…
மறைமுகமாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், நேரடியாக பாஜகவும்,
ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபின் மேற்கொள்ளப்பட்ட வெளிப்படையான
பிரச்சாரங்களால், காந்திஜி கொல்லப்பட்டது கூட நியாயம் தானென்று
நம்பும் அளவிற்கு சிலரிடையே மனமாற்றம் ஏற்பட்டிருக்கிறது….
…

தன் வாழ்நாள் முழுவதும், சகிப்புத்தன்மையையும், அஹிம்சையையும், சமூக ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும், தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்ட – தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நலத்தையும், முன்னேற்றத்தையும், இந்த நாடு தனது பல நூற்றாண்டுகளுக்கான அடிமைத்தனதிலிருந்து விடுதலை பெறவும் – போராடிய ஒரு மனிதருக்கு, மதவெறியாளர் ஒருவர் கொடுத்த பரிசு “மரணம்”
…
ஒருவர், புகழ்பெற்ற எழுத்தாளர் திரு.ஜெயமோகனுக்கு
ஒரு வெளிப்படையான கடிதம் எழுதுகிறார் –
அதில் அவர் கூறுவது –
சமீபத்தில் கோட்ஸேயை ஆதரித்தும்
காந்தியை அவர் கொன்றது நியாயம்தான் என்றும்
எழுதப்பட்ட பல கட்டுரைகளை வாசித்தேன்.
இந்தியாவில் கோட்ஸேக்கு நினைவிடம் ஏற்படுத்தவேண்டும்,
அரசு அமைப்புக்களுக்கு அவருடைய பெயரைப் போடவேண்டும்
என்றும் கூட சிலர் வாதிட்டனர். அவர்களுக்கு ஏராளமான ஆதரவு
இருந்தது.
நான் அவற்றைப் படித்துக்கொண்டிருந்தேன்.
நான் பிராமணன். ஆசாரமான குடும்பத்தைச் சேர்ந்தவன்.
ஆகவே ஆரம்பத்தில் எனக்கு அந்த வன்முறை
ஒவ்வாமையை( ஏற்க முடியாமை) உருவாக்கியது.
ஆனால் தொடர்ந்து வாசிக்க வாசிக்க என் மனம் மாறத்தொடங்கியது.
நான் ஏற்கெனவே கொஞ்சம் பாரதிய ஜனதா ஆதரவு மனநிலை
கொண்டவன். அத்துடன் அதை எழுதியிருந்த பலரும் ஆழமான
மதக்கல்வி கொண்டவர்கள்.
அவர்கள் எழுதிய வேறு விஷயங்களைப் படிக்க படிக்க –
அவர்கள் மேல் மதிப்பு வந்தது. ஆகவே அந்தக்கருத்துக்களை
நானும் உள்வாங்கத்தொடங்கினேன்.
என் மனைவியிடம் நான் அதிகம் இதையெல்லாம் பேசுவதில்லை.
அப்பாவிடமும் பேச்சு குறைவு.
அம்மாவிடம் ஒரு தடவை, சாதாரணமாகப் பேசும்போது
கோட்ஸே பற்றிச் சொன்னேன்…..
(ஆனால் அவர் ) அழ ஆரம்பித்துவிட்டார்கள்.
என்னால் (அவரை) சமாதானமே செய்ய முடியவில்லை.
என் பேச்சை காதுகொடுத்துக் கேட்கவே மறுத்துவிட்டார்கள்.
(அந்த அளவிற்கு மகனது பேச்சு அவரை பாதித்திருக்கிறது…)
என் மனம் கலங்கிவிட்டது.
…

” இது தான் மதவெறியர்கள் – இந்த நாட்டிற்கு அளித்த பரிசு ” -இந்த படுகொலையைச் செய்தவர்களை, அதற்கு காரணமாக இருந்தவர்களை – அவர்களை ஆதரிப்பவர்களை – -நாம் பின்பற்றலாமா…? நமது மனசாட்சி, இதை ஏற்கிறதா…? ஏற்றுக்கொண்டால் – நம் வருங்கால சந்ததி – நம்மை மன்னிக்குமா..? மரியாதையுடன் பார்க்குமா..?
…
——————————————
அவர் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில்,
உங்களிடம் இதுபற்றி கேட்கவேண்டும் என்று தோன்றியது. இதில் உள்ள
உண்மை (நிலை தான் ) என்ன? – என்று கேட்கிறார்….
படித்த, நடுத்தர வர்க்கத்து பிராம்மணர்கள் பலர் –
பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் அண்மைக்கால பிரச்சாரங்களின்
ஆதிக்கத்தாலும், தாக்கத்தாலும் “இவர்கள் சொல்வதும் சரிதானோ”
என்று நினைத்து இந்த வழியில் பயணிக்கத் துவங்கியிருப்பதை நான்
கூட கவனித்திருக்கிறேன்..
கடந்த காலங்களில், சிலதடவை இதைப்பற்றி வெளிப்படையாக
நான் எழுத நினைத்தேன்… ஆனால்எழுதவில்லை…
காரணம்…சில விஷயங்களை பட்டென்று போட்டு உடைத்தால் – காரியம்
கெட்டு விடுகிறது. சம்பந்தப்பட்டவர்களின் ‘ஈகோ’ பாதிக்கப்பட்டு,
நாம் விரும்பும் பலன்களுக்கு – நேரெதிரான விளைவுகளே
ஏற்படுகின்றன …
நான் பாஜகவை பட்டவர்த்தனமாக, கடுமையாக விமரிசனம் செய்ததன்
விளைவை, ஏற்கெனவே கண்கூடாக பார்த்து வருகிறேன்….
‘விமரிசனம்’ வலைத்தளத்தின் மூலம் எனக்கு அறிமுகமாகி, என்னிடம்
மனம்விட்டு நன்கு பழகிக்கொண்டிருந்த சில நண்பர்களை இழந்து
விட்டேன் என்பதை என்னால் உணர முடிகிறது.
சிலவற்றை பூடகமாக, நாசூக்காக சொன்னால் ஏற்கிறார்கள்….
வெளிப்படையாக போட்டு உடைப்பதை அத்தகையோர் விரும்புவதில்லை.
எனக்கு அந்த பக்குவம் இன்னும் கைகூடவில்லை…. அதனாலேயே
நான் இந்த தலைப்பை இதுவரை தொடவில்லை…
அண்மையில், திரு.ஜெயமோகன் அவர்கள் இதை மிக அழகாக
கையாண்டிருக்கிறார்…எனவே, அவரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு
இப்போது இதுபற்றி எழுதுகிறேன்.
கீழே – திரு.ஜெயமோகன்
அந்த பிராம்மண நண்பருக்கு சொன்ன விளக்கத்திலிருந்து –
————————–
“நான் பிராமணன்” என்ற வரியை இருவகையில் சொல்லலாம்….
ஒன்று – ஒரு இனக்குழு, தனது அடையாளமாக,
எல்லாரும் சொல்வதைப்போல….
அல்லது
இங்கே நாலாயிரம் ஆண்டுக் காலமாக நிலைநின்று கொண்டிருக்கும்
மகத்தான மரபு ஒன்றின் தொடர்ச்சியாக –
இந்தத் தேசத்தை ஒருங்கிணைக்கும் விசை ஒன்றின் பிரதிநிதியாக….
வன்முறையற்ற ஒருங்கிணைவு ஒன்றை வாழ்நெறியாகக் கொண்ட
மரபு அது.
ஒவ்வொரு யுகத்திற்கும் தன்னை விமர்சனம் செய்துகொள்ளவும்
மாற்றிக்கொள்ளவும் தயங்காதது…
(தன்னை அந்த மரபினராக….)
இரண்டாவது பொருளில் நீங்கள் சொல்லியிருந்தால்,
எந்த வகையான எதிர்நிலைகளை எடுக்கவும்
உங்களுக்கு உரிமை இல்லை.
நீங்கள் எங்கும் கசப்புகளை, காழ்ப்புகளை வெளிப்படுத்தவே கூடாது.
எத்தருணத்திலும் – ஒருங்கிணைவையும் வன்முறையற்ற
உரையாடலையும் மட்டுமே உருவாக்க விழையவேண்டும்….
ஆகவே இன்றைய காழ்ப்பரசியலின் வெறிக்கூச்சல்களில்
இருந்து அரைச் சொல்லைக்கூட நீங்கள் பெற்றுக்கொள்ளக் கூடாது….
உங்களுக்கு ஒரு குருமரபு உள்ளது.
உங்கள் அடையாளமே அதுதான்;
உங்கள் பிறப்பு நிகழ்ந்த குடிமரபு அல்ல உங்களுடையது.
அந்த குருமரபு எந்த மெய்மையைச் சொன்னதோ
அதுவே உங்களுக்கான வழிகாட்டல்.
ஐம்பதாண்டுகளுக்கொருமுறை
தலைகீழாக ஆகும் அரசியல் (உங்களுக்கானது) அல்ல.
இங்கே, உச்சகட்ட வன்முறையும் அழிவும் நிகழ்ந்த
காலகட்டங்களில் கூட – தங்கள் அறத்தை நம்பியிருந்த,
எதிர்மறை உணர்வுகளை அடையாமலிருந்த
(உங்களது) முன்னோர்கள் அன்றி
உங்களுக்கு வேறு முன்னுதாரணங்கள் தேவையில்லை.
எந்த மரபிலும் உச்சமும் கீழ்நிலையும் உண்டு.
உச்சமே அதன் சாதனை,
கீழ்நிலை என்பது அதன் மேல் மோதிக்கொண்டிருக்கும் மானுடக்கீழ்மை.
(அது தான் தற்போது நிகழ்ந்து கொண்டிருப்பது…)
மனிதர்களை ஆசாரங்களால் பகுத்து ஒடுக்கிய,
அதிகாரத்தை மட்டுமே நாடிய,
அதைநோக்கி இச்சகம் பேசிக்கொண்டிருந்த,
மேட்டிமைத்தனத்தையும் அறியாமையையும்
ஒருங்கே சூடிக்கொண்டிருந்த ஒரு தரப்பு
உங்கள் குடிமரபில் உண்டு. (நீங்களும் அதுவாக மாற விரும்பாதீர்கள்…)
எந்தக் குடிமரபிலும் அவர்களே பெரும்பாலானவர்கள்.
அவர்கள்தான் இன்று இந்த வெறுப்பரசியலைக் கூவுபவர்கள்.
நேர்மாறாக, உங்கள் குருமரபு மெய்மைநோக்கி த
ன்னை முற்றாகத் திருப்பிக்கொண்டது.
அதன் ஒளியை மட்டுமே நாடியது. இரண்டில் எதைத்
தெரிவுசெய்யவேண்டுமென (நீங்களே) முடிவெடுங்கள்.
உங்கள் முன்னோர்களின் வாழ்க்கை
உங்களுக்குச் சொல்லிக்கொடுப்பது இரண்டுதான்.
ஒன்று நெடுங்கால ஆசாரங்களைக் கடைப்பிடித்து
நிலைத்த வாழ்க்கை ஒன்றை நடத்துவது.
அதை ஆன்மிகமாக, படைப்பூக்கம்சார்ந்து மீறிச்செல்வது.
( இதனைத் தவிர்த்து )
அதற்கு எதிர்நிலையில் சென்று வெறுப்புக் குரலெழுப்புவதும்
தெருமுனைப் பூசலிடுவதும் (உங்களுக்கான) மாபெரும் வீழ்ச்சி.
———————-
நான் இன்று வந்தடைந்திருக்கும் புரிதல்கள் சில உண்டு.
அவற்றை உணர்தல்கள் என்றே சொல்வேன்.
(பொதுவாக) அவற்றை எவரிடமும் விவாதிக்க விரும்ப மாட்டேன்.
ஒன்று – மறுபிறப்பு உண்டு என்பது.
இன்னொன்று – ஆத்மாவின் அழிவின்மை மற்றும் தன்னிலை.
மூன்று – பாவ புண்ணியங்களின் தொடரே வாழ்வு என்பது.
நான்கு – ஊழ் என்னும் மாபெரும்வலையே இவ்வாழ்க்கை –
அது தற்செயல்கள் அல்ல என்பது….
இவை புறவயமான உண்மைகள் அல்ல.
(இவற்றைப்பற்றி நான் இங்கு விவாதிக்க விரும்பவில்லை…)
——————–
முன்பு ஏசுகிறிஸ்து குறித்து ஓர் அந்தணர் இதேபோன்ற
ஐயம் ஒன்றை என்னிடம் கேட்டபோது சொன்னதையே
இங்கும் சொல்கிறேன்.
நம் மரபில் ஒரு நெறி உண்டு…
ரிஷிநிந்தனை என்பதே முதல்பெரும்பாவம்.
வேதத்தைப் பழிக்கும் ரிஷியைப்
பழிக்கும் உரிமைகூட வைதிகனுக்கு இல்லை.
ரிஷிமூலம் தேட, ரிஷிகளை மதிப்பிட – நமக்குத் தகுதியும் இல்லை.
வெறும் உலகியல் லாபத்துக்காக செய்யப்படும்
எளிய கீழரசியலைச் செவிமடுத்து அந்தப் பழிகளைச்
(நீங்களும்)சூடிக்கொள்ளவேண்டாம்.
இங்கிருந்து சென்றவர்கள் எவரும்
முற்றாகச் சென்றுவிடுவதில்லை.
இங்கே அவர்களின் இருப்பு என்றும் உள்ளது.
நாம் அவர்கள் கண்முன் வாழ்கிறோம்.
அந்நினைவை (எப்போதும்) தலைக்கொள்க.
—————————————————-
இந்த இடுகையின் உள்கருத்துகளை
சிலரால் புரிந்துகொள்ள முடியாமல் போகலாம்.
ஆனால், யாரெல்லாம், இதைப்படிக்க வேண்டுமென்று
நான் விரும்புகிறேனோ –
அவர்கள் இதை படிக்கும்போது, இந்த இடுகை அவர்களுக்காக
எழுதப்பட்டது என்பதை உணர்வர்….
(அவர்கள் இப்போதும் ‘விமரிசனம்’ தளத்தை படித்துக்கொண்டு தான்
இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்…)
தாங்கள் தற்போது எடுத்துள்ள சார்பு நிலை
சரியானது அல்ல என்பதை அவர்களில் சிலரேனும் உணர்ந்தால்,
நான் பெருமகிழ்ச்சி கொள்வேன்….
மற்றவர்களுக்கு – வழக்கம்போல்,
இது சமூக நிலவரத்தைச் சொல்லும் மற்றொரு இடுகை…!!!
…
———————————————————————————



அய்யா …! ஜெயமோகன் அவர்கள் முன்பு எழுதிய ஒரு கட்டுரை நினைவுக்கு வந்தது அது : — // கோட்ஸே வீரவழிபாடு // https://www.jeyamohan.in/69039#.XADasmgzaUk …. இதில் ஓரளவு முழு விளக்கம் இருக்கிறது என்று நினைக்கிறேன் …. முக்கியமாக
// ஆர்.எஸ்.எஸின் எதிர்முகாமில் இருந்தவன் கோட்ஸே. ஆர்.எஸ்.எஸ் விலைபோய்விட்ட கோழைகளின் இயக்கம் என நினைத்தவன். காந்திகொலையில் ஆர்.எஸ்.எஸ் தடைசெய்யப்பட்டபோது இந்த ஆதாரங்களை விரிவாக முன்வைத்துத்தான் அக்குற்றச்சாட்டில் இருந்து ஆர்.எஸ்.எஸ் வெளிவந்தது … ஆர்.எஸ்.எஸ் தன் இலக்கியங்கள் அனைத்தில் இருந்தும் கோட்ஸேயை விலக்கி வைத்தது. மகாத்மா காந்தியை மகத்தான இந்துத் தலைவராக ஏற்றுக்கொண்டது. ஆர்.எஸ்.எஸின் காலைநேரப் பிரார்த்தனையில் புராணகாலம் முதல் சமகாலம் வரையிலான இந்து தலைவர்களின் பட்டியலில் கடைசியாக சொல்லப்படும் பெயர் மகாத்மா காந்தி. கடந்த அறுபதாண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொருநாளும் மகாத்மா காந்தியின் பெயரைச் சொல்லிவரும் இயக்கம் அதுவே…..
பாரதிய ஜனதாக் கட்சி வலுப்பெறும்தோறும் பல்வேறு உதிரி அமைப்புகளை , லும்பன் அமைப்புகளை அது தன்னுடன் சேர்த்துக் கொண்டே சென்றது. நகரங்களில் அதிகாரத்தை கையகபடுத்த இந்தியாவில் உள்ள அத்தனை கட்சிகளுக்கும் லும்பன் அமைப்புகள் தேவையாக இருப்பதுதான் இன்றைய அரசியல் சூழல். பாரதியஜனதாவின் லும்பன் அமைப்புகளில் உள்ள பலர் இந்துமகாசபை போன்றவற்றில் இருந்து உதிர்ந்தவர்கள்…..இந்துமகாசபையைப் பொறுத்தவரை பல்வேறு குற்றச்சாட்டுகளால் ஆர்.எஸ்.எஸில் இருந்து விரட்டப்பட்டவர்கள் சென்று சேரும் இடமாகவே அது இருந்து வருகிறது. தமிழகத்திலும் சென்ற முப்பதாண்டுகாலமாக ஆர்.எஸ்.எஸில் இருந்து தண்டிக்கப்பட்டு விலக்கப்பட்டவர்களே அதன் தலைமையில் இருக்கிறார்கள். அவ்வாறு விலக்கப்பட்டவர்களால் உருவாக்கப்பட்ட வேறு சில உதிரி இந்துத்துவ அமைப்புகளும் உள்ளன- அர்ஜுன் சம்பத்தின் கட்சி போல…..
சென்ற தேர்தலில் மோடி வென்றபின்னர் பழைய ஆர்.எஸ்.எஸ் காரர்களே திகைக்கும் வண்ணம் சென்னை கோவை போன்ற நகரங்களில் புத்தம்புதிய இந்துத்துவ லும்பன் குழுக்கள் கிளம்பி வந்தன. பல்வேறு ‘ஜி’க்கள் பெரிய பெரிய போஸ்டர்களை மோடி படத்துடன் அச்சிட்டு ஒட்டிக்கொண்டனர். பெரும்பாலானவர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள். அவர்களைக் கட்டுப்படுத்துவதற்குப்பதில் எவ்வகையில் பயன்படுத்திக்கொள்வது என பாரதிய ஜனதா எண்ணுவதாகவே தெரிகிறது.
இதுதான் நாடெங்கும் நிகழ்கிறது. முற்றதிகார நோக்கு கொண்டவரான மோடி ஆரம்பம் முதலே இந்துமகாசபை போன்றவர்களை அதிகாரத்தில் இருந்து விலக்கி வைத்திருக்கிறார். விஸ்வ ஹிந்து பரிஷத்தைக் கூட அவர் அண்டவிடுவதில்லை. ஆனால் இந்த உதிரிக்குழுக்களை அவர் அடக்கவும் முடியாது. இவர்கள்தான் மோடி பதவி ஏற்றபின் ‘அதிதீவிரம்’ பேசுகிறார்கள்….
கோட்சேவுக்கு நினைவுச்சின்னம் அமைப்பதோ வீரவழிபாடு செய்வதோ என்னவாகப் பொருள்கொள்ளப்படும் என இதைச் செய்பவர்களுக்குத் தெரியும். அது மக்களாதரவைப் பெறப்போவதில்லை. ஆனால் அது பரபரப்பாகப் பேசப்பட்டு அவர்களை செய்தியில் நிறுத்தும். ஓரளவு அரசுநடவடிக்கை வந்தால் மேலும் விளம்பரம் கிடைக்கும். இந்துத்துவ அலை இன்று இருக்கிறது என்றால் அதில் ஒரு பகுதியை அறுவடை செய்யமுடியும். மைய இந்துத்துவ அரசியலை மிரட்டி சில லாபங்களை அடைய முடியும் .. // …… இன்னும் நிறைய விவரங்கள் இதில் உள்ளன … !!
இன்றைய முதிரா இளைஞர்களுக்கு காந்தியைப்பற்றி விளக்காதது யாருடைய பொறுப்பு … கோட்ஸேவுக்கு சிலை என்றதும் அவர்களிடம் எந்த தன்னிச்சையான எதிர்ப்பும் இல்லாமல் போனதற்கு யார் காரணம் … ? நாடு — வரலாறு — சுதந்தரத்திற்கு சிந்திய ரத்தம் — சிறை கொடுமைகள் என்று அறியா வண்ணம் அவர்களை ஆக்கியது — ஆக்கி வைத்திருப்பது ” ஓட்டு பொறுக்கி அரசியல் ” தானே …. ?
பி.ஜே.பி காரர்களை வம்பிற்கு இழுக்கும் கலையை தாங்கள் நன்றாக அறிந்தவர்.
பாப்போம் எத்தனை பேர் இந்த தூண்டிலில் வந்து விழுகிறார்கள் என்று..
I feel Mr.Jayamohan is capable of explaining this article in a still more simple language..In the
meanwhile, I don’t know what sin I did in the past, I had to read a comment posted by a man of
30 to 35 years of age(whom I know as a child) in a whatsapp group about Mr.M.K.Gandhi in a
filthy and un imaginable worst language some days back. He even went to the extent of saying
if Mr.Gandhi is alive to-day, he would have got caught in the Mee too controversy.
The next day I relieved myself from that group.
கோபாலகிருஷ்ணன் சார்,
இப்போதெல்லாம் வாட்சப் ‘பில் இந்த மாதிரி பொறுப்பில்லாத மெஸ்ஸெஜஸ் நிறைய வருகின்றன…யார் எழுதினார்கள், யார் ஆரம்பித்தார்கள் என்றே தெரியாமல் இது எந்த அளவிற்கு நிஜம்,ஏனிப்படி வெறுப்பேற்றும் செய்திகளை forward செய்ய வேண்டுமென்று யாரும் யோசிப்பதே இல்லை….
அவரவர் தங்களுக்கு வரும் செய்திகளை ( வதந்திகளை, வாந்திகளை, அசிங்கங்களை) உடனடியாக தங்களுடன் தொடர்பிலிருக்கும் அத்தனை பேருக்கும் forward செய்வதை தலையாய கடமையாக நினைத்து அனுப்பி விடுகிறார்கள்.
பெரியவர்கள், சிறியவர்கள் என்று வயது வித்தியாசமே இல்லாமல், இந்த வியாதி அனைவரையும் பீடித்திருக்கிறது….
அதுவும் யாராயாவது, எந்த மதத்தினரையாவது திட்டி மெஸ்ஸெஜ் வந்தால் இவர்களுக்கு கல்கண்டு…..எல்லாம் காலம்/டெக்னாலஜி செய்யும் கோலம்…!!!
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
ஜெயமோகன் எழுதியுள்ளது புரிகிறது. ஸ்திதப்ப்ரஞ்ஞன் என்பதை வேறு மொழியினில் சொல்லியிருக்கிறார். ‘தவறுகளுக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது, நான் அவற்றிலிருந்து விலகி இருக்கிறேன், எனக்கும் நடைபெறுவதற்கும் சம்பந்தம் கிடையாது. நான் என்னுடைய ஆன்மாவின் மேன்மைக்காக உழைப்பவன். நடப்பதை அவன் பார்த்துக்கொள்வான்’ என்ற மனநிலையை அவர் சொல்லியிருக்கிறார்.
காந்திஜியை பற்றி குறை சொல்ல ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது .
அதில் பா ஜ க காரர்கள் கிடையாது .
இப்ப தேர்தல் வருகின்றது .
ஒரு சில நிலைப்பாடுகள் பா ஜ க வெளிப்படையாய் செய்ய முடியாது .
இருக்கவே இருக்கு – உதிரிக் கும்பல்கள் .
காந்தியை பற்றி விமர்சனம் , ராமர் கோவில் , லவ் ஜெஹாத்
பசு வதை , ஐயப்பன் கோவில் இத்யாதி இத்யாதி .
அப்புறம் பா ஜ க செய்யவேயில்லை என்று சாதிக்கலாம்
காந்தி இந்த தேசத்தின் ஆன்மா. எதைச் செய்தால் நாட்டிற்கு நல்லது என்று எண்ணி அவர் அதனைச் செய்தார். அதில் முக்கியமான ஒன்று, மத ரீதியாக மக்கள் பிளவுபடக்கூடாது (பிரிட்டிஷ் சூழ்ச்சியில் சிக்கக்கூடாது) என்று நினைத்தது.
அதனால் அவரைக் குறை சொல்வதை யாரும் ஆதரிக்கமாட்டார்கள். இருந்தாலும், உணர்ச்சி வசப்படுபவர்கள், அப்போதைய நிகழ்வுகளைப் படித்திருந்தால் (1000+ பக்கங்கள் உள்ள புத்தகம்), தாங்களும் உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்க இயலாது.