-இதெல்லாம் just கரூர் கம்பெனி வசூல் தான்…!!! லஞ்சமும் இல்லை ; ஊழலும் இல்லை

……………………..

சட்டவிரோத பார்கள்…
6 மாதங்களில் 400 கோடி இழப்பு! –

( நன்றி – ஜூனியர் .விகடன் . )

டாஸ்மாக் பார் ஏலப் பிரச்னையின் சூடே இன்னும் தணியாத நிலையில், “தமிழ்நாடெங்கும் சட்டவிரோதமாக பார்கள் ஏராளமாகச் செயல்பட்டுவருகின்றன. இதனால், அரசுக்குப் பல நூறு கோடி ரூபாய் நஷ்டம்” என்கிற புகார் அத்தனை மாவட்டங்களிலும் எழுந்திருக்கிறது. எந்தவிதமான அரசு அனுமதியும் இன்றிச் செயல்படும் இந்த பார்களால், அரசுக்கு உரிமைத்தொகை பறிபோவதோடு, கிடைக்கும் வசூலை ‘கரூர் கம்பெனி’ ஆட்கள் அள்ளிச் செல்வதாகப் புகார் தெரிவிக்கிறார்கள் பார் உரிமையாளர்கள்!

யாரந்த கரூர் கம்பெனி?

தமிழ்நாடு டாஸ்மாக் பார்கள் நடத்திவருபவர்கள், குடோன்களிலிருந்து மது பாட்டில்களைக் கடைகளுக்கு சப்ளை செய்பவர்கள், பணியாளர்கள் உட்பட டாஸ்மாக் தொடர்பிலிருக்கும் அனைவர் மத்தியிலும், ‘கரூர் கம்பெனி’ பற்றிய பேச்சுதான் தீவிரமாக இருக்கிறது. தமிழ்நாட்டையே பல்வேறு மண்டலங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஆட்களை நியமித்து, வசூலில் கொடிகட்டிப் பறக்கிறதாம் இந்த கரூர் கம்பெனி.

டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன (சி.ஐ.டி.யூ)பொதுச்செயலாளர் திருச்செல்வன் இது குறித்து நம்மிடம் பேசினார். “பொதுவாக Tender Transparency Act-ன்படி, இணைய வழியில்தான் டெண்டர் விடப்பட வேண்டும். ஆனால், நேரடியாகவும் டெண்டர் கோரலாம் என்று டாஸ்மாக்கில் மட்டும் இரட்டை முறையில் டெண்டர் நடத்தப்பட்டுள்ளது.
2003-ல் டாஸ்மாக் மூலம் சில்லறை மது விற்பனையை அரசே தொடங்கியபோது, ஏற்கெனவே அங்கு பார்களை இயக்கிவந்த கட்டட உரிமையாளர்களுக்கே லைசென்ஸ் கொடுத்து, பார்களை நடத்தச் சொன்னது அரசு. 18 ஆண்டுகளாக இருந்த இந்த நடைமுறையைத் தற்போது மாற்றிவிட்டார்கள்.

கட்டட உரிமையாளர்களையும், அவர்களிடம் என்.ஓ.சி பெற்று ஏற்கெனவே பார்களை நடத்தி வந்தவர்களையும் முழுமையாக நிராகரித்துவிட்டனர். அரசு நிர்ணயித்த தொகையைவிடக் கூடுதலாகக் கேட்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு லைசென்ஸ் கொடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மீறி, ‘கரூர் கம்பெனி’ ஆட்களுக்கு மட்டுமே லைசென்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அரசு அனுமதியுடன் பார்களை இயக்க வேண்டுமென்றால், லைசென்ஸ் அவசியம். அதை பார்களில் குடிமகன்களுக்குத் தெரியும்படி மாட்டிவைக்க வேண்டும். கட்டட உரிமையாளரின் என்.ஓ.சி தேவை, அரசுக்கு மாதம்தோறும் உரிமைத்தொகை செலுத்த வேண்டும். அதற்கான ரசீதை வைத்திருக்க வேண்டும். இவை தவிர, பார்கள் இயங்கும் கட்டடத்தின் உறுதித்தன்மைச் சான்றிதழ், தீயணைப்புத்துறையின் தடையில்லாச் சான்று என 66 வகையான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

ஆனால், ஒன்றுமே இல்லாமல்தான் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோத பார்கள் நடத்தப்படுகின்றன. அரசின் ஆவணங்களில், குறிப்பிட்ட டாஸ்மாக் பார் நடத்தப்படவில்லை என்று இருக்கும். ஆனால், களத்தில் பாரை திறந்துவைத்து வியாபாரம் பார்த்துவருகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் 2,900 பார்கள் இருக்கின்றன. இவற்றில், சுமார் 900 பார்கள் சட்டவிரோதமாகத்தான் செயல்படுகின்றன. இந்தச் சட்டவிரோத வசூலைத்தான் கரூர் கம்பெனி மொத்தமாக அள்ளிச் செல்கிறது.

“கரூர் கம்பெனியிலிருந்து பேசுறோம்… கமிஷனை எடுத்து வைங்க!”

இந்த வசூல் போதாதென, டாஸ்மாக் கடைகளிலிருந்தும் ‘கட்டிங்’ வசூலிக்கிறது கரூர் கம்பெனி. டாஸ்மாக் மாவட்ட அதிகாரிகளிடமிருந்து கடைகளின் தினசரி வசூல் விவரங்களைக் கரூர் கம்பெனி ஆட்கள் திரட்டிவிடுகிறார்கள். அதை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு கடையின் சூப்பர்வைசர், சேல்ஸ்மேன்களுக்கு போன்செய்து, ‘கரூர் கம்பெனியிலருந்து பேசுறோம். இன்னைய வசூல்ல, பாட்டிலுக்கு ஒரு ரூபாய் எடுத்து வெச்சுருங்க. பையன் வந்து வாங்கிப்பான்’ என்று அதட்டலாகவே வசூலிக்கிறார்கள். கட்டிங் கொடுக்க மறுத்தால் டிரான்ஸ்ஃபர்தான். இதற்கு பயந்தே டாஸ்மாக் பணியாளர்கள், கடை வருவாயில் குறிப்பிட்ட பகுதியை கரூர் கம்பெனிக்குக் கப்பம் கட்டுகிறார்கள்.

கோவை மண்டலத்துக்கு ஈஸ்வரமூர்த்தி, திருவள்ளூர் மாவட்டத்துக்கு சசிகுமார், விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு கரூர் ரமேஷ், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு பி.டி.ராஜா, மதுரைக்கு ராஜா, செந்தில்குமார், தூத்துக்குடிக்கு பாலச்சந்தர் என கரூர் கம்பெனியின் ஏஜென்ட்டுகள் கொடிகட்டிப் பறக்கிறார்கள். இந்த விஷயத்தில் முதல்வர் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

தகவல்களின் உண்மைத்தன்மையை அறிய, சில மாவட்டங்களில் சட்டவிரோதமாக நடத்தப்படுவதாகச் சொல்லப்படும் பார்களுக்கு
ஜூ.வி டீம் நேரில் விசிட் அடித்தது.

தூத்துக்குடியில் 142 டாஸ்மாக் மதுபானக் கடைகளும், ஒரு எலைட் கடையும் செயல்படுகின்றன. கடந்த ஜனவரி மாதம் நடந்த பார் ஏலத்தில் 111 பார்களுக்கு விண்ணப்பம் பெறப்பட்டு, 102 பார்களுக்கான விண்ணப்பங்கள் மட்டும் ஏற்கப்பட்டன. அதிலும், நான்கு பார்களுக்கு மட்டும்தான் முறையான லைசென்ஸ் அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சாம்ஸன் தங்கராஜிடம் பேசினோம். “மாவட்டம் முழுமைக்கும் 90-க்கும் மேற்பட்ட பார்களை, கரூர் கம்பெனியைச் சேர்ந்த பாலச்சந்தருக்கு கப்பம் கட்டுவதன் மூலம் சட்டவிரோதமாகவே நடத்திவருகிறார்கள். தூத்துக்குடி மாநகரிலேயே அதிக விற்பனை நடக்கக்கூடியது பைபாஸ் ரோட்டிலுள்ள 10108 எண் கொண்ட டாஸ்மாக் கடைதான். அதையொட்டி லைசென்ஸ் இல்லாமல் செயல்படும் பாருக்கு, கரூர் கம்பெனி கமிஷன் கேட்டிருக்கிறது. பார் உரிமையாளர் கொடுக்க மறுத்ததால், டாஸ்மாக் கடையைப் பூட்டிவிட்டனர். சம்பந்தப்பட்ட பார் உரிமையாளர் ‘சமாதானம்’ பேசிய பின்னரே, அந்த டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டது” என்றார்.

சிவகங்கை மாவட்ட நிலவரம் குறித்து நம்மிடம் பேசியவர்கள், “இங்கு 130 டாஸ்மாக் கடைகளில், 80-க்கும் மேற்பட்ட பார்கள் அனுமதியின்றிச் செயல்படுகின்றன. உதாரணத்துக்கு, காரைக்குடி பேருந்து நிறுத்தம் அருகே, 120 அடி சாலையிலுள்ள பாரும், புதுவயல் கடைவீதி அருகிலுள்ள பாரும் லைசென்ஸ் இல்லாமல்தான் நடக்கின்றன. மேற்கண்ட பார்களில் வாரத்துக்கு ஒரு முறை கரூரிலிருந்து வரும் ஆட்கள், பணத்தை வசூலித்துச் செல்கிறார்கள்” என்றனர். நாம் நேரில் சென்றபோது, அந்த பார்கள் படுஜோராகச் செயல்படுவதைப் பார்க்க முடிந்தது.

எங்கும் தி.மு.க பிரமுகர்கள் ராஜ்ஜியம்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 169 பார்கள் உள்ளன. இவற்றில், 90 பார்கள் மட்டுமே அரசு அனுமதியுடன் நடத்தப்படுவதாகக் கூறுகிறார்கள் பார் மற்றும் கட்டட உரிமையாளர்கள் சங்கத்தினர். அவர்களிடம் பேசியபோது, “தஞ்சாவூர் ரயிலடி, வடக்கு வீதி, கரந்தை என மாவட்டம் முழுவதும் 79 பார்கள் அனுமதியில்லாமல் நடத்தப்படுகின்றன. அதற்கான உரிமைத்தொகை அரசின் கஜானாவுக்குச் செல்லாமல், கரூர் கம்பெனியின் கஜானாவுக்குச் செல்கிறது. பார் உரிமையாளர்கள் பணம் தரவில்லையென்றால், டாஸ்மாக் அதிகாரிகளை வைத்தே, ‘கடையை மூடிவிடுவோம்’ என மிரட்டுகிறார்கள். தஞ்சாவூர் மட்டுமின்றி, திருவாரூர், நாகை என டெல்டா மாவட்டம் முழுவதும், ஆளுங்கட்சி செய்தித் தொடர்பாளரின் உறவினர் ஒருவர்தான் ராஜ்ஜியம் செய்கிறார்” என்றனர்.

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில், மொத்தம் 156 மதுபானக் கடைகள் இருந்தபோதும், 30 கடைகளுக்கான பார்களுக்கு மட்டுமே டெண்டர் விடப்பட்டிருக்கிறது. எனினும், சட்டவிரோதமாகப் பல பார்கள் இயங்கிவருகின்றன. நெல்லை மாநகராட்சிப் பகுதியிலுள்ள 39 மதுபானக் கடைகளில், 33 கடைகளில் பார் இருந்தபோதிலும், ஆறு பார்களுக்கு மட்டுமே லைசென்ஸ் இருக்கிறது.

மீதமுள்ளவை லைசென்ஸ் இன்றிதான் நடத்தப்படுகின்றன என்கிறார்கள். விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் 180 மதுபானக் கடைகளில், 120 பார்களுக்கு ஏலம் நடத்தப்பட்ட நிலையில், வெறும் 35 பார்களுக்கே லைசென்ஸ் வழங்கப்பட்டி ருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், மற்ற பல இடங்களில் முறைகேடாக பார்கள் செயல்பட்டு வருவதாகச் சொல்கிறார்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய டாஸ்மாக் பணியாளர்கள், “விருதுநகர் நகராட்சி அலுவலகம் அருகேயும், விருதுநகர்-மதுரை சாலையில் ஒரு வங்கியின் எதிரிலும், விருதுநகர்-சிவகாசி சாலையில் மேம்பாலத்துக்குக் கீழே பெட்ரோல் பங்க் அருகிலும் செயல்பட்டுவரும் பார்களுக்கு லைசென்ஸ் இல்லை. இதையெல்லாம், ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கவேண்டிய அதிகாரிகள், ‘கரூர் கம்பெனி’யின் அழுத்தத்தால், நடவடிக்கை எடுக்க முடியாமல் இருக்கிறார்கள்” என்றனர்.

தமிழ்நாட்டிலேயே உரிமம் பெறாத பார்கள் மதுரை மாவட்டத்தில்தான் அதிகமாகச் செயல்படுகின்றனவாம். பெயர் குறிப்பிட வேண்டாமென்கிற கோரிக்கையுடன் பேசிய டாஸ்மாக் அதிகாரிகள், “டாஸ்மாக் நிர்வாகத்தில் மதுரை இரண்டு மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது. இரண்டையுமே தி.மு.க பிரமுகர்கள்தான் கவனித்துவருகிறார்கள்.

இவர்களுக்கு சுந்தரப் பிரமுகர் ஒருவர்தான் வசூல் ஏஜென்டாகச் செயல்படுகிறார். பார் வசூல் தவிர, டாஸ்மாக் கடைகளிலும் தினசரி ஒரு சதவிகிதம் வசூல்செய்கிறது கரூர் கம்பெனி. மதுரையில் குருவிக்காரன் சாலை, முனிச்சாலை, பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில், செல்லூர் பகுதியில் இரண்டு எனப் பல பார்கள் லைசென்ஸ் இன்றி வெளிப்படையாக இயங்குகின்றன” என்றனர்.

6 மாதங்களில், 400 கோடி இழப்பு..!

தமிழ்நாடு டாஸ்மாக் பார் மற்றும் கட்டட உரிமையாளர்கள் நலச்சங்கத் தலைவர் அன்பரசன், நம்மிடம் விளக்கமாகப் பேசினார். “பார்களை ஏலமெடுக்கவும், லைசென்ஸ் கிடைத்த பின்னர் திறக்கவும், அந்த பார்கள் அமைந்துள்ள கட்டட உரிமையாளரின் தடையில்லாச் சான்று அவசியம். பார் டெண்டர் எடுத்திருப்பவர்களிடம் லைசென்ஸ் இருக்கிறதே தவிர, கட்டட உரிமையாளர்களின் என்.ஓ.சி இல்லாததால், அதிகாரபூர்வமாக பார்களைத் திறக்க முடியவில்லை. அதனால், ஆவணப்படி பூட்டப்பட்டிருப்பதாகக் கணக்கு காட்டிவிட்டு, அதிகாரபூர்வமற்ற வகையில் அவை சட்டவிரோதமாகச் செயல்படுகின்றன.

இந்தச் சட்டவிரோதக் காரியத்துக்கு, ‘கரூர் கம்பெனி’ என்கிற பெயரில் வலம்வரும் ஆட்களின் ஒத்துழைப்பு இருப்பதால், யாராலும் இதைத் தடுக்க முடியவில்லை. சட்டப்படி பார்கள் நடந்தால், மாதம்தோறும் மதுபானக் கடையின் வசூலில், குறிப்பிட்ட சதவிகிதத்தை உரிமைத்தொகையாக அரசுக்குச் செலுத்த வேண்டும்.

ஆனால், கடந்த ஆறு மாதங்களாக அரசுக்குச் செல்லவேண்டிய அந்தப் பணமெல்லாம் கரூர் கம்பெனிக்குச் சென்றுகொண்டிருக்கிறது. ஜனவரி முதல் ஜூன் வரையிலாக, சட்டவிரோத பார்களால் அரசுக்கான உரிமைத்தொகையாகச் சுமார் 400 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. முதல்வர் உரிய முறையில் விசாரித்தால், இதில் பல உண்மைகள் வெளிவரும்” என்றார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து, துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விளக்கம் கேட்டோம். “போனில் விளக்கம் சொல்ல முடியாது. நேரில் வாருங்கள்” என்றார். நேரில் சந்திக்கப் பல முறை நேரம் கேட்டும், இதழ் அச்சுக்குச் செல்லும் வரை அமைச்சரிடமிருந்து பதில் ஏதும் இல்லை. அவரிடமிருந்து விளக்கம் வரும் பட்சத்தில் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

இந்தச் சூழலில், டாஸ்மாக் மேலாண் இயக்குநர் சுப்பிரமணியனைத் தொடர்புகொண்டோம், இது குறித்து அவர் பேச மறுத்துவிட்டார்.

அடுத்த 4 வருடங்களுக்கும் இதே வேட்டைதொடரும் என்று எதிர்பார்க்கலாம்….வசூல் மன்னர்களுக்கெல்லாம் அமைச்சரவை மாற்றம் எப்படி வரும்….!!!

முதல்வருக்கு இதைப்பற்றியெல்லாம் ஒன்றுமே தெரிந்திருக்காது. தெரிந்திருந்தால் – அனுமதிப்பாரா என்ன …!!!

.
…………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , . Bookmark the permalink.

1 Response to -இதெல்லாம் just கரூர் கம்பெனி வசூல் தான்…!!! லஞ்சமும் இல்லை ; ஊழலும் இல்லை

  1. புதியவன் சொல்கிறார்:

    கரூர் சிற்றரசின் வசூல், பேரரசுக்குக் கட்டம் 95 சதம் கட்டணுமே… என்று கதை கட்டாமலிருப்பது வரை சந்தோஷம்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.