தமிழ் பிரதமர் வந்தால்…? ஹிந்தி வெறியர்களின் மூக்குடைத்த சசி தரூருக்கு ஒரு சபாஷ்…!!!


நேற்றைய தினம் பாராளுமன்றத்தில்(லோக் சபா) காங்கிரஸ்
உறுப்பினர் திரு.சசி தரூர் நடந்துகொண்ட விதம், தமிழ் நாட்டின் –

( பொதுவாக ஹிந்தி மொழி பேசாத அனைத்து மக்களின் –
என்று சொல்ல வேண்டும்…)

-சுயமரியாதையை காக்கும் வண்ணமும், ஹிந்தி வெறி பிடித்து அலையும் பாஜக அரசுக்கு சவாலாகவும் அமைந்தது….

பாராளுமன்றத்தில்(லோக் சபா), ஒரு பாஜக ஹிந்தி வெறியரின்(எம்.பி.) –
மத்திய அரசு, ஐக்கிய நாடுகள் சபையில் ஏன் இன்னும் ஹிந்தி மொழியை ஆட்சிமொழியாக கொண்டு வரவில்லை என்கிற கேள்விக்கு பதில் சொல்கிற சாக்கில் –

வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் – அதற்காக
பாஜக அரசு எடுத்துவரும் முயற்சிகளைப்பற்றி விவரமாக எடுத்துரைத்தார்….

ஐ.ந.சபையின் 193 உறுப்பினர் நாடுகளில், குறைந்த பட்சம் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் (129 நாடுகள்) அதனை ஆதரித்து ஓட்டு போட்டால் தான், ஹிந்தியை ஐ.நாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக கொண்டு வர முடியும்… இதற்காக 400 கோடி மட்டுமல்லாமல் அதற்கு மேலும் செலவழிக்கவும் பாஜக அரசு தயாராக இருக்கிறது.

ஆனால் பிரச்சினை என்னவென்றால், எந்தெந்த நாடுகள் ஆதரித்து ஓட்டு போடுகின்றனவோ, அந்த நாடுகள் எல்லாம் அதற்கான செலவில் தங்கள் பங்கை கொடுக்க வேண்டும் என்பது விதி…இது தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொடுக்கப்பட வேண்டும்.

இதற்காக நாடுகளிடையே ஆதரவை திரட்டுவதில் எங்களுக்கு எந்த சிரமமும் இல்லை என்றாலும் – தொடர்ந்து ஏற்படக்கூடிய இந்த நிதிச்சுமையை ஏற்க பல ஏழை நாடுகள், இந்த தயங்குகின்றன… விரைவில் இதற்கு தீர்வு காண்போம்
-என்றார்.

இதை குறுக்கே மடக்கிய சசி தரூர், ஹிந்தியை ஐ.நா.வில்
ஆட்சிமொழியாக்க ஏன் இவ்வளவு தண்ட செலவு செய்ய வேண்டும்…?

அமைச்சர் சொல்வது போல், ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல… ஆங்கிலத்துடன், அதுவும் ஒரு அதிகாரபூர்வ ஆட்சிமொழி – அவ்வளவே….

(தற்போதைய) பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரைத் தவிர வேறு யார் அங்கே போய் ஹிந்தியில் பேசப்போகிறார்கள்…?

வேண்டுமானால், இவர்கள் இரண்டு பேரும் போய் ஹிந்தியில் பேசும்போது, அதை மொழிபெயர்க்க ஆகும் செலவை ஐ.நா.வுக்கு கொடுத்து விட்டால் போகிறது…..! இரண்டு பேர் பேசுவதற்காக ஏன் இவ்வளவு பணம் விரயமாக்கப்பட வேண்டும்… என்றார்…
(ஹிந்தி வெறியர்களின் கூச்சலுக்கிடையிலேயே….!)

மேலும், நாளை தமிழகத்திலிருந்தோ, மேற்கு வங்கத்திலிருந்தோ
ஒரு பிரதமர் வந்தால் ….? இத்தனையும் வேஸ்ட் தானே…?
என்றும் போட்டார் ஒரு போடு…!!!

நமக்கு காங்கிரஸை பிடிக்கா விட்டாலும் கூட,
சசி தரூரை பிடிக்கா விட்டாலும் கூட –
இந்த ஒரு விஷயத்திற்காக அவசியம் பாராட்டியே ஆக வேண்டும்..!

இதில் சொல்லப்பட வேண்டிய செய்திகள் இன்னும் இருப்பதால் –
இதை இன்னும் கொஞ்சம் விவரமாக எழுத நினைத்தேன்.
ஆனால், வேறு அவசர பணி வந்துவிட்டதால், இதை சுருக்கமாகவே
எழுதி விட்டு, மேலும் விளக்கம் பெற சம்பந்தப்பட்ட விவாதத்தின்
வீடியோ காட்சியை கீழே தருகிறேன்.
(தேவைப்பட்டால், பின்னூட்டத்தில் வருகிறேன்…)

சசி தரூர் மட்டும் ஆங்கிலத்தில் பேசுகிறார்…
மற்ற அனைவரும் ஹிந்தியில்…………………………………!!!

( திருமதி சுஷ்மா பேசியதுடன், தான் பேச அனுமதி பெற்று,
சசி தரூர் ஆங்கிலத்தில் பேசத் துவங்கியவுடன்,
சபாநாயகர் குறுக்கிட்டு, ஹிந்தியில் பேசுங்களேன் என்று சொல்வதும்,
அதை ஏற்காமல் சசி தரூர் ஆங்கிலத்தில் பேசுவதும் அவசியம்
கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்…!!! )

——————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to தமிழ் பிரதமர் வந்தால்…? ஹிந்தி வெறியர்களின் மூக்குடைத்த சசி தரூருக்கு ஒரு சபாஷ்…!!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    கா.மை சார்…. வேலைப் பளுவின்போது சில முக்கியமான செய்திகளை வாசிக்க விட்டுப்போகிறது. செய்திகளை வாசிப்பதைவிட, actual argumentsஐ கேட்கும்போது இன்னும் சரியாக பிரச்சனையை விளங்கவைக்கிறது. முக்கியமான விவாதத்தைப் பகிர்ந்துகொண்டதற்கு, நன்றி, பாராட்டுக்கள்.

    இந்தியாவில் தமிழகம் முக்கியமான மாநிலம். தமிழும் சமஸ்கிருதமும்தான் இந்தியாவின் தொன்மையான இரண்டு மொழிகள். மற்ற அனைத்தும் பிறகு வந்தவையே. அதிலும் தமிழ் ஒன்றுதான் இன்னும் உயிரோடும் பாரம்பர்யத்தோடும் இருக்கிறது. பாஜக (மற்றும் இதனை ஆதரிக்கும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும்) இப்போது செய்ய நினைப்பது (ஹிந்தியை பொது மொழி என்ற வகையில் கொண்டுவருவது) மாபெரும் தவறு. முதலில் சுஷ்மாவிலிருந்து மற்ற எல்லோருக்கும் தெரியாத ஒன்று, தமிழ் 4க்கும் மேற்பட்ட தேசங்களின் ஆட்சிமொழி. ஹிந்தி, இந்தியாவில் மட்டும்தான் ஆட்சிமொழி. அவர்கள் வாதத்தின்படி, தமிழ்தான் இந்தியாவின் (அல்லது ஐ.நாவில்,) பொது மொழியாக இருக்கவேண்டும்.

    இந்தியாவில் வாக்கெடுப்பு நடத்தினால், ஹிந்தி பேசுபவர்களைவிட, ஆங்கிலம் பேசுபவர்கள் அதிகம். அதனால் ஆங்கிலத்தை பொதுமொழியாக்குவது ஓரளவு சரியாகும். ‘ஹிந்துத்துவா’ வேறு, மொழி என்பது வேறு. பாஜக இப்போது செய்ய முனைவது இந்தியாவை வலிமையிழக்கச் செய்யும் முயற்சி என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

    இது எஸ்.எஸ்.வாசனா அல்லது ஏ.வி.எம்.மெய்யப்பச் செட்டியாரா என்பது தெரியவில்லை. மொரார்ஜி தகவல் ஒலிபரப்புத் துறை மந்திரியாக இருந்தபோது, திரைப்படங்கள் 10,000 அடிக்கு மிகக்கூடாது என்று ஒரு உத்தரவு இருந்தது. அப்போது அமைச்சரைப் பார்த்து, சிக்கன நடவடிக்கை என்று சொல்கிறீர்களே, தமிழ்னாட்டில் நாங்கள் 4 முழம் வேட்டிதான் கட்டுகிறோம், வடக்கே நீங்கள் 8 முழம் வேட்டியை தார்பாச்சி கட்டுகிறீர்கள், சிக்கனம் என்ற பெயரால், எல்லோரும் 4 முழ வேட்டிதான் இந்தியாவில் கட்டவேண்டும் என்று சட்டம் போடமுடியுமா, திரைப்படம் போன்ற மீடியாக்களுக்கு இத்தகைய கட்டுப்பாடு கூடாது என்று பேசி, அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வைத்தார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் (அப்போது தமிழகம்தான், கல்கத்தாவிற்கு பிறகு அதிக திரைப்படங்கள் தயாரித்தது என நினைக்கிறேன்)

    இந்தியா, பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற பல மானிலங்களால் ஆனது. இதில் மற்ற மொழிகளை எல்லாம் விலக்கிவிட்டு, ஹிந்தி மட்டுமே பொதுமொழி என்று சொல்வது என்ன விதமான மடமை?

    சசிதரூரின் வாதத்தை பெரு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். ஒரு எம்.பியின் வேலை என்ன என்பதை அவர் தெளிவாகக் காண்பித்திருக்கிறார். இந்தக் காணொளியைக் கண்டபின்பு, சுஷ்மா சுவராஜ் மீதான மதிப்பு மிகவும் குறைந்துவிட்டது. இந்த விவாதம் நடக்கும்போது, தமிழக எம்பிக்கள் எங்கே இருந்தார்கள் என அறியவும் ஆவல்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      இந்த செய்தியின் முக்கியத்துவத்தை நீங்கள் மிகச்சரியாக புரிந்து கொண்டீர்கள் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

      அந்த விவாதத்தை வீடியோவில் பார்த்தால் இன்னும் சரியான effect கிடைக்கும் என்று நினைத்து தான் தேடி எடுத்து போட்டேன். திருமதி சுஷ்மாவின் ஹிந்தி உரையை புரிந்து கொள்ள முடிந்தால், அவர்களது மொழி வெறி இன்னமும் நன்றாக வெளிப்படும்.

      Unfortunately – நம் தமிழக ஊடகங்கள் எதுவுமே(அநேகமாக) இந்த மிக முக்கியமான செய்தியை கண்டுகொள்ளவே இல்லை. அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கும் விஷயங்களே வேறு….

      நீங்கள் சொன்னது தான் எனக்கும் தோன்றியது. இந்திய மொழிகளிலேயே, அதிக நாடுகளில் பேசப்படும் மொழி
      தமிழ் மொழி தான். அதே போல் அதிக வெளிநாடுகளில் அதிகாரபூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதும் தமிழ் தான். இதை யார் இவர்களுக்கு எடுத்துச் சொல்வது.

      சசி தரூர் மிகச்சரியாக கேட்டார் – ” எதிர்காலத்தில், ஒரு தமிழரோ, வங்காளியோ பிரதமர் ஆனால் என்ன செய்வீர்கள்” என்று …

      இந்த விவாதம் நடக்கும்போது, காமிரா – பேசுபவர்களையே focus செய்ததால், நம் தமிழக எம்.பி.க்களின் நிலையை காண முடியவில்லை. அநேகமாக, துவக்கத்தில் அவர்களுக்கு எதுவும் புரிந்திருக்காது. அவர்களுக்கு புரிய ஆரம்பித்தபோது, விவாதமே முடிந்திருக்கும்.

      உங்கள் புரிதலுக்கு நன்றி. நானும் என்னால் இயன்ற வரையில் முக்கியமான விஷயங்கள் என்று எனக்கு தோன்றுபவற்றை எல்லாம் இங்கே பகிர்ந்து கொள்ளத்தான் முயற்சிக்கிறேன்… அப்படியும்… நானும்
      சில விஷயங்களை தவற விட்டு விடுகிறேன்.

      இந்த வலைத்தளம் oneway traffic அல்ல என்பதில் நான் மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறேன். எனக்கும் உங்களைப் போன்றவர்களின் பின்னூட்டங்களின் மூலம் நிறைய செய்திகள் கிடைக்கின்றன. நன்றி. இதை நண்பர்கள் அனைவரும் உணர வேண்டும் என்பது என் அவா.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • NS Raman's avatar NS Raman சொல்கிறார்:

        No doubt it is a wasteful expenditure. The money can be spend within India for developing Hindi or English who is needed.

        In Tamil Nadu government schools Hindi should an optional language like before 1967. No government can deny the opportunity to learn the languages.

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        கா.மை சார்… இன்னொரு விஷயம் குறிப்பிட நினைக்கிறேன். இந்தியத் தூதரகத்தில் நான் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் பேசுவேன் (அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் எனது தேவைக்காகச் செல்லும்போது). வெகு அபூர்வமாக சில மலையாள வார்த்தைகளையும் உபயோகப்படுத்தியிருக்கிறேன், ஆனால் எல்லா வடவர்களிடமும் நான் ஆங்கிலத்தில்தான் பேசியிருக்கிறேன். ஆனால் கடந்த 3 வருடங்களாக, அங்கு ஹிந்தியில்தான் பேசுகிறார்கள், ஆங்கிலத்தில் பேசினால் ஹிந்தியில் பதில் கிடைக்கிறது. சென்றமுறை சென்றிருந்தபோது ஹிந்திதான். நான் உடனே சொன்னேன், I know only Tamil or English. இருந்தும் அங்குள்ளவர்கள் ஹிந்தியில்தான் பதிலுரைத்தார்கள்.

        இது Exceptionபோல் எனக்குத் தோன்றவில்லை. எனக்கு இத்தகைய நடவடிக்கை பிடிக்கவில்லை. Somebody has to take this seriously. இலங்கையில் தமிழர்களுக்கு நேர்ந்த கதி, தமிழ்’நாட்டுக்கு நேரிடும் காலம் வருகிறது (தமிழ் மொழியை அழிக்கும் அவலம்)

        துரதிருஷ்டவசமாக, 80களில் இருந்த திமுகவோ அல்லது ஜெ. தலைமையில் இருந்த அதிமுகவோ இப்போது இல்லை. இந்த ‘ஹிந்தி’த் திணிப்பை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பது கவலைக்குரிய விஷயமாகவே இருக்கிறது. இப்போது இருக்கிற திமுக கட்சி, தமிழக நலனைவிட, அவர்கள் சொந்த சொத்து சேர்க்கும் நலனை மட்டுமே கொண்டுள்ளதாக இருக்கிறது (90களிலிருந்து, நிச்சயமாக 2000லிருந்து)

  2. bandhu's avatar bandhu சொல்கிறார்:

    சசி தரூரின் அருமையான பேச்சு! எதற்கு இந்தியை UN இல் கொண்டு வரவேண்டும் என்று அலைகிறார்கள்? தரூர் சொல்வது போல், இந்தியா தவிர எங்கு இந்தி பேசுகிறார்கள்? சுஷ்மா சொல்கிறார், பிஜி யில் இந்தியும் ஒரு official மொழி என்கிறார். அதே பிஜியில் ஆங்கிலமும் ஒரு official மொழி. அதே இருந்துவிட்டு போகட்டுமே! எதற்கு தண்டத்துக்கு இப்படி பணத்தை செலவழிக்க வேண்டும்?

  3. செ. இரமேஷ்'s avatar செ. இரமேஷ் சொல்கிறார்:

    அந்த விவாதத்தில் திருமதி சுஷ்மா, ஹிந்தி பிஜி மட்டுமல்லாமல், வேறு சில நாடுகளை குறிப்பிட்டு அங்கும் அரசு மொழி என்றார். இதுவே ஒரு தவறான தகவல். அந்த நாடுகளில் எல்லாம் ஹிந்தி அங்கீகரிக்கப்பட்ட மொழி மட்டுமே. அரசு மொழிக்கும் அங்கீகரிக்கப்பட்ட மொழிக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அப்படி அங்கீகரிக்கப்பட்ட மொழி என்று கணக்கில் எடுத்தால் அப்போதும் தமிழே முன் நிற்கும். ஹிந்தியை முன்னிலைப்படுத்துவதை நீங்கள் சரி என்று கருதினால், தமிழை முன்னிறுத்தி அரசியல் செய்வதும் சரியே. ‘தமிழ் படித்த’ எவரும் பிறிதொரு மொழியை கீழ் என்று தாழ்த்தியோ, தமிழே உசத்தி என்றும் கூறமாட்டான். மற்ற மொழியின் அழகையும் ரசிப்பான். எவராவது தமிழை சீண்டினால் தன்னையே சீண்டியது போல் பல மடங்கு வீறு கொண்டு எழுந்து நிற்பான்.

    ஒரு நல்ல கருத்துள்ள காணொலி கண்டேன். மற்ற வாசகர்களுக்காக…

  4. Justin Robers's avatar Justin Robers சொல்கிறார்:

    இவர்களின் இந்தித் திணிப்புக்கு அளவே இல்லை. சுதந்திரம் கிடைத்த போது, இந்திக்குப் பதிலாக, தமிழையும் ஆங்கிலத்தையும் (அதற்கு உடன்பட மாட்டார்கள் என்பதால்) ஆங்கிலத்தை மட்டும் (இந்தியைத் தவிர்த்துவிட்டு) இந்தியாவின் அதிகாரபூர்வமான ஆட்சிமொழியாக ஆக்கியிருந்தால், இந்தியா தொழில்நுட்ப வளர்ச்சியில் பல மடங்கு முன்னேறியிருக்கும். பல வட இந்தியர்களும் கல்விகற்று அதிகளவில் வேலைவாய்ப்பு பெற்றிருப்பார்கள்.நம் முன்னோர்கள் செய்த தவறு.

    இப்போது, தூர்தர்ஷனின் இலவச டிடிஎச் சேனல்களில், தமிழ் (பொதிகை), மலையாளம் (டிடி மலையாளம்), தெலுங்கு, கன்னடம் – என தலா ஒரு சேனல்கள் மட்டுமே உள்ளன. ஆனால், இந்திக்கு 75 விழுக்காடு சேனல்கள். மோடி வந்த பிறகு, குஜராத் மொழியில் 15 விழுக்காடு சேனல்கள். பிற அனைத்து இந்திய மொழிகளிலும் சேர்த்து, 10 விழுக்காடு சேனல்களே உள்ளன.

    ஆங்கிலத்தில் மருந்துக்குக் கூட எந்த சேனலும் இல்லை. நம் இந்திய மக்களின் வரிப்பணத்தை வைத்து நடத்தப்படும், தூர்தர்ஷன் டிடிஎச் – இல், இந்திக்கு மட்டும் செலவிடுவது, அநியாயமாகத் தெரிகிறது.

    இதனை ஏன் எந்த அரசியல் கட்சியும் முன்னிலைப்படுத்தி போராடவில்லை என்பது எனக்கு வியப்பாக உள்ளது.

  5. raajsree's avatar raajsree சொல்கிறார்:

    வணக்கம் ஐயா, நான் உங்கள் தளத்தில் கருத்துரை இடுவது இல்லையென்றாலும் உங்களின் அனைத்து இடுகைகளையும் வாசிப்பதுண்டு. உங்களின் சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், பல விடயங்களில் அறிவும் அனுபவமும் உடைய உங்களின் இடுகைகள் மூலம் பலவற்றை அதன் உண்மைத்தன்மையுடன் தெரிந்து கொள்ள முடிகிறது. அதனால் உங்கள் தளத்திற்கு தவறாமல் வருகை தருவேன்.

    தமிழ் சில நாடுகளில் அலுவல் மொழியாகவும் அங்கீகரிக்கப்பட்ட மொழியாகவும் இருப்பது பற்றி சொல்லியிருந்தீர்கள். அந்த நாடுகளில் உள்ள தமிழர்களிடம் கேட்டுப்பாருங்கள், அதற்காக அவர்கள் கொடுத்த விலை என்னவென்று சொல்வார்கள். ஐ நா சபையில் தமிழில் உரையாற்றிய முதல் தலைவர் முன்னாள் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ, இங்கு இறுதி போர் முடிந்த பின் வந்த ஒரு அமர்வில் பேசினார், திகதி ஞாபகத்தில் இல்லை. அவர் தமிழில் பேசியது என்னவோ நாங்கள் தமிழர்களை சமமாக நடத்துகிறோம் என்று உலகுக்கு கண்ணாமூச்சி காட்டத்தான், ஆனாலும் தமிழில் பேசினார்.
    அதற்க்கு நாங்கள் காவு கொடுத்த உயிர்கள் எத்தனை ஆயிரம் என்று உங்களுக்கும் தெரிந்திருக்கும். இப்போதும் தமிழுக்கு இருக்கும் உரிமையை காப்பாற்றிக்கொள்ள எத்தனையோ சிரமப்பட வேண்டியிருக்கிறது. தமிழர்கள் பூர்வ குடிகளாக வாழும் ஒரு நாட்டிலேயே இந்த நிலை என்றால் மற்ற குடியேற்ற நாடுகளில் எத்தனை சிரமமிருக்கும். ஆனால் தமிழ் நாட்டில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் தாய் மொழியை அலட்சியப் படுத்துவதை சகிக்க முடியவில்லை.

    நான் இங்கு கருத்துரை இடக்காரணம் வெகு நாட்களாக எனக்கு இருக்கும் ஐயத்தை உங்களிடம் கேட்டு தெரிந்து கொள்வதற்காகத்தான். ஹிந்தியை தேசிய மொழியாக்க துடிக்கும் பல தலைவர்கள் வேறு மொழிகளை தாய் மொழியாக உடையவர்கள். ஏன் மோடியின் தாய் மொழி கூட குஜராத்தி தானே.. அப்படி இருக்க ஏன் வடஇந்தியர்கள் அனைவரும் அவர்கள் மொழியை விட்டுவிட்டு ஹிந்தியை தூக்கி பிடிக்கிறார்கள்? இதை பற்றி விளக்கம் தர இயலுமா ? மறுமொழியாக தர இயலாவிட்டால் என் மின்னஞ்சலுக்கேனும் அனுப்ப முடியுமா ? அல்லாது விட்டால் வேறு யாரிடம் விளக்கம் பெற முடியும் என்பதை தெரியப்படுத்துங்கள்.

    மிக்க நன்றி. இலங்கையிலிருந்து ராஜஸ்ரீ

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      ராஜ்ஸ்ரீ,

      உங்கள் வரவு நல்வரவு ஆகுக.

      ஹிந்தி பற்றிய உங்கள் கேள்விக்கு விளக்கமாக பதிலெழுத வேண்டுமென்றால் நிறைய எழுத வேண்டியிருக்கும். சுருக்கமாக சிலவற்றை மட்டும் இங்கே கூறுகிறேன்.

      – ஹிந்தி, இந்தியாவின் பெரும்பான்மை (மெஜாரிடி) மக்களின் தாய்மொழி அல்லவென்றாலும் கூட, அதிக மக்களால்
      பேச, புரிந்துகொள்ளப்படக்கூடிய மொழி….

      – தென்னிந்தியாவில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் – ஆகிய மொழிகளிடையே நிலவும் ஒத்த தன்மை(similarity) வடக்கே ஹிந்தியுடன் – மராட்டி, குஜராத்தி, பீஹாரி, போஜ்புரி – ( கொஞ்சம் பஞ்சாபியும் கூட ) போன்ற மொழிகளுக்கு இருக்கிறது…

      ( வங்காளம், ஒடியா, அஸ்ஸாமிய மொழிகள் அவற்றினூடே ஒத்துப் போகும்…)

      – சுதந்திரப்போராட்ட காலத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய காரணத்தால் காங்கிரஸ் தலைவர்கள் – ஆங்கிலத்தை முன்னெடுத்துச்செல்லாமல், ஹிந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்கிற ஒரு உணர்வுடன் செயல்பட்டனர்….

      இதற்கு காந்திஜியும் மிக முக்கிய காரணம். ( தென்னிந்தியாவில் ஹிந்தி பிரச்சார் சபா உருவாக்கப்பட்டது
      இதன் காரணமாகவே. ) மேலும் ஆங்கிலம் அந்நியமொழி என்றும் வெறுத்து ஒதுக்கப்பட வேண்டிய மொழி என்றும் அடித்தள மக்களிடம் சொல்லப்பட்டது.

      – இதே காரணங்களால், அரசியல் சட்டம் இயற்றப்படும்போது – முதல் 10 வருடங்களுக்கு ஹிந்தி, ஆங்கிலம் இரண்டும் ஆட்சிமொழியாக இருக்கும் என்றும், அதன் பின், அந்நிய மொழியாகிய ஆங்கிலம் அகற்றப்பட்டு, ஹிந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்குமென்றும் அறிவிக்கப்பட்டது.

      இதுபோன்ற பல காரணங்களால், வடக்கேயுள்ள மக்கள் மனதில் ஹிந்தி தான் நமது தேசியமொழி – எதிர்காலத்தில் இது தான் நமது ஆட்சிமொழியாக நீடிக்கப்போகிறது என்கிற எண்ணம் உருவாகி விட்டது…. இதே காரணங்களால், அவர்கள் ஆங்கிலம் படிப்பதை அலட்சியப்படுத்தினார்கள்….

      கொஞ்சம் கொஞ்சமாக அலட்சியப்படுத்தி, ஒதுக்கப்பட்டுவிட்ட ஆங்கிலத்தை படிப்பது – இப்போது அவர்களுக்கு கடினமாக இருக்கிறது.

      ஹிந்தி மாநிலங்களாகிய – உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், பீஹார் போன்ற மாநிலங்களில் உள்ளவர்கள் – ஹிந்தி ஆட்சிமொழியாக நீடித்தால் ஹிந்தியை மட்டும் படித்தால் போதுமானது… கடினமான (அவர்களுக்கு) ஆங்கிலத்தை படிக்க வேண்டாம். எனவே ஆங்கிலம் தொடர்வது அவர்களுக்கு எரிச்சலை கிளப்புகிறது.

      இதே காரணங்களால் தான் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தவரையில் -இந்தி திணிப்பில் ஈடுபட்டது. 1965-ல் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் நிகழ்ந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் காரணமாக இந்த திணிப்பின் வேகம் கொஞ்சம் குறைந்தது.

      இப்போது பாஜக – இந்தியா முழுவதும் ஒரே மதம், ஒரே மொழி – (ஒரே தலைமை…??? ) என்கிற லட்சியத்தை கையிலெடுத்துக்கொண்டு அதி தீவிரமாக பயணிக்கிறது. அகில இந்திய அளவில் தங்களுக்கு இருக்கும் பலத்தை வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டிலும், கர்நாடகா, வங்காளத்திலும் கிளம்பும் எதிர்ப்புகளை அடக்கி விட முடியும் என்று நம்புகிறது.

      – பின்னர் எப்போதாவது சமயம் வரும்…. அப்போது, இன்னமும் விவரமாக விவாதிக்கலாம்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • rajshree_cmb's avatar rajshree_cmb சொல்கிறார்:

        மிக்க நன்றி, ஹிந்தி பெல்ட் மாநிலங்கள் தவிர்த்து வடக்கில் பெரும்பான்மை மொழிகளை பேசுவோர் குறிப்பாக பஞ்சாபி குஜராத்தி காஷ்மீரி மற்றும் வடகிழக்கு மாநில மொழிகளை பேசுவோர் ஹிந்தியை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் அல்லது அவர்களிடமும் நம் மக்களை போன்ற எதிர்ப்புணர்வு இருக்கிறதா என்பது பற்றியும் சமயம் வரும் போது உங்களுக்கு தெரிந்ததை அறியத்தாருங்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.