………………………………….

……………………………………..

……………………………………….
அந்தக் காலங்களில், ( ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் என்று
வைத்துக் கொள்ளுங்களேன்…) எனக்கு ப.சிதம்பரம் அவர்களை
மிகவும் பிடிக்கும்.
அறிவாளி, நல்ல புத்திகூர்மை, ஆனால் அது சார்ந்த கர்வம் இருக்காது.
எந்த விஷயமானாலும்,
எவ்வளவு சிக்கலான விஷயமாக இருந்தாலும்,
மிக எளிமையாக கேட்பவர்கள்/படிப்பவர்கள்
சுலபமாக புரிந்துகொள்ளும்படி விளக்கக்கூடிய சாமர்த்தியம்….
ஆங்கிலம், தமிழ் – இரண்டிலும் சிறப்பாக பேசக்கூடியவர்கள்
நம்மிடம் அரிதாகத்தான் இருக்கிறார்கள். அதில் ப.சி.யும் ஒருவர்.
பொருளாதாரம், அரசியல், சட்டம் – அனைத்திலும் நல்ல
புலமை… நல்ல ஞாபக சக்தி, விரல் நுனியில் புள்ளி விவரங்கள்…
தெளிவான, தீர்க்கமான முடிவுகள்.
நம் நாட்டின் மிகச்சிறந்த நிதியமைச்சர்களில் இவரும் ஒருவர்.
இவை எல்லாவற்றையும் தாண்டி, அனைத்திலும் தமிழை முதன்மை
படுத்தக்கூடியவர். பாராளுமன்றத்திலும், மத்திய அமைச்சராகவும் கூட
வேட்டி, சட்டையுடன், மிக எளிமையாக காட்சியளிப்பவர்….
துரதிருஷ்டவசமாக, யுபிஏ-2 ஆட்சிக் காலத்தின்போது, இவரது
சறுக்கல்கள் துவங்கின… ஊழல் புகார்கள் நிறைய வரத்துவங்கின.
பரம்பரை கோடீஸ்வரராகிய இவருக்கு இந்த மாதிரியெல்லாம்
பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியமே இல்லை; இவரது சறுக்கலுக்கு
இவர் மகனே முக்கிய காரணம் என்று சொல்லப்பட்டது.
உறுதியாக நின்று, பிள்ளையையும் தன் வழிக்கு கொண்டு வர வேண்டியவர்,
தானும் பிள்ளை வழியில் சென்று விட்டார் என்று கூறப்பட்டது
மிகவும் துரதிருஷ்டவசமான விஷயம்…..
இவரது அறிவு முதிர்ச்சிக்கும், புத்திசாலித்தனத்துக்கும் இப்போது
இன்னும் அதிகமான தேவை இருக்கிறது என்பதை இப்போதும்,
ராஜ்ய சபா உரைகள் உணர்த்துகின்றன… அண்மையில், ராஜ்யசபா
தலைவருடன் இவர் உரையாடிய விதம் ‘லைவ்’ பார்த்தபோது வெகு சுவாரஸ்யமாக இருந்தது.
- இனி – தொடர்வது கார்த்தி சிதம்பரம் அவர்கள் –
…………………….
விகடன் செய்தித்தளம் கார்த்தி சிதம்பரம் அவர்களிடம், அவரது
தந்தையைப்பற்றி விரிவாக பேசச்சொல்லி ஒரு பேட்டி கண்டிருக்கிறது.
பல சுவாரஸ்யமான விஷயங்களை சொல்லும் அந்த பேட்டியிலிருந்து –
………………………………
‘‘முடிவிலாப் பெருவெளிதான் தந்தையின் பேரன்பு என எங்கோ
படித்திருக்கிறேன். அம்மாவைக் கொண்டாடும் உலகில் தந்தையை
வெளியில் கொண்டாடத் தயக்கம் காட்டும் கோடிக்கணக்கான
ஆண்களில் ஒருவனாகத்தான் நானும் இருந்தேன். நான் தந்தை ஆன
பிறகுதான் என் தந்தையின் அருமையை ஒவ்வொரு கணமும் உணர்கிறேன்!”- நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் முகத்தில் தளும்பப் பேசுகிறார்
கார்த்தி சிதம்பரம்.
அரசியல்வாதி, தொழிலதிபர், எம்.பி என்ற அடையாளங்களைத் தாண்டி,
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் – முன்னாள் மத்திய அமைச்சர்
ப.சிதம்பரத்தின் மகன் என்பதுதான் முதல் அடையாளமாக நம்முன்
நிற்கிறது. அப்பாவுக்கும் தனக்குமான பந்தம் பற்றி நெகிழ்ச்சியுடன்
பேசுகிறார் கார்த்தி சிதம்பரம்.
‘‘அப்பாகூட நெருக்கம் இல்லாததாலேயே அவரை விட்டு
விலகியிருந்தேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். தள்ளி நின்று அவரைப்
பார்த்து வியந்திருக்கிறேன். He is a man of Perfection.
உடுத்தும் ஆடைகளில் ஆரம்பித்து, காலையில் எழுந்து வேலைகளை
வகைபிரித்துச் செய்வது வரை எல்லாவற்றிலும் அவ்வளவு நேர்த்தி.
ஆனால், அப்பா அந்த நேர்த்தியை குடும்பத்தில் யாரிடமும் எதிர்பார்க்க
மாட்டார். குறிப்பாக என் விஷயத்தில். அதுதான் அவரின் ஸ்பெஷல் குணம்.
எத்தனை நெருக்கடிகள், பிரச்னைகள் சூழ்ந்திருந்தாலும் Mr.cool-ஆக
இருப்பார். அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட விஷயம் இது..!
நான் பிறந்ததிலிருந்து அப்பாவை அரசியல்வாதியாகத்தான் பார்க்கிறேன். அரசியலை என்மீது ஒருநாளும் அவர் திணித்ததில்லை. என் சுதந்திரத்தில் என்றைக்கும் தலையிட்டதில்லை. அவர் ‘அரசியலுக்கு வா’ன்னு ஒருநாளும் கூப்பிட்டதில்லை. ‘நான் அரசியலுக்கு வரலை’ன்னு சொல்லியிருந்தாலும்
அவர் வருத்தப்பட்டிருக்க மாட்டார். இன்னைக்கு என்னை எல்லோருமே
அப்பாவோட அடையாளத்தை வெச்சுதான் நான் அரசியலில் இருக்கிறதா சொல்றாங்க. இது மறுக்கமுடியாத உண்மை. எங்கப்பா இல்லைன்னா
எனக்கு பதவி கொடுத்திருப்பாங்களா? அதேநேரம், என்னை மாதிரி
அரசியலுக்கு வந்தவங்களை தமிழகத்துல பத்துப் பேரையும் இந்திய
அரசியலில் நூறு பேரையும் என்னால காட்ட முடியும். வாரிசா இருந்தாலும்
தகுதி இல்லைனா மக்களே ஒதுக்கிடுவாங்க. அப்பாவோட பெருமையை
நிச்சயம் காப்பாத்திடுவேன்.
அப்பாவைப் பற்றிச் சொல்லணும்னா தோள்மீது கையைப்போட்டுக்கிட்டு ஃப்ரெண்ட்ஸ் பற்றி விசாரிக்குற சினிமா அப்பா அவர் கிடையாது.
சொல்லப்போனா என்னைவிட என் பொண்ணுதான் அப்பாகூட ரொம்ப
நெருக்கம். சாப்பிடுற நேரம் எல்லோரும் ஒண்ணா இருப்போம், பேசுவோம். அரசியலோ வேற எதுவும் அங்கே இருக்காது. இப்போதுகூட, நானும்
அப்பாவும் அரசியலில் இருப்பதால்தான் நெருக்கம் காட்டுறோம்…
நிறைய பேசுறோம். ஆனா, சின்ன வயசுல நாங்க அதிகம் பேசினதே
கிடையாது.
ஸ்கூல் படிக்கும்போது டென்னிஸ்ல எனக்கு ஈடுபாடு வந்ததுக்குக் காரணமே அப்பாதான். அப்பாவும் டென்னிஸ் விளையாடுவார். டென்னிஸ் விளையாட்டை டி.வி-ல, நேர்ல ரொம்ப விரும்பிப் பார்ப்பார். நானும் அப்பாவும் டென்னிஸ்
பற்றி சீரியஸா பேசிக்கிட்டிருப்போம். அதேபோல டென்னிஸ் பற்றி
எந்தக் கட்டுரை வந்தாலும், ‘படி’ன்னு கொடுப்பார். ஸ்கூல் போறது,
டென்னிஸ் விளையாடுறது, இதைச் சுற்றியே என் வாழ்க்கை இருந்துச்சு.
1984-ல் அப்பா எம்.பி ஆனார். அடுத்த வருடமே அமைச்சராகிவிட்டார்.
அதோட ரொம்ப பிஸியாகிட்டார். அவர், எங்கே போனாலும் செட்டிநாட்டு
ஸ்டைல் உணவு களைத்தான் விரும்பிச் சாப்பிடுவார். அதனாலேயே, வீட்டு சமையல்காரரை டெல்லிக்கும் கூட்டிட்டுப் போயிட்டார். ரொம்ப பிஸியா
பயணம் செஞ்சுட்டே இருந்தார். அப்பாகூட டூர் போனதெல்லாம்
ரொம்ப கம்மிதான்.
அப்பா அரசியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் என்னோட படிப்பு
விஷயத்துல ரொம்ப அக்கறையா இருப்பார். ஆனா, என்னைக்குமே,
‘இதைப்படி அதைப்படி’ன்னு அவரோட விருப்பங்களை என் மேல
திணிச்சதே கிடையாது. நான் ஏதாவது வித்தியாசமா கண்ணு முழிச்சுப் பண்ணிக்கிட்டிருப்பேன். ‘சீக்கிரம் தூங்கு!’ன்னு சொல்லிட்டுப் போவார்.
அவர் பேச்சைக் கேட்கலைன்னா கோபப்படுவாரே தவிர, அடிச்சதே
கிடையாது.
அம்மாவும் அப்படித்தான். ப்ளஸ் டூ முடிச்சப்போ என்னோட விருப்பத்தின்படி
தான் அமெரிக்கா டெக்சாஸ் யுனிவர்சிட்டில பி.பி.ஏ படிச்சேன். நான்
டெக்சாஸ் போனது படிப்புக்காக மட்டும் இல்லைன்னு அப்பாவுக்குத் தெரியும். ஏன்னா அது டென்னிஸ் டீமுக்குப் பேர்போன யுனிவர்சிட்டிங்கிறதை
அப்பாவும் தெரிஞ்சு வெச்சிருந்தார். அதுக்கப்புறம், இங்கிலாந்து கேம்பிரிட்ஜ்ல சட்டம் படிக்கப் போனேன். உண்மையைச் சொல்லணும்னா, எனக்கு முழுச்
சுதந்திரம் கொடுத்த அப்பா அம்மாவை சந்தோஷப்படுத்தணும்கிறதுக்காக
மட்டுமே சட்டம் படிச்சேன்.
‘உங்கப்பா ஒரு லாயர். அதிலேயே பிராக்டீஸ் பண்ணு’ன்னு அம்மா
சொன்னாங்க. ஆனால், எனக்கு அதுல நாட்டம் இல்லை. ஒரு நல்ல
வழக்கறிஞர் ஆகணும்னா அதுக்கு டிசிப்ளின் இருக்கணும். ப்ராக்டீஸ் பண்ணிக்கிட்டே நிறைய படிக்கணும். எனக்கு அந்த டிசிப்ளின் இல்லை.
என்னோட அய்யா பிசினஸ் பண்ணினார். அய்யாவைத் தொடர்ந்து அப்பா
பிசினஸ் பண்ணலை. ஒரு தலைமுறை பிசினஸிலிருந்து ஸ்கிப் ஆகிடுச்சு.
அதனால, பிசினஸ் பார்க்கவேண்டிய சூழலுக்கு வந்துட்டேன்.
நான் வழக்கறிஞர் ஆகலைன்னு அப்பா ஒருநாளும் வருத்தப்பட்டது
கிடையாது. ‘Choose your Love, Love your choice’னு
அப்பா அடிக்கடி சொல்வார்.
அப்பா அரசியல்வாதியா இருக்கிறதால, சின்ன வயசிலிருந்தே
அரசியலைப் பார்த்துதான் வளர்ந்தேன். வீட்டிற்கு வரும் விருந்தாளிகள்,
நண்பர்கள் எல்லோருமே அரசியல் வட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான்.
எங்கம்மாவோட தூரத்து உறவினரும் முன்னாள் நிதியமைச்சருமான சி.சுப்பிரமணியம் அடிக்கடி வீட்டுக்கு வருவார். அவரை நான்
‘சுப்பிணி தாத்தா’ன்னுதான் கூப்பிடுவேன். அப்பாவுக்கு ரொம்ப
நெருக்கம்னா அது ஜி.கே.மூப்பனார்தான். அடிக்கடி வீட்டுக்கு வருவார்.
நானும் அப்பாவும் ஸ்மோக் பண்ணமாட்டோம். ஆனா, மூப்பனார் ஸ்மோக் பண்ணுவார். அவருக்குனே, ஒரு ஆஷ்ட்ரே வாங்கி வீட்டுல வெச்சிருந்தோம். மூப்பனாருக்கு சைனீஸ் உணவு ரொம்பப் பிடிக்கும். தாஜ் ஹோட்டல்ல
இருக்குற கோல்டன் டிராகன் ரெஸ்டாரண்டுக்கு அப்பாவும் அவரும்
போவாங்க. என்னையும் அப்பா கூடவே கூட்டிட்டுப் போவார். அப்பாவோட நெருக்கமாக இருந்த தலைவர்களில் எனக்கும் நெருக்கமாக இருந்த
தலைவர்னா மூப்பனார்தான். நான் வாங்கிய முதல் டெலிபோன்
அவருடைய எம்.பி. கோட்டாவுல வாங்கியதுதான். இப்பவும் அந்த போன்
அவர் ஞாபகமா இயங்கிக்கிட்டிருக்கு.
நான் முதன்முதலில் பார்த்த தேசியத்தலைவர்னா இந்திரா காந்தி
அம்மையார்தான். அவங்க தமிழ்நாடு வந்தப்போ அப்பாதான் மொழி
பெயர்ப்பாளரா கூட பயணம் பண்ணினாங்க. அந்தப் பயணத்துல
என்னையும் அப்பா கூட்டிட்டுப் போனார். இந்திரா காந்திமீது அப்பா
எவ்வளவு மரியாதை வெச்சிருந்தார்னு நேர்ல பார்த்து வியந்திருக்கிறேன்.
அந்த மரியாதைக்குக் காரணமே அவங்க நேருவோட புதல்விங்கிறதுதான்.
அரசியலில் அப்பாவோட ஹீரோன்னா அது நேருதான். அந்தப் பாசம்
அப்படியே இந்திரா காந்தி அம்மையார்மீது அப்பாவுக்கு இருந்துச்சு.
அப்பாவுக்கு அரசியலில் லிஃப்ட் கொடுத்து அழகு பார்த்தவர் ராஜீவ் காந்தி. அப்பாவோட ரூம்ல சின்ன வயசிலிருந்தே ஒரே ஒரு தலைவரோட
படத்தைத்தான் மாட்டி வெச்சிருக்கார்… அது நேரு!
அப்பாவோட மனசை இப்பவரைக்கும் ரொம்ப பாதிச்சது ராஜீவ் காந்தியோட மரணம்தான். இந்திரா காந்தி போலவே ராஜீவ் காந்தி தமிழகம்
வரும்போதெல்லாம் அப்பாதான் மொழிபெயர்ப்பாளரா கூடவே இருப்பார். அப்பாவுக்கும் ராஜீவ் காந்திக்கும் ஒரு வயசுதான் வித்தியாசம். அதனால
இருவரும் ரொம்ப நெருக்கமா பேசிப்பாங்க.
1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வந்தபோது,
அப்பாதான் மொழிபெயர்ப்பாளரா இருக்க வேண்டியது. அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு 23-ம் தேதி எங்க ஊரான தேவகோட்டைல ராஜீவ் காந்தி பேச வேண்டியதா இருந்தது. அதற்கான ஏற்பாடுகளை அப்பா செய்துக்கிட்டிருந்தார். அதனால ஸ்ரீபெரும்புதூர் போகலை. நிகழ்ச்சி வேலைகளை அப்பா கவனிச்சிக்கிட்டிருக்கும் போதுதான் ராஜீவ் காந்தி படுகொலை பற்றின
தகவல் வந்தது. இடி மாதிரி அந்தத் தகவல் வந்ததும் அப்படியே அப்பா
சரிஞ்சு உட்கார்ந்து அழுதுட்டார்.
ராத்திரியோட ராத்திரியாக சென்னைக்குக் கிளம்பி வந்து,
ராஜீவ் காந்தியின் உடலோடு டெல்லி புறப்பட்டுச் சென்றார். இப்பவரைக்கும்
அந்தச் சம்பவத்திலிருந்து அவரால மீள முடியல. ‘ராஜீவ் காந்தி
இந்தியாவோட சிறந்த பிரதமரா இருந்திருப்பார். அவரோட இழப்பு
இந்தியாவுக்கே பெரும் இழப்பு’ன்னு அப்பா சொல்லிக்கிட்டே இருப்பார்.
அப்பாவோட அரசியல் காலகட்டத்தில் முக்கியமா நான் கருதுவது,
தமிழ் மாநில காங்கிரஸ் உருவாக்கம்தான். மக்கள் சக்தியால் உருவான
கட்சி அது. அதைக் கண்கூடா பார்த்தேன். ரெண்டே வருஷத்துல கைவிட
வேண்டிய சூழல். அப்பாவுக்கு அந்த வருத்தம் இருக்கு. நான் வருங்காலத்துல
புத்தகம் எழுதினா, தமிழ் மாநில காங்கிரஸ் உருவாக்கம் குறித்துதான்
எழுதுவேன். ஏன்னா அப்பாவோட உழைப்பு அதுல இருக்கு.
அப்பாகிட்ட வெளிப்படையா பேசுற சுதந்திரம் இருந்தது. நான் படிச்சு
முடிச்சுட்டு வந்து, என் காதல் பற்றி அப்பாகிட்ட சொன்னபோது சந்தோஷமா ஏத்துக்கிட்டார். என் காதல் மனைவி ஸ்ரீநிதி டாக்டர் மட்டுமல்ல, பரதநாட்டியக் கலைஞர்னு தெரிஞ்சு ரொம்பவே பெருமைப்பட்டார். எப்போதுமே என்னோட விருப்பத்தை நிறைவேற்றக்கூடிய அப்பாவாதான் இருந்திருக்கார்.
நான் அரசியலுக்கு வர அம்மாதான் பெரிய காரணம். நான் பிறந்தப்போ,
‘உன் மகனை என்னவா உருவாக்கப்போறே’ன்னு அம்மாகிட்ட பலரும்
கேட்டப்போ, ‘என் புள்ளை அரசியல்வாதி ஆகிடுவான்’னு சொன்னாங்களாம். அதுமட்டுமல்லாம, சின்ன வயசிலிருந்தே பொது அறிவு, வரலாறு, அரசியல்
என எல்லாத்தையும் சொல்லிக்கொடுத்து வளர்த்தாங்க. தினமும் நியூஸ்
பேப்பர் படிக்கச் சொல்லுவாங்க. என் தாத்தா கைலாசம் நீதிபதியா
இருந்தவர். அவர் கொடுத்த தீர்ப்புகள் பற்றி அம்மா சொல்வாங்க.
வீட்டுல ஷவர் உடைஞ்சுபோனப்போ, அதை மைக் மாதிரி வச்சு
‘பெரியோர்களே தாய்மார்களே’ன்னு என்னைப் பேச வெச்சாங்க.
நான் ஸ்கூலில் பேச்சுப்போட்டி, பட்டிமன்றம், வினாடி வினா எல்லாவற்றிலும்
மற்ற மாணவர்களைவிட அதிகமா ஸ்கோர் பண்ணக் காரணம்
என் அம்மாதான்!
1977-ம் ஆண்டு முதன்முதலா அப்பா தேர்தலை சந்திச்சார். முதல் தேர்தலில்
தோல்வி அடைஞ்சார். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது அந்த
ஒருமுறைதான். தேசிய அரசியல் பக்கம் தன் பார்வையை உடனே
திருப்பினார். 1984-ம் ஆண்டிலிருந்து பலமுறை வெற்றிகளைக் குவித்துள்ளார்.
ஆனா, வெற்றிகளைப் பெரிதாகக் கொண்டாட மாட்டார். எல்லாத்தையும் ஒரேமாதிரிதான் எடுத்துக்குவார். பல பதவிகளில் இருந்திருக்கார். ஆனாலும்,
மாநில அரசியலில் அப்பா இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்னு யோசிச்சிருக்கேன். அவர் பண்ணாததை நான் பண்ண கடவுள் வாய்ப்பு கொடுப்பார்னும் நம்புறேன்.
அப்பாவோட பாலிட்டிக்ஸ் ஸ்டைல் பிடிச்சிருந்தாலும் அதை நான் காப்பி
அடிக்கலை. அரசியலில் அவர் ஸ்டைல் வேற, என் ஸ்டைல் வேற.
எது பேசினாலும் அப்பா புள்ளிவிவரத்தோடு மேற்கோள்காட்டிப் பேசுவார்.
சாதாரண மக்களுக்கும் பொருளாதாரம் குறித்த விவரங்களைக் கொண்டு
போய்ச் சேர்த்த பெருமை அப்பாவுக்குத்தான் சேரும்.
அரசியல்ரீதியாக அப்பாமீது நிறைய பேர் விரோதத்தைக் காட்டியிருக்காங்க.
ஆனா, அப்பா எப்போதுமே பர்சனல் விரோதத்தை வளர்த்துக்கவே மாட்டார். அப்பாகிட்ட பல விஷயங்கள் பிடிச்சாலும் நிதி அமைச்சராக அவர்
இருந்தப்போ, கிராமப்புற மாணவர்களும் படிக்கணும்னு கல்விக்கடன் திட்டம் கொண்டு வந்ததை முக்கியமா சொல்வேன். நிறைய கிராமப்புற மாணவர்கள் அவர்கள் விருப்பப்பட்ட படிப்பைப் படிக்க ஆரம்பிச்சாங்க. இந்தியாவும்
முன்னேற ஆரம்பிச்சது.
இப்போதும், ‘என் பொண்ணு கல்விக்கடன்லதான் படிச்சாங்க’ன்னு நிறைய
பேர் எங்கிட்ட சொல்வாங்க. அப்பாவோட அரசியல் வாழ்க்கையில இதை
ஒரு பெரிய சாதனையா பார்க்கிறேன். அப்பாவை நினைச்சு அதிகம் நான் பெருமைப்படுற விஷயங்களில் இதுதான் முதன்மையானது!”
.
………………………………………………………………………………………………………..……



உப்பு சப்பு இல்லாத கார்த்தி பேட்டி ஆனால் உங்களின் முன்னோட்டம் நூறு சதம் உண்மை அதை பேட்டியில் அப்பாவின் வீழ்ச்சிக்கு தான்தான் காரணம் என்று கார்த்தி சொல்வார் என்று எதிர் பார்த்தேன்..இது ஒரு பேட்டி…
என் கணிப்பில் சிதம்பரம் தமிழ்நாட்டுக்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போட்டதில்லை.
தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல அவரது தொகுதி காரைக்குடிக்கு கூட ஒன்றும் செய்யவில்லை.
அவருக்கு காங்கிரசில் இருந்த செல்வாக்கில் தமிழ்நாட்டிற்கு எவ்வளவோ செய்து இருக்கலாம்.
அவர் ஒரு ஏட்டு சுரைக்காய் .பொருளாதார அறிவு இருந்தும் ஒன்றும் பிரயோசனமில்லை .
அவர் செய்ததெல்லாம் காரைக்குடியில் ஏராளமான அரசுடமை வங்கி கிளைகளை தேவையில்லாமல்
திறந்து வாரா கடன்களை அதிகரித்தது மட்டுமே.போதாக்குறைக்கு ஊழல் வேறு .