……………………

……………………..
இராயபுரத்தின் பிரதான சாலையாக இருப்பது ‘எம்.சி.ரோடு’
என அழைக்கப்படுகிற மணியக்காரர் சத்திரம் சாலை.
இந்தச் சாலை இப்பெயர் பெற்றதற்கான காரணம் அந்தச்
சாலையின் தொடக்கத்தில் அமைந்து இருந்த மணியக்கார
சத்திரத்தால் தான்.
சுமார் ஐம்பது முதியவர்கள் இன்றும் தங்கியுள்ள இந்தக்
கருணை இல்லம் முந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை
வாய்ந்தது.
பிரிட்டிஷார் சென்னை கோட்டைப்பகுதிக்குள் குடியேறிய பிறகு,
அவர்களுக்கான பணிகளை செய்து வந்த பணியாட்களுக்காக
உருவாக்கப்பட்ட பகுதி ‘கறுப்பர் நகரம்’ எனப்பட்டது. இன்றைய
பாரிமுனை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகள் தான் அக்கால
கறுப்பர் நகரம். இப்பகுதியில் குடியேற்றப்பட்ட மக்கள்
வெள்ளையர்களுக்கும் அவரது படை வீரர்களுக்குமான பணிகளை
மேற்கொண்டு வந்தனர்.
1700-களில் பஞ்சமும், போரும் அடுத்தடுத்து ஏற்பட்டு மக்கள்
கொத்துக் கொத்தாக இறந்து கொண்டிருந்தனர். அப்போது
இந்தப் பகுதியில் வசித்த மணியக்காரர் ஒருவர் 1782-ம் ஆண்டு
தனது தோட்டத்தின் ஒரு பகுதியில் கஞ்சித்தொட்டி அமைத்தார்.
காலையிலேயே கஞ்சி காய்ச்சி தொட்டியில் ஊற்றி விட,
மக்கள் தாங்கள் கொண்டு வரும் லோட்டாவில் கஞ்சியை எடுத்துப்
பருகுவர். இதன் மூலம் அந்தப் பகுதி மக்களைப் பஞ்சத்தில்
மடியாமல் காத்துள்ளார்.
காலம் அவரை ‘மணியக்கார முதலியார்’ என்று கணக்கு
வைத்திருக்கிறது.
ஊருக்கே ஆக்கிப்போட, இதென்ன சத்திரமா? சாவடியா? என்கிறோமே..
அப்படித் தான் தோட்டத்து வீடு ‘சத்திரம்’ என்று அழைக்கப்போய்,
அதுவே பின்னர் நிலைத்துப் போயிற்று.
………

………………..
பஞ்ச காலத்தில், வேலையில்லாமல், உணவில்லாமல் மக்கள்
செத்துக்கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் தான், அவர்களுக்கு
வேலை வாய்ப்பும், வருவாயும் உருவாக்கும் விதமாக சென்னை மாநகரில்
நிமிர்ந்து நிற்கக்கூடிய பல கட்டிடங்கள், இரயில் பாதைகள், கால்வாய்கள்
கட்டப்பட்டன.
பக்கிங்காம் கால்வாயும் அப்போது தான் வெட்டப்பட்டது.
அதில் நாள் முழுக்க உழைத்தவர்களுக்கு ஒரு அணா காசும்
450 கிராம் தானியமும் வழங்கப்பட்டு இருக்கிறது.
அந்தத் தாது வருடப் பஞ்சக் காலங்களிலும் மணியக்காரர் சத்திரம்
தொடர்ந்து இயங்கி மக்களின் உயிர் காத்து வந்துள்ளது.
ஒரு காலக்கட்டத்தில் கறுப்பர் நகரத்தில் காலரா, பிளேக் போன்ற
நோய்கள் பரவின. இந்த நோய்களால் ஏராளமான மக்கள் இறக்கத்
தொடங்கினர். இவற்றால் தாங்களும் பாதிக்கப்படுவோமோ என்று
பயந்த வெள்ளையர்கள், சென்னை மக்களுக்கு என ஒரு
மருத்துவமனையை கஞ்சித்தொட்டி சத்திரம் இருந்த இடத்தில்
உருவாக்கினார்கள். ஜான் அண்டர்வுட் என்ற ஆங்கிலேய அதிகாரியின்
முயற்சியால் இந்த மருத்துவமனை 1799-ம் ஆண்டு சிறிய அளவில்
உருவானது. கூடவே, தொழுநோயாளிகளுக்கான ஒரு மருத்துவமனையும்
அருகில் தொடங்கப்பட்டது. எவ்வித மருத்துவ வசதியும் கிடைக்காமல்
தவித்த மக்களுக்கு இந்த மருத்துவமனை பெரும் உதவியாக இருந்தது.
கஞ்சித்தொட்டி சத்திம் இருந்த இடத்தில் தொடங்கப்பட்டதால் இதை
‘கஞ்சித்தொட்டி ஆஸ்பத்திரி’ என்றே மக்கள் அழைக்க ஆரம்பித்தனர்.
1800-களிலேயே வெளியூர் மக்கள் எல்லாம் வந்து சிகிச்சை பெரும்
அளவுக்கு இந்த மருத்துவமனை சிறப்பாக இயங்கியது.
பின்னர் இது ராயபுரம் ஆஸ்பத்திரி என்றும் அழைக்கப்பட்டது.
பிறகு அந்த மருத்துவமனை கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கில அரசின்
உதவியோடும், பெரும் பணக்காரர்களின் கொடை கொண்டும்
கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்தது.
பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினரான லெப்டினென்ட் கர்னல்,
சர் ஜார்ஜ் ஃப்ரெட்ரிக் ஸ்டான்லி 1933-ம் ஆண்டு அறுவை சிகிச்சைக்கான
படிப்பை இங்கு தொடங்கி வைத்தார். அவரது நினைவாக 1934-ல் இந்த மருத்துவமனைக்கும், மருத்துவக் கல்லூரிக்கும் ‘ஸ்டான்லி’
என்ற பெயர் சூட்டப்பட்டது.
அதுதான் இப்போதுள்ள ஸ்டான்லி மருத்துவமனை….!
மருத்துவமனை வந்தபின் அதற்கு அருகில் இருந்த ராஜா வெங்கடகிரி
சத்திரத்துடன் மணியக்காரர் சத்திரம் சேர்ந்து இயங்கத் தொடங்கியது.
அந்த இடத்தில் தான் இந்தச் சத்திரம் இப்போது வரை இயங்கி வருகிறது.
மணியக்கார சத்திரம் சாலை எனும் அழகு தமிழ் பெயர்
வழக்கம் போல் ஆங்கிலேயரால் கடித்துக் குதறி
‘ மோனிகர் சவுல்ட்ரி ரோடு’ என்று சிதைக்கப் பட்டது.
சவுல்ட்ரி என்றால் ஆங்கிலத்தில் சத்திரம் என்பது
பொருள்.
அந்த மணியக்காரர் சத்திரம் ஆங்கில குறிப்புகளில்
‘மோனிகர் சவுல்ட்ரி’ என இருக்க, நம் ஆட்சியாளர்கள் அதை
தமிழ்ப் படுத்துறேன் என்று சொல்லி இன்னமும் படுத்தி விட்டார்கள்…!!!
மோனிகர் சவுல்ட்ரி, என்பது ‘மாணிக்கர் செளத்திரி’ ஆனது…!!!

எப்படியெப்படியோ மாறி, ஒருவழியாக இன்று அது பெற்றுள்ள பெயர் –
…. ‘எம்.சி.ரோடு’ என்கிற “மணியக்காரர் சத்திரம் சாலை” .
1807-ஆம் ஆண்டு ஆற்காடு நவாப் இந்தச் சத்திரத்திற்கு நிதியுதவி
அளித்தார். 1890ஆம் ஆண்டு ராஜா வெங்கடகிரி ஒரு லட்ச ரூபாய்
வைப்புத் தொகையாக வழங்கினார். அதிலிருந்து வரும் வட்டித்
தொகையைக் கொண்டு சத்திரத்தை பராமரிக்கச் செய்தார்.
முன்னர் குடிசையில் இயங்கி வந்ததால் பழமையான கட்டிடம்
என்பதற்கான எந்தச் சான்றும் இப்போது அங்கு இல்லை.
சத்திரத்தின் மற்றொரு நுழைவு வாயிலில் கல்தூண் ஒன்று
அமைந்துள்ளது. அது ராஜா வெங்கடகிரியின் காலத்தைச்
சேர்ந்ததாக இருக்கலாம்.
இப்போதும் சுமார் ஐம்பது முதியவர்கள் அங்கே தங்கியுள்ளனர்.
அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட செலவுகளை
அறக்கட்டளையே செய்கிறது.
அறக்கட்டளையின் அறங்காவலராக சென்னை ஆட்சியர்
இருந்தாலும் அரசு நிதியோ, மானியமோ இதற்கு
வழங்கப்படுவதில்லை. பொதுமக்கள் அளிக்கும் நன்கொடையின்
மூலமே அறக்கட்டளை அவர்களது தேவையை
நிறைவேற்றிவருகிறது.
( பல தளங்களிலிருந்தும் திரட்டப்பட்டது….!!! )
.
………………………………………………………………………………………………….…..



அருமையான செய்தி 🙏🏾