மன்னிக்கலாம்… ஆனால், எது வரை…? தர்மனா, திரௌபதியா…யார் சரி…?



கோபம் ஒரு கொடுமையான குணம்…
கோபத்தைத் தவிர்க்க வேண்டும்… எந்த நிலையிலும் நிதானம் தவறாத
போக்கை கடைப்பிடிக்க பயில வேண்டும்… இது தர்மங்கள் நமக்குச்
சொல்லித்தரும் நீதி.

ஆனால், திரும்பத்திரும்ப தவறிழைத்துக் கொண்டே போகின்றவர்களை –
தொடர்ந்து மற்றவர்களை துன்புறுத்திக் கொண்டே இருப்பவர்களை –
காரணமே இன்றி அடுத்தவர் மீது வன்முறையை செலுத்துபவர்களை –
எந்த அளவிற்கு பொறுத்துக் கொள்ளலாம்…?

அண்மையில், மஹாபாரதத்திலிருந்து இது குறித்த ஒரு கருத்தை
படித்தேன்…

பாண்டவர்கள் வனவாசத்தில் இருக்கிறார்கள்…
ஒரு சமயத்தில், பீமனுக்கு, தொடர்ந்து பொறுமை காக்கும் அண்ணன்

தர்மனின் மீதே கோபம் வருகிறது… அடக்கமாட்டாமல், தர்மனிடம்
கேட்கிறான் –

“ஒரு க்ஷத்திரியனுக்கே இருக்கக்கூடிய அடிப்படை குணமான கோபமே
உங்களிடம் இல்லையே… எதற்கெடுத்தாலும் பொறுமையை உபதேசித்துக்
கொண்டு, எல்லாவற்றையும் மன்னித்துக்கொண்டு.. நீங்கள் செய்வதை
என்னால் ஏற்க முடியவில்லை… தொடர்ந்து இத்தனை அக்கிரமங்கள்
செய்யும் துரியோதனன் கூட்டத்தை அழித்தொழிக்க வேண்டாமா…?
ஒரு க்ஷத்திரியனுக்கு இருக்க வேண்டிய கோபமோ, போர்க்குணமோ
சற்றுகூட உங்களிடம் இல்லையே…” என்று கொந்தளிக்கிறான்.

இந்த கட்டத்தில், திரௌபதியும், பீமன் பக்கம் சேர்ந்து வாதிக்கிறாள்…
“பொறுத்துக் கொள்வதற்கும், மன்னிப்பதற்கும் – ஒரு எல்லை உண்டு..
எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு போவதில் அர்த்தமில்லை…
கோபம் கொண்டு – தவறு செய்பவர்களை அடக்க வேண்டிய தருணம்
இது” என்று சொல்கிறாள்….

தர்மனை தங்கள் வாதத்தை ஏற்கவைக்க, சில உதாரணங்களையும்
கூறுகிறாள்..

“எப்போதும் மன்னித்துக் கொண்டே இருப்பவரை,
எல்லாவற்றையும் பொறுமையாக சகித்துக் கொள்பவரை,
மற்றவர்கள் எல்லாரும், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்
கொள்வார்கள்….

அவருக்கு கீழே பணிபுரியும் ஊழியர்கள், அவரது சொந்தக்காரர்கள்,
பரிவாரங்கள், ஏன் – முன்பின் தெரியாதவன் கூட – மரியாதையின்றி
நடந்துகொள்வார்கள்; வாய்க்கு வந்ததை பேசுவார்கள். கண்டபடி
நடப்பார்கள். அவனைப்பற்றிய பயமே யாருக்கும் இருக்காது; அவனுக்கு
சமூகத்தில் ஒரு மரியாதையும் இருக்காது…

தனக்கு சாதகமாக, முன்னர் பிரகலாதன் சொல்லிய சில செய்திகளையும்
கூறுகிறாள்…

“ஒருவர் தெரியாமல் தவறு செய்தால் மன்னித்து விடலாம்…
தாங்கள் செய்வது குற்றமென்று தெரியாமல், உணராமல் செய்பவர்களை
தண்டிப்பதில் அர்த்தமில்லை.. அவர்களை மன்னித்து விட வேண்டும்.

அதே மாதிரி, யாராவது முதல் தடவையாக குற்றம் செய்கிறான் என்றால்,
எச்சரித்து, விட்டு விடலாம்.

ஆனால், அவனே, 2-வது முறையும் குற்றமிழைத்தால், அவனை
நிச்சயம் கடுமையாக தண்டிக்க வேண்டும்… இங்கே மன்னிப்புக்கே
இடம் இல்லை…

தொடர்ந்து, தெரிந்தே தவறு செய்பவர்களிடம் கருணை காட்டுவது,
அவர்களை மன்னிப்பது – அர்த்தமே இல்லாத செயல். அது நமது
பலவீனமாக நினைத்துக் கொள்ளப்படும்… ” என்கிறாள்.

அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தும் விதமாக, தருமன்
சொல்கிறான் –

“மன்னிப்பு மாதிரி மனிதனுக்கு மேன்மை கொடுக்கக்கூடியது,
உயர்ந்தது – வேறு எதுவும் கிடையாது.
நான் உனக்கு ஒரு கெடுதல் செய்கிறேன்.
பதிலுக்கு நீ எனக்கு வேறொரு விதத்தில் கெடுதல் செய்கிறாய்..
பதிலுக்கு பதில் – பழிக்குப் பழி
என்று தொடர்ந்து கொண்டே போனால்,
அதற்கு ஒரு முடிவே இருக்காது…
இறுதியில் எல்லாமே அழிந்து விடும்.
எல்லாரும் அழிந்து விடுவார்கள்…

எனவே, மனிதர்களிடையே – விரோதங்களை முடிவுக்கு கொண்டு வர
வேண்டுமானால் – பொறுமை, மன்னிப்பு ஆகியவற்றால் மட்டுமே
முடியும்.. மன்னிப்பு தான் மேன்மையானது… உலகம் தொடர்ந்து
அமைதியாக வாழவேண்டுமானால் – மன்னிப்பை விட வேறு கதி
கிடையாது…..”

——————————————

தர்மனின் உபதேசம் படிக்கும்வரையில் நன்றாக இருக்கிறது…

ஆனால், நடைமுறை வாழ்க்கை என்று வரும்போது –

நீங்கள் தர்மனின் வாதத்தை ஏற்பீர்களா அல்லது
திரௌபதியின் வாதத்தை ஏற்பீர்களா…?

.
———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to மன்னிக்கலாம்… ஆனால், எது வரை…? தர்மனா, திரௌபதியா…யார் சரி…?

  1. appannaswamy's avatar appannaswamy சொல்கிறார்:

    இப்போது உலகில் நடைமுறையில் இருக்கும் போக்கை கருத்தில்கொண்டு, ஆணித்தரமாக திரௌபதியின் வாதத்தைத் தான் ஏற்க வேண்டும். என்னுடைய சுய கருத்தும் அதுவே.

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    தர்மர் மாதிரியான சிந்தனை கோடியில் ஒருவருக்குத்தான் சாத்தியம்.

    அதற்காக பழிக்குப் பழி என்பது சரியல்ல. ஆனால் பொறுமை அளவு கடந்ததாக ஆகக்கூடாது. இங்கு தவறு செய்பவர்கள் பெரும்பாலும், தெரிந்தே திரும்பத் திரும்ப தவறு செய்கிறார்கள். பொறுமை என்பது அவர்கள் விஷயத்தில் அர்த்தமில்லாதது.

    ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்ற பழமொழியும் கவனிக்கத் தக்கது.

  3. அறிவழகு's avatar அறிவழகு சொல்கிறார்:

    மன்னிப்பு இரு வகைப்படும்.

    ஒன்று, தனி மனிதனுக்கு இழைக்கப்படும் அநீதி, குற்றம், கொடுமை. அதை அவன் மன்னிக்கலாம் இல்லை என்றால் அதற்குண்டான தீர்வை காணலாம்.

    இரண்டாவது, ஒரு அரசு அதை மன்னிப்பது. இது ஒவ்வொரு நாட்டிலும் அதன் அரசியல் சாசனம் அடிப்படையில் வேறுபடும்.

    பெரும்பாலான குற்ற நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டவனுக்கு நீதி வழங்கவே அரசும் அதன் கீழுள்ள துறைகளான காவல்துறையும் நீதி துறையும் முயலுகின்றன.

    அவைகள் குற்றவாளியை மன்னிப்பதென்பது குற்றம் இழைக்கப்பட்டவனுக்கு வழங்கும் அநீதியாகிவிடும். பெரும்பாலான குற்ற நடவடிக்கைகளில் அப்படி நடந்து கொள்வதில்லை. அப்படி நடந்தால் அது ஒரு பெரிய விபரீதத்தை கொண்டு வந்துவிடும்.

    அந்த தண்டனையை குற்றம் இழைக்கப்பட்ட நபர் மனது மாறி குற்றம் செய்தவனை மன்னிக்க நாடினால் அவருக்கு முழு உரிமை உண்டு. சில நாடுகளில் அதற்கு ஒரு நஷ்ட தொகையை வசூலித்து கொடுப்பார்கள்.

    இங்கு ஒன்றை அவசியம் கருத்தில் கொள்ள வேண்டும். யார் மன்னிப்பது…? குற்றம் இழைக்கப்பட்ட நபர். வேறு யாருக்கும் அந்த அதிகாரம் இல்லை.

    அப்படி அல்லாது தீர விசாரித்து வழங்கப்படும் தீர்ப்பை, தண்டனையை ரத்து செய்யவோ குறைக்கவோ வேறு யாருக்கும் உரிமை இல்லை.

    நம் நாட்டு அரசியல் சாசனம் அடிப்படையில் ஜனாதிபதி அவர்களுக்கு அந்த உரிமையை வழங்கி இருக்கிறது. அதன் அடிப்படையில் அவர் செயல்பட்டால் அதை யாரும் கேள்வி கேட்க முடியாது.

    ஆனால் அது சரியா…!?

    தனக்கு நடந்த கொடூரத்திற்கு தானே நீதி கேட்டு அந்த நபர் அரசை நாடியிருக்கார். இதில் எந்த விதத்திலும் சம்பந்தப்படாத இன்னொருவர் தண்டனையை குறைப்பதோ நீக்குவதோ சரியாகுமா…?

    இது என் சிந்தனையில் உதித்த கேள்வி.

    ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்…நம் அரசியல் சாசனம் ஜனாதிபதி அவர்களுக்கு அதை வழங்கியுள்ளது. நான் அதை கேள்வி கேட்கவில்லை.

    அது சரியா….!? என்பது தான்.

  4. Praba's avatar Praba சொல்கிறார்:

    Kindly note about electronic Voting machine judgement, I think all news create to divert against electronic voting machine

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.