துக்ளக் ஆசிரியர் சோ’வின் சில கருத்துகள் – துவக்கமும் – முடிவும் – தொடர்பு உடையனவா….?


..

..

ஆசிரியர் சோ அவர்கள் ஒரு சமயம் விதியைப்பற்றி கூறிய
சில கருத்துகளையொட்டி அமைகிறது இந்த இடுகை…

விதியைப்பற்றியும், அதன் வலிமையைப்பற்றியும் – பல சமயங்களில்,
பலராலும், பல விதங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது…

“அவரை விதைத்தால் துவரையா முளைக்கும்..?”
என்று கேட்டால் அதில் உள்ள நியாயம் எல்லாருக்கும் புரிகிறது…..

ஆனால் நாம் செய்யும் செயலுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாமல்
அதன் விளைவுகள் இருந்தால், அதை எப்படியென்று நியாயப்படுத்துவது…?

அது தான் விதியா…?

ஒரு சமயம் ஆசிரியர் சோ – விதியின் வலிமையைப்பற்றி சொல்ல
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை உதாரணம் காட்டினார்.
அதை நான் – என் வழியில் மேலெடுத்துச் செல்கிறேன்…

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு இருக்கிறது..
அந்த விளைவுகள் சங்கிலித்தொடர் போல் நீண்டுகொண்டே போகின்றன.
அவை முடிகின்ற இடத்தில் வைத்துப் பார்க்கும்போது – துவக்கத்திற்கும்,
முடிவிற்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பதை காண்கிறோம்.

இதைக் கொஞ்சம் தொடர்ந்து போய் பார்க்கலாமா…?

அரசியலில் சற்றும் விருப்பமோ, ஈடுபாடோ இல்லாமல் –
அரசியலுக்கு தொடர்பே இல்லாத –
ஏர்-இந்தியா விமான பைலட்’டாக லண்டனை இருப்பிடமாக
கொண்டு பணியாற்றி வந்த ராஜீவ் காந்தியை –

சகோதரர் சஞ்சய் காந்தியின் அகால மரணம் –
அன்னைக்கு உதவி செய்ய, டெல்லிக்கு – அரசியலுக்கு வரவழைத்தது….
எதிர்பாராமல் நிகழ்ந்த அன்னையின் திடீர் மறைவு –
அவரை அத்தனை இளம்வயதில் – பிரதமர் பதவியில் அமர்த்தியது ….

..

..

பல சீனியர் காங்கிரஸ்காரர்கள் காத்துக் கொண்டிருந்தனர்..
பிரனாப் முகர்ஜி துடித்துக் கொண்டிருந்தார்…
நிச்சயம் தனக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்குமென்று நம்பினார்.

ஆனால், அத்தனையையும் மீறி – விதி ராஜீவ் காந்தியை
அரசியலில் நுழைத்து – பிரதமர் பதவி வரை கொண்டு சென்றது…!

பிறகு, ராஜீவ் அமைச்சரவையில், அவராலேயே பாதுகாப்பு
அமைச்சராக நியமிக்கப்பட்ட, அவரது நம்பிக்கைக்குரிய வி.பி.சிங் –

ராஜீவ் காந்தியின் பெயர் போஃபர்ஸ் ஊழலில் நாசமாக
முக்கிய காரணம் ஆனார்.

அதன் விளைவு – அடுத்த தேர்தலில் படுதோல்வியை
சந்தித்து பிரதமர் பதவியை இழந்து, அவமானத்தை சந்திக்க நேர்ந்தது.

வி.பி.சிங்கின் குறுகிய கால ஆட்சிக்குப் பின் –
சந்திரசேகர் மைனாரிடி அரசின் பிரதமராக பொறுப்பேற்க,
மீண்டும் ராஜீவ் காந்திக்கு முக்கியத்துவம் ஏற்பட்டு,
காங்கிரஸ் அவருக்கு வெளியிலிருந்து ஆதரவு தந்தது.

அப்போது, டெல்லிக்கு பக்கத்திலிருந்த ஹரியானா மாநிலத்தின்
முதலமைச்சராக இருந்த சௌதாலா, ராஜீவ் காந்தியின் செயல்பாடுகளை
உளவு பார்க்க, ஹரியானா போலீஸ்காரர்களை அனுப்பி வைத்தார்
என்று ஒரு புகார் கிளம்பியது…

ஆனால் பிரதமராக இருந்த சந்திரசேகர் இதை சீரியசாக
எடுத்துக்கொள்ளவில்லை என்று ராஜீவ் காந்தி கோபம் அடைந்து,
சந்திரசேகர் அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை திரும்ப பெற்றார்.

நியாயமே இல்லாமல் – தகுந்த காரணங்களே இல்லாமல் –
சந்திரசேகர் அரசு கவிழ்ந்தது.

மீண்டும் ராஜீவ் காந்திக்கு செல்வாக்கு ஏற்பட்டது.
நடந்த தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் பிரதமர் ஆகக்கூடிய
வாய்ப்பும் உருவாகியது…

இதைப்பற்றிய எதிர்பார்ப்பே – அவருக்கு எமனாக அமைந்தது.
அவர் மீண்டும் பிரதமர் ஆவதை சில சக்திகள் விரும்பாத காரணத்தால் –
அவர் கோர மரணத்தை சந்திக்க நேரிட்டது…

எங்கே, எப்படி இருந்த ராஜீவ் காந்தி – எத்தகைய
திருப்பங்களையெல்லாம் சந்தித்து, இறுதியில் எந்த முடிவை அடைந்தார்…? இதில் அவரது பங்கு என்ன…? விதியின் பங்கு என்ன…?

இதோடு விட்டதா கதை…?

ராஜீவ் மரணத்தையொட்டி, பிரதமர் பதவிக்கு போட்டி உருவாகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு பாராளுமன்றத்தில் தனி மெஜாரிடி இல்லை.
அதை சமாளித்து ஆட்சியை நடத்த வேண்டும்…
அதற்கு பொருத்தமான நபரை தேடுகிறார்கள்… தேடுகிறார்கள்…

இறுதியில் கிடைக்கிறார் நரசிம்ம ராவ்.
எனக்கு தேர்தல் வேண்டாம். பதவிகள் வேண்டாம் … என்று
கிட்டத்தட்ட அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த நரசிம்ம ராவை
பிரதமர் பதவியில் இழுத்து வந்து அமர வைத்தது….
இந்தி பேசாத ராஜ்ஜியத்திலிருந்து முதல் தடவையாக
ஒருவர் பிரதமர் பதவியில் அமர்கிறார்….!!!

ஒரு மைனாரிடி அரசின் பிரதமராக இருந்துகொண்டே –
பல புரட்சிகளை செய்ய வைத்தது…

அரசியலுக்கு சம்பந்தமே இல்லாத பொருளாதார நிபுணர்
மன்மோகன் சிங்’கை – மிக முக்கியமான நிதியமைச்சர் பதவியில்
அமர்த்தைக்கூடிய துணிச்சலை தந்தது.

அவரது துணையோடு –
இந்தியாவை அதுவரை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த
“லைசென்ஸ் ராஜ்” -ஐ அடித்து நொறுக்கி, சுதந்திர பொருளாதார
சித்தாந்தத்தை உருவாக்க முடிந்தது…

இந்த தொடர் நிகழ்வுகள் எங்கெல்லாம் செல்கின்றன – பாருங்கள்…!!!
இத்தோடு விட்டதா…?

அரசியலே தெரியாத திரு.மன்மோகன் சிங்கை அடுத்த பத்து
ஆண்டுகளுக்கு இந்தியாவின் பிரதமர் பதவியில் உட்கார வைத்து
அழகு பார்த்த அதிசயமும் நடந்தது…..

எங்கே துவங்கிய ஆட்டம் எதுவரை போயிருக்கிறது பாருங்கள்…
இந்த தொடர் நிகழ்வுகளில் எதை, யார்,
விரும்பி – திட்டமிட்டபடி நடந்தது…?

இந்த ஆட்டத்தை இன்னும் கூட தொடரலாம்…
இன்னமும் கூட பல சுவாரஸ்யமான தொடர்ச்சிகள் இருக்கின்றன.
ஆனால் இப்போது வேண்டாம்… இடுகை நீண்டு விட்டது…

தேவைப்படும்போது மீண்டும் தொடரலாம்.

.
—————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to துக்ளக் ஆசிரியர் சோ’வின் சில கருத்துகள் – துவக்கமும் – முடிவும் – தொடர்பு உடையனவா….?

  1. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதார்….!?

    ஆட்டுவிப்பது….?

    அந்த ஒரே இறைவன். அந்த இறையின் எழுத்தே ‘விதி’.

    அதை மீற எவரும் இலர்.

  2. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா …! // நமக்கு புரியாத, நாம் அறியாத சக்தி இருக்கிறதா….??? துக்ளக் “சோ” அவர்களின் ஒரு அனுபவம்…!!! // https://vimarisanam.wordpress.com/2018/01/05/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF…. இது முன்பு வந்த இடுகை … இதில் :—
    // “சோ” அவர்கள் சொன்ன இன்னொரு சம்பவம் கூட நினைவிற்கு
    வருகிறது… காஞ்சி பெரியவர் சம்பந்தப்பட்டது…// .. இந்த பதிவில் ….கடைசியாக ….

    // நமக்குத் தெரியாத பல விஷயங்கள் இருக்கின்றன. அதனை ‘இறையருள்’ அல்லது நமக்கும் மீறிய சக்தி என்றுதான் கொள்ளவேண்டும். // …… என்ற வரிகள் பலவற்றை உணர்த்தும் என்பது நிச்சயம் — அதே போல கீழே உள்ள செய்தியில் தற்போதைய தி.மு.க .வின் செயல்கள் எங்கே இருந்து ஆரம்பித்து இப்போது எங்கே சென்றுகொண்டு இருக்கிறது என்பதையும் உற்று நோக்க வேண்டியதும் முக்கியமானது தானே …?

    // ஓஎம்ஜி – சபரீசன் – ஐடி விங்: திமுகவில் ஒரு நவீன முக்கோணம்! // https://www.minnambalam.com/k/2018/12/14/22 //
    திமுகவின் முதன்மைப் பெண்மணி ’ஃபர்ஸ்ட் லேடி’ என்று இப்போது அழைக்கப்படத்
    தொடங்கியிருக்கும் துர்கா ஸ்டாலின்.திமுகவின் கிச்சன் கேபினட் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டச் செயலாளர்களைத் தாண்டி தனது முடிவுகளைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.// ரீசன் இல்லாமல் எதையும் செய்ய மாட்டாரே சபரீசன்! என்று முத்தாய்ப்பாக கூறியுள்ளது வியப்பா – இல்லை தி.மு.க என்றாலே இப்படித்தானோ …. ?

    • Mani's avatar Mani சொல்கிறார்:

      ஸ்டாலின், தான் ஏற்கெனவெ மஹாராஜா (அதான் சி.எம்.) ஆகி விட்டதாகவே நினைத்துக் கொள்கிறார். அவரது நடையுடை பாவனைகள் எல்லாம் மாறி விட்டன. கால்கள் தரையிலேயே இல்லை.
      பிறகென்ன சபரீசன் தான் துணைமுதலமைச்சர். இந்த வாய்ப்பு மகனுக்கு
      சென்றிருக்க வேண்டியது. அவர் சதா சினிமா நடிகைகளுடன் சுற்றிக்கொண்டிருப்பது சபரீசனுக்கு அதிருஷ்டமாகி விட்டது.

  3. Mani's avatar Mani சொல்கிறார்:

    இன்னும் ஆட்சிக்கு வேறு வந்து விட்டால்
    இவர்கள் எப்படி எல்லாம் இருப்பார்களோ ? எடப்பாடி அய்யா மற்ற விஷயங்கள் எப்படி இருந்தாலும், குறைந்த பட்சம் ‘பந்தா’ எதுவுமே பண்ணிக்கொள்வதில்லை
    என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.