மீடியா’க்கள் எப்படி செயல்படுகின்றன ….???



இந்தியச்சூழலில் எந்த ஒரு ஊடகமும் உண்மையான சுதந்திரத்துடன் செயல்பட முடியாது. ஊடகவியலாளர்களுக்கு இருப்பதாக அவர்கள் நம்பும் சுதந்திரம் என்பது ஒரு மாயையே…

அடித்தால் அலறுவது எந்த உயிருக்கும் உள்ள உரிமை.
அடையாளமில்லாமல் அலையும் ஒரு நாடோடி மனிதனைக்கூட இன்று எளிதாக தாக்கமுடியாது, அவர்கள் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து ஊரைக்கூட்டுவார்கள்.

அந்த உரிமை கூட இல்லாதவர்கள் நம் ஊடகவியலாளர்கள். அந்தக்கூட்டமா இந்தியாவைக் காப்பாற்றும் என நாம் நம்புகிறோம் …?

ஊடக முதலாளிகளுக்கும் அந்த சுதந்திரம் இல்லை. அவற்றுக்கான
முதலீட்டை பெருந்தொழிலதிபர்கள் மட்டுமே செய்ய முடியும். அவர்களின் தொழில்கள் மீது இந்திய அரசுக்கு இருக்கும் முழுமையான அதிகாரம் அவர்களை முழுமையாகவே கட்டுப்படுத்தும், அவர்கள் அனுமதிக்கப்பட்ட எல்லைக்கு அப்பால் செல்ல முடியாது…..

– இதையெல்லாம் சொல்வது திரு.ஜெயமோகன்..

இது வரையில் ஜெயமோகன் சொல்வதை நூற்றுக்கு நூறு சரி என்று ஒப்புக்கொள்ளலாம்.

இன்று எந்த செய்தி ஊடகம் சுதந்திரமாக செயல்படமுடிகிறது…?
பல ஆண்டுகளாக இடதுசாரி ஆதரவு பத்திரிகையாக கருதப்பட்ட ஹிந்து ஆங்கில நாளேடே மத்திய அரசை ஆதரித்து எழுதும்போது…?

அவரது உரையிலிருந்து மேலும் சில பகுதிகள்….


அப்படியென்றால் இணையம் ஒரு நல்ல ஊடகம் அல்லவா என்று என்னிடம் கேட்டார்கள். நான் அது உண்மை என்றேன்.

இன்றிருக்கும் நிலையில் இணையம் சுதந்திரமான ஊடகம். அது நேரடியான கட்டுப்பாடு ஏதும் இல்லாதது. செலவு இல்லாதது. ஆகவே அதை சுதந்திரமாக
செயல்படச்செய்ய முடியும். பலநாடுகளில் இணையம் சுதந்திர ஊடகமாக பெரும்பணிகளை ஆற்றியிருக்கிறது.

ஆனால் – என்றேன்.

நண்பர்கள் ‘எதற்கும் ஒரு ஆனாலை சொல்லி விடுகிறீர்கள்’ என்றார்கள். ‘…இந்த ஆனால் மிக அடிப்படையான ஒரு நடைமுறைச்சிக்கல்’ என்றேன். ‘இணையத்தை பயன்படுத்துபவர்களில் பெரும்பாலும் அனைவருமே படித்தவர்கள். அதுவே அதன் பிரச்சினை.’

நண்பர்களுக்கு நான் என்ன சொல்கிறேன் என்றே புரியவில்லை. ‘படித்தவர்கள் இணையத்தில் இருக்கிறார்கள் என்றால் அது நல்லதுதானே?’ என்று ஒருவர் கேட்டார். அவர் ஒரு கிறித்தவ போதகர். நான் பார்த்ததிலேயே எளிய மனிதர். அவருக்கு அப்படித்தான் கேட்கவரும்.

’நீங்கள் ஒரு மாதம் நம் இணையச்சூழலில் உலவுங்கள். நமது படித்த வர்க்கம் எப்படிப்பட்டது என்று தெரியவரும்’ என்று சொன்னேன். ’ஆனால் அதைத் தவிர்ப்பதே நல்லது. அதன்பின் நீங்கள் கிறிஸ்துவை அணுகமுடியாது.’

நாம் படித்தவர்கள் என்று சொல்லக்கூடிய இந்த மக்கள் திரள் எப்படிப்பட்டது? நாம் அதை ஒட்டுமொத்தமாக, புறவயமாக அணுகக்கூடிய ஒரு வாய்ப்பை இணையம் நமக்கு உருவாக்கியளிக்கிறது. அதிலிருந்து வரும் நமது மனப்பிம்பம்
என்ன? இங்கே இணையத்தில் உலவக்கூடிய பலர் இருக்கிறீர்கள்.

கடந்த பத்தாண்டுகளில் நான் வந்தடைந்துள்ள மனச்சித்திரத்துக்கு மாறான சித்திரமுள்ள எவரேனும் இங்கே இருக்கிறீர்களா?

நமக்கு இணையம் ஒரு சுதந்திரவெளியை அளிக்கிறது. அந்தவெளியில் நாம் ரகசியமாகச் செயல்படும் வாய்ப்பையும் அளிக்கிறது. இவ்விரண்டையும் நம்முடைய படித்த இளையதலைமுறை எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறது..?

தமிழில் ஓரளவேனும் தீவிரமான விஷயங்களை வெளியிடும்
இணையதளங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவற்றை வாசிப்பவர்கள் மிகச்சிறுபான்மையினர்.

மிகப்பெரும்பாலான இணையவாசகர்கள் வாசிக்கும் இணையதளங்கள் சினிமா அரட்டைகள், கிசுகிசுக்கள், வம்புச்சண்டைகள் மட்டுமே நிரம்பியவை.

எனக்கு வரும் எதிர்வினைகளில் இருந்து ஒன்றை கவனிக்கிறேன்.
மிகப்பெரும்பாலான இணையவாசகர்களால் நாலைந்து பத்திகளுக்கு மேல் வாசிக்க முடியாது. அந்த மொழிநடை அரட்டைபோல இருக்கவேண்டும். மிகச்சாதாரணமாக, துண்டுதுண்டாக சொல்லப்பட்டிருக்கவேண்டும்.

அதாவது கொஞ்சம் கூட தீவிரமோ கனமோ இருக்கக்கூடாது. அவர்களுக்குத் தெரிந்த, அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் அரட்டைபோல அது இருக்கவேண்டும்.

எந்த ஒரு கருத்தையும் ஒன்றிரண்டு வரிகளுக்கு மேல் உள்வாங்கிக்கொள்ள இவர்களால் முடியாது. எதை எப்படி விரிவாகச் சொன்னாலும் அதிலிருந்து ஒற்றைவரியை உருவி அதை மட்டும் புரிந்துகொள்வார்கள்.

எதையும் அதன் சாதகபாதக தளங்களை ஒப்பிட்டு தர்க்கபூர்வமாக புரிந்துகொள்ள இவர்களுக்கு ஆற்றலில்லை. அவர்கள் எழுதும் இணையப்பதிவுகளையும் அவர்கள் அளிக்கும் எதிர்வினைகளையும் பார்க்கையில் அவர்களின் சிந்தனைத்திறன் மீது ஆழமான சந்தேகம் வந்தபடியே இருக்கிறது.

இன்னொரு அம்சம், அவர்களுக்கு எந்தப் பிரச்சினையிலும் உண்மையான ஈடுபாடில்லை என்பதுதான். ஈடுபாடில் இருந்துதான் அறிந்துகொள்ளும் ஆர்வம் பிறக்கிறது. அந்த ஆர்வமில்லாத நிலையில் அவர்கள் இணையத்திற்கு வருவது வெறும் பொழுதுபோக்குக்கு மட்டுமே. வேலையிலும் குடும்பத்திலும்
அவர்கள் அடையும் மன அழுத்தங்களுக்கான வடிகால்தான் இது. வெறுமே வேடிக்கை பார்த்து அரட்டையடிப்பவர்கள் கணிசமானவர்கள்.

இன்னொரு சாரார் உக்கிரமாக உள்ளே புகுந்து கண்டபடி வசைபாடி அவதூறுசெய்து தாறுமாறாக நக்கலடித்து உளவியல் வன்முறையில் ஈடுபடுபவர்கள். இணையம் இன்று இவர்கள் உலவும் காடு.

இவர்களெல்லாம் யார்? நம்மைப்போல சாதாரண மக்கள்.
குடும்பமும் வேலையும் உடையவர்கள். இணையத்தில் அவர்களின்
கௌரவமான சமூக முகத்தை கழட்டிவிட்டு மனநோயாளிகளாக
உலவுகிறார்கள்.

இந்த மனச்சிக்கலுக்கு ஏதாவது கொள்கைமுலாம் பூசிக்கொண்டால்
அதற்கான கும்பலைச் சேர்த்துவிடலாம் என்பதை இவர்கள்
கண்டடைந்திருக்கிறார்கள்.

ஆம், தமிழைப்பொறுத்தவரை இணைய ஊடகமென்பது பிற ஊடகங்களை விட மிகமிக கீழ்த்தரமானதாக இருக்கிறது. இணையவெளி என்பது நம்முடைய சமூகவெளியைவிட பண்பாடற்றதாக உள்ளது. நமக்கு நவீனத் தொழில்நுட்பம் அளித்த மாபெரும் வாய்ப்பை நம்முடைய மனநோய்க்கூறுகளை
வெளிப்படுத்தும் ஒரு கழிப்பறையாக நாம் ஆக்கிக்கொண்டு விட்டோம்.

தமிழகத்தில் படித்தவர்கள் பெரும்பாலும் சுயநலமும் மனச்சிக்கல்களும் கொண்ட கோழைகளாக மட்டுமே இருக்கிறார்கள். அவர்களிடம் எந்த ஒரு சமூக, அரசியல், அறம்சார் பிரச்சினைகளையும் பேசிவிட முடியாது. அவர்கள்
செவிகொடுப்பதில்லை. போலியாக மட்டுமே எதிர்வினையாற்றுவார்கள்.

ஒரு படித்த மனிதன் எவ்வகையிலும் அவனுடைய சமூகத்தை
பிரதிநிதித்துவம் செய்வதில்லை. அதற்காக அவன் அக்கறை காட்டுவதில்லை, போராடுவதில்லை. அதை சுரண்டுவதற்கும் அடக்கியாள்வதற்கும் அவனை பிறர் எளிதில் பயன்படுத்திக்கொள்ளலாம். அவன் படிப்பின்மூலம் துரோகியாக,
கருங்காலியாக மட்டுமே உருவாகிறான்.

தொழில்நுட்பப் பயிற்சி அன்றி எந்தக் கல்வியும் இல்லாத ஒரு தலைமுறையையே உருவாக்கி நம்மைச்சுற்றி நிறைத்துவிட்டிருக்கிறோம். அவர்களைத்தான் நாம் இன்று இணையத்தில் கண்டுகொண்டிருக்கிறோம்.

சான்றோனை உருவாக்குவதே கல்வி. திறமையுள்ளவனை,
தேர்ச்சியுடையவனை உருவாக்குவதல்ல. எது ஒரு மனிதனை முழுமையானவனாக படிப்படியாக மாற்றுகிறதோ அதுவே கல்வி.

பயிற்சிக்கும் கல்விக்குமான அடுத்த வேறுபாடு இங்கேதான் வருகிறது. பயிற்சிக்கு ஓர் எல்லை உண்டு. கல்வி முழுமையை நோக்கிச் செல்வது. முழுமை என்பது முடிவின்மையில் எங்கோ இருக்கும் ஒரு புள்ளி. ஆகவே கல்விக்கு முடிவே இருக்காது.

ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம் என மரபு அதைச் சொல்கிறது. கடைசிக்கணம் வரை கல்வி நீடித்தாகவேண்டும். கல்விக்காலகட்டம் என ஒன்று இல்லை. கல்வியில் இருந்து வெளியேறும் புள்ளி என எதுவும் உலகியல் வாழ்க்கையில் இல்லை.

யோசித்துப்பாருங்கள், நம் பிள்ளைகள் எப்படி வளர்கிறார்கள்? எட்டாம் வகுப்புக்குப் பின் உக்கிரமான வெறிபிடித்ததுபோன்ற மனப்பாடக் கல்வி. டியூஷன் கல்வி. அப்படியே பிளஸ்டூ. அச்சுநகலாக பாடப்புத்தகத்தை திருப்பி எழுதும் பயிற்சி.

உயர்கல்வி முடிப்பது வரை இதுதான் நம் கல்வி. இருபத்திரண்டு வயதில் கல்விமுடித்து நேரடியாக வேலை. சம்பளம். ஒரு முழு ஆண்மகனாக ஆகிவிட்டதாக அவனுக்கு நினைப்பு வருகிறது.

ஆனால் அவன் மனவளர்ச்சி எட்டாம் வகுப்புடன் நின்றுவிடுகிறது.
நம் இளைஞர்கள் இணையத்தில் எழுதுவதை அவ்வப்போது பார்ப்பேன். அவர்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள். ஆனால் உலகத்தை அவர்கள் எழுத்தில் பார்க்கமுடியாது. எட்டாம் வகுப்பு படித்துவிட்டு கொத்தனார் வேலைக்குச் செல்லும் பையன்கள் மாலையில் பார்வதிபுரம் முனையில் நின்று பேசும் அதே
விஷயங்களைத்தான் அவர்களும் பேசுவார்கள். அதாவது சினிமா.

சரி, சினிமாவைத்தான் எப்படிப் பேசுகிறார்கள் என்று பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. வணிகசினிமாவை அந்த சினிமாவின் தரத்தைவிட கீழே போய் பிய்த்துப்போடுவதுதான் இவர்களால் முடிகிறது.

இந்த இளையதலைமுறைதான் இன்றைய இந்தியாவின் சாபக்கேடு. சமீபத்தில் அண்ணா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான போராட்டம் வேகம்கொண்டபோது தென்னிந்தியாவில் மட்டும் அது எந்த அலையையும் கிளப்பவில்லை. ஏனென்றால் இங்குள்ள படித்த நடுத்தரவர்க்கம் அப்படி ஒரு தார்மீகமான கோபத்தை புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டதே அல்ல.
அவர்களுக்கு அண்ணா ஹசாரே ஒரு’காமெடியனாக’த்தான் தெரிந்தார். அரைலட்சம் சம்பளம் வாங்கி வார இறுதியில் மப்படிக்கும் தங்கள் வாழ்க்கை மிக உயர்வானதாகத் தோன்றியது. கேலிகள், கிண்டல்கள்.

அவர்கள் கல்விகற்றவர்கள் அல்ல. பயிற்சி பெற்றவர்கள். ஒரு குறிப்பிட்ட வேலைக்காக பயிற்றுவிக்கப்பட்டு வெளியே அனுப்பப்படும் உயிர்கள்.

மசானபு ஃபுகோகா இயற்கை வேளாண்மையின் தந்தை. அவரது புகழ்பெற்ற ஒற்றை வைக்கோல் புரட்சி என்ற நூல் இயற்கையின் விதிகளை மீறாமல் வேளாண்மை செய்வதைப்பற்றி சொல்லக்கூடியது.

ஆனால் அந்நூலை வாசிக்கும் ஒரு பாடப்புத்தக வாசகன் ஆச்சரியமடைவான். அந்நூலில் வேளாண்மையைப்பற்றி மட்டும் பேசப்படவில்லை. வேளாண்மையில் தொடங்கி படிப்படியாக ஒரு மேலான வாழ்க்கை பற்றி அது பேசுகிறது. பிரபஞ்சவியலை பேசுகிறது. ஆன்மீகமான உச்சநிலை நோக்கி அந்த உரையாடலை அது கொண்டுசெல்கிறது.

நான் ஃபுகோகாவின் நூலை வாசித்த அதேவருடம் ஒரு நூலை மலையாளத்துக்கு மொழியாக்கம் செய்தேன். இயற்கைஉணவு விஞ்ஞானியாக இருந்த சிவசைலம் நல்வாழ்வு ஆசிரம நிறுவனர் ராமகிருஷ்ணன் அவர்களின் ‘நோயின்றி வாழமுடியாதா?’ என்ற நூலை.

அதில் சமைக்காத உணவே உடலுக்கான இயல்பான உணவாகும் என வாதிடுகிறார் ஆசிரியர். ஆனால் அவரது பார்வை கலை இலக்கியம் தத்துவம் சிந்தனை எல்லாவற்றையும் தொட்டு ஆன்மீகமான ஒரு முழுமைநோக்கை முன்வைக்கிறது.

ஆம், நம் மரபு அதுதான். எந்தக் கல்வியானாலும் அது தனக்கான
முழுமை நோக்கைக் கொண்டிருக்கவேண்டும். இளவயதில் நான் எங்களூரின் வர்மக்கலை நிபுணர்களின், சிலம்பக்கலை ஆசான்களின் கல்விக்கூடங்களை கவனித்திருக்கிறேன். அவர்கள் வர்மம் அல்லது சிலம்புசுற்றுதல் என்னும் ஒரு கலையை மட்டும் கற்பித்தவர்கள் அல்ல. அதன் வழியாக வாழ்க்கை பற்றிய ஒரு முழுமை நோக்கை அளித்தவர்கள்.

நம்முடைய மரபில் எந்த ஒரு கலையை கற்கச்சென்றாலும் அது கடைசியில் ஆன்மீகக் கல்வியை நோக்கிச் செல்வதைக் காணலாம். சிற்பமானாலும் மருத்துவமானாலும். பிறநூல்களில் உள்ள அதே ஆன்மஞானம் அந்தத் தொழில்நுட்ப நூல்களிலும் உள்ளது. ஏனென்றால் கல்வி என்பது ஞானத்துக்கான பாதை. ஆம், மெய்ஞானத்தை நோக்கி கொண்டுசெல்லும் திராணி அற்றது கல்வியே அல்ல.

பயிற்சி தெரிந்துகொள்ளுதலை அளிக்கிறது.
கல்வி அறிவை அளிக்கிறது.
பயிற்சி தேர்ச்சியை அளிக்கிறது.
கல்வி ஆளுமை வளர்ச்சியை அளிக்கிறது.
தெரிந்துகொள்ளுதல் அரைகுறையானது.
அறிவு முழுமையும், சமநிலையும் கொண்டது.

ஞானம் என்ற ஒன்றை அதன் அடுத்தபடியாக முன்வைத்தார்கள் நம் முன்னோர். ஞானம் என்பது அறிவுதான். ஆனால் அறிதல் அல்ல. நாராயணகுரு அதை அறிவிலமர்தல் என்று சொல்கிறார். அறிதலும் அறிபடுபொருளும் அறிபவனும் ஒன்றாலும் நிலை.

அதுவாதல். எதை அறிகிறோமோ அதுவேயாகும் நிலை. அதுவே அறிவின் முழுமை. நாம் அறிவது மண் துளியாக இருக்கலாம், இலைநுனியாக
இருக்கலாம், புழுவாக இருக்கலாம். அந்த அறிதல் ஏதோ ஒரு கட்டத்தில் நம்மை முழுமையறிதலை நோக்கிக் கொண்டு செல்லமுடிந்தால் அதுவே உண்மையான கல்வி.

நமக்கும் இப்பிரபஞ்சத்துக்கும் இடையே ஒரு பிரம்மாண்டமான திரை உள்ளது. நம் அறியாமையின் திரை இது. மிக விசித்திரமான திரை. இந்தத் திரை நம் அகங்காரத்தாலும் ஆசைகளாலும் ஊடுபாவாக நெய்யப்பட்டுள்ளது.

நாம் நமக்குத் தேவையானதை, நாம் விரும்புவதை மட்டுமே அறிகிறோம். நாம் அறிந்ததை வைத்து மேலே அறியவேண்டியதை தடுத்துவிடுகிறோம்.

ஒருமனிதன் தன் வாழ்நாள் முழுக்க கடைப்பிடிக்கவேண்டிய தேடலையே கல்வி என நாம் சொல்கிறோம். கல்விக்கூடங்கள் மிகமிக ஆரம்ப நிலையில் உள்ளவை. ஒருவன் மிக அதிகமாக கற்றால்கூட இருபத்தைந்து வயதில் அக்கல்வி முடிந்துவிடுகிறது.

அதன்பின்னர் ஆரம்பிப்பதே உண்மையான கல்வி. ஞானமளிக்கும் கல்வி.
நாம் கற்றிருப்பது கல்வியல்ல, பயிற்சி என அறிபவன் கல்வியை
அடையாளம் காணமுடியும். கல்வி அவனுக்கு ஞானத்தை சுட்டிக்காட்டும்.

ஒரு விழியிழந்த மனிதர் ஞானியின் வீட்டைவிட்டுக் கிளம்பும்போது இரவாகி விட்டது. அவர் தனக்கு ஒரு கைவிளக்கு கேட்டார். ’பார்வையற்ற உனக்கு ஏன் விளக்கு?’ என்றார் ஞானி

‘விளக்கொளியில் என்னை மற்றவர்கள் பார்ப்பார்களே, அவர்கள் என் மேல் மோதாமலிருப்பார்கள் அல்லவா?’ என்றார் பார்வையற்றவர்.

வழியில் ஒருவர் பார்வையற்றவர் மேல் மோதிக்கொண்டார்;
‘மூடா, நீ விளக்கைப் பார்க்கவில்லையா?’ என்றார் பார்வையற்றவர் கோபமாக. அவர் சொன்னார், ‘சகோதரா விளக்கு ஏற்கனவே அணைந்துவிட்டிருக்கிறது.’

————————————————————————————–

இந்த உரை – ஜெயமோகன் சில காலம் முன்பாக பேசியது…

மேற்படி கூற்றில் நிறைய நிஜம் இருக்கிறது என்றாலும் கூட – ஜெயமோகன் அடையாளப்படுத்துகிற நபர்கள், இணையத்தில் அதிக அளவில் இருக்கிறார்கள் என்றாலும் கூட –

இன்றைய தினம், ஒட்டுமொத்தமாக இணையம் இப்படித்தான் இருக்கிறது என்று கூறி விட முடியாது… ஜெயமோகன் கூறும் அளவிற்கு மோசமாக இல்லை…

நிறைய சிந்தனையாளர்கள்,
நிறைய தமிழ் ஆர்வலர்கள்,
இலக்கிய ஆர்வலர்கள்,
ஆன்மிகவாதிகள்,
பகுத்தறிவாளர்கள்,
கவிஞர்கள், கதைகள் எழுத பயில்பவர்கள்…
நிறைய கோபக்கார இளைஞர்கள்,
புரட்சிக்கனலை தூண்ட நினைக்கும் இளைஞர்கள்..
அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள்

– என்று பலதரப்பட்ட மனிதர்களும் இன்று எழுதுகிறார்கள்.
வழக்கமாக இணையத்தில் புழங்குபவர்களுக்கு, எது எங்கே
கிடைக்கும் என்பது நன்றாகவே தெரிகிறது. அவரவர்,
அவரவர்களுக்கு தேவையானதை தேடிச் செல்கிறார்கள்.

எனவே, இணையத்தைப்பற்றிய முற்றிலும் எதிர்மறையான எண்ணங்களும் இன்றைய தினத்தில் பொருந்தா…

இந்த விமரிசனம் வலைத்தளமும், அதன் வாசக நண்பர்களும் – ஜெயமோகன் கூறும் வட்டங்களை எல்லாம் கடந்தவர்கள் என்று நான் உணர்கிறேன்.

ஜெயமோகன் கூறும் அத்தனை ஆபாசங்களையும் தாண்டி – இந்த வலைத்தளம் – சினிமா பற்றி பேசாமல், பெண்களை வர்ணிக்காமல், ஜாதி-மத மோதல்களை
உருவாக்காமல், வீண் அரட்டையில் நேரத்தை செலவழிக்காமல் –

– சில சமயங்களில் – சில சிறு சிறு இடைஞ்சல்களையும்,
அச்சுருத்தல்களையும் சந்திக்க நேர்ந்தாலும் கூட… –

நம் கையில் கிடைத்திருக்கும் இந்த ஊடகத்தை,
இந்நாள் வரை சுதந்திரமாகவும், பயனுள்ள முறையிலும் –

நாம் ( அதாவது நானும், இந்த வலைத்தள வாசக நண்பர்களாகிய நீங்களும்…) செயல்பட்டு வருகிறோம் என்று உறுதியாக நம்புகிறேன்…

நாம் எந்த அரசியல் கட்சியின் பின்னணியிலும் இல்லை….
எப்போதுமே கிட்டத்தட்ட ஒரு எதிர்க்கட்சியின் நிலையில் இருந்து தான் செயல்படுகிறோம்… அவை செய்ய வேண்டியவற்றைத்தான் நாமும் செய்கிறோம்… தவறுகளை சுட்டிக்காட்டுகிறோம். காங்கிரஸ் ஆட்சியில் அதற்கு எதிராக கடுமையான விமரிசனங்களை முன்வைத்தோம். இப்போது பாஜக ஆட்சியிலும் மிரட்டல்களையும் மீறி துணிச்சலான ஒரு எதிர்க்கட்சி
போலத்தான் செயல்படுகிறோம்.

இந்த தளத்தில், உண்மைக்கு மாறான செய்திகளை நாம் நிச்சயமாக பிரசுரிப்பதில்லை…. செய்திகளின் மீதான நமது கருத்துகளையும், கண்ணோட்டங்களையும் வேண்டுமானல் மறுக்க முடியுமே தவிர, அடிப்படை செய்தி பொய்யானது என்று –
இன்று வரை யாரும் சொன்னதில்லை…. சொல்ல முடியாத அளவிற்கு தான் நாமும் செயல்பட்டு வருகிறோம்.

இந்த இடத்தில், ஒரு விஷயத்தை தொட்டும் தொடாமலும் சொல்லி விட்டு மேலே நகர விரும்புகிறேன்.

நண்பர் ‘மென்பொருள் பிரபு’ விடமிருந்து 2 நாட்களுக்கு முன்பாக, மீண்டும்
எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருக்கிறது. உலக அளவிலும், இந்திய அளவிலும், விமரிசனம் வலைத்தளம் பெற்றுள்ள ஒரு உயர்ந்த நிலையைப்பற்றி (Rank) குறிப்பிட்டு, நீங்கள் இதை உங்கள் வாசக நண்பர்களுக்கு அவசியம் தெரிவிக்க வேண்டும் என்று எழுதி இருக்கிறார்… அப்படி எழுதுவது, தற்பெருமையாக கருதப்படலாம் என்று நான் நினைப்பதால்…இதைப்பற்றி
எழுதுவதற்கு எனக்கு கூச்சமாக இருக்கிறது…

இருந்தாலும், இந்த உயர்ந்த நிலையை விமரிசனம் வலைத்தளம் அடைந்திருப்பதற்கு முக்கிய காரணம் –
வாசக நண்பர்களாகிய நீங்கள் தான் என்பதால், உங்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவாவது நான் இந்த செய்தியை பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

நானே சில சமயங்களில் தடுமாறினாலும் கூட, தகுந்த பின்னூட்டங்களின் மூலம் இந்த தளத்தின் தரத்தை உறுதிப்படுத்தும் வாசக நண்பர்கள் அல்லவோ, இதன் அடிப்படை காரணகர்த்தர்கள்…?

தரமாக, உண்மையை மட்டும் அடிப்படையாகக்கொண்டு எழுதப்படும் வலைத்தளங்களும், Rank -ல் முன்னிலையை பெறுகின்றதென்றால் – அதற்கு என்ன அர்த்தம்…?

ஒரு வலைத்தளத்தின் தரத்தை, அதன் வாசகர்களே தீர்மானிக்கிறார்கள்… என்பதால், தரமான வாசகர்களும் அந்த அளவிற்கு பெருகி வருகிறார்கள்
என்று தானே பொருள்…?

இந்த விமரிசனம் வலைத்தளத்தை,
தொடர்ந்து இதே விதத்தில் – உண்மையாகவும், நேர்மையாகவும்,
வெளிப்படையாகவும் – நமக்கும், இந்த சமுதாயத்திற்கும்
பயனுள்ள வகையில் மேலெடுத்துச்செல்வோம் என்று உறுதி எடுத்துக்கொள்வோம்…!

சரி தானே சகபயணிகளே… ???

-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
பிப்ரவரி 3, 2018

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to மீடியா’க்கள் எப்படி செயல்படுகின்றன ….???

  1. John's avatar John சொல்கிறார்:

    Shall we call as some one called them some time ago as presstitutes sir

  2. Raghavendra's avatar Raghavendra சொல்கிறார்:

    What you say about present day Media is absolutely right.
    Either they are influenced or frightened by Ruling party at Centre.
    Republic is the best example for Oversound.
    Only social medias like Blogs, Facebook, Twitter are speaking the truth today.

  3. DeathBirthRaceR's avatar DeathBirthRaceR சொல்கிறார்:

    வாழ்க்கை அற்புதமானது என்பதை தங்கள் எழுத்துருவால் உணர்ந்தவன் எனும் சொந்த மனதார சொல்கிறேன் நீங்கள் அன்னா ஹசாரே நடிகர் விஜய் நேரிட்டு கண்டதை அறியவில்லையா – உலகம் அறிவியலால் சூழப்பட்டதல்ல சுழலும் இயற்கையின் காலத்தாலே அதை உணர்த்தியதும் தங்கள் பக்தி எழுத்துருக்களே முற்றும் அறிந்த ஞானியும் இன்று எங்கே இதுதான் உலகம் சிந்தனையின் சீற்றம் தங்கள் எழுத்தரு காலத்தால் வாசிக்கூடியது நிரந்தரமாக அதனால் இன்னும் ஆழமாக தமிழின உணர்வாக தேடியதை அனுபவ ஆக்கமாக தேசபக்தியாக எழுதவேண்டுகிறேன் – இயற்கையை மீறிய உயிரினம் நிலைக்குமா டைனோசர் பழமொழியென நிரந்தர தைரியபடுத்துங்கள் – நிஜமும் நிழலும் நிஜமாக நிழலுக்கு சொல்லவேண்டியதில்லை நான் நிழலாய் நீங்கள் நிஜமாய் ஆழ்ந்து இன்னும் செயலாற்றுங்கள் இன்றில்லாவிடினும் என்றாவது மாறுமல்லவா திறமை செயல்புரியும்

    • தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

      எப்படி இப்படி தமிழில் எழுதறீங்க? நீங்க தமிழ் படிச்சிருக்கீங்களா இல்லை வேற மொழில படிச்சீங்களா? எனக்கு தலை சுத்துது. ஒரு வாக்கியமும் புரிந்துகொள்ளமுடியலை. சென்னைல, ‘இனான்ய மொழி’ன்னு சொல்லிக்கிட்டுத் திரிந்தவரை ஞாபகப்படுத்தறீங்க.

      கூகுள்ள டிரான்ஸ்லேட் பண்ணி காப்பி பேஸ்ட் பண்றிங்களா?

      • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

        // எனக்கு தலை சுத்துது. ஒரு வாக்கியமும் புரிந்துகொள்ளமுடியலை.//

        🙂 🙂 🙂 – யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்…!!!

        -வாழ்த்துகளுடன்,
        காவிரிமைந்தன்

  4. tamil_alagu's avatar tamil_alagu சொல்கிறார்:

    தற்போதைய இளைய சமுதாயம் மீம்ஸ் போன்ற கற்பனை உலகத்திலேயே சஞ்சரிக்கிறார்கள். யார் அரசியலில் நுழைந்தாலும் அவர்களை memes மூலம் கொச்சை படுத்துகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. தற்போதைய ஆட்சியாளர்களும் சரி இல்லை என்று கூவுகிறார்கள். புதிதாக வர விரும்புவர்களையும் கொடூரமாக மீம்ஸ் மூலம் கிண்டல் செய்து அவர்களை தாக்குகிறார்கள். இந்த நிலையில் எவர்தான் நல்ல அரசியலை கொடுக்க முன் வர முடியும்.
    நல்ல வேலை விவேகானந்தரும், காமராசரும் இணைய காலத்திற்கு முன்பே நல்ல பெயரெடுத்து மறைந்து விட்டார்கள். அவர்கள் மட்டும் இந்த காலத்தில் பிறந்திருந்தால் அவர்களையும் சாது,மதம் முலாம் பூசி , மீம்ஸ்இ மூலம் விமர்சித்திருப்பார்கள்.

    • தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

      Your point is valid தமிழ் அழகு. இந்த மாதிரி விமர்சனங்கள் (மீம்ஸ் மாதிரி), நல்லா அறிவுல, ஜன’நாயகத்துல டெவெலப் ஆன தேசங்களுக்குத்தான் பொருந்தும். இந்தியாவில் இவைகள் தடை செய்யப்படவேண்டும் என்பது என் சொந்தக் கருத்து.

  5. avudaiappannaq's avatar avudaiappannaq சொல்கிறார்:

    tamilnadu tharam kettathirku karanam diravida katchikal ..

  6. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    மீடியாக்கள் எப்போதுமே சுதந்திரமாக இயங்கியதில்லை. அவைகள் தங்கள் சர்வைவலுக்காகவும், தங்கள் முதலாளிகளின் நலத்தை எண்ணியுமே இயங்கிவருகின்றன. அப்படி அவைகள் செய்யாவிட்டால், விளம்பர வருவாய் இழப்பு, தேவையில்லாத தொல்லைகள் போன்றவற்றைச் சந்திக்கவேண்டியிருக்கும். இதோ…14 வருடங்களுக்கு முன்பு, கருணானிதி அவர்களிடம் ஒரு ஊடகவியலாளர் ஒரு கேள்வி கேட்டதற்கு, மோசமான வார்த்தைகளை உபயோகப்படுத்தினார். (அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் அந்த ஊடக முதலாளி சமரச நிலையை மேற்கொண்டார்). ஊடகங்கள் எப்போது, ‘நடு நிலை’ என்பதைக் காண்பிக்கும் என்று பார்த்தால், முக்கிய அரசியல் கட்சிகள் affect ஆகாத சம்பவங்களில் அவைகள் நேர்மை வடிவம் எடுக்கும்.

    படித்த வர்க்கம் என்று குறிப்பிடப்படுவது, ஏட்டுப் படிப்பு, மனனம் செய்து பாஸ் செய்பவர்களைக் குறிக்கிறது. அவர்கள் வாழ்க்கைப் பாடம் படித்தவர்களல்லர். பொதுவா ‘தேடல்’, ‘சொல்வது நியாயமா, நம்ம கருத்தை மறுபரிசீலனை செய்யணுமா’ என்று எண்ணாதவங்கதான் பெரும்பாலும் இருக்காங்க.

    எந்த தேசம்னு சட்டுனு மனசுல வரமாட்டேங்குது. இந்த மாதிரி ஆள்வோருக்கு எதிரா மீம்ஸ், கேலிக்கருத்துக்கள் வெளியிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது (கம்யூனிச தேசங்களல்ல). கணிணி இருக்குன்னு இந்தமாதிரி மீம்ஸ் போடறவங்க, சமூகப் பிணிகள்னுதான் எனக்குத் தோணுது.

    நீங்கள் சொல்லிருப்பதுபோல், வலைத்தளத்தின் தரம், அங்கு எழுதப்படும் விஷயம், how relevant it is, how unbiased it is என்பதைப் பொருத்தது. பொதுவா, பிரச்சனைகளையே எப்போதும் படிக்கறது கஷ்டம். Lighter readingம் இருக்கணும். Something like Readers Digest.

    மற்றபடி ‘கட்சி சார்பா’ ஒரு தளம் இருந்தால் அதுக்கு நிறைய ஆட்கள் வராது. இப்போ பாஜக பற்றிய விமரிசனம் நிறைய வரதுனால, பாஜக எதிர்ப்பு மன’நிலை கொண்டவர்கள் நிறையபேர் வரலாம். ஆனா, நாளை காங்கிரஸ் மத்திய அரசாக வந்து, அதைப் பற்றி விமர்சனம் வைத்தால் அவங்க காணாமப்போயிடுவாங்க. எப்போதும் தளத்தில் இப்போது இருப்பதுபோல் நேர்மையான விமர்சனம் இருந்தால், தளம் popularஆவதை யாரும் தடுக்கமுடியாது. உங்களுக்கு என் வாழ்த்துகள்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      // பொதுவா, பிரச்சனைகளையே எப்போதும் படிக்கறது கஷ்டம். Lighter readingம் இருக்கணும். Something like Readers Digest.//

      Exactly…நானும் அதேபோல் உணர்ந்தேன்.. அதனால் தான்
      இப்போதெல்லாம் நிறைய மற்ற விஷயங்களையும் தளத்தில் கொண்டு வருகிறேன்….

      நான் தேடித்தேடி படிக்கும் விஷயங்களில் சுவாரஸ்யமானவை
      இருந்தால் – இங்கே பகிர்ந்து கொள்கிறேன்…

      ————–
      // எப்போதும் தளத்தில் இப்போது இருப்பதுபோல் நேர்மையான விமர்சனம் இருந்தால், தளம் popularஆவதை யாரும் தடுக்கமுடியாது. உங்களுக்கு என் வாழ்த்துகள்.//

      வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  7. நெல்லை பழனி's avatar நெல்லை பழனி சொல்கிறார்:

    தமிழில் ஓரளவேனும் தீவிரமான விஷயங்களை வெளியிடும்
    இணையதளங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவற்றை வாசிப்பவர்கள் மிகச்சிறுபான்மையினர்.
    நல்ல வலை தளங்களையும் எங்களுக்கு லிங்குடன் அறிமுகப் படுத்துங்களேன்

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நெல்லை பழனி,

      தீவிரமான விஷயங்களை எழுதும் சில தளங்கள் கண்களுக்கு தெரிகின்றன. ஆனால், பிரச்சினை என்னவென்றால், அவை ஒரு கட்சி அல்லது கொள்கையை பின்பற்றுபவையாக இருக்கின்றன… நான் அவற்றை
      எந்த விதத்திலும் குறை கூற விரும்பவில்லை… அது அவர்களது உரிமை.

      கட்சி சார்பற்று, தீவிரமாக அரசியல் குறித்து எழுதும் தளங்கள் தெரியவந்தால், தெரிவிக்கிறேன். வாசக நண்பர்களுக்கு கூட இந்த வேண்டுகோளை முன்வைக்கிறேன். எந்த கட்சி, தத்துவங்களையும் சாராமல்
      அழுத்தமாக பொதுவான அரசியல் குறித்து தரமாக விமரிசிக்கும் தளங்கள் தென்பட்டால், அவற்றின் லிங்க்குகளை இங்கே பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்துங்களேன்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.