரகாஷ்ட்ட கேட்டுப் பாக்கறேன்’’ என்று கண் சிமிட்டினான்.

‘‘கேட்டா ‘லே ஜாவோ’ன்னுடுவார்’’ என்று சிரித்தாள்.

இரண்டு பேருக்கும் ஒரே குரல். ஒரே முகஜாடை. ஒரே வாசனை! நந்து சீக்கிரம் பழகிவிடுவாள்.

‘‘சித்தி! நீ அம்மா மாதிரியே இருக்கே!’’

‘‘அம்மாதாண்டி நான். சித்தினு கூப்டாதே. இவங்க மாதிரி ‘வின்னு’ன்னு கூப்பிடு.’’

‘‘பேர் சொல்லியா?’’

‘‘அதான் எனக்குப் பிடிக்கும்.’’

‘‘வின்னு!’’

‘‘என் செல்லமே!’’

‘‘நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க. இதோ இரண்டு நாள்ள பழகிடுவா. பாரு மூக்கு ஒழுகறது பாரு’’ என்று டிஷ்யுவால் அவள் மூக்கைத் துடைத்து விட்டாள்.

‘‘போலாமா?’’

சோபாவில் உட்கார்ந்து நந்திதாவை மடிமேல் வைத்துக் கொண்டு மெல்லப் பேசினான். ‘‘நந்து நீ வின்னு சித்தியோட இருக்கறது உன் நல்லதுக்குத்தான். அம்மாவும் சந்தோஷப்படுவா.’’

‘‘அம்மாதான் செத்துப் போய்ட் டாளே!’’

‘‘பெருமாள்ட்ட போய்ட்டா’’

‘‘திட்டினியாப்பா?’’

‘‘இல்லைமா திட்டலை.’’

‘‘ரகுவை கிள்ளாம இருக்கச் சொல்லு.’’

‘‘சேச்சே! நான் அந்த வழக்கத்தை எப்பவோ நிறுத்திட்டேன் பெரியப்பா.’’

புறப்படும்போது நந்திதா ஒரு முறை திரும்ப அவனருகில் வந்து, ‘‘அப்பா நான் இங்கயே இருக்கேனே’’ என்றாள்.

கண்ணீரை அடக்கிக்கொண்டு ‘‘நீ எங்கயும் போகலைமா. தினம் வந்து உன்னைப் பார்ப்பேன்.’’

‘‘பெங்களுர்க்கா…? பொய்!’’

‘‘தினம் போன்ல பேசுவேன். ஏய் யாராவது ஏதாவது எங்க நந்திதாவைச் சொன்னா உடனே எனக்கு போன் பண்ணிடுவா. அடுத்த நிமிஷம் ஏரோப்ளேன்ல வந்து…’’

‘‘போப்பா பொய்ப்பா.’’

வினோதாவின் கணவன் ஆரனை பொறுமையில்லாமல் அழுத்த ‘‘கமிங் கமிங்’’ என்று கூவினாள்.

வினோதாவுடன் வாசலுக்கு வந்தான்.

‘‘ஹாய் ப்ரகாஷ்!’’

இவனைப் பார்த்து ‘‘ஹாய் பார்ட்னர் சப்குச் டீக் டாக்’’ என்று காரில் இருந்தபடியே கையசைத்தான். செல்போனில் பேசிக் கொண்டிருந்தான் ப்ரகாஷ். ‘‘கமான் டியர் லேடி’’ என்று நந்திதாவை தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டான். ‘‘வின் வின், நாட் டு வொர்ரி… நாட் டு வொர்ரி.. எவ்ரிதிங் ஃபைன்’’ என்றான்.

‘‘இன்னிக்கே பங்களுரா? மெல்ல ஓட்டச் சொல்லு.’’

கார் புறப்பட்டது.

‘‘அத்திம்பேர் வரேன். வா நந்து எதாவது வேணும்னா…’’ என்று பாதியில் நிறுத்தினாள்.

ஸ் ஸ் ஸ்

அவர்கள் போனதும் ப்ரேமலதா வந்தாள். வந்த உடன் இரைந்துகிடந்த செய்தித்தாள்களையும் பத்திரிகைகளை யும் அடுக்கி வைத்தாள். கூடத்தைப் பெருக்கினாள், திண்டுகளைத் தட்டிப் போட்டாள்.

‘‘இதெல்லாம் எதுக்கு ப்ரேம்? மேரி வருவா.’’

கிச்சனுக்குச் சென்று காபி போட்டுக் கொண்டு வந்தாள்.

‘‘ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கிங்க.’’

‘‘நான் செய்தது சரியா ப்ரேம்?’’

‘‘நிச்சயம். குழந்தைக்கு நல்லதுதான் செய்திருக்கீங்க.’’

‘‘போறப்ப என்னைத் திரும்பிக்கூட பார்க்கலை ப்ரேம்.’’

‘‘கமான்! ஆண்பிள்ளை அழக் கூடாது.’’

அவன் கன்னத்தில் உருண்ட கண்ணீரைத் தன் துப்பட்டாவால் துடைத்துவிட்டாள். ‘‘பிட்ஸா எதாவது ஆர்டர் பண்ணட்டுமா? உங்களுக்குப் பிடிக்குமே.’’

‘‘ஒண்ணும் வேண்டாம்.’’

‘‘ஆர் யு ஓகே. உடம்பு சரியில்லையா?’’ நெற்றியில் தொட்டுப் பார்த்தாள்.

‘‘ஒரு பாராஸிட்டமால் போட்டுக்கறீங்களா? எங்கருக்கு?’’

‘‘காலைலருந்து சஞ்சலம். கொஞ்ச நேரம் தூங்கினா சரியாய்டும்.’’

‘‘சரி பெட்ரூம்ல போய் படுத்துக்கங்க. டின்னர் ரெடி பண்றேன்’’

‘‘வேண்டாம் ப்ரேம். எனக்கு சாப்படற மூடு இல்லை.’’

‘‘ராத்திரி தனியா இருப்பிங்களா? கலீக்ஸ் யாராவது வந்து படுத்துக்க சொல்லிருங்கீங்களா?’’

‘‘தேவையில்லை.’’

‘‘ஐ கேன் ஸ்டே. உங்களை தனியா விட்டுட்டுப் போறதுக்கு எனக்கு பயமா இருக்கு. சங்கீதாவைப் பத்திப் பேச விரும்பறீங்களா?’’

‘‘இல்லை. மறக்க விரும்பறேன் முடியலை.’’

‘‘லைஃப் கோஸ் ஆன்.’’

‘‘ஆமாம்.’’

‘‘எப்ப முதல்ல சந்திச்சீங்க?’’

‘‘ஆகஸ்ட் 98, எட்டே வருஷம்.’’

‘‘அநியாயம்’’ என்றாள். தன்னை விடுவித்துக் கொண்டு புறப்பட்டாள்.

ஸ் ஸ் ஸ்

போகும்போது குழந்தைகள் ஐஸ்க்ரீமுக்குப் பிடிவாதம் பிடித்தன. வினோதா வழியில் ஒரு கடையில் நிறுத்தச் சொன்னாள்.

நந்திதாவை ‘‘வா கண்ணு ஐஸ்க்ரீம் சாப்டலாமா?’’

நந்திதா தலையை ஆட்டி ‘‘வேண்டாம்’’ என்றாள்.

‘‘ப்ரகாஷ் பாத்துக்க. இந்தப் பிசாசுங்களுக்கு ஐஸ்க்ரீம் கப்பம் கட்டியாகணும். இதோ வந்துர்றன்’’ என்று தன் குழந்தைகளுடன் இறங்கிச் சென்றாள்.

‘‘வின், அப்படியே எனக்கு ஒரு பிஸ்தா கப்பு’’ என்றான் ப்ரகாஷ்.

அவர்கள் ஆளுக்கொரு ஐஸ்க்ரீம் கோனை நாக்கால் தடவிக்கொண்டு திரும்பி வந்தபோது, நந்திதா காரில் இல்லை.

ஸ் ஸ் ஸ்

‘‘நல்லா பாடுவா, அபசுரம் இல்லாம பாடுவா… சமைப்பா… எல்லாத்துக்கும் புன்னகை. திட்டினா கூட புன்னகை. யாரோடயும் சண்டை போடாம என்ன குடும்பம்? என்ன ஃபேமிலி? சே! எங்கிட்ட கடவுள் சொல்லியிருக்கலாம். எட்டு வருஷம்தாண்டா இந்த தேவதைன்னு… நாடு நகர மெல்லாம் சுத்தாம இன்னும் கொஞ்சம் அதிக நேரம் வீட்ல இருந்திருப்பேன்.’’ நெஞ்சைப் பிடித்துக் கொண்டான்.

‘‘ஆர் யு ஆல் ரைட்?’’ அவள் தோளில் சாய்ந்து கொண்டான். ப்ரேமா அவன் தலையை நிமிர்த்தி ஆழ்ந்து பார்த்தாள். ‘‘ப்ரேம் என்னைக் கல் யாணம் பண்ணிப்பியா?’’ அவள் தலையை அசைத்து ‘‘நாளைக்குக் காலைல இதே கேள்வி இருக்கான்னு பார்க்க லாம் ராஜேஷ்.’’ ‘‘உன் கூட வரலை?’’ என்றான் ப்ரகாஷ்.

‘‘நாசமாப் போச்சு. உன்னை ஒரு நிமிஷம் பாத்துக்கச் சொன்னா இப்டி கோட்டை விட்டுட்டியே… இப்ப எங்க போய்த் தேடுவேன்? அத்திம்பேருக்கு என்ன பதில் சொல்வேன்? பாழாப் போற செல்ஃபோனை காதை விட்டுப் பிடுங்கு முதல்ல.’’

திகைத்துபோய் ‘‘நந்திதா நந்து..’’ என்று இங்குமங்கும் தேடினாள்.

ப்ரேமா புறப்படும்போது, ராஜேஷ் கூடவே சென்று அவளை அப்படியே அணைத்துக் கொண்டு, திரும்ப அழைத்துவந்து விளக்கை அணைத்து அவளைப் படுக்கையில் வீழ்த்தினான்.

¬¬¬

ப்ரகாஷ் ‘நாட் டு வொர்ரி. அந்தப் பொண்ணு ஒரு மாதிரி மோரோஸா இருந்திச்சு. திரியும் வூட்டுக்குத்தான் போயிருக்கும். கிட்டக்கத்தானே. இந்தா முதல்ல அங்க போன் போடு. டியர்! நாட் டு வொர்ரி… நோ ப்ராப்ளம்.’ என்றான்.

¬¬¬

‘‘ராஜேஷ் ராஜேஷ்! உணர்ச்சிவசப் படாதீங்க.’’

டெலிபோன் மணி அடித்தது.

‘‘போன் போன்’’ என்றாள் மூச்சுத் திணறலிடையே…

‘‘அடிக்கட்டும்’’ என்றான்.

‘‘ப்ளீஸ்! எடுங்க அத்திம்பேர். எடுங்க போனை’’ என்று வினோதா பதறினாள்.

¬¬¬

பிரிவா சோகமா காமமா தன்னிரக்கமா எது அந்தக் கணத்தில் அவனைச் செலுத்தியது என்று தெரியாமல் அவசர அவசரமாக அவளைக் கலைத்தான். பட்டென்று ஸ்விட்ச் தட்டப்பட்டு ஒளிவெள்ளம் பரவியது. ‘‘நந்திதா!?’’ அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.

‘‘நந்திதா ‘‘ய்யென்ன?, என்ன வேணும் கண்ணு?’’

‘‘அம்மா போட்டோ.’’

(எழுதியது யார் என்று நான் சொல்லவும் வேண்டுமா …??? )

………………………………………………………………………………………………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக