“முத்தலாக்” – “விவேகம்” இல்லாத “வேகம்”…..???




லோக் சபாவில், ஒரே நாளில் அறிமுகப்படுத்தப்பட்டு, விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டும் விட்டது ” முத்தலாக் தடைச் சட்ட மசோதா “…!!! ( The Muslim Women (Protection of Rights on Marriage) Bill, 2017 )

பாஜக அரசின் அபூர்வமான இந்த “வேகம்” வியப்பூட்டுகிறது…… ஆனால் “விவேகம்” இல்லாத இந்த வேகம் – வரவேற்கத்தக்கதா …?

“முத்தலாக்” விவாகரத்து முறை அநீதியானது …..இஸ்லாமியப் பெண்களுக்கு எதிரானது; கொடுமையானது; அவர்களுக்கு அடிப்படை சுதந்திரம் கூட கிடைக்க வழியில்லாமல் செய்கிறது – என்பது முற்றிலும் உண்மையே.

பங்களா தேஷ், பாகிஸ்தான் உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகள் முத்தலாக் முறையை தடை செய்திருக்கின்றன என்பதும் உண்மையே.

இந்தியாவிலும் இந்த முறை ரத்து செய்யப்பட வேண்டும்… சட்டவிரோதமாக்கப்பட வேண்டும் என்பதும் மிக மிக அவசியம் தான்.

இதில் பாஜக மட்டுமல்ல… நாட்டிலுள்ள பெரும்பாலான மக்களும், பல எதிர்க்கட்சிகளும் கூடத்தான் அக்கறை கொண்டுள்ளன.

ஆனால் –

மற்ற யாரும் கூறும் எந்தவித ஆலோசனைகளையும் கேட்காமல் – விவாதித்து ஒருமித்த கருத்து ஏற்பட வழி செய்யாமல் –
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று, தான் விரும்பும் வழியில் தான் சட்டத்தை கொண்டு வருவேன் என்று பாஜக அடம் பிடிப்பது ஏன்…?

இந்த சட்டத்தில் கூறப்படும் ஒரு மிக மிக முக்கியமான குறை –

முத்தலாக் கூறும் கணவனுக்கு 3 வருட சிறைத்தண்டனை என்பதும், இந்த சட்டத்தின் கீழ் மனைவி மட்டும் அல்லாது வேறு யார் வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம் என்பதும், அதன் மீது உடனடியாக காவல்துறை, அரெஸ்ட் வாரண்ட் இல்லாமலே – கணவரை கைது செய்யலாம் என்பதும் தான்.

மனைவிக்கும், குழந்தைகளுக்கும் – எந்தவித நிவாரணமும் (relief -ஜீவனாம்சம் …. ) கிடைக்காத நிலையில், கணவனை 3 வருட காலத்திற்கு சிறைக்கு அனுப்பி விட்டால், அந்த மனைவியும், குழந்தைகளும் அநாதரவாக தெருவில் நிற்கும் கதி ஏற்படாதா ….? என்று கேட்டால், அதற்கு உரிய விளக்கம் சட்டத்திலும் இல்லை… அதை அவசர அவசரமாக கொண்டு வந்தவர்களிடமும் இல்லை.

முஸ்லிம் பெண்களுக்கு நியாயம், பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த சட்டத்தை கொண்டு வந்ததாகச் சொல்லும் பாஜக அரசின் மீது நம்பிக்கை ஏற்பட வேண்டுமானால் –

இதிலுள்ள கிரிமினல் விதிகள் நீக்கப்பட வேண்டும்…
எதிர்க்கட்சிகளும், மற்ற அமைப்புகளும் கூறும் ஆக்கபூர்வமான யோசனைகளை ஏற்று மசோதாவை உரிய வகையில் திருத்தி மீண்டும் சட்டமாக கொண்டு வர வேண்டும்.

இன்றைய தேதியில் இது மசோதா நிலையில் தான் இருக்கிறது. ராஜ்ய சபாவிலும் நிறைவேறினால் தான் சட்டமாகும் என்கிற நிலையில் வீண் வறட்டு ஈகோ பிரச்சினையில் சிக்காமல் –

அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு பாஜக அரசின் அணுகுமுறையில் மாற்றம் வேண்டும்.

அந்த முதிர்ச்சி பாஜக தலைமைக்கு வருமா…?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to “முத்தலாக்” – “விவேகம்” இல்லாத “வேகம்”…..???

  1. இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

    கே.எம்.சார்,

    எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும்,
    திருமணம் செய்துகொண்ட பிறகு டைவர்சு செய்யாமலே,
    மனைவியை கைவிடும் ஆண்களை தண்டிக்க எதாவது சட்டம் இருக்கிறதா ?
    அது நாட்டில் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருப்பவர்களுக்கும் பொருந்துமா ?

    • இது யாரையோ… சொல்வது போலிருக்கே…. ?

    • ஸ்ரீனிவாசன்'s avatar ஸ்ரீனிவாசன் சொல்கிறார்:

      இந்த பதிவோட தலைப்பிற்கு தகுந்தார்போல அவசரப்படறீங்களே. கொஞ்சம் இன்னும் நல்லா யோசனை செய்யுங்களேன்

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      இளங்கோ,

      – Conjugal Rights mean Right to stay together

      பாதிக்கப்பட்ட பெண்மணி(மனைவி), மேற்குறித்த நிவாரணம் கோரி
      நீதிமன்றத்தை நாடலாம்.

      ஹிந்து திருமண சட்டம் 1955, பிரிவு -9 சொல்வதை கீழே தந்திருக்கிறேன்….

      Hindu Marriage Act, 1955 (Section 9) says If either the husband or the wife, without reasonable excuses, withdraws from the society of the other, the aggrieved party may approach the Court for restitution of conjugal rights.

      ———————-

      ஆனால், பொதுவாக, சுயகௌரவம் உள்ள பெண் யாரும், நீதிமன்றத்தின் மூலம் உத்திரவு பெற்று, கணவனை தன்னுடன் சேர்ந்து வாழ வற்புறுத்த மாட்டார்.
      அது வாழ்க்கையாகவா இருக்கும்….?

      பிழைப்பிற்கு தன்னால் இயன்ற உழைப்பை மேற்கொண்டு, தன் சொந்தக்காலில் நிற்கவே முயற்சிப்பார்….
      பெரும்பாலான இந்திய பெண்கள் இதைத்தான் செய்கிறார்கள்.

      விட்டுவிட்டு போன கணவருக்கு, மனசாட்சி என்று ஒன்று இருந்தால், அவரது இறுதிக்காலத்தில் அது அவரை குத்திக் காட்டும்….உறுத்தும்….
      ——-

      இது எந்த உயர்ந்த பதவியில் இருப்பவருக்கும் பொருந்தும்…

      ————

      இதைப்பற்றி எல்லாம் எந்த அரசும் கவலைப்படாது…
      இதைச் செய்வதால் அவர்களுக்கு ஓட்டு கிடைக்கப்போகிறதா என்ன…?

      -இளங்கோ, துடிப்பாக இருக்கிறீர்கள்… உங்கள் அக்கறையை பாராட்டுகிறேன்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  2. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்து நான்கு மாதங்களுக்குள் சட்ட மசாேதா ” லோக் சபாவில், ஒரே நாளில் அறிமுகப்படுத்தப்பட்டு, விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டும் விட்டது ” …வேகம் …வேகம் …வேகம் … ! ஆனால் இதே நீதிமன்றம் இறுதி தீர்ப்பு என்று ஒன்றை வழங்கியதே … அதாங்க ” காவிரி மேலாண்மை வாரியம் ” உடனே அமைக்கவேண்டும் என்று … ஆறு வருடங்கள் கடந்தும் …? மதம் சார்ந்தது என்றால் வேகம் .. மாநிலம் சார்ந்தது என்றால் மெத்தனமா … என்று கேட்க தாேன்றுகிறது … நமக்கேன் வம்பு …?

    அந்த வழக்கு வேறு ரகம் … இந்த வழக்கு வேறு ரகம் என்று கூறினாலும் கூறுவார்கள் .. எமக்கு அந்தளவுக்கு சட்டஞானம் கிடையாது …. தீர்ப்பு என்கிற பாெதுவானதை வைத்து உளறுவதுதான் ..!!

    முந்தைய ஆட்சியாளர் ஏன் செய்யவில்லை என்றகேள்வியும் எழும் … பாெதுவாக மத்தியில் ஆளுபவர்களுக்கு இதில் அக்கறை இல்லை … அப்படிதானே …?

  3. பிரனீஷ்'s avatar பிரனீஷ் சொல்கிறார்:

    // No One Respond To My Good Morning Wishes On NaMo App, Narendra Modi Complains To BJP MPs // https://www.indiatimes.com/news/india/no-one-respond-to-my-good-morning-wishes-on-namo-app-narendra-modi-complains-to-bjp-mps-336582.html — பகவான் படைப்பில் ஒவ்வொருவருக்கும் – ஒவ்வொரு விதமான கவலைகள் — வருத்தங்கள் … ! … ஹும் … எல்லாம் அவன் செயல் … !!

  4. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    கா.மை சார்… முத்தலாக் சட்ட விஷயத்தின் நீங்கள் சொல்லும் கருத்தை நான் ஏற்கிறேன். சட்டம் அவசியம் என்றாலும், அதனை நிறைவேற்றியவிதம் மிகத் தவறானது. வெளியிலிருந்து பார்க்கும்போது முஸ்லீம்களின் மீது காழ்ப்புணர்ச்சி வெளிப்படையாகத் தெரிகிறது.

    எத்தனையோ முக்கிய வழக்குகளில் உச்ச நீதிமன்றம் கொடுக்கும் தீர்ப்பை நிறைவேற்ற மத்திய அரசு(கள்) முயன்றதில்லை. ஆனால் அவ்வளவு முக்கியத்துவம் இல்லாத சில வழக்குகளில் அவசர அவசரமாக இப்படி சட்டத்தை நிறைவேற்றுவதன் காரணம் என்ன என்பது புரியவில்லை. இதனால்தான், முஸ்லீம்களின் நம்பிக்கையைப் பெறும் நோக்கம் இந்த அரசுக்கு இல்லை என்று தோன்றுகிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.