2-ஆம் பகுதி – மோடிஜியின் அரசாட்சி ….. ஒரு மூன்றாவது நபரின் பார்வையில்….



முந்தைய பகுதி –யின் தொடர்ச்சி

இம்மூன்று அம்சங்களால்தான் முற்றிலும் செயல்படாத, ஆனால் இடைவிடாது வெற்றுச்சொற்களை வீசிக்கொண்டே இருக்கும் அரசு உருவாகிறது. ஒரு கட்டத்தில் அரசே அதிகாரிகள் அளிக்கும் அறிக்கைகளை நம்ப ஆரம்பிக்கிறது.

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் வேலையின்மையும் வறுமையும் உச்சத்திலிருந்த, இந்தியாவின் வளர்ச்சி மாபெரும் தேக்கத்தை அடைந்த காலகட்டம் இந்திராவின் ஆட்சிக்காலம். நம்மைச்சூழ்ந்திருந்த நாடுகளெல்லாம் நம்மைக் கடந்து நெடுந்தொலைவு சென்றது அப்போதுதான். ஆனால் வறுமையை விரட்டுவோம் [கரீபி ஹடாவோ] போன்ற கோஷங்களால் அதை நாம் இன்று நினைவுகூர்கிறோம். இன்றைய அரசும் மிகப்பெரிய பொருளியல்குளறுபடிகளை, தேக்கத்தை உருவாக்கிவிட்டு கவர்ச்சியான சொற்களை உமிழ்ந்துகொண்டிருக்கிறது.

நரேந்திர மோடிக்கும் இந்திராகாந்திக்கும் இடையேயான ஒற்றுமைகள் வியக்கவைப்பவை. இருவரும் ஆழ்ந்த பாதுகாப்பின்மை உணர்வு கொண்டவர்கள்.

ஆகவே செயற்கையாக ஓர்
இரும்புத்தோற்றத்தை நடிக்கிறார்கள்.

சர்வாதிகாரம் மூலம் ஆற்றல்கொண்டவர்களாக
ஆக முயல்கிறார்கள்.

அதற்காக நம்பிக்கைக்குரியவர்களின் சிறுகுழுவை
உருவாக்கி அதை சார்ந்திருக்கிறார்கள்.
தனிமனிதப்பிம்பம், மிகையுணர்ச்சிப்பிரச்சாரம்
வழியாக அரசியலை கையாளமுடியும்
என நினைக்கிறார்கள்.

தேசப்பாதுகாப்பு குறித்த அச்சத்தை மக்களிடையே
உருவாக்கி தங்களை ரட்சகர் எனக்காட்டி அதிகாரத்தைக் கையாள்கிறார்கள்‘என்னைக்கொல்லச் சதி’
என இந்திரா காந்தி கூச்சலிடாத நாளே இல்லை.

இவர்கள் இந்தியாவை ஆள்வதற்கான அறிவாற்றலோ
நிர்வாக அமைப்போ இல்லாத நிலையில்
முற்றிலும் செயல்படாத ஒரு கருங்கல்லை
அரசு என மக்கள்மேல் சுமத்துகிறார்கள்.

சென்ற ஐந்தாண்டுகளில் பொருளற்ற காகிதத் திட்டங்களை அறிவித்து அதிகாரிகள் அளிக்கும் அறிக்கைகளை அதன் விளைவுகளாக முன்வைக்கும் செயலை மட்டுமே
மோடி அரசு செய்திருக்கிறது.

அறிவிக்கப்பட்ட எந்தத் திட்டமும் எவ்வகையிலும் நடைமுறைக்கு வரவில்லை. இவர்கள் சாதனைகளாகச் சொல்லும் அனைத்துமே பழைய திட்டங்களைப் பெயர்மாற்றம் செய்து முன்வைப்பவை.

இயல்பான வளர்ச்சித் தகவல்களை தாங்களே செய்ததாக சொல்லிக்கொள்பவை. எவ்வகையிலும் சரிபார்க்கமுடியாத வெற்றுப்புள்ளிவிவரங்கள்.

நரசிம்மராவ் ஆட்சியில் ராவின் நிதானமான திட்டமிடலால், நிபுணர்களின் ஒத்துழைப்பால் உருவான இந்தியப்பொருளியல் மலர்ச்சி – பின்னர் காங்கிரஸ் ஆட்சியின் ஊழல்களால் பின்னிழுக்கப்பட்டது.

அது முழுமையாகவே படுத்து மீண்டும் எழுபதுகளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது இன்றைய இந்தியா.

காகிதத்திட்டங்களின் பொருளின்மையை பல நிலைகளில் நாம் காணலாம். பலமுறை முன்னரும் எழுதியிருக்கிறேன். முதல் உதாரணம், ஸ்வச் பாரத்.

இந்தியா குப்பையில் மூழ்கிக்கிடக்கிறது. நான் சென்ற நாடுகளில் குப்பைக்குள்ள்ளேயே கிடக்கும் ஒரே நாடு இந்தியாதான். நம்மைவிட பொருளியலில் பிற்பட்ட ஆப்ரிக்க நாடுகளோ கம்போடியாவோகூட நம்மைவிட மேலான சூழல்தூய்மை கொண்டவை.

ஏனென்றால் இங்கே குப்பையை அள்ளுவதற்கான அமைப்பு என எதுவும் சென்ற ஐம்பதாண்டுகளில் உருவாக்கப்படவில்லை. வெள்ளையர் ஆட்சியில் உருவான அதே குப்பை அள்ளும் முறைதான். அதையும்கூட நிதிப்பற்றாக்குறை என்று சொல்லி தனியாருக்கு குத்தகைக்கு அளித்துச் செயலிழக்க வைத்துள்ளனர்.

குப்பையை ஒழிப்பதாகச் சொல்லி கோடிக்கணக்கில் விளம்பரம் செய்து உருவாக்கப்பட்ட திட்டம் ஸ்வச் பாரத். அதனூடாகச் செய்யப்பட்ட ஒரே ஏற்பாடு குப்பைகள் கிடந்தால் அதை அரசிடம் தெரிவிக்க ஒரு செயலி உருவாக்கப்பட்டது மட்டுமே.

சிலமுறை அதில் என்ன நிகழ்கிறது என சோதித்துப் பார்த்திருக்கிறேன். புகார்செய்ததுமே குறுஞ்செய்திகள் வரத் தொடங்கும். ‘உடனே செய்யப்படும்’ என்று. ‘செய்துமுடித்துவிட்டோம் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்’ என்று.
நாலைந்து நாளைக்கு தொடர்ந்து செய்திகள் வரும்.

நாம் செய்த புகாரை தொடர்ந்துசென்று பார்க்காதவர் என்றால் மனநிறைவு அடைந்துவிடுவோம். அரசு செயல்படுகிறது என நினைப்போம். ஆனால் குப்பை பெரும்பாலும் அங்கேதான் கிடக்கும். அல்லது சற்று இடமாற்றம் செய்யப்படும்.

ஏனென்றால் இந்தியாவெங்கும் எந்நகரத்திலும் எந்தக்கிராமத்திலும் குப்பையை அள்ளுவதற்கான அமைப்புகள் இல்லை. குப்பை அள்ள வண்டிகள் இல்லை, ஊழியர்கள் இல்லை, அள்ளப்பட்ட குப்பையை எரிக்கவோ அழிக்கவோ எந்த வசதியும் இல்லை. செயலி இருந்து என்ன பயன்?

இதேதான் ரயிலிலும்.
சென்ற ஐந்தாண்டுகளில் ரயில்பயணம் தாளமுடியாத அளவுக்கு சீரழிந்துள்ளது.பயணம் பலமடங்கு பெருகுகிறது, ஆனால் ரயில்துறை தேங்கிக்கிடக்கிறது.

தத்கால், அர்ஜெண்ட் தத்கால் என பல திட்டங்களால் மறைமுகமாக கட்டணம் கூட்டப்படுகிறது. கழிப்பறைகள் கழுவப்படுவதில்லை. பெட்டிகள் தூய்மைசெய்யப்படுவதில்லை.

ஆனால் புகார் கொடுப்பதற்குச் செயலிகள் உண்டு. புகார் கொடுத்தால் ஐந்தே நிமிடத்தில் மறுமொழிகள் வரத்தொடங்கும். உடனே ஓர் அதிகாரி வந்து உடனே செய்கிறோம் என்பார். நான் புகார்கொடுத்தபோதெல்லாம் உடனே வந்து கழிப்பறையை நீரூற்றி ஃபினாயில் ஊற்றிவிட்டுச் சென்றனர். ஆனால் பின்னரும் ரயில் கிளம்பும் இடத்திலேயே நாறித்தான் கழிப்பறைகள் காணப்பட்டன.

சமீபத்தில் நாகர்கோயில் – கோவை எக்ஸ்பிரஸில் நாறிக்கிடந்த கழிப்பறை பற்றி புகார் செய்தேன். நெல்லையில் வந்து தூய்மை செய்தனர். ஆனால் ஒர் அதிகாரி குமுறித்தள்ளிவிட்டார். ஏனென்றால் தூய்மைசெய்யும் ஊழியர்களே இல்லை. மொத்தப்பணியும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.

குத்தகை எடுப்பவர் பலவகையான ’கழித்தல்’களுக்குப்பின் பெறுவது ஏலத்தில் கால்பங்கு. அந்த மிகக்குறைந்த தொகைக்கு அவர் நாலைந்து பிகாரி பையன்களை வேலைக்கு வைக்கிறார். நாகர்கோயிலிலேயே பிகாரிகள்தான் அப்பணி செய்கிறார்கள் .ஒருநாளைக்கு இருநூறு ரூபாய் ஊதியம்.

ஒரு ரயில்நிலையத்தின் அனைத்து பெட்டிகளையும் தூய்மை செய்ய ஊதியமாக அளிக்கப்படுவது ஒருநாளைக்கு மொத்தமாகவே ஆயிரம் ரூபாய்கூட இல்லை. அந்த பிகாரிகள் காலையில் வந்து சாயங்காலம் சென்றுவிடுவார்கள். அந்திக்குமேல் கிளம்பும் ரயில்களை தூய்மை செய்ய ஆளிருப்பதில்லை. கோவை ரயில் காலை நாகர்கோயில் வந்ததும் உடனே இன்னொரு எண் பெற்று கொல்லம் சென்று திரும்புவது. பல்லாயிரம்பேர் பயணம் செய்தது. கழிப்பறை நாறாமல் என்ன செய்யும்?

நாற்பது பெட்டிகள் கொண்ட ஒரு ரயிலின் நூற்று அறுபது கழிப்பறைகளை ஓர் ஊழியர் ஒருமணிநேரத்தில் தூய்மை செய்தால் எந்த அளவுக்குத் தூய்மை செய்யமுடியுமோ அதுவே சாத்தியம்.

ரயில் கிளம்பியபின் அந்த ஒப்பந்த ஊழியர்களான பிகாரிகள் பயணிகளின் கருத்தைக்கோரும் ஒரு படிவத்துடன் பரிதாபமாக வந்து நிற்பார்கள். இந்தி அல்லாது ஒரு சொல் தெரியாது.

என்னதான் செய்வது? பரிதாபப்பட்டு கையெழுத்துபோட்டு அளிப்பார்கள் பயணிகள். பலசமயம் நான் ஐம்பது ரூபாய் அளித்து என் பெட்டியின் கழிப்பறைகளை மட்டும் தூய்மைசெய்யச்சொல்வேன்.

சாதாரண ‘ஸ்லீப்பர் கோச்’களின் நிலைமை சென்ற சில ஆண்டுகளில் நம்பமுடியாத அளவுக்கு கீழிறங்கிவிட்டது வடகிழக்கு நோக்கிச் செல்லும் ரயில்களில் அனைத்துப்பெட்டிகளிலும் முன்பதிவுசெய்தாலும் அமரக்கூட இடம்கிடைப்பதில்லை.

நான்குநாட்களுக்கு முன் என் மகனும் கடலூர் சீனுவும் படுக்கை முன்பதிவு செய்திருந்தும் ஒரிசாவிலிருந்து ஓர் இருக்கையில் எட்டுபேர் என அமர்ந்தபடி திரும்பி வந்தனர். பெட்டிக்குள் இருநூறுபேருக்குமேல்.ஏனென்றால் செலவுசுருக்க நடவடிக்கைகளால் டிக்கெட் பரிசோதகர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு இன்று பதினைந்து பெட்டிகளுக்கு ஒருவர் தான் கண்காணிக்கிறார். அவரால் இந்தப்பெரும்கூட்டத்தை என்ன செய்ய முடியும்?

ரயில்வே காவலர்களின் எண்ணிக்கையும் சென்ற ஆண்டுகளில் தொடர்ந்து குறைக்கப்படுகிறது. இந்திய ரயில்பெட்டிகள் இன்று எந்தப்பாதுகாப்பும் இல்லாத ஒரு பெரும் அராஜகவெளி. ஆனால் புகார் செய்ய செயலிகள் உண்டு. மென்மையான பதில்கள் உடனே கிடைக்கும். அதிகாரிகளின் அரசின் காகிதத்தோற்றம் என்றால் இதுதான்

இந்த அரசு அளிக்கும் அத்தனை செயல் அறிக்கைகளும் பொய்யானவை.

இந்தியா முழுக்க இருபதாண்டுகளுக்கு முன் போடப்பட்ட நாற்கர நெடுஞ்சாலைகள் புதுப்பிக்கப்படாமல் பழுதடைந்து கிடக்கின்றன. ஆனால் அவற்றில் செல்ல பல்லாயிரம் ரூபாய் கட்டணம் கட்டவேண்டியிருக்கிறது.

வட இந்தியாவில் சில இடங்களில் தேசியநெடுஞ்சாலைகள் கிராமச்சாலைகளைவிட மோசமாக உள்ளன. நாகர்கோயில்- மதுரை நெடுஞ்சாலையே துண்டுதுண்டாக பள்ளமும் உடைசலுமாகக் கிடக்கிறது. விமானநிலைய விரிவாக்கங்கள் அனைத்தும் தேங்கிக்கிடக்கின்றன. கல்வித்துறைக்கு நிதி இல்லை. மருத்துவத்துறையில் பெருந்தேக்கம். எங்கும் எந்தவிதமான செயல்பாடும் இல்லை. வளர்ச்சி போகட்டும், பராமரிப்பே நிகழவில்லை.

ஆனால் இந்தியவரலாற்றிலேயே அதிகமாக இன்று தனிமனிதன் வரிகட்டிக்கொண்டிருக்கிறான். சில துறைகளில் ஜிஎஸ்டி, வருமானவரி, சேவைவரி உட்பட ஒரே தொழிலுக்கு மூன்று வரி.

வருமானத்தில் 40 சதவீதத்தை நேரடி வரியாக கட்டவேண்டியிருக்கிறது. வாங்கும்பொருட்களின் மறைமுக வரியையும் சேர்த்தால் ஈட்டுவதில் 70 சதவீதம் வரியாகப்போகும். அதற்கு மாற்றாக குடிமகன் பெறுவதென்ன?

கட்டணம்கொடுத்தாலும் நல்லசாலைகள் இல்லை. கல்வி, மருத்துவம் என அனைத்துக்குமே பெரும்பணம் அளிக்கவேண்டும். நல்வாழ்வுத்திட்டங்கள் என ஒன்றுமே கிடையாது. இத்தகைய அதிக வரிவிதிக்கும் நாடுகள் முழுக்குடிமகனின் வாழ்க்கைக்கும் பொறுப்பேற்கும் நலம்நாடும் அரசுகள்.

இங்கே இந்த வரி வெவ்வேறு பொய்முதலீடுகள் வழியாக தனியார் கைகளுக்குச் செல்கிறது. வரி என்பதே அரசைப்பயன்படுத்தி சிலர் அடிக்கும் நேரடியான கொள்ளை என்றாகிவிட்டிருக்கிறது .

( கீழ்க்கண்ட பகுதியை படிக்கும்போது, இது ரஃபேல் விமான விஷயத்தைப்பற்றி
தொடவே இல்லை என்பதை வாசக நண்பர்கள் நினைவுகூர வேண்டும்….)

இந்த அரசு ஊழலற்றதா?
இன்றுவரை பெரிய ஊழல்களை அவைக்குக் கொண்டுவர எதிர்க்கட்சிகளால் இயலவில்லை என்பது உண்மை. ஆனால் இத்தகைய பெருங்கொள்ளை நிகழ்கையில் அதை ஊழல் என்று அல்லாமல் எப்படி மதிப்பிட முடியும்?

எங்கே செல்கிறது இந்த மாபெரும் வரிவசூல் செல்வம்? வரிகட்டும் எனக்கு அதிலிருந்து ஒரு பைசாகூடத் தரப்படாது என்றால் அதைப் பெற்றுக்கொள்பவர் எவர்? ஊழலைச் சட்டபூர்வமாகச் செய்யும் வழிகள் கண்டடையப்பட்டுள்ளன, அவ்வளவுதான்.

இந்திரா காந்தியாவது சில நலத்திட்டங்களைச் செய்ய முயன்றார். ஆனால் மோடி அரசு பசப்புச் சொற்கள், பிளவுபடுத்தும் அரசியல் மட்டுமேபோதும் என நினைக்கிறது. எளிய அளவில்கூட ஒரு நலம்நாடும் திட்டம் கிடையாது. வளர்ச்சித்திட்டங்கள் எவையுமில்லை, எளிய கவற்சித்திட்டங்கள் கூட இல்லை.

சொல்லப்போனால் இங்கே மக்கள் என ஒரு திரள் இருப்பதையே இவர்கள் அறியவில்லை எனத் தோன்றுகிறது. இந்த நம்பிக்கை மிக ஆபத்தானது. மேலும் மேலும் கொள்ளையிடுவதற்கான அனுமதியை இந்தியச் சமூகம் அளிப்பதாகவே இவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இதன்பொருட்டேனும் இவர்கள் அகன்றாகவேண்டும் .வேறு வழியே இல்லை. இதுவே என் அரசியல்.

இந்த அரசை இந்துமதம் அழியவேண்டும் என நினைப்பவர்கள் எதிர்க்கிறார்கள், இந்தியாவைத் துண்டாடவேண்டும் என நினைப்பவர்கள் வெறுக்கிறார்கள், ஆகவே இதை ஆதரிக்கிறோம் என்பதே பலருடைய நிலைபாடாக இருக்கிறது.

இந்திய எதிர்ப்பாளர்களின் உக்கிரமான கசப்புப்பிரச்சாரமே உண்மையில் மோடியை ஆதரிக்குமிடத்திற்கு பலரைத் தள்ளுகிறது. ஆனால் எதன்பொருட்டென்றாலும் குடிமக்கள் என சிலர் இருக்கிறார்கள், அவர்களிடமிருந்து வரி பெறுகிறோம், பதிலுக்கு அவர்களுக்கு சில பருக்கைகளையாவது அள்ளிவீசவேண்டும் என்றுகூட எண்ணாத ஓர் மூடுண்ட அரசை ஆதரிப்பது அறிவின்மை. நம் வாழ்க்கையை நாமே அழித்துக்கொள்வது அது.

ஒருவர் இந்து என தன்னை உணர்கிறார் என்பதனால், இந்து என்னும் பெயரை இவர்கள் சொல்கிறார்கள் என்பதனால் இவர்களை ஆதரிப்பார் என்றால் அதைப்போல ஒரு வீழ்ச்சி பிறிதில்லை.

இன்று இருபக்கமும் உச்சகட்ட வெறுப்பரசியல் நிகழ்கிறது.
அரசியல் என்பது மதத்துடன் இணைக்கப்பட்டிருக்கையில் வளர்ச்சி, மக்கள்நலம் எதுவும் எவருக்கும் ஒரு பொருட்டல்ல.

இந்த அரசை நீக்கும் வெறிகொண்டிருக்கின்றனர் எதிர்தரப்பினர் , அரசைக் காக்கும் வெறி மறுபக்கம். ஆகவே உச்சகட்ட அரசியல்பிரச்சாரமும் எதிர்ப்பிரச்சாரமும் நிகழ்கிறது. இந்த கூச்சல்விவாதங்களில் இடம்பெற நான் விரும்பவில்லை.

சமூகவலைத்தளங்களில் கட்சிகட்டி தகவல்திரிபுகள், சதிவேலைக்கண்டுபிடிப்புகள், சாதிமதக்காழ்ப்புகள், போலிப்புள்ளிவிவரங்கள் என கூச்சலிடும் எவருடனும் இதைப்பற்றி விவாதிக்கவும் தயாராக இல்லை.

நான் இக்கருத்துக்களைச் சொல்வது நான் முன்னர் பணமதிப்பு நீக்கத்தை ஆதரித்தேன் என்பதனால், அந்த மாபெரும் பிழையால், இவ்வரசை ஆதரிக்கிறேன் எனும் எண்ணம் எழுந்திருக்கக்கூடும் என்பதனால் மட்டுமே.

மேற்கொண்டு எதையும் பேசப்போவதில்லை. இது என் அரசியல் நிலைபாடு. எளிய குடிமகனின் அரசியல் இது. கட்சி சார்பு அரசியல் அல்ல.

என் நண்பர்களில் பலர் பாரதிய ஜனதா ஆதரவாளர்கள், பலர் எதிர்ப்பார்கள். எங்கள் நட்புக்குழுமம் முழுக்க இருசாராரும் கொம்புமுட்டி பூசலிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இருசாராரிடமும் எனக்குச் சொல்ல ஏதுமில்லை.

————————————————

பின் குறிப்பு –

இதற்குள்ளாக, இதை எழுதியவர் யார் என்பதை பெரும்பாலான நண்பர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்… ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸ். அனுதாபி என்று கூட சிலரால் விமரிசிக்கப்பட்ட திரு.ஜெயமோகன் எழுதிய கருத்துகள் தான் இவை.

நான் எழுதும் விமரிசனங்களை பாரபட்சமானவை என்று கூறும் பாஜக நண்பர்கள், இப்போது திரு.ஜெயமோகன் கூறும் கருத்துகளையாவது திறந்த மனதுடன் படிக்க வேண்டும்…. கண்மூடித்தனமாக பாஜக அரசு என்ன செய்தாலும் அதை ஆதரிக்கும் போக்கை கைவிட வேண்டும்…
நான் பாஜகவை பற்றி விமரிசனம் செய்வது இயற்கையே, வெறும் காழ்ப்புணரவால் அல்ல – என்பதை புரிந்து கொள்ள வேண்டும்….

திரு.ஜெயமோகன் அவர்கள் சாதாரணமாக அரசியல் கட்டுரைகள் எழுதுவதில்லை… ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரே கட்டுரையில் – நான்
இந்த விமரிசனம் தளத்தில் பல்வேறு கட்டுரைகளில் எழுதியதையும்,

அதையும் தாண்டி இன்னும் பல விஷயங்களையும் – மிகத்தெளிவாக – ஆணித்தரமாக எழுதி இருக்கிறார்…. இந்த அருமையான கட்டுரைக்காக அவருக்கு நமது நன்றிகள்…

– நண்பர்களின் கருத்துகளை பின்னூட்டங்ளில் வரவேற்கிறேன்.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to 2-ஆம் பகுதி – மோடிஜியின் அரசாட்சி ….. ஒரு மூன்றாவது நபரின் பார்வையில்….

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    //இந்திய எதிர்ப்பாளர்களின் உக்கிரமான கசப்புப்பிரச்சாரமே உண்மையில் மோடியை ஆதரிக்குமிடத்திற்கு பலரைத் தள்ளுகிறது. //

    //இன்று இருபக்கமும் உச்சகட்ட வெறுப்பரசியல் நிகழ்கிறது.
    அரசியல் என்பது மதத்துடன் இணைக்கப்பட்டிருக்கையில் வளர்ச்சி, மக்கள்நலம் எதுவும் எவருக்கும் ஒரு பொருட்டல்ல.//

    இந்தக் கட்டுரையில் உள்ள பாயிண்டுகள் மறுக்க இயலாதவை.

    இரயில் பயணத்தைப் பொறுத்தவரையில் நான் முன்னேற்றம் வந்திருப்பதாக நினைக்கிறேன். இரயில் பிரயாணத்துக்குக் கொடுக்கும் பணத்தையும் தனியார் பேருந்துகளுக்குக் கொடுக்கும் பணத்தையும் ஒப்புநோக்க வேண்டும். இரயில்வே ஊழியர்கள் வேலை செய்யவில்லை என்பதால் தனியாருக்குக் கொடுத்தால், அவர்கள் இன்னமும் பணத்தை அள்ளப் பார்க்கிறார்கள். இதைத் தீர்க்க வழி என்ன இருக்கிறது?

  2. R.Srinivasan's avatar R.Srinivasan சொல்கிறார்:

    Very neutral comment by Mr.Jaya Mohan.

  3. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    இந்த இடத்தில், இந்த செய்தியை சொல்வது பொருத்தமாக
    இருக்குமென்று நினைக்கிறேன்.
    —–

    காந்திஜியின் கடைசி காலங்களில் -1943 முதல் 1948 வரை ) அவரது தனிப்பட்ட செயலாளராக பணியாற்றிய திரு.கல்யாணம் அவர்களுக்கு இப்போது 96 வயது ஆகிறது. 02/10/2018 அன்று காந்திஜி பிறந்த நாளன்று, அவர் கூறிய சில கருத்துகள் கீழே –

    ———

    காந்தி ஆசிரமத்தில் இருந்த அனைவரும் அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்துவிட வேண்டும் என்பது விதி ஆகும். அப்போது பிரார்த்தனை நடக்கும்.

    அனைத்து மதங்களுக்கும் பொதுவான பிரார்த்தனையாகவே அது இருக்கும். (ஆன்மிக அரசியலுக்கு ஒரு உதாரணம்…)

    ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின்போது காந்தியை கொலை செய்வதற்கு 6 முறை முயற்சிகள் நடந்தன. அவர்கள் காப்பாற்றிக் கொடுத்த காந்தியை, நாடு விடுதலை பெற்று ஐந்தரை மாதங்களில் நாம் இழந்தோம்.

    நீங்கள் தவறு செய்தீர்கள் என்றால் உடனடியாக தண்டனை கிடைக்கும் எனும் நிலை வெள்ளையர்களின் ஆட்சியில் இருந்தது.

    ஆங்கிலேய ஆட்சியின்போது லஞ்சம் ஊழலுக்கு ஒருபோதும் இடமில்லை. நம்மைக் கொள்ளையடித்தார்கள் என்பது வேறு. ஆனால் அலுவலகத்தில் லஞ்சம்வாங்கும் பழக்கமெல்லாம் அவர்களிடம் இல்லை.

    வெள்ளையர் ஆட்சி நடைமுறை, நிர்வாகத் திறமை குறித்து காந்தியே பலமுறை பாராட்டியிருக்கிறார். காந்தியை இப்போதும் மதிப்பவர்கள் வெள்ளையர்கள் மட்டுமே. தெய்வத்தைப் போன்று வணங்குகிறார்கள். 3 ஆயிரம் ஆண்டுகளானாலும் இன்னொரு காந்தி நமக்கு கிடைக்கமாட்டார் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

    இன்றைக்கு ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்ய மீண்டும் இந்தியாவிற்கு வந்தால், அவர்களை மனப்பூர்வமாக வரவேற்பேன். காந்தி உயிரோடு இருந்திருந்தாலும் அதைத்தான் செய்திருப்பார். பாடுபட்டு உருவாக்கிய நம் தேசத்தை ஊழலிலும், ஏழ்மையிலும் விட்டுச்செல்லவா காந்தி விரும்பியிருப்பார்?

    சுதந்திர இந்தியாவில் நேருவின் ஆட்சியில் தான் முதல் முதலில் ஊழல் தொடங்கியது.

    இந்திய தேசத்தின் விடுதலைக்குப் பிறகு ஒருவேளை நேதாஜி தலைமையில் ஆட்சி, அதிகாரம் அமைந்திருந்தால் தற்போதைய அவலங்களைப் போல் இருந்திருக்காது. இந்தியா விடுதலை பெறும்போது நேதாஜி தலைமையிலான ஆட்சி முறை 5 ஆண்டுகளுக்கு அமைந்திருந்தால் இந்த நாட்டின் தலையெழுத்தே மாறியிருக்கும் என்று அவர் கூறினார்.

    ————

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

  4. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    மேலுலகத்தில் காந்திஜி கடவுளிடம் : அய்யா நான் விட்டு விட்டு வந்த அந்த மூன்று குரங்குகள் என்னவானது எனக் கேட்க அதற்கு கடவுள்
    கண்ணை பாெத்தியபடி இருந்த குரங்கு நீதிமானாகிவிட்டது , காதை பாெத்தியபடி இருந்த குரங்கு அரசாங்கமாகிவிட்டது , வாயை பாெத்தியபடி இருந்த குரங்கு மக்களாகிவிட்டது என்று கூறினார் …இது தற்பாேது வாட்ஸ்அப்பில் உலா வருகின்ற செய்தி …!!

  5. Tamilmani's avatar Tamilmani சொல்கிறார்:

    Jayamohan is very right about Railways.slogans on swachbharat is a farce.All the trains are dirty and not fit for travel .Train toilets are nauseating and the food supplied in trains are not hygenic So first clean the trains, then you can clean the country . Railway minister should travel in the trains to get firsthand experience .Will he do that?

    • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

      தமிழ்மணி – இது நம் எல்லோருடைய கடமை. நாம் பயணிக்கும்போது கண்ட இடத்திலும் குப்பை போடுகிறோம். இந்தியர்கள் பொதுவாக, அவங்க சொந்த இடத்தை ஓரளவு சுத்தமா வைத்துக்கொண்டு, பொது இடங்களை அசிங்கப்படுத்துவார்கள். இது மேனாட்டினரிடம் கிடையாது. பெர்சனல் ஹைஜீனும் இந்தியர்களிடம் குறைவு, பொது இடங்களை உபயோகப்படுத்துவதில்.

      நான் ரெயில்வேயில் மாற்றங்களைக் கண்கூடாகப் பார்க்கிறேன். ரயில் நிலையங்களில் இருக்கும் கேண்டீன்கள் பெட்டராகி இருக்கிறது. டாய்லெட்டுகள் பயோ கிரேடாக மாற்றியிருக்கிறார்கள் (நான் பயணித்த வண்டிகளில் பார்த்திருக்கிறேன்). இரயிலில் கொடுக்கும் உணவு, அதை வழங்கும் ஊழியர்கள் சுகாதாரமாக இல்லை. சீப் லேபர்கள் என்று வட இந்தியர்களை வைத்து ஒப்பேற்றுகிறார்கள். அரசு பஸ் 30-40 ரூபாய்க்குக் கொண்டு செல்லும் இடங்களுக்கு இரயில் 10 ரூபாயில் கொண்டுபோய் விடுகிறது. தொலைதூரப் பயணங்களுக்கும் அப்படித்தான். பயணக் கட்டணங்களில் மாற்றம் கொண்டுவந்து, டிக்கெட் இல்லாமல் பயணிப்பவர்களைச் சிறையில் தள்ளி, இரயில் நிலையங்களில் தேவையில்லாதவர்கள் இருந்தால் அவர்களை சிறையில் தள்ளி, (வியாபாரிகள்-எல்லா இடங்களையும் ஆக்கிரமித்துக்கொண்டு கண்ட கண்ட வியாபாரம் செய்பவர்கள்-ஏழைகள் என்பதால் இதனைக் கடந்துபோகக் கூடாது, குப்பை போடுபவர்களை வாழ்நாள் முழுவதும் இரயிலில் பயணிக்க முடியாதபடி சட்டம் கொண்டுவந்தால் ஒருவேளை இந்தியர்கள் மாறலாம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.