நாகேஷ் – மறக்க முடியுமா….???


முன் கதை –
நாகேஸ்வரன் என்கிற நாகேஷ்!

—————-

செப்., 27, 1933ல், கன்னட பிராமண குடும்பத்தில் பிறந்த,
நாகேஸ்வரனின் குடும்பம், ஈரோடு மாவட்டம், தாராபுரத்தில் வசித்தது.

நாகேஸ்வரனது அப்பா, மைசூரில், ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்;
மிகவும் கண்டிப்பானவர். எஸ்.எஸ்.எல்.சி., முடித்த உடன்,
கோவை, பி.எஸ்.ஜி., ஆர்ட்ஸ் காலேஜில், ‘இன்டர்மீடியட்’
சேர்ந்தான் நாகேஸ்வரன்.

வீட்டில், செல்ல பெயர், குண்டுராவ். இரண்டாம் ஆண்டு பரீட்சைக்கு
சில நாட்களுக்கு முன், அம்மை நோய் தாக்கியது.
அது, குணமடையும் தருவாயில், இரண்டாவது தாக்குதல்.
அடுத்து, மூன்றாம் தடவையும் தாக்கியது. பிழைத்ததே பெரிய
விஷயம். பால் வழியும் நாகேஸ்வரனது முகத்தில், அம்மை,
தன், ‘ஆட்டோகிராப்’பை கிறுக்கி விட்டு போனது. மனம் வெறுத்த நாகேஸ்வரன், வீட்டை விட்டு வெளியேறினான்.

இலக்கில்லா வாழ்க்கை பயணத்தில் பலவிதமான வேலைகள்.
ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில், ஒரு கூலி தொழிலாளியாக கூட
வேலை பார்த்திருக்கிறான்.

யதேச்சையாக எழுதிய, ரயில்வே பரீட்சையில் தேர்வாகி,
சென்னை, தெற்கு ரயில்வே தலைமையகத்தில்,
‘கிளார்க்’ வேலை கிடைத்தது.

அங்கே தான், நாடக ஆசை துளிர் விட்டது. நாடகங்களில் நடிக்க
ஆரம்பித்தான்.

—————————————-
இனி நாகேஷின் வார்த்தைகளில் –
………….

ரயில்வேயில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயம், காலையில்
ஆபீசுக்கு போனால், ‘நான் உண்டு, என் வேலை உண்டு…’ என்று
இருப்பேன்.

ஒருநாள், எனக்குள் ஏதோ ஒரு வெறி! ஆபீசின்
பல்வேறு பிரிவுகளுக்கு போய், ‘இங்கே, பாட்டு, நாடகம் போன்ற
விஷயங்களை ஊக்குவிக்கும் விதமாக, ‘கலாசார பிரிவு’
இயங்கி வருகிறதா…’ என்று கேட்டேன்.

ம.ரா., என்று ஒருவர், நாடகங்களை எழுதி, இயக்கி வருவதும்,
அந்த நாடகத்தில், ரயில்வேயில் வேலை பார்க்கிறவர்கள் நடிப்பதும்
தெரிய வந்தது. அவரை போய் பார்த்தேன்.

ஒல்லியான உடம்பு கொண்ட நான், அவர் முன் போய் நின்றேனே
ஒழிய, அவர் கண்ணுக்கு, நான் தென்படவே இல்லை. மெதுவாக
செருமி, ஒரு வழியாக அவர் கவனத்தை ஈர்க்க, ‘என்னய்யா
வேணும்…’ என்றார்.

‘நீங்க, நாடகம் போடறீங்களாமே… அதுல, நடிக்கணும்ன்னு
விரும்பறேன்…’ என்றேன்.

‘இந்த உடம்பை வெச்சுக்கிட்டு நடிக்க வந்துட்டியா… இந்த காலத்துல,
யார் யாருக்கு, நடிக்க ஆசை வரணும்ன்னு விவஸ்தையே இல்லாம
போயிடுச்சுப்பா…’ என்றார், இடக்கான குரலில்.

அவர் சொன்னதற்காக, நான் கவலைப்படவில்லை.
‘சார்… எனக்கு நடிக்கணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கு… உங்க
நாடகத்துல ஏதாவது ஒரு சின்ன கதாபாத்திரம் கொடுத்தீங்கன்னா
போதும், சந்தோஷமா ஏத்துக்குவேன்…’ என்று, கெஞ்சிய குரலில்
கேட்டேன்.

‘நடிச்ச அனுபவம் ஏதாவது இருக்கா…’
‘இல்லை சார்… ஆனா, ஒரு சின்ன வாய்ப்பு கொடுத்தீங்கன்னா,
அதுல என் திறமையை காட்ட முடியும்ன்னு
தன்னம்பிக்கை இருக்கு…’ என்றேன்.

அடுத்த சில நிமிடங்களுக்கு, ஒன்றும் பேசாமல் ஏதோ
யோசனையில் இருந்தவர், ‘ம்… ஒரு சின்ன கதாபாத்திரம் இருக்கு…
வயித்து வலிக்காரனா நடிக்கணும்…’ என்றார்.
‘சரி, சார்!’ என்றேன்.

‘சின்ன கதாபாத்திரம் தானேன்னு நினைக்க கூடாது.
ஒத்திகைக்கெல்லாம் தவறாம வந்துடணும்…’ என்றார்.
‘ரொம்ப நன்றி!’ எனக்கூறிய எனக்கு, சந்தோஷமான சந்தோஷம்.

நாமும் மேடை ஏறப் போகிறோம் என்பதை, என்னால் நம்ப
முடியவில்லை.

மறுநாள்-
ஆபீஸ் முடிந்து, நாடக ஒத்திகை நடக்கும் இடத்திற்கு போனேன்.
‘இப்படி உட்கார்… உன், காட்சி வரும்போது சொல்றேன்…’ என்றார்,
இயக்குனர்.

ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டேன். அடுத்த, காட்சியில்
கூப்பிடுவாரோ என்று, ஒவ்வொரு காட்சியாக
எதிர்பார்த்து காத்திருக்க, நாடகம் முடியப் போகிற கட்டத்தில்,
‘ம்… வா!’ என்றார்.

‘காட்சியில், டாக்டரம்மா உட்கார்ந்திருப்பாங்க… அவங்க,
ஒரு வயித்து வலி நோயாளியை பார்த்துகிட்டு இருக்கும்போது,
கதாநாயகன் போய் அவங்களை பார்த்து பேசுகிறார் போல, காட்சி.
நீ தான் அந்த வயித்து வலி நோயாளி… உனக்கு பெரிசா
வசனமெல்லாம் கிடையாது…

‘டாக்டரம்மா, அடுத்த, நோயாளியை வரச்சொன்னதும்,
நீ போகணும்…

‘என்ன பிரச்னை…’ன்னு டாக்டர் கேட்க, ‘வயித்து வலி
தாங்க முடிலையே…’ன்னு சொல்லணும். அவங்க மருந்து எழுதி
கொடுத்ததும், அந்த சீட்டை வாங்கிட்டு வந்துடணும்.
இது தான் காட்சி. ஒழுங்கா நடிக்கணும்…’ என்று,
விளக்கினார், இயக்குனர்.

ஒன்றரை மாதம் ஒத்திகை முடிந்து, நாடக
அரங்கேற்றத்துக்கான தேதி குறிக்கப்பட்டது.

முதல் தடவையாக மேடை ஏறப்போகிறோம் என்ற சந்தோஷம்;
ஒழுங்காக நடிக்க வேண்டுமே என்ற பயம். இப்படி ஒரு
கலவையான உணர்வுடன், மேடையின் பக்கவாட்டில்,
நடிக்க வேண்டிய காட்சிக்காக காத்திருந்தேன்.

‘அடுத்த பேஷன்ட்…’ என்று டாக்டர் சொல்ல, காட்சி ஆரம்பித்தது.

‘சட்டென்று உள்ளே போ…’ என்று, என்னை லேசாக தள்ளினார்,
இயக்குனர்.

‘டாக்டர்…’ என்று வீறிட்டு அலறியபடி, மேடைக்குள் நுழைந்தேன்.
திடீரென்று இப்படி ஒரு வீறிடும் குரலை, எதிர்பார்க்காத
பார்வையாளர்கள், சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தனர். நிஜமாகவே
வயிற்று வலியால் துடிக்கிற நோயாளி போல, உடலை வளைத்து,
நெளித்து, கைகளால் வயிற்றை பிடித்தபடி, டாக்டருக்கு பக்கத்தில்
போடப்பட்டிருந்த இருக்கையில் உட்கார்ந்தேன்.

‘என்ன உடம்புக்கு…’ என்று டாக்டர் கேட்க, நான் அதை சட்டையே
பண்ணாமல், வயிற்றை பிடித்து, ‘அம்மா…’ என்று துடித்தேன். என்
கையில் ஒரு சீட்டு இருந்தது. அதை டாக்டரிடம் நீட்டினேன். அதை,
வாங்குவதற்கு தன் கையை எடுத்து வந்தபோது, சட்டென்று என்
கையை பின்னுக்கு இழுத்து, உடம்பை ஒரு குலுக்கு குலுக்கி, ‘ம்மா
ஆஆஆ…’ என்றேன்.

மறுபடி சீட்டை கொடுக்க கையை நீட்டினேன். டாக்டர்,
அதை வாங்க, கையை நீட்டியபோது, என் கையை பின்னால்
இழுத்து, ‘அம்ம்மா… அம்ம்மா…’ என்று கத்தினேன்.

ஒன்றரை நிமிடங்களுக்கு, வித விதமான ஏற்ற இறக்கங்களை
குரலில் காட்டி, ‘அம்மா…’ என்று அலறி, துடித்து, கதறினேன்.

‘யாரடா இவன்… திடீரென்று வந்து இப்படி அமர்க்களப்படுத்துகிறானே…’
என்று பார்வையாளர்களுக்கு எல்லாம் அதிர்ச்சி கலந்த அதிசயம்;
கைத்தட்டலில் அரங்கம் அதிர்ந்தது.

முதல் வரிசையில் அமர்ந்து நாடகம் பார்த்துக் கொண்டிருந்த,
செக்கச் சிவந்த மனிதர், கை தட்டி, என் நடிப்பை ரொம்பவும்
ரசித்ததையும் கவனித்தேன்.

‘அட… நம்மகிட்டேயும் விஷயம் இருக்கு போலிருக்கு… இத்தனை
ஜனங்களும் எப்படி கை தட்டி ரசிக்கிறாங்க…’ என்ற சந்தோஷம் ஒரு
பக்கம், ‘நான் சொன்னதை செய்யாம, நீ பாட்டுக்கு
அதிகப்பிரசங்கித்தனமா என்னென்னவோ பண்ணிட்டியே…’ என்று,
இயக்குனர் கோபித்து கொள்வாரோ என்ற பயம், இன்னொரு பக்கம்.

காட்சி முடித்து, விண்ணதிரும் கரகோஷங்களுக்கு இடையே
வந்தபோது, ‘அட… போனா போகுதுன்னு ஒரு சின்ன கதாபாத்திரம்
குடுத்தா, அதுல கூட என்னமா பிச்சு உதறிட்டே…’ என்று, என்னை
கட்டிப்பிடித்து பாராட்டினார், இயக்குனர்.

நாடகம் முடிந்தவுடன், முன் வரிசையில் அமர்ந்து நாடகம் பார்த்துக்
கொண்டிருந்த சிவந்த மனிதர், மேடைக்கு அழைத்து வரப்பட்டார்.
அவர் தான், நாடகத்துக்கு தலைமை விருந்தினர்.

அவர் யார் தெரியுமா….?

.
( அது தான் – எல்லாருக்குமே தெரியுமே…!!! )

——————————————————————
நன்றி – எஸ். சந்திரமவுலி – தினமலர்….
——————————————————————

.
————————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to நாகேஷ் – மறக்க முடியுமா….???

  1. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா …! நாகேஷ் … !! ” யாருக்காக அழுதான் ” என்கிற ஜெயகாந்தனின் கதைக்கு உயிர் கொடுத்த ஜோசப் கதாபாத்திரம் ஒன்று போதும் நாகேஷ் நகைச்சுவை நடிகரல்ல — அவர் ஒரு உன்னத கலைஞன் என்பதை பறைசாற்ற …!

    நாகேஷுக்கு முதல் படம் தாமரைக்குளம். படப்பிடிப்பில் அவர் சரியாக நடிக்கவில்லை என்று யூனிட்டை சார்ந்தவர்கள் கடிந்து கொள்ள மனதளவில் தளர்ந்து போயிருந்த நாகேஷிடம் … “”மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன், கவலப்படாம நடி” என்று எம்.ஆர். ராதா ஆறுதல் சொல்லி தேற்றியுள்ளார். எம்.ஆர். ராதாதான் நாகேஷையும் முதல் படத்திலேயே கலைஞனாக அங்கீகரித்துள்ளார். அந்த தீர்க்கதரிசனம் பொய்த்துப் போகவில்லை….!

    மனதை விட்டு நீங்க மறுக்கும் சர்வர் சுந்தரம் — தில்லானா மோகனாம்பாள் வைத்தி — திருவிளையாடல் தருமி — நீர்க்குமிழி சேது — எதிர் நீச்சல் மாது போன்ற பாத்திரங்கள் …

    ” ஆடி அடங்கும் வாழ்க்கையடா
    ஆறடி நிலமே சொந்தமடா ” …. ஆறடி நிலத்தை சொந்தமாக்கிக் கொண்டு போனவர்களில் எத்தனை பேரை நாம் நினைவு கூறுகிறோம் என்பதில் தான் இருக்கிறது அவர்களின் தரம் …!!!

  2. Ramnath's avatar Ramnath சொல்கிறார்:

    // ஆறடி நிலத்தை சொந்தமாக்கிக் கொண்டு போனவர்களில் எத்தனை பேரை நாம் நினைவு கூறுகிறோம் என்பதில் தான் இருக்கிறது அவர்களின் தரம் …!!! //

    mutrilum unmai.

  3. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா .. ! இன்றைய தலைப்பு // நாகேஷ் – மறக்க முடியுமா….??? // …. ஆறு வருடங்களுக்கு முன்னாள் இட்ட ஒரு இடுகையின் தலைப்பு // நாகேஷ் …மறக்க முடியாதவை..! //
    Posted on ஒக்ரோபர் 23, 2013 by vimarisanam – kavirimainthan .. இந்த பதிவில் ஒரு முக்கியமான விவரம் இருக்கிறது அது : —

    // அந்த ஆயிரம் ரூபாயை, என் வாழ்வில் மறக்கவே
    முடியாது. அந்தப் பணத்தில்,
    ஒரு பட்டுப்புடவை,
    ஒரு தாலி,
    பிரவுன் கலரில் ஒரு பேண்ட் வாங்கி –
    நான் காதலித்த ரெஜினாவை பதிவுத் திருமணம்
    செய்து கொண்டேன்.” // அந்த ஆயிரம் ரூபாய் பற்றி தெரிந்துகொள்ள https://vimarisanam.wordpress.com/2013/10/23/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88/ .. படிக்கவும் …!!!

  4. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    சில கலைஞர்களை (இது கருணாநிதி இல்லை) எந்த வித ‘சிலைகள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள், இறந்த நாள் அஞ்சலி’ என்று எதுவும் இல்லாமலே நாம் நினைவுகூறுகிறோம். எம்ஜியாரை, அவரது பிறந்தநாளன்றல்ல, என்றும் நினைவுகூறினாலும் ஆர்வத்துடன் படிக்க, சேர்ந்துகொள்ள மக்கள் இருக்கின்றனர்.

    இதுதான் அவர்கள் நிகழ்த்திய சாதனைகளின் விளைவு. ‘வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?” – எளிமையான சாதனைகளைப் புரிந்தவர்கள்தாம்.

    நாகேஷ், மனோரமா போன்றோர் அத்தகையோரில் அடங்குவர்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.