…
…

…
முந்தாநாள் காலை – பாஜகவில் – ஜெட்லிஜி முதல் ர.ச.பிரசாத் முதல், நி.சீ. வரை அத்தனை பேரும் துள்ளிக் குதித்தனர்… ராகுல் காந்தி பாராளுமன்றத்திற்கு வந்து
பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்று ஹை-டெசிமலில் கூவினர்.
ரஃபேல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில், மத்திய பாஜக அரசு செய்ததில் எந்த தவறும் இல்லையென்று சொல்லி விட்ட சந்தோஷத்தின் எதிரொலி அது –
ராகுல் காந்தி என்ன சொல்லப்போகிறார் என்று எல்லாரும் காத்திருந்தபோது, மாலையில் ராகுல் காந்தி எதிர்பாராமல் ஒரு குண்டைத் தூக்கி மீண்டும் பாஜகவின்
மீதே எறிந்தார்…..
பாஜக சற்றும் எதிர்பார்க்காத அதிதீவிரமான தாக்குதல் அது…. மறுப்பே தெரிவிக்க வழியில்லாத நிலை –
சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பிற்கான காரணங்களை விளக்குகையில், மத்திய அரசு ரஃபேல் முடிவுகள் சம்பந்தமான அனைத்து விவரங்களையும்
CAG- (உச்ச தணிக்கை அதிகாரி) -யிடம் பகிர்ந்து கொண்டு விட்டதாகவும், CAG -யும் தனது தணிக்கை ரிப்போர்ட்டை பாராளுமன்றத்தில் பொது கணக்கு குழு
(Public Accounts Committee) -விடம் தந்து விட்டதாகவும் தெரிவித்திருக்கிறது….
ராகுல் காந்தி சீறினார் – PAC தலைவர் மல்லிகார்ஜுன கார்கே என் பக்கத்தில் தான் உட்கார்ந்திருக்கிறார். அவர் எந்த ரிப்போர்ட்டையும் இன்னும் பார்க்கவில்லை என்று
சொல்கிறார்… CAG எப்போது, யாரிடம் தனது அறிக்கையை கொடுத்தது…ஒருவேளை மோடிஜி தனது அலுவலகத்திலேயே ஒரு CAG பிரிவையும் ஏற்படுத்தி
இருக்கிறாரா …? என்று கேட்டார்.
தீர்ப்பின் இது குறித்த பகுதி கீழே –
..

..
‘சீல்’ வைத்த கவரில் தானே கொடுக்கிறோம்… என்ன கொடுத்தோம், எதைக் கொடுத்தோம் என்கிற விவரங்களை சுப்ரீம் கோர்ட் வெளியே தெரிவிக்காது என்கிற நிலையில்
வார்த்தை விளையாட்டு விளையாடி, பல பொய்களைத் தந்த அரசு – அதிர்ந்து போயிருக்கிறது….
உடனே, சுப்ரீம் கோர்ட், தாங்கள் தந்த விவரங்களை தவறாக புரிந்து கொண்டிருக்கிறது… எதிர்காலத்தில் “செய்யப்படும்” என்கிற அர்த்தத்தில் சொன்னவற்றை – இறந்த காலத்தில்
“செய்து விட்டதாக” புரிந்து கொண்டிருக்கிறது….என்று தவற்றிற்கான காரணத்தை சுப்ரீம் கோர்ட்டின் மீதே போட்டு தப்பித்துக் கொள்ளப்பார்க்கிறது….
தீர்ப்பில் உரியமுறையில் திருத்தங்களை வெளியிடுமாறு சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அஃபிடவிட்டையும் உடனடியாக சமர்ப்பித்திருக்கிறது.
இதைவிட பாஜக அரசு வேறொரு காரியம் செய்திருக்கலாம்….
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் சம்பந்தப்பட்ட வார்த்தைகளான –
“The pricing details have, however, been shared with the Comptroller and Auditor General and the report of the CAG has been examined by the Public Accounts Committee. Only a
redacted portion of the report was placed before the Parliament, and is in public domain.”
என்பதை மட்டும் நீக்கி விட்டால் போதும் என்று சுப்ரீம் கோர்ட் முன் கோரிக்கை வைக்கலாம்…( தீர்ப்பு மாறாமல் அப்படியே இருக்குமே…..!!! )
சுப்ரீம் கோர்ட்டுக்கு ” ஆங்கில இலக்கணம் ” தெரியவில்லை என்பதை நீதிபதிகள் ஏற்றுக் கொள்வார்களா – என்பதை தெரிந்து கொள்ள நாம் இன்னும் பொறுமையாக
காத்திருக்க வேண்டும்…!!!
——————————————————————————————–
இந்த தீர்ப்பையொட்டி, ஆங்கில வலைத்தளமான the wire ஒரு நல்ல ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டிருந்தது…. அதனை திரு.ச.வீரமணி தமிழில்
மொழி பெயர்க்க, தீக்கதிர் தனது தளத்தில் வெளியிட்டிருக்கிறது….
நண்பர்கள் காண, அதனை கீழே பதிப்பித்திருக்கிறேன்..(நன்றி – ச.வீரமணி /தீக்கதிர்…)
——————-
ரபேல் ஒப்பந்தம் : உச்சநீதிமன்றத் தீர்ப்பில் பதில் சொல்லப்படாத பல கேள்விகள் ரபேல் ஒப்பந்தம் : உச்சநீதிமன்றத் தீர்ப்பில் பதில் சொல்லப்படாத பல கேள்விகள்
(ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள போதிலும், நரேந்திர மோடி அரசாங்கம் 36 ரபேர்
விமானங்களை பிரான்சிடமிருந்து வாங்குவது தொடர்பாக மேற்கொண்ட முடிவை அவ்வளவு எளிதாக ஒதுக்கித்தள்ளிவிட முடியாது. இது தொடர்பாக தில்லியிலிருந்து
வெளிவரும் தி ஒயர் இணைய இதழ் பல கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் பதிலளிக்கவில்லை என்று கூறியிருக்கிறது. அவற்றில் ஒரு சில வருமாறு:)
(1) ரபேல் விமானங்களின் அதிகபட்ச விலை தொடர்பாக உள்ள கருத்துமாறுபாட்டை உதாசீனம் செய்தது, ஏன்?
மத்திய அரசு வாங்க முடிவு செய்த ரபேல் விமானங்களின் உச்சபட்ச விலை (benchmark price) கடைசி நிமிடத்தில் மாற்றப்பட்டது. இப்பிரச்சனை மீது கடந்த
சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. குறிப்பாக, பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் எழுப்பிய ஆட்சேபனைகள் ஒதுக்கித்
தள்ளப்பட்டிருக்கிறது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி, சுதான்சு மோஹண்டி இவ்வாறு உச்சபட்ச விலையில் மாற்றம் செய்திருப்பது, “விசித்திரமானது மட்டுமல்ல
அரைக்கிறுக்குத்தனமானதுமாகும்” (“strange, even queer”) என்று, எகனாமிக் டைம்ஸ் நாளிதழில் வெளியிட்டிருந்த விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், “பொதுவெளியில் கிடைத்திடும் தகவல்களின்படி, பாதுகாப்பு அமைச்சரின் தலைமையின்கீழ் இயங்கும் பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சிலோ (Defence
Acquisition Council) இதனைப் பரிந்துரைத்திடவில்லை. மாறாக, பாதுகாப்புக்கான கேபினட் குழுவிற்கு (Cabinet Committee on Security) அது அனுப்பப்பட்டது.
இது ஏன்? இதனை ஆய்வு செய்திட வேண்டும். இது விசித்திரமானது மட்டுமல்ல அரைக்கிறுக்குத்தனமானதுமாகும்,” என்று மோஹண்டி கூறியதாக அதில் கண்டிருக்கிறது.
இந்தப்பிரச்சனையை உச்சநீதிமன்றம் ஏன் ஆய்வு செய்திடவில்லை? இந்தப் பிரச்சனையை உச்சநீதிமன்றம் முழுமையாக உதாசீனம் செய்தது, புரியாத புதிராக இருக்கிறது.
(2) 126 விமானங்களுக்காகச் செய்யப்பட்டிருந்த ஒப்பந்தம் 36ஆக மாறியது எப்படி?
“126 விமானங்களுக்குப் பதிலாக 36 விமானங்கள் வாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட முடிவின் மீது நாங்கள் தலையிட முடியாது” என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.
இதன்மூலம் உண்மையான பிரச்சனையிலிருந்து தன்னை அது விலக்கிக்கொண்டிருக்கிறது. ஐமுகூ ஆட்சிக்காலத்தில் 126 விமானங்கள் வாங்குவதற்காக செய்துகொள்ளப்பட்ட
ஒப்பந்தத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு, அதற்குப் பதிலாக, புதிதாக 36 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் எவ்விதமான நடைமுறையையும் பின்பற்றாமல்
மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
ஐமுகூ அரசின் சார்பில் 2015 மார்ச்சில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை விலக்கிக் கொள்வதற்கு எந்தவிதமான நடைமுறை பின்பற்றப்பட்டது? 2015 மார்ச் 28 அன்றே 126
விமானங்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் 95 சதவீதம் முழுமையடைந்துவிட்டது என்று பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்தின் தலைவரான (CEO) எரிக் டிராப்பியர்
கூறியிருக்கையில், ஏன் அது விலக்கிக் கொள்ளப்பட்டது? இரு நாட்டின் அரசாங்கங்களுக்கும் இடையிலான ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பு என்னவிதமான
நடைமுறை பின்பற்றப்பட்டது? யாரைக் கலந்தாலோசித்தீர்கள்? இவை தொடர்பாக எவ்விதமான விளக்கத்தையும் இந்த அரசாங்கத்தால் ஏன் அளிக்கப்படவில்லை?
இக்கேள்விகளுக்கான பதில்களை அரசிடமிருந்து பெறுவதற்குக்கூட உச்சநீதிமன்றம் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. இவற்றின் மூலம் இந்த வழக்கில் விமானங்களை
கொள்முதல் செய்வது தொடர்பான நடைமுறையில் எவ்விதமான சந்தேகமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் மதிப்பீடு செய்திருப்பதில் குறிப்பிடத்தக்கவிதத்தில் ஓட்டை
இருப்பதாகவே தோன்றுகிறது.
உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரும் மனித உரிமைகளுக்கான ஆர்வலருமான பிரசாந்த் பூஷணும், மத்திய முன்னாள் அமைச்சர்களான அருண் ஷௌரி மற்றும் யஷ்வந்த் சின்கா
ஆகியோர் மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தின்முன் தாக்கல் செய்திருந்த முறையீட்டில் சட்டப்படி சொல்வதென்றால் 36 ரபேல் விமானங்களுக்கான ஒப்பந்தம், ஒரு
புதிய ஒப்பந்தமாகும் (a new contract) என்றும், எனவே புதிய ஒப்பந்தம் மேற்கொள்வதற்காகக் கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள்
(mandatory procedures) அனைத்தையும் பின்பற்றிட வேண்டும் என்றும், ஆனால் பல நடைமுறைகளை இந்த ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்படாது தவிர்த்து இருக்கிறார்கள்
என்றும் சுட்டிக்காட்டி இருந்தார்கள்.
இவற்றையெல்லாம் உச்சநீதிமன்றம் ஏன் கண்டுகொள்ளவில்லை?
(3) இறையாண்மை உத்தரவாதம் (sovereign guarantee) ஏன் உதாசீனப்படுத்தப்பட்டிருக்கிறது?
பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தும்போது சட்டப்படி, ஓர் இறையாண்மை உத்தரவாதம் மேற்கொள்ளப்பட வேண்டும். இது தொடர்பாக நீதிமன்றத்தின் முன் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆயினும் இது தொடர்பாக இருதரப்பையும் அலசி ஆராய்ந்து தங்கள் முடிவு என்ன என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திட வில்லை.
இந்த ஒப்பந்தத்தில் இரு அரசுகளுக்கும் இடையே ‘சௌகரிய கடிதம்’ (‘letter of comfort’)தான் பரிமாறிக்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் இதன் அடிப்படையில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழுமாயின் தார்மீக ரீதியாக பொறுப்பு எடுத்துக்கொள்ளலாமேயொழிய, இதன் அடிப்படையில் சட்டப்படி எவ்விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் அதிகாரி சுதான்சு மோஹண்டி விமர்சனம் செய்திருக்கிறார். இது தொடர்பாகவும் உச்சநீதிமன்றம் எந்த முடிவையும் எடுத்திடவில்லை.
(4) விலை குறித்து விவாதிக்கவேண்டிய அவசியம் இல்லை எனில், அதிகாரபூர்வ நிலைப்பாடு என்னவென்று ஏன் கேட்டீர்கள்?
இம்மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்போது உச்சநீதிமன்றம், “விலை சம்பந்தமான பிரச்சனைக்குள்ளோ” அல்லது “விமானத்தின் தொழில்நுட்பரீதியிலான
சங்கதிகளுக்குள்ளோ” போகப்போவதில்லை என்று தெளிவுபடுத்தியிருக்கிறது. எனினும் இவ்வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்த சமயத்தில் அது, மோடி அரசாங்கத்திடம்
“விமானங்களின் விலை மற்றும் அனுகூலங்கள் தொடர்பான விவரங்களை” ஒரு முத்திரையிட்ட உறையில் அளித்திடமாறு கட்டளையிட்டிருந்தது. அவ்வாறு
கட்டளையிட்ட உச்சநீதிமன்றம் இப்போது விலைகள் குறித்து ஒப்பீடு செய்வது உச்சநீதிமன்றத்தின் வேலையில்லை என்று சொல்வது, ஏன்?
(5) இந்த ஒப்பந்தம் தொடர்பாக இந்துஸ்தான் ஏரோநாட்டிகல்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) நிறுவனத்தின் கருத்துக்கள் ஏன் உதாசீனம் செய்யப்பட்டன?
126 ஜெட் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, 36 விமானங்களை மட்டுமே வாங்குவதற்காக ஒப்பந்தம் போடப்பட்டதற்கு பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல்ஸ் லிமிடெட் நிறுவனம் ஒரு தடைக்கல்லாக இருந்ததால் அதனை மாற்ற வேண்டியிருந்தது என்று மோடி அரசாங்கம் கூறியிருக்கிறது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில், “முந்தைய ஒப்பந்தம் நடைமுறையில் முடிவுக்கு வந்து விட்டது” என்று குறிப்பிட்டிருக்கிறது.
முதலாவதாக, டசால்ட் நிறுவனம், எச்ஏஎல் நிறுவனத்துடனான பிரச்சனைகள் மிகப்பெருமளவில் தீர்க்கப்பட்டுவிட்டன என்று கூறியிருக்கிறது. இரண்டாவதாக 2018
செப்டம்பரில் எச்ஏஎல் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான டி. சுவர்ண ராஜூ, எச்ஏஎல் நிறுவனத்திற்கும் டசால்ட் நிறுவனத்திற்கும் இடையே வேலை பிரிவினை சம்பந்தமான
ஒப்பந்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
“டசால்ட் நிறுவனத்திற்கும் எச்ஏஎல் நிறுவனத்திற்கும் இடையே பரஸ்பரம் வேலை பிரிவினை ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது, அது அரசாங்கத்திற்கும் கொடுக்கப்பட்டுவிட்டது. அவற்றை வெளியிட வேண்டும் என்று அரசாங்கத்தை ஏன் நீங்கள் கேட்கவில்லை? அந்தக் கோப்புகள் அனைத்தையும் பரிசீலித்தீர்களானால் என்ன நடந்திருக்கிறது என்று அவை உங்களுக்குக் கூறும்.
விமானங்களை நான் உருவாக்குகிறேன் என்கிறபோது அவற்றுக்கான உத்தரவாதத்தையும் நான் கொடுப்பேன்,” என்று ராஜூ இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்துள்ள
நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். இந்த அறிக்கைகள், உச்சநீதிமன்றத்தின். “முந்தைய ஒப்பந்தம் நடைமுறையில் முடிவுக்கு வந்து விட்டது” என்கிற தீர்ப்புக்கு முற்றிலுமாக
முரண்படுகின்றன.
இதேபோன்று எண்ணற்ற கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் பதில் அளித்திடவில்லை.
——————————————————————————————————————————————-



சுப்ரீம் கோர்ட் – இவர்களை கண்டிக்கும் அளவிற்கு இருக்கிறதா ?
அல்லது தண்டிக்கும் அளவிற்கும் இருக்கீறதா ?
ஏன்…ஏன்…ஏன்…?
எனக்கு என்னவோ நீதிபதி லோயா அவர்கள் தான் நினைவுக்கு வந்து தொலைக்கிறார்.
இறைவன் தான் திரைமறைவுகளை நன்கு அறிந்தவன். அவனுக்கே வெளிச்சம்.
ஐயா,
அடுத்து என்ன நடக்கும்…?
உச்ச நீதிமன்றம் தீர்ப்பை திருத்தம் செய்யுமா…?
அல்லது தவறான தகவல் தந்ததை கண்டித்து தீர்ப்பையே மறுபரிசீலனை செய்யுமா…?
Well deserved article
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால்,
இடுகைத் தலைப்பு வேறு ஒரு வித அர்த்தத்தை கூட தருகிறது.
அதுவும் பொருத்தமாக கூட இருக்கிறது.