நடையாய் நடந்து என்ன லாபம்………….???

…………………………………….

…………………………………….

இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கி 139 ஆண்டுகளாகி விட்டன.
1885 டிசம்பா் மாதம் 28-ஆம் தேதி அதன் பயணம் தொடங்கியது.
சம்பிரதாயத்துக்கு தில்லியில் நிறுவன நாள் கொண்டாடப்பட்டது.
காங்கிரஸ்காரா்களின் கவனம் எல்லாம் இப்போது ‘இந்தியா’
கூட்டணியை ஒருங்கிணைப்பதிலும், ராகுல் காந்தியின் இரண்டாவது கட்ட நடைப்பயணமான ‘பாரத் நியாய்’ யாத்திரையைத் திட்டமிடுவதிலும்
இருக்கிறது.

பிரிட்டிஷ் காலனிய அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஆலன் ஆக்டேவியன்
ஹ்யூம் என்கிற அதிகாரி, தாதாபாய் நெளரோஜி, தின்ஷா வாச்சா ஆகியோா் இணைந்து உருவாக்க முற்பட்ட இயக்கம்தான் இந்திய தேசிய காங்கிரஸ்.

அதன் முதல் கூட்டம் அன்றைய பம்பாயில் (இன்றைய மும்பை) தேஜ்பால்
சம்ஸ்கிருத கல்லூரியில் நடந்துபோது, கலந்துகொண்டவா்களின் எண்ணிக்கை வெறும் 72 மட்டுமே. அவா்களில் பெரும்பாலோா் சமூக சிந்தனையாளா்களான வழக்குரைஞா்களும், பத்திரிகையாளா்களும்.

காங்கிரஸ் இயக்கத்தின் முதலாவது கூட்டம் டிசம்பா் 31-ஆம் தேதிவரை நான்கு நாள்கள் நடந்தது. டபிள்யூ. சி. பானா்ஜி தலைமை தாங்கி நடத்திய அந்த மாநாட்டை, பிரிட்டிஷ் ஆட்சியும், அறிவுஜீவிகளும் கூா்ந்து கவனித்தனரே தவிர, சாமானிய மக்களிடம் அது எந்தவித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை என்றுதான் கூற வேண்டும்.

ஏதோ கூடினாா்கள், பேசினாா்கள், கலைந்தாா்கள் என்பதுடன் முடிந்துவிடும் என்றுதான் முதலில் இந்திய தேசிய காங்கிரஸ் கணிக்கப்பட்டது. அதன்
இரண்டாவது கூட்டம் தாதாபாய் நெளரோஜியின் தலைமையில் அடுத்த ஆண்டு
டிசம்பா் மாதம் 27-ஆம் தேதி கல்கத்தாவில் (இன்றைய கொல்கத்தா) கூடியபோது அதில் கலந்துகொண்டவா்களின் எண்ணிக்கை 434.

அந்த இரண்டாவது கூட்டத்தில், நாடு தழுவிய அளவில் பிராந்திய காங்கிரஸ் கமிட்டிகள் அமைப்பது என்கிற முடிவு எடுக்கப்பட்டதன் காரணமாகத்தான் 139 ஆண்டுகளைக் கடந்து காங்கிரஸ் தொடா்கிறது.

இன்றைய காங்கிரஸ்காரா்களுக்கு தாதாபாய் நெளரோஜி குறித்துத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவா்களுக்கே தெரியாது எனும்போது, பொதுமக்களுக்கு எப்படித் தெரியும்?. பாா்ஸி இனத்தைச் சோ்ந்த தாதாபாய் நெளரோஜி, பிரிட்டனின் நாடாளுமன்றத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவா் என்பது தெரியவே தெரியாது.

1892 பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தோ்தலில், லிபரல் கட்சியின் வேட்பாளராக
ஃபின்ஸ்பரி மத்திய தொகுதியில் நின்று வெற்றி பெற்றாா். தோ்தல் பிரசாரத்தில் அவரை எதிா்த்து நின்ற வெள்ளை இன வேட்பாளா்களைத் தோற்கடித்தாா். ‘கருப்பரான இந்தியருக்கா உங்கள் வாக்கு?’ என்று அவருக்கு எதிராகப்
பிரசாரம் முடுக்கிவிடப்பட்டது. இந்தியாவுக்கு விடுதலை கேட்கும் ஒருவரைத் தோ்ந்தெடுத்து விடாதீா்கள் என்று எச்சரிக்கப்பட்டது.

இதுபோல, காங்கிரஸ் பேரியக்கத்தை கட்டமைத்த ஒவ்வொரு தலைவருக்கும்பின்னணி உண்டு; வரலாறும் உண்டு. தலைவா்களின்
நீண்டதொரு பட்டியலும் உண்டு. ஜவாஹா்லால் நேரு பிரதமராக இருந்தவரை,
ஏன் 1969-இல் காங்கிரஸ் கட்சி பிளவுபடும் வரை கட்சியின் தலைவராக
இருந்த ஒவ்வொருவரும் தியாகிகள். சுதந்திரத்துக்காக சிறை சென்றவா்கள். விடுதலை வேள்வியில் தங்கள் சொத்து சுகத்தை எல்லாம் இழந்தவா்கள்.

அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியின் இன்றைய நிலைமை என்ன?
139 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் கூடி இந்தியா்களுக்கு ஆட்சி
நிா்வாகத்தில் பங்கு கேட்ட 72 பேருக்கு இருந்த அளவுகூடத் தன்னம்பிக்கை
இப்போது இல்லை என்று தெரிகிறது. தன்னை முன்னிறுத்தி தனது
தலைமையில் கூட்டணியைக் கட்டமைக்கும் துணிவுகூட இல்லை எனும்போது
பிரதமா் நரேந்திர மோடியையும், பாஜகவையும் எப்படி காங்கிரஸ்
எதிா்கொண்டு வெல்லப் போகிறது என்று கேட்கத் தோன்றுகிறது.

காங்கிரஸைத் தவிர ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள எந்தவொரு கட்சிக்கும்
தேசிய அளவில் செல்வாக்கு இல்லை. கூட்டணியில் உள்ள ஏனைய கட்சிகள் அனைத்தும் சோ்ந்தாலும்கூட 150 மக்களவை உறுப்பினா்கள் கூட
இருக்கமாட்டாா்கள். சொல்லமுடியாது. திரிணமூல் காங்கிரஸ், திமுக,
சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் (பவாா்), சமாஜ்வாதி, ஆம் ஆத்மி
ஆகியவற்றுக்கு மட்டும்தான் இரட்டை இலக்க இடங்களை வெல்ல முடியும்.

ஆனால் காங்கிரஸ் யாரை முன்னிறுத்த வேண்டும் என்று அந்தக் கட்சிகள் முன்மொழிகின்றன என்பது சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் அவமானமாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் மகாத்மா காந்திக்கு இழைக்கப்படும் அவமானம்….!

கா்நாடகமோ, தெலங்கானாவோ, காங்கிரஸ் வலிமையாக உள்ள ஏனைய மாநிலங்களோ எதுவாயினும் ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சிகளால் காங்கிரஸுக்கு பெரிய அளவில் ஆதாயம் இல்லை. ஆனால் அந்தக்
கூட்டணியில் இடம்பெறும் எந்தவொரு கட்சிக்கும் பாஜகவை வீழ்த்த
காங்கிரஸின் வாக்குகள் அவசியம் என்பதை காங்கிரஸ் தலைமை
உணா்ந்ததாகத் தெரியவில்லை. இந்தத் தன்னம்பிக்கை இல்லாமைதான் காங்கிரஸின் பலவீனம்.

தான் பிரதமா் வேட்பாளா் அல்ல; காங்கிரஸின் தலைமையில் எதிா்க்கட்சி
கூட்டணி அமையப்போவதில்லை என்றால், ராகுல் காந்தி ‘பாரத் நியாய்
யாத்திரை’ நடத்துவதில் அா்த்தமில்லை.
மகாத்மா காந்தியை மட்டுமல்ல, இந்திரா காந்தியையும் சோ்த்து காங்கிரஸ் மறந்துவிட்டது என்று தோன்றுகிறது.

( 30, டிசம்பர், 2023 – தினமணி தலையங்கம் ….)

என் குறிப்பு - இந்த தினமணி தலையங்கத்தைப் பற்றியே எனக்கு
ஒரு கருத்து உண்டு. ஆனால், அதை வெளியிடுவதற்கான
உகந்த நேரம் இதுவல்ல.. தகுந்த நேரம் வரும்போது
என் கருத்தை சொல்கிறேன்.

.
……………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to நடையாய் நடந்து என்ன லாபம்………….???

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இன்றைக்கு மாநில அளவில் செல்வாக்குப் பெற்ற பல கட்சிகளின் தலைவர்கள் காங்கிரஸை எதிர்த்துக்கொண்டு வெளியேறி வெற்றி பெற்றவர்கள். இந்திரா காந்தி காலத்திலிருந்து காங்கிரஸ் தலைமை, தன் ஜால்ராக்களை மாத்திரமே வளர்த்துவிட்டதுதான் காங்கிரஸின் வீழ்ச்சிக்குக் காரணம். தமிழ்நாட்டிலும் பாருங்க, வாழப்பாடிக்குப் பிறகு உருப்படியான தலைவரே காங்கிரஸுக்கு இல்லை, அதாவது காங்கிரஸ் தலைமை அப்படிப்பட்டவர்களை வளர்க்கவே இல்லை. லெட்டர்பேட் ஆட்களான மாணிக் தாகூர், ஜோதிமணி போன்றவர்களே ராகுலுக்குத் தேவையாக இருக்கிறது. இல்லை, அட்டைக்கத்தி வீரர்களான அழகிரி, பீட்டர் அல்போன்ஸ் போன்றவர்கள்.

    ராகுல் தன் வாய்ப்புகள் பலவற்றையும் வீணடித்திருந்தாலும், அவரது யாத்திரை குறிப்பிடத்தக்க அளவில், அவரை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது. இன்னும் பல யாத்திரைகள் அவருக்கு உதவினாலும், அவரை முன்னிறுத்த காங்கிரஸ் தலைமைக்கே நம்பிக்கை இல்லை என்னும் நிலைதான். மோடிக்கு எதிராக ராகுல் அல்லது பிரியங்கா நிற்பார் என்று சொல்வதற்கே முயலாத காங்கிரஸ், தலைமையை மாத்திரம் தன்னிடம் கொடுப்பார்கள் என்று எப்படி நம்புகிறது?

    எதற்கு இண்டி கூட்டணி? புலிக்குப் பயந்தவர்கள் என் மேல் படுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்வதற்கா? காங்கிரஸ் தனித்து நிற்கும் என்று தைரியமாக நின்றால், (நின்றிருந்தால்) அதற்கான வாக்கு வங்கி மாத்திரமல்ல, உறுப்பினர்கள் எண்ணிக்கையும், கட்சியின் வளர்ச்சியும் நிகழ்ந்திருக்கும். தமிழகத்திலேயே பாருங்கள், தைரியமாக தனித்துக் களம் காண்பேன் (என்று மாத்திரம் தேர்தல் சமயத்தில் சொல்லக்கூடாது, திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே எதிர்கட்சியின் வேலையைச் செய்ய ஆரம்பித்திருக்கவேண்டும்) என்று ஆரம்பித்திருந்தால், பாராளுமன்றத் தேர்தலில் 5 சத வாக்குகள் 8 சத வாக்குகளாக அதிகரித்து கட்சிக்கு ஒரு துவக்கத்தையும் வலிமையையும் தந்திருக்கும்.

    //மகாத்மா காந்தியை மட்டுமல்ல, இந்திரா காந்தியையும் சோ்த்து// – இந்திரா காந்தியே மகாத்மா காந்தியை நினைவுகொண்டதில்லை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.