மூளை சிறப்பாக வேலை செய்ய – திரு.இறையன்பு தரும் டிப்ஸ்….!!!


திரு. இறையன்பு, ஐஏஎஸ் அவர்களைப்பற்றி விமரிசனம் தள வாசகர்களுக்கு நான் அறிமுகம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

“மூளைக்குள் சுற்றுலா” அவர் தற்போது கடைசியாக எழுதியுள்ள புத்தகத்தின் தலைப்பு. இது அவரது -100-வது புத்தகம்.. இதன் வெளியீட்டு விழா இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்தது. அதில் பேசும்போது, எந்த வயதிலும், மூளை சிறப்பாக செயல்பட வழியுண்டு… அதற்கு சில பழக்க வழக்கங்களை பின்பற்றினால் போதும் என்று கூறினார்…

இந்த புத்தகத்தை படிக்கும் வாய்ப்பு இன்னும் எனக்கு கிட்டவில்லை… ஆனாலும் அந்த புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் சில கருத்துகளைப் பற்றி கொஞ்சம் அறிந்துகொண்டேன்…. சுருக்கமாக, அவர் கூறுவதிலிருந்து சில உபயோகமான செய்திகள் –

– நாம் நினைப்பதுபோல், பொதுவாக மரபுக்கூறு ரீதியாக அறிவு வளர்வதில்லை. அது சூழலால் தீர்மானிக்கப்படுகிறது….

வயதாகும்போது மூளையின் திறன் குறைந்து விடுவதாகவும், மூளை தொடர்பான செயல்பாடுகளில் குறைவு ஏற்படுவதாகவும், சரிவு உண்டாவதாகவும் கருதப்பட்டு வந்தது. இதில் ஓரளவு உண்மை இருக்கிறது.

சின்ன வயதில் படிப்பது பசுமரத்தாணி போல் படிவதையும், புதிய மொழிகளை கற்பதற்கு சின்ன வயது ஏற்றதாக இருப்பதாகவும் நாம் உணர்வது உண்மை தான்.

ஆனால், இப்போது ஆய்வு முடிவுகள் வேறுபட்ட முடிவை முன்வைத்துள்ளன. வயது தொடர்பான மூளைச்சீரழிவை – இயக்க மாறுதல்கள் மூலம் சரிக்கட்ட இயலும்… நாம் வாழும் முறைகளின் மூலம் வயோதிகத்தின் பாதிப்பை குறைக்கலாமென்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

மூளை உச்சகட்ட பங்களிப்பை இருபது வயதில் அடைகிறது. அதற்குப்பிறகு அதன் பயன்பாடு அடிவாரத்தை நோக்கி நீளுகிறது என்பது பொதுவான கருத்து.

ஒருவர் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்குவதன் மூலம், எந்த வயதிலும் மூளையின் இயக்கத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியும்….

80 வயதுக்கு மேலும் கூட சிலர் மனரீதியாக கூர்மையாக இயங்குவதை பார்க்கலாம்.

வயதாகும்போது நியூரோ ட்ரான்ஸ்மீட்டர் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. டோபமைன் சுரப்பதும், டோபமைன் சுரப்பிகளின் எண்ணிக்கையும் குறைகிறது. அதனால் கவனம், ஞாபகம், உடல் அசைவு ஆகியவை பாதிக்கப்படுகின்றன. இதுவே அல்ஜைமர் போன்ற பிரச்சினைகள் தோன்றக் காரணம்.

ஆனால், இதிலும் கூட – இசை, சொற்பொழிவு, எழுதுதல் (… 🙂 🙂 ), பிரச்சாரம் போன்ற ஏதேனும் ஒன்றில் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்கள் சுறுசுறுப்பாக இயங்குவர்.

பொதுவாக வாழ்க்கை முறைகள் வயோதிகத்தை வழி நடத்துகின்றன….

நிறைய படிப்பு, முறையான உடற்பயிற்சி,
ஆரோக்கியமான உணவு, நல்ல தூக்கம்,
சமூக உறவாடுதல், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுதல்,
மாலையில் நண்பர்களோடு கொஞ்ச நேரம் கூடி இருத்தல்,
மனதுக்குப் பிடித்த நல்ல இசையை கேட்டல் – போன்றவற்றின் மூலம் வயோதிகத்தின் பாதிப்பை குறைக்கலாம்.

.
——————————————————————————————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.