வஞ்சிக்கப்பட்ட நடுத்தர மக்கள்… – தலையங்கத்தின் அடுத்த பகுதி -IV


நேற்றைய தினம் தினமணி நாளிதழின் பட்ஜெட் குறித்த தலையங்கத்தின் 3-வது பகுதி வெளியானது. இன்று, இன்னும் விவரமாக, நடுத்தரமக்கள் எப்படி ஏமாற்றப்பட்டனர் என்று விளக்கமாக எடுத்துக் கூறுகிறது தலையங்கத்தின்
4-வது பகுதி.

அதுவும் வாசக நண்பர்களின் பார்வைக்கு அவசியம் செல்ல வேண்டும் என்பதால் கீழே பதிப்பிக்கப்பட்டுள்ளது.
(நன்றி – தினமணி நாளிதழ்….! )


——————————————————————————

2018 -2019 நிதி நிலை அறிக்கை – IV
By ஆசிரியர் | Published on : 06th February 2018

———-

நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்திருக்கும் 2018-2019க்கான நிதிநிலை அறிக்கை அளவுக்கு இதற்கு முன்னால் தாக்கல் செய்யப்பட்ட வேறு எந்தவொரு நிதிநிலை அறிக்கையும் இந்தளவுக்குக் கேலிக்கும், விமர்சனத்துக்கும் ஆளாகியிருக்குமா என்பது சந்தேகம்தான்.

அதற்குக் காரணம், அந்த அளவுக்கு நடுத்தர வர்க்கத்தினர் இந்த நிதிநிலை அறிக்கையால் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள்.

”இந்தியாவில் ஒன்று, பணக்காரராக இருக்க வேண்டும், இல்லையென்றால், ஏழையாகவோ, விவசாயியாகவோ இருக்க வேண்டும். நடுத்தர வர்க்கத்தினராக அதிலும், மாத வருவாய்ப் பிரிவினராக இருந்துவிடக்கூடாது” என்கிற முணுமுணுப்பு பரவலாகவே காணப்படுகிறது.

” -கால் ஊனமுற்றோருக்கான காலணிகளுக்கு வரி கிடையாது;

– மரணமடைந்தோர், இறந்த இரண்டாவது ஆண்டு முதல் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள்;

– கர்ப்பிணிப் பெண்கள் தங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்காக அரை டிக்கெட் வாங்க வேண்டிய அவசியம் இல்லை;

– விநோத விளையாட்டுகளில் ஈடுபடும் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஜி.எஸ்.டி. யிலிருந்து விலக்களிக்கப் படுகிறது;

– சர்க்கஸ், சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்குகளில் கண்பார்வையற்றவருக்கு ஜி.எஸ்.டி. கிடையாது” – அருண் ஜேட்லியின் நிதிநிலை அறிக்கையைப் ‘பகடி’ செய்து இப்படியொரு பதிவு கட்செவி அஞ்சலில் பரப்பப்பட்டிருக்கிறது.

– நிதிநிலை அறிக்கை என்பது வெறும் வார்த்தை ஜாலமாகவும், ஒருபுறம் கொடுப்பதுபோல் கொடுத்து இன்னொரு புறம் பிடுங்கிக் கொள்வதாகவும் இருந்தால், இதுபோன்ற விமர்சனங்கள் எழத்தான் செய்யும்.

நடுத்தர வர்க்கத்தினர் வஞ்சிக்கப்பட்டிருப்பதாகக் கருதுவதில் நியாயம் இருக்கிறது. மாத வருவாய்க்காரர்களுக்கு அவர்களுடைய மொத்த ஆண்டு வருவாயில் ரூ.40,000 கழிவு தருவதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவிக்கும்போது –

அதற்காக மகிழ்ச்சி அடைய முடியவில்லை. காரணம், இதற்கு முன்னால்
மாத வருவாய்க்காரர்களுக்கு மருத்துவச் செலவினங்களுக்காக ரூ.15,000 -மும் போக்குவரத்துச் செலவினங்களுக்காக ரூ.19,200 மும் அவர்களது வருமானத்திலிருந்து கழிவு தரப்பட்டு வந்தது. இப்போது அந்தக் கழிவு விலக்கப்பட்டிருக்கும் நிலையில், மாத வருவாய்க்காரர்களுக்கு மொத்தமாகக் கிடைக்க இருப்பது வெறும் ரூ.6,800 கழிவு மட்டுமே. அது போதாதென்று இதுவரை 3%ஆக இருந்த கல்விக்கான கூடுதல் வரியை (செஸ்) 4% ஆக
அதிகரித்திருக்கிறார்கள்.

பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்தபோது புதிய நேரடி வரி விதிமுறைகளை அறிமுகப்படுத்த இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
அதன்படி ஆண்டுதோறும் வருமான வரியையும், அதன் வரம்பையும் மாற்றுவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, 5 ஆண்டுக்கு மாற்றம் இல்லாமல் நிர்ணயிப்பது என்று ஒரு நல்லதொரு திட்டத்தை முன்மொழிந்திருந்தார்.

அதேபோல மாத வருவாய்ப் பிரிவினர் எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் சுலபமாக வருமான வரியைத் தாக்கல் செய்யவும் வழிகோல வேண்டும் என்றும் முன்மொழிந்திருந்தார்.

அப்படியொரு இலக்கை நோக்கி நாம் பயணிக்கத் தயாராக இல்லை என்பதை இந்த நிதிநிலை அறிக்கையும் உறுதிப்படுத்துகிறது.

எந்தவொரு நேரடி வரி விதிப்பிலும் வரி செலுத்துவோருக்கு சில சலுகைகளும், கழிவுகளும் தரப்படுகின்றன. பொதுமக்கள் சேமநல நிதி (பி.பி.எஃப்.), சேம நலநிதி, ஆயுள் காப்பீடு, கல்விக் கட்டணத்திற்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு என்று வருவாயிலிருந்து பல்வேறு வருமானவரிச் சலுகைகள் தரப்படுகின்றன. இந்தச் சலுகைகளைப் பெறுவது என்பது குடிமகனின் உரிமையும்கூட.

——————————————–

இந்த நிதிநிலை அறிக்கையில் ஒரு மிகப்பெரிய அநீதி
இழைக்கப்பட்டிருக்கிறது.

அது என்னவென்றால், குறித்த நேரத்தில் வருமான வரி தாக்கல்
செய்யாமல் போனால், மேலே குறிப்பிட்ட பல்வேறு வரி
விலக்குகளுக்கான கழிவுகளைப் பெற முடியாது என்று
அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது உலகிலேயே எந்தவொரு நாட்டிலும் காணப்படாத,
கண்டனத்துக்குரிய நிபந்தனை.

——————————————

அதேபோல, மாத சம்பளக்காரர்கள், ரூ. 2 கோடிக்கும் குறைவாக ஆண்டு விற்றுவரவுள்ள வியாபாரிகளோ, நபர்களோ ஜுலை 31க்குள், அதாவது, நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களுக்குள் வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்தாக வேண்டும்.

அதேபோல ரூ.2 கோடிக்கு மேல் விற்றுவரவுள்ள வியாபாரிகளும், நபர்களும்
6 மாதங்களுக்குள் தாக்கல் செய்தாக வேண்டும்.

அப்படித் தாக்கல் செய்யாவிட்டால், அரசால் வழங்கப்பட்டிருக்கும் எந்தவிதச் சலுகைகளோ, கழிவுகளோ பெற முடியாது என்கிறது அருண் ஜேட்லியின் நிதிநிலை அறிக்கை.

இந்தியாவில் 8 கோடி 37 லட்சம் பேர் வருமானவரி தாக்கல் செய்கிறார்கள். இத்தனை பேருக்கும் வருமானவரி தாக்கல் செய்வதற்குப் போதுமான அளவு தொழின்முறை பட்டயக் கணக்காளர்கள் இல்லை என்பதுகூடவா நமது நிதியமைச்சருக்குத் தெரியாது?

வருமானவரித் தாக்கல் செய்வது குறித்த சரியான புரிதல் உள்ள எந்தவொரு நிதியமைச்சரும், நிதியமைச்சக அதிகாரியும் இப்படியொரு நிபந்தனையை விதித்திருக்க வழியில்லை.

பொருளாதாரம் தெரிந்தவர்களும் சாமானிய மக்களின் பிரச்னைகளை உணர்ந்தவர்களும் நிதியமைச்சர்களாக இல்லாமல் –

போனால் மேதாவித்தனம் வெளிப்படுமே தவிர, அவர்கள் தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கை மக்களின் வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யாது.

வழக்குரைஞரான நிதியமைச்சர் அருண் ஜேட்லி வார்த்தை வித்தகத்தால் கைத்தட்டல் பெற முனைந்திருக்கிறார். நரேந்திர மோடி அரசின் வாக்கு வங்கியான நடுத்தர வர்க்கத்தினரை ஏமாற்றி இருக்கிறார்.

———————————————————————————

மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்..
இது சில ஆயிரம் பேர் மட்டுமே பார்க்கக்கூடிய காவிரிமைந்தனின் விமரிசனம் அல்ல….

பரந்த அளவில், பல்லாயிரக்கணக்கான மக்களை சென்றடையக்கூடிய தினமணி நாளிதழின் தலையங்க கருத்து…. இந்த அளவிற்கு கடுமையான வார்த்தைகளை தினமணி பயன்படுத்தியதே – அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள கோபத்தின் பிரதிபலிப்பு தான்….!

அதை மனதில் வைத்துக் கொண்டாவது –
தினமணி போன்ற நடுநிலை பத்திரிகைகளின் கருத்துக்கு மதிப்பு கொடுத்தாவது மத்திய அரசு பட்ஜெட்டில் திருத்தங்களை கொண்டு வர முயற்சிக்குமா…?

———————————————————————————

இது தனி… தினமணியில் வரவில்லை…!!!
ஒரு ஹிந்தி வலைத்தளத்தில் பார்த்தேன்…

படத்தில் என்னவோ எழுதி இருக்கிறதே… அதற்கு என்ன அர்த்தம் என்று
கேட்கிறீர்களா…?

சொல்ல மாட்டேன்… எவ்வளவோ தடவை சொல்லியாகி விட்டது
ஹிந்தி கற்றுக் கொள்ளுங்கள் என்று… யார் கேட்கிறீர்கள்…?
இப்போது – அர்த்தம் தெரியாமல் படுங்கள் அவஸ்தை …!

இப்போது, இதை தெரிந்து கொள்ளவாவது
ஹிந்தி படிப்பீர்கள் அல்லவா..? 🙂 🙂 🙂

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to வஞ்சிக்கப்பட்ட நடுத்தர மக்கள்… – தலையங்கத்தின் அடுத்த பகுதி -IV

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    பேடா துஜே மேரி கசம் ஹூட் போல்னா சோட்தே – வாசிக்கவே தெரியாது. அப்போ இனி நான் இந்தியா வரக்கூடாதுன்னு வேற சொல்றீங்க.

    நீங்க நம்ம நிதியமைச்சர், பிரதமர், கட்சித் தலைவர்களுக்கிடையேயான புரிந்துணர்வைப் பற்றி ஒரு இடுகை போட்டிருந்தீங்களே. அது நினைவில் விரிகிறது. ஒருவேளை நான் அந்த இடத்தில் இருந்தால், இன்றைய நிதியமைச்சர். ம்..ம். கொடுத்துவைக்கலை (அதுக்கு எனக்கு என்ன குவாலிபிகேஷன்னு கேட்கமாட்டீங்கன்னு நினைக்கறேன். எனக்கு பத்தாம் வாய்ப்பாடுவரை தெரியும்-கேல்குலேட்டர் உதவியோட 🙂 )

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      இவ்வளவு வேகமா…அதற்குள் படித்து விட்டீர்களா…!
      கடைசி பாராவை லேசாக மாற்றி இருக்கிறேன். மீண்டும் படித்துப் பாருங்கள்… 🙂 🙂

      மத்திய அரசின் மொழிக்கொள்கையை promote செய்திருக்கிறேன் ..!!! 🙂

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    “இப்போது, இதை தெரிந்து கொள்ளவாவது ஹிந்தி படிப்பீர்கள்
    அல்லவா..?”

    இப்போதுதான் எனக்கு ஒரு ரகசியம் புரிந்தது. மத்திய அரசு, தமிழ் சேனல்களில் ஹிந்தி விளம்பரங்கள் வெளியிட்டால், அதைப் புரிந்துகொள்ளவாவது தமிழக மக்கள் ஹிந்தி கற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறது போலிருக்கு.

    சரிதான்… மொழியைக் கற்றுக்கொள்வதில் பிரச்சனை இல்லை. ஆனால் ‘கற்றுக்கொண்டே ஆகவேண்டும்’ என்ற எண்ணம், ஹிந்தியைப் படிக்கவே கூடாது என்று நினைப்பதில்தான் கொண்டுவிடும். பொதுவா தமிழர்களுக்கு, வடவர்கள் அந்நியர்கள்தாம் (தேர்தல் பரப்புரை போன்றவற்றில்). அதனால்தான் தேசியக் கட்சிகள் வளருவதில்லை.

  3. BVS's avatar BVS சொல்கிறார்:

    K.M.சார்,

    கூகுள் இருக்க பயமேன் ; அர்த்தம் கண்டுபிடித்து விட்டேன் 🙂
    ரூட் இது தான் –

    बेटा तुझे मेरी कसम
    झूट बोलना छोड़ दे

    beta tuje meri kasam
    joot bolna chod de

    மகனே, உனக்கு என் சத்தியம்
    பொய் சொல்வதை விட்டு விடு;

    எப்பூடி சாமர்த்தியம் 🙂

  4. BVS's avatar BVS சொல்கிறார்:

    “ He may be a terrific orator but this speech (in Lok Sabha) was a farrago of misrepresentations and half truths. To claim credit for lowering the price of solar panel when everyone knows that they have gone down worldwide…”

    – sashi tharoor

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.