…

இன்றைய தலைமுறை சற்று கூட அறியாத ஒரு சமூக நிலையை
இந்த சிறுகதை பிரதிபலிக்கிறது. 1950-60 வரைகூட நமது சமூகத்தில் நிலவி வந்த பழக்க வழக்கங்களையும், சம்பிரதாயங்களையும் இன்று திரும்பிப் பார்க்கும்போது தான், கடந்த 60-70 ஆண்டுகளில், நாம் எவ்வளவு தூரம் மாறி இருக்கிறோம் என்பது புரிகிறது.
நான் முன்பொரு தடவை, இதே தளத்தில் –பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி என்று 5 தலைமுறை பெண்களைப்பற்றி ஒரு இடுகை எழுதியிருந்தேன். அதில் முக்கியமாக நமது குடும்பத்து பெண்களின் மாறி வரும் பொறுப்புகளை பற்றி விவரித்திருந்தேன்.
இது இன்னொரு விதம்… சமுதாய மாற்றங்கள்…..!
ஜெயகாந்தனின் படைப்பான, இந்த கௌரிப்பாட்டியைப் பற்றி
படிக்கும்போது எனக்கு என் சொந்தப்பாட்டியின் (அப்பாவின் அம்மா )
நினைவு வந்தது.
பள்ளிக்கூடமே போகாத –
7 வயதில் திருமணமாகி,
13 வயதில் ஒரு பிள்ளையை பெற்று,
14 வயதில் விதவைக்கோலம் பூண்டு,
73 வயது வரை எங்களுடனேயே வாழ்ந்து மறைந்தவர் என் பாட்டி….!
வலைத்தளத்தில் கிடைத்த ஜெயகாந்தனின் அருமையான இந்த சிறுகதை “யுகசந்தி” யை, என் பாட்டி சாவித்திரி அம்மாளின்
நினைவாக இங்கே பகிர்ந்து கொள்கிறேன்…!!!
சிறுகதை சற்றே நீளமாக இருந்தாலும், நண்பர்கள், முக்கியமாக இளைஞர்கள் அவசியம் இதை முழுவதுமாக படிக்க வேண்டும்…
நமது சமுதாயம் முன்னால் எப்படி இருந்தது என்பதை அவர்கள்
அவசியம் உணர வேண்டும்…. சிறுகதையில் கதைக்களம் – பிராம்மண குடும்பமாக இருந்தாலும் கூட,
அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும், கிட்டத்தட்ட இதே மாதிரி
சூழ்நிலையில் தான் இருந்தோம்…. என்பதை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
—————————————————————————————————–
யுக சந்தி – ஜெயகாந்தன்
…

…
கெளரிப் பாட்டி பொறுமையாய் வெகு நேரம் பஸ்ஸிற்குள் நின்றிருந்தாள். எல்லோரும் இறங்கிய பின், தனது காக்கி நிறப் பையின் கனத்தை இடுப்பில் ஏற்றிக் கொண்டு கடைசியாக வந்தாள்.
‘பாட்டி…பாட்டி ‘ பையைத் தூக்கியாரட்டா ? ஓரணா குடு பாட்டி. ‘
‘வண்டி வேணுங்களா அம்மா ? ‘
‘புதுப்பாளையம் வக்கீல் குமாஸ்தா ஐயர் வீடுதானுங்களே….வாங்க,
போவோம் ‘ —என்று பல்வேறு வரவேற்புக் குரல்களுடன் அவளை
இறங்கவிடாமல் தடுத்து நின்ற வண்டிக்காரர்களையும், கூலிக்காரச்
சிறுவர்களையும் பார்த்துக் கனிவோடு சிரித்துவிட்டுப் பாட்டி சொன்னாள்:
‘எனக்கு ஒண்ணும் வேண்டாம்பா..சித்தே வழியை விட்டேள்னா நான்
மெள்ள நடந்தே போயிடுவேன்…. ஏண்டாப்பா, வீட்டெக் கூடத் தெரிஞ்சு
வெச்சிருக்காய்… நான்தான் மாசம் ஒருதடவை வர்றேனே, என்னிக்கு
வண்டியிலே போனேன் ? ‘ என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு
பதிலைச் சொல்லி, அவர்களை விலக்கி வழியமைத்துக் கொண்டு
தணலாய்த் தகிக்கும் வெயிலில், முக்காட்டை இழுத்து விட்டுக்
கொண்டு, இடுப்பில் ஏற்றிய சுமையுடன் வறுத்துக் கொட்டிய புழுதி
மண்ணை அழுந்த அழுந்த மிதித்தவாறு ஒரு பக்கமாய்ச் சாய்ந்து சாய்ந்து நடந்தாள் பாட்டி.
பாட்டிக்கு வயது எழுபது என்றாலும் சரீரம் திடமாய்த்தான் இருக்கிறது.
மூப்பினால் ஏற்பட்ட ஸ்தூலமும், அதனால் விளையும் இளைப்பும்
வீட்டுக்குப் போன பின்தானே தெரியும் ?…
அவள் கணிப்பில் நேற்றுப் பிறந்த குழந்தைகளெல்லாம் அதோ
ரிக்ஷாவிலும், ஜட்காவிலும், சைக்கிளிலும் பரந்து பரந்து ஓடுகிறார்கள்.
மழையும் வெயிலும் மனிதனை விரட்டுகின்ற கோலத்தை எண்ணி பாட்டி சிரித்துக் கொண்டாள்.
அவளுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டா ? வெள்ளமாய்ப் பெருகி வந்திருந்த வாழ்வின் சுழிப்பிலும், பின் திடாரென வரண்ட பாலையாய் மாறிப் போன வாழ்க்கை நெருப்பிலும் பொறுமையாய் நடந்து பழகியவளை, இந்த வெயிலும் மழையும் என்ன செய்யும் ? என்ன செய்தால்தான் என்ன ?
தகிக்கின்ற புழுதியில் பாதங்கள் அழுந்தி அழுந்திப் புதைய, அசைந்து அசைந்து நடந்து கொண்டிருந்தாள் பாட்டி.
வழியில் சாலையோரத்தில் — நான்கைந்து மனிதர்கள் நின்று சுகம் காண வாகாய் முளைத்த பெருங்குடைபோல் நிழல் பரப்பிக் கொண்டிருந்தது ஒரு சிறிய வேப்பமரம்.
அந்த நிழலில் ஒற்றையாய்ச் சற்றே நின்றாள் பாட்டி.
எரிந்து தகிக்கும் அவ்வெம்மையின் நடுவே சுகம் தரப் படர்ந்த அந்த நிழல் போலும், யந்திரங்களைத் தவிர எதையுமே நம்பாத இவ்விருபதாம்
நூற்றாண்டில் –சென்ற நூற்றாண்டின் சின்னமாய்த் தன் சொந்தக்
கால்களையே நம்பி நிற்கும்– காண்பதற்கரிதான அந்தக் கிழவியின்
பிரசன்னம் போன்றும் மெல்லென வீசிய குளிர்காற்றில் வேப்பங்குழைகள் சிலிர்த்தன.
‘என்னப்பனே மகாதேவா ‘ ‘ என்று கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு அந்தக் குளுமையை அனுபவித்தாள் பாட்டி.
பாட்டியின் முக்காடிட்ட வட்டமான முகத்தில் ஒரு குழந்தைக்களை
குடிகொண்டிருந்தது. இந்த வயதிலும் அவள் சிரிக்கும்போது வரிசைப்பற்கள் வடிவாய் அமைந்திருந்தது ஓர் ஆச்சரியமே ‘ அவள் மோவாயின்
வலதுபுறத்தில் ஒரு மிளகை விடவும் சற்றுப் பருத்த அழகிய கறுப்பு மச்சம்; அதன்மீது மட்டும் கருகருவென இரண்டு முடி– இவ்வளவையும் ஒருசேரப் பார்த்தவர்கள், இவள் இளவயதில் எப்படி இருந்திருப்பாள் என்று எண்ணாமல் இருக்க முடியாது.
பாட்டியின் பொன்னிறமான மேனியில் அதிக நிறபேதம் காட்டாத நார்ப்பட்டுப் புடவை காற்றில் படபடத்து; புடவையிலிட்ட முக்காட்டின் விளிம்பெல்லாம் குத்துக் குத்தாய் லேசாகத் தலைகாட்டும்–
மழித்து நாளாகிவிட்டதால் வளர்ந்திருக்கும்– வெள்ளி முடி. கழுத்தில் ஸ்படிக
மாலை. நெற்றியில் வியர்வையால் கலைந்த விபூதிப் பூச்சு. புடவைத்
தலைப்பால் முகத்தையும், கைகளையும், மார்புக் குவட்டின் மடிப்புகளையும் அழுந்தத் துடைத்துவிட்டுக் கொண்டாள். அப்போது வலது விலாப்புறத்தில் இருந்த சிறிய பவழம் போன்ற சிவப்பு மச்சம் வெளித் தெரிந்தது.
—மீண்டும் நிழலிலிருந்து வெயிலுக்கு வந்து புழுதி மண்ணிலிருந்து,
பழுக்கக் காய்ந்த கெடிலநதிப் பாலத்தின் கான்கிரீட் தளவரிசையில்
பாதங்களை அமைதியாகப் படிய வைத்து, அசைந்து அசைந்து அவள்
வரும்போது…..
பாலத்தின்மீது கிராதியின் ஓரமாக, பாட்டியம்மாள் மீது பட்டுவிடக்கூடாதே என்ற பய உணர்வோடு ஒதுங்கி நின்று கையிலுள்ள சிறு தகரப்பெட்டியுடன் கும்பிட்டான் ஒரு பழைய பழகிய —நாவிதன்.
‘பாட்டியம்மா….எங்கே, நெய்வேலியிலிருந்தா ? ‘ என்று அன்புடன்
விசாரித்தான்.
‘யாரு வேலாயுதமா ?….ஆமா ‘ ….உன் பெண்டாட்டி குளி குளிச்சுட்டாளா? ‘ என்று ஆத்மார்த்தமாய் விசாரித்தாள் கிழவி.
‘ஆச்சுங்க…ஆம்பளைப் பையன்தான். ‘
‘நல்லாயிருக்கட்டும்….பகவான் செயல்…. ‘ இது மூணாவது பையனா ? ‘
‘ஆமாமுங்க ‘ என்று பூரித்துச் சிரித்தான் வேலாயுதம்
‘நீ அதிர்ஷ்டக்காரன்தான்…எந்தப் பாடாவது பட்டுப் படிக்க வச்சுடு, கேட்டியா ? ‘ என்றதும் வேலாயுதம் குடுமியைச் சொறிந்தவாறு சிரித்தான்.
‘அட அசடே, என்ன சிரிக்கிறாய் ? காலம் வெகுவாய் மாறிண்டு வரதுடா;
உன் அப்பன் காலமும் உன் காலமும் தான் இப்படிப் பொட்டி தூக்கியே
போயிடுத்து… இனிமே இதொண்ணும் நடக்காது….
புருஷாள் எல்லாம் ஷாப்புக்குப் போறா… பொம்மனாட்டிகள்லேயும் என்னை மாதிரி இனிமே கெடையாதுங்கறதுதான் இப்பவே தெரியறதே….ம் …எல்லாம் சரிதான்; காலம் மாறும்போது மனுஷாளும் மாறணும்…. என்ன, நான் சொல்றது ? ‘ என்று கூறி ஏதோ ஹாஸ்யம் பேசிவிட்ட மாதிரி பாட்டி சிரித்தாள்.
பதிலுக்கு அவனும் சிரித்தான்.
‘இந்தா, வெயிலுக்கு ரெண்டைக் கடிச்சிண்டு போ ‘ என்று இடுப்பிலிருந்த
பையில் பிதுங்கி நின்ற இரண்டு வெள்ளிரிப் பிஞ்சுகளை எடுத்து அவனது ஏந்திய கைகளில் போட்டாள்.
‘பஸ்லே வரச்சே அணாவுக்கு நாலுன்னு வித்தான்….
கொழந்தைங்களுக்கு ஆகுமேன்னு ஒரு நாலணாவுக்கு வாங்கினேன் ‘
என்று அவள் சொன்னதும், வேலாயுதம் ஒரு கும்பிடு போட்டுவிட்டு
—தன்னை அவள் கடக்கும்வரை நின்று பின்னர் தன் வழியே நடந்தான்.
சிதம்பரத்தில் பிறந்து வளர்ந்த கெளரியம்மாள், தனது பத்து வயதில்
இந்தக் கடலூரில் நன்கு செயலில் இருந்த ஒரு குடும்பத்தில்
வாழ்க்கைப்பட்டாள். பதினாறு வயதில் கையிலொரு குழந்தையுடன்
கைம்மைக் கோலம் பூண்ட பின், இத்தனை காலமாய்த் தன் மகனையும்,
தன் புருஷன் பங்கில் கிடைத்த வீட்டையும் விட்டு எந்த ஊருக்கும்
சென்றதில்லை.
எனினும் தன் மகன் வயிற்றில் பிறந்த மூத்தமகள் கீதா, மணக்கோலம்
பூண்டு பத்தே மாதங்களில், தரித்திருந்த சுமங்கலி வேடத்தை, நாடகப்பூச்சைக் கலைப்பது போல் கலைத்துவிட்டுக் குடும்பத்தை அழுத்தும் பெருஞ் சோகமாய்க் கதறிக் கொண்டு தன் மடியில் வந்து வீழ்ந்து குமுறி யழுத நாள் முதல், தனது வாழ்க்கையில் நிகழ்ந்த கடைசி சோகமாய் அவளைத் தாங்கிக் கொண்டாள் கெளரிப் பாட்டி.
தன் அரவணைப்பில், தன் அன்பில், தனது கண்ணீரில், தனது ஒட்டுதலில்
அவளை இருத்திக் கொள்வதையே தன் கடமையாக ஏற்றுக்கொண்டாள். அதுவரை கீதாவின்மீது, மகன் பெற்ற குழந்தை என்ற பாசம் மட்டுமே கொண்டிருந்த பாட்டி— கணவன் இழந்த நாள் முதல் தன் உயிரையே மகன் மீது வைத்திருந்த அந்தத் தாய்—அதை மாற்றிக்கொண்டது கீதாவுக்கு வெறும் ஆறுதல் தரும் பொருட்டன்று.
கெளரிப் பாட்டி தனது இறந்த காலத்தின் நிகழ் காலப் பிரதிநிதி யெனத்
தன்னையே அவளில் கண்டாள்.
பாட்டியின் மகன் கணேசய்யர் தந்தையின் மரணத்தை— அதனால் விளைந்த அத்யந்த சோகத்தை உணராதவர் அவரது மனைவி பார்வதி அடிக்கடி ரகசியமாகக் கடிந்து கொள்வதற்கு ஏற்ப அவர் ஒரு ‘அம்மா பிள்ளை ‘ தான்.
விதவையாகிவிட்ட கீதாவைப் பற்றிப் பலவாறு குழம்பிக் குழம்பிப்
பின்னொரு நாள் ஹைஸ்கூல் படிப்போடு நின்றிருந்த அவளை,
உபாத்திமைப் பயிற்சிக்கு அனுப்ப யோசித்து, தயங்கித் தயங்கித் தன் தாயிடம் அபிப்பிராயம் கேட்டபோது, அவரது முடிவை வெகுவாகப் பாராட்டி அவள் ஏற்றுக் கொண்டதும், கெளரிப் பாட்டியை அவரால் அளக்கவே முடியவில்லை.
—பாட்டியம்மாள், மாறிய காலத்தில் பிறந்த கீதாவின் பாக்கியத்தை
எண்ணி மனத்துள் பூரித்தாள்…
பயிற்சி முடித்துப் பல காலம் உள்ளூரிலே பணியாற்றி வந்த கீதாவுக்குப்
போன வருஷம்– புதிதாகப் பிறந்து வேகமாக வளர்ந்து வரும் தொழில்
நகரமாகிய— நெய்வேலிக்கு உத்தியோக மாற்றல் வந்தபோதும் கணேசய்யர் குழம்பினார்.
‘அதற்கென்ன ? நான் போகிறேன் துணைக்கு…. ‘ என்று. பாட்டியம்மாள்
இந்தத் தள்ளாத காலத்தில் மகனையும் குடும்பத்தையும் துறந்து தனிமைப்பட தானே வலிய முன் வந்ததற்குக் காரணம், எங்கே முப்பது வயதைக்கூட எட்டாத தன் கீதா வைதவ்ய இருட் கிடங்கில் அடைப்பட்டுப் போவாளோ என்ற அச்சம்தான்.
இந்த ஒரு வருஷ காலத்தில், நீண்ட விடுமுறைகளின் போது இருவரும்
வந்து தங்கிச் செல்வது தவிர, சனி–ஞாயிறுகளில் நினைத்தபோது புறப்பட்டு வந்துவிடுவாள் பாட்டி. அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று அவளது வாடிக்கையான நாவிதன் வேலாயுதத்தையும், அதற்கு முன் அவன் அப்பனையும் தவிர, வேறு எவரிடமும் பாட்டியம்மாள் தலை மழித்துக் கொள்ளப் பழக்கப் படாததுமாகும்.
இப்போது வழியில் எதிர்ப்பட்ட வேலாயுதம், நாளைக் காலை அவள் வீட்டில் வந்து நிற்பான் என்று பாட்டிக்குத் தெரியும். வரவேண்டும் என்பது அவனுக்கும் தெரியும் அது வாடிக்கை.
ஒரு மைலுக்கு குறைவான அந்தத் தூரத்தை அரை மணி நேரமாய் வழி
நடந்து அவள் வீட்டருகே வந்தபோது கணேசய்யர் முகத்தில் தினசரிப்
பத்திரிக்கையைப் போட்டுக் கொண்டு முன் கூடத்து ஈஸிச்சேரில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். பக்கத்தில் திறந்து வைத்த தகர டின்னும் முறத்தில் கொட்டிய உளுத்தம் பருப்புமாய், மூக்குத்தண்டில் கண்ணாடியை இறக்கி விட்டுக் கொண்டு கல் பொறுக்கிக் கொண்டிருந்தாள் மருமகள் பார்வதி அம்மாள். கம்பி அழி வைத்து அடைத்த முன்புறக் குறட்டின் ஒரு மூலையில், வெயிலுக்கு
மறைவாய்த் தொங்கிய தட்டியோரமாய்ச் செருப்புகள் இறைந்து கிடக்க,
வாய்க்குள் ஏதேதோ பொருளற்ற சம்பாஷணைகளைத் தான் மட்டும்
ராகமிழுத்து முனகியவாறு குடும்ப விளையாட்டு நடத்திக் கொண்டிருந்தாள் கடைசிப் பேத்தியான ஆறு வயது ஜானா.
— பாட்டி வந்து நின்றதை யாருமே கவனிக்காதபோது, கம்பிக் கதவின்
நாதாங்கியை லேசாக ஓசைப்படுத்த வேண்டியிருந்தது. அந்தச் சிறு ஒலியில் விளையாட்டு சுவாரஸ்யத்தோடு திரும்பிப் பார்த்த ஜானா,
அன்பில் விளைந்த ஆர்வத்தோடு ‘பாட்டி ‘ என்ற முனகலுடன் விழிகளை அகலத்திறந்து முகம் விகஸித்தாள்.
‘கதவெத் தெறடி ‘ என்று பாட்டி சொல்வது காதில் விழுமுன், ‘அம்மா அம்மா… பாட்டி வந்துட்டாம்மா, பாட்டி வந்துட்டா ‘… ‘ என்று
கூவியவாறு உள்ளே ஓடினாள் ஜானா.
கதவைத் திறக்காமல் தன் வரவை அறிவித்தவாறு உள்ளே ஓடும்
குழந்தையைக் கண்டு பாட்டி சிரித்தாள்.
கணேசய்யர், முகத்தின் மேல் கிடந்த பத்திரிகையை இழுத்துக் கண் திறந்து பார்த்தார். குழந்தையின் உற்சாகக் கூப்பாட்டால் திடாரென்று எழுந்து சிவந்த விழிகள் மிரண்டு மிரண்டு வெறிக்க ஒரு விநாடி ஒன்றும் புரியாமல் விழித்தார் அவர். அதற்குள் ‘ஏண்டி சனியனே இப்படி அலறிண்டு ஓடிவறே ‘ ‘ என்று குழந்தையை வைதுவிட்டு ‘வாங்கோ… வெயில்லே நடந்தா வந்தேள்…… ஒரு வண்டி வெச்சுக்கப்படாதோ ? ‘
என்று அங்கலாய்த்தவாறே மரியாதையோடு எழுந்தோடி வந்து கதவைத்
திறந்தாள் பார்வதி.
‘இதோ இருக்கிற இடத்துக்கு என்ன வண்டியும் வாகனமும் வேண்டிக் கெடக்கு ? அவனானா பத்தணா குடு, எட்டணா குடும்பான்… ‘ என்று சலித்துக் கொண்டே படியேறி உள்ளே வந்த தாயைக்கண்டதும் ‘நல்ல வெயில்லே வந்திருக்கயே அம்மா, பார்வதி ‘… அம்மாவுக்கு மோர் கொண்டு வந்து கொடு ‘ என்று உபசரித்தவாறே ஈஸிசேரியிலிருந்து எழுந்தார் கணேசய்யர்.
‘பாவம். அசந்து தூங்கிகொண்டிருந்தே… இன்னும் செத்தே படுத்திண்டிறேன்… ‘ என்று அவரைக் கையமர்த்தியவாறே, ஈஸிசேரின் அருகே கிடந்த ஸ்டூல் மீது பையை வைத்து விட்டு முற்றத்திலிறங்கித் தொட்டித் தண்ணீரை அள்ளிக் கை கால் முகம் அலம்பி, தலையிலும் ஒரு கை வாரித் தெளித்துக் கொண்டாள் பாட்டி, பிறகு முந்தானையால் முகத்தைத் துடைத்துக்கொண்டு கூடத்து ஸ்டாண்டிலிருந்த சம்புடத்தை எடுத்து ‘என்னப்பனே… மகாதேவா ‘ என்று திருநீற்றை அணிந்துக்கொண்டு திரும்பி வரும் வரை, கணேசய்யர் ஈஸிசேரின்
அருகே நின்று கொண்டிருந்தார்.
அந்த ஈஸிசேர் பாட்டிக்கு மட்டுமே உரிய சிம்மாசனம். அவள் வீட்டிலில்லாத போதுதான் மற்ற யாரும் அதில் உட்காருவது வழக்கம்.
அவள் ஈஸிசேரில் வந்து அமர்ந்தபின் பக்கத்தில் ஒரு நாற்காலியை
இழுத்துப்போட்டு உட்கார்ந்து கொண்டு விசிறினார் கணேசய்யர்.
அதற்காகவே காத்துக் கொண்டிருந்தவள்போல் பாட்டி உட்கார்ந்ததும் அவள் மடியில் வந்து ஏறினாள் ஜானா.
‘பாட்டி வெயில்லே வந்திருக்கா…சித்தே நகந்துக்கோ… வந்ததும் மேலே
ஏறிண்டு… ‘ என்று விசிறிக் கொண்டிருந்த விசிறியால் ஜானாவைத்
தட்டினார் கணேசய்யர்.
‘இருக்கட்டும்டா….கொழந்தை ‘ நீ உக்காந்துக்கோ…. என்று குழந்தையை
மடிமீது இழுத்து இருத்திக் கொண்டாள் பாட்டி.
‘இப்ப என்ன பண்ணுவியாம் ‘ என்று நாக்கைக் கடித்து விழித்துத் தந்தைக்கு அழகு காட்டினாள் ஜானா.
ஜானாவை மடியில் வைத்துக் கொண்டே பக்கத்தில் ஸ்டூலின் மேலிருந்த பையை எடுத்து அதனுள்ளிருந்த வெள்ளிரிப் பிஞ்சுகளை வரிசையாகத் தரையில் வைத்து ஜானாவின் கையில் ஒன்றைத் தந்தாள்.
முறுக்கிச் சுருட்டி வைத்திருந்த மாற்றுப் புடவையை கொடியில்
போடுவதற்காகப் பக்கத்தில் சற்று தள்ளி வைத்தாள். பிறகு பையைத்
தலை கீழாகப் பிடித்து அதனுள்ளிருந்த மூன்று படி பச்சை வேர்க் கடலையைக் கொட்டியபோது, அதனூடே ஒரு கவர் விழுந்தது.
‘ஆமா, மீனாவும், அம்பியும் எங்கே ? காணோம் ? ‘ என்று சுற்றும்
முற்றும் பார்த்தவாறு ‘இதெ உங்கிட்டே குடுக்கச் சொன்னா கீதா ‘ என்று
கவரை நீட்டினாள் பாட்டி.
இருபது வயது நிறைந்த பெண்ணை அம்பியின் துணையோடு மாட்டினி ஷோ பார்க்க என்னதான் பக்கத்திலிருந்தாலும் —எப்படி சினிமாவுக்கு அனுப்பலாம் என்று தாய் கோபித்துக் கொள்வாளோ என்ற அச்சத்தோடு கவரை வாங்கியவாறே, ‘ஏதோ அவள் படிச்ச நல்ல நாவலாம். படமா
வந்திருக்குன்னு காலையிலிருந்து உசிரை வாங்கித்து ரெண்டு சனியன்களும். மாட்டினி ஷோ தானே…. போகட்டும்னு அனுப்பி வெச்சேன் ‘ என்றார் கணேசய்யர்.
‘ஓ ‘ தொடர் கதையா வந்துதே….அந்தக் கதை தானா அது ?… பேரைப்
பார்த்தேன்… ‘ என்று ஒரு பத்திரிக்கையின் பெயர், ஓர் எழுத்தாளரின்
பெயர் முதலியவற்றைக் குறிப்பாகக் கேட்டாள் பாட்டி. ‘இதுக்காகப்
போய் ஏன் கொழந்தைகளை சனியன்னு திட்டறாய் ?… நோக்கும்
எனக்கும் சினிமான்னா என்னன்னே தெரியாது…. இந்தக் காலத்துப்
பிள்ளைகளுக்கு சினிமாவைத் தவிர வேற ஒண்ணும் தெரியாது. நம்ம
கொழந்தைகள் எவ்வளவோ பரவாயில்லைன்னு நெனச்சிக்கோ… ‘ என்று
மகனுக்குப் புத்தி சொல்லிவிட்டு, ‘கவர்லே என்ன சொல்லு– அவளைக்
கேட்டப்போ, ‘அப்பா சொல்லுவா ‘ ன்னு பூடகமா குடுத்து அனுப்பிச்சாள்
‘ என விளக்கினாள் பாட்டி.
கவரை உடைத்து, கண்ணாடியை எடுத்து மாட்டிக் கொண்டு அதனுள்ளிருந்த ஒரே காகிதத்தில் சுருக்கமாக எழுதியிருந்த வாசகங்களை படிக்க ஆரம்பித்ததும் — கணேசய்யரின் கைகள் நடுங்கின; முகமெல்லாம் ‘குப் ‘பென வியர்த்து உதடுகள் துடித்தன.
படித்து முடித்ததும் தலை நிமிர்ந்து எதிர்ச் சுவரில் தொங்கிய கீதாவின்
மணக்கோல போட்டோவை வெறித்துப் பார்த்தார்….
தாயினருகே அமர்ந்து இனிமையான சூழ்நிலையில் மகிழ்ச்சியுடனிருந்த
கணேசய்யரின் முகம் திடாரென இருளடைந்தது ‘ நாற்காலியின் கைப்பிடியை இறுகப் பற்றிக்கொண்டு தாயின் முகத்தை வெறித்துப் பார்த்தார். அவர் கையிலிருந்த கடிதம் கீழே நழுவியதைக்கூட அவர் கவனிக்கவில்லை.
‘என்ன விபரீதம் ‘ ‘ என்று துணுக்குற்ற பாட்டியம்மாள், தரையில்
விழுந்த அக்கடிதத்தை வெளிச்சத்தில் பிடித்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தாள்; அவளால் கண்ணாடியில்லாமலே படிக்க முடியும் ‘
‘என் அன்பிற்குரிய அப்பா, அம்மா, பாட்டி ஆகியோருக்கு….
இந்த கடிதத்தை எழுதுகையில் ஆறு மாதங்கள் தீர்க்கமாய் யோசித்து
தீர்மானமான ஒரு முடிவுக்கு வந்தபின் தெளிந்த மனத்தோடுதான்
எழுகிறேன். இந்தக் கடிதத்திற்குப் பிறகு உங்களுக்கும் எனக்கும் கடிதப்
போக்கு வரத்தோ, முகாலோபனமோ கூட அற்றுப் போகலாம் என்பதும்
தெரிந்தே எழுதுகிறேன்.
என்னோடு பணி புரியும் ஹிந்தி பண்டிட் திருராமச்சந்திரன் என்பவரை
வருகின்ற ஞாயிறன்று நான் பதிவுத் திருமணம் செய்துகொள்ள நிச்சயித்து விட்டேன். நான் விதவை என்பது அவருக்குத் தெரிந்ததுதான்.
ஆறுமாத காலமாய் நான் எனது உணர்ச்சிகளோடு– இது பாபகரமான
காரியம் என்ற ஓர் அர்த்தமற்ற உணர்ச்சியோடு– போராடித்தான் இம் முடிவுக்கு வந்தேன். உணர்வு பூர்வமான வைதவ்ய விரதத்துக்கு ஆட்படமுடியாமல் வேஷங்கட்டித்திரிந்து, பிறகு அவப் பெயருக்கு ஆளாகிக் குடும்பத்தையும் அவமானப் படுத்தாமல் இருப்பதே சிறந்த ஒழுக்கம் என்று உணர்ந்திருக்கிறேன். இந்தமுப்பது வயதில்– இவ்வளவு சோதனைகளைத் தாங்காமல்– இன்னும் ஐந்தாண்டுகளுக்குப் பின் இதே முடிவுக்கு வர நேரிடுமோ என்ற அச்சமும் பிறந்தே– இப்போதே செய்தல் சரி என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்…
என் காரியம் என் வரைக்கும் சரியானதே ‘
நான் தவறு செய்வதாகவோ, இதற்காக வருந்த வேண்டுமென்றே, உங்களிடம் மன்னிப்புக் கோரவேண்டுமென்றே கூட எனக்குத் தோன்றவில்லை. எனினும் உங்கள் உறவை, அன்பை இழந்து விடுகிறேனே என்ற வருத்தம் சில சமயங்களில் அதிகம் வாட்டுகின்றது…
இருப்பினும் ஒரு புதிய வாழ்க்கையை, புதிய வெளிச்சத்தைப் பெற்று, ஒரு புது யுகப்பிரஜையாகச் சஞ்சரிக்கப் போகிறேன் என்ற லட்சிய நிறைவேற்றத்தில் நான் ஆறுதலும் மட்டற்ற ஆனந்தமும் கொள்கிறேன்.
இந்தக் காலத்தில் யார் மனம் எப்படி மாறும் என்று சொல்லமுடியாது.
ஒரு வேளை நீங்கள் என் முடிவை ஆதரித்தா… இன்னும் ஒரு வாரமிருக்கிறது… உங்களை, உங்கள் அன்பான வாழ்த்தை
எதிர்பார்க்கிறேன். இல்லையெனில் உங்களைப் பொறுத்தவரை ‘கீதா
செத்துவிட்டாள் ‘ என்று தலை முழுகி விடுங்கள்.
ஆமாம்; ரொம்பச் சுயநலத்தோடு செய்த முடிவுதான். எனக்காகப் பாட்டியைத் தவிர வேறு யார்தான் தங்கள் நலனைத் துறந்து ‘தியாகம் ‘ செய்துவிட்டார்கள் ? ஏன் செய்யவேண்டும் ?
உங்கள் மீது என்றும்மாறாத அன்பு கொண்டுள்ள
கீதா ‘
‘என்னடா.. இப்படி ஆயிடுத்தே ? ‘ என்பதைத் தவிர வேறு ஒன்றும்
சொல்லவோ செய்யவோ சக்தியிழந்தவளாய் ஏக்கம் பிடித்து வெறித்து
விழித்தாள் பாட்டி.
‘அவ செத்துட்டா…தலையெ முழுகிட வேண்டியது தான் ‘ என்று
நிர்த்தாட்சண்யமான குரலில் உறுதியாகச் சொன்னார் கணேசய்யர்.
பாட்டி திகைத்தாள் ‘
–தாயின் யோசனைக்கோ, பதிலுக்கோ, கட்டளைக்கோ, உத்தரவுக்கோ
காத்திராமல் அந்த ‘அம்மாப் பிள்ளை ‘ முதன் முதலில் தானே ஒரு
தீர்மானத்துக்கு வந்தது இது தான் முதல் தடவை.
‘அப்படியாடா சொல்றே ? ‘ என்று கண்களிரண்டும் நீர்க்குளமாக,
வயோதிக நெஞ்சு பாசத்தால் துடிக்க, நெஞ்சில் கை வைத்துக் கேட்டாள்
பாட்டி.
‘வேறே எப்படியம்மா சொல்லச் சொல்றே ?…நீ பிறந்த வம்சத்திலே
இந்தக்குடும்பத்திலே… ஐயோ… ‘ ‘ என்று இந்த அவலத்தைக் கற்பனை
செய்யமுடியாமல் பதறினார் கணேசய்யர்.
‘நான் பிறந்த யுகமே வேறேடா ‘ என்ற வார்த்தை பாட்டிக்கு வாயில்
வந்து நின்றது. அப்பொழுது தான் பாட்டிக்கு ஓர் அரிய உண்மை
இவ்வளவு காலத்திற்குப் பின் புரிந்தது:
‘என் மகன் எனது சொல்லுக்கும் எனது உத்தரவுக்கும் காத்திருந்தது
வெறும் தாயன்பால் மட்டுமல்ல; நான் ஒரு யுகத்தின் பிரதிநிதி. அது
ஆசாரமான யுகம்; நான் பிறந்தது சாஸ்திரத்துக்கு அஞ்சி நடந்த
குடும்பத்தில்… அதுபோல் தன் குடும்பமும் நடக்க — நடத்தி வைக்கத்
தன்னால் ஆகாவிடினும் என்னால் ஆகும் என்ற நம்பிக்கையில்– அந்த
யுகத்தை அந்த ஆசார ஜீவிதத்தைக் கெளரவிப்பதன் பொருட்டே என்
சொல்லே, என் வார்த்தையை அவன் எதிர்பார்த்திருந்தான்… ‘ என்று
தன்னைப்பற்றியும், தன் மகனின் மூர்க்கமான தீர்மானம் பற்றியும்,
தனித்துப்போன அன்பிற்குரிய கீதாவைப்பற்றியும் எண்ணி மெளனமாய்
வாயடைத்து உட்கார்ந்தாள் பாட்டி.
அப்போது அங்குவந்து அவர்களை விபரீதச் சூழ்நிலைக்கு ஆட்படுத்தியிருக்கும் அந்தக் கடிதத்தை எடுத்து படித்த பார்வதி ‘அடி, பாவி மகளே…என் தலையிலே தீயை வெச்சுட்டியேடி ‘ ‘ என்று தலையிலடித்துக் கொண்டு அழுதாள்.
பாட்டி, தன் இயல்புக்கேற்ற நிதான புத்தியுடன் அந்தக் கடிதத்தை மீண்டும் கையிலெடுத்து அந்தக் கடைசி வரிகளைப் படித்தாள்….
‘ரொம்ப சுய நலத்தோடு செய்த முடிவுதான். எனக்காகப்-பாட்டியைத் தவிர வேறு யார்தான் தங்கள் நலனைத் துறந்து, ‘தியாகம் ‘ செய்து விட்டார்கள் ? ‘ –பாட்டிக்குச் ‘சுருக் ‘ கென்றது…..உதட்டைக் கடித்துக் கொண்டாள்….
இந்த வார்த்தைகளின் அர்த்தம் மற்றவர்களுக்குப் புரியாது. பாட்டிக்குப்
புரியும்.
கீதா, பதினெட்டு வயதில் நெற்றியிலிடும் திலகத்தை மறந்தது போல்,
கூந்தலில் சூடும் பூவைத் துறந்தது போல்– ‘அது அவள் விதி யென்று
சொல்லி அவள் சோகத்தையே மறந்து விடவில்லையா, அவளைப்பெற்ற
தாயும் தந்தையும் ?…
கீதா இப்படியாகி வந்த பிறகுதானே பார்வதி,
அம்பியையும் ஜானாவையும் பெற்றெடுத்தாள் ‘…
–அதற்கென்ன அது தான் வாழ்கின்றவர்களின் வாழ்க்கை இயல்பு.
வாழாத கீதாவின் உள்ளில் வளர்ந்து சிதைந்து, மக்கி மண்ணாகிப் பூச்சி
அரிப்பதுபோல் அரித்து அரித்துப் புற்றாய்க் குவிந்திருக்கும் உணர்ச்சிகளை, நினைவுகளை, ஆசைகளை, கனவுகளை அவர்கள் அறிவார்களா ?
ஆனால்…
கீதாவைப் போல் அவளை விடவும் இள வயதில் அரை நூற்றாண்டுக்கு
முன் நிலவிய ஹிந்து சமூகத்தின் வைதவ்யக் கொடுந் தீயில் வடுப்பட்டு வாழ்விழந்து, அந்த நினைவுகளையெல்லாம் கொண்டிருந்த,
அந்தக் கனவுகளை யெல்லாம் கண்டிருந்த, அந்த ஆசைகளை யெல்லாம்
கொன்றிருந்த கெளரிப் பாட்டி, அவற்றை யெல்லாம் கீதாவிடம் காணாமலா, கண்டுணராமலா இருந்திருப்பாள் ?
அதனால்தான் கணேசய்யரைப் போலவோ, பார்வதி அம்மாளைப் போலவோ… கீதா இப்படி நடந்து கொள்ளப் போவதைப் அறிந்து..
அவளை வெறுத்து உதறவோ, தூஷித்துச் சபிக்கவோ முடியாமல் ‘ஐயோ
‘ என்ன இப்படி ஆய்விட்டதே ‘… என்ன இப்படியாய் விட்டதே ‘ என்று
கையையும் மனசையும் நெறித்துக் கொண்டு தவியாய்த் தவிக்கிறாள்
பாட்டி.
பொழுது சாய்ந்து விளக்கு வைக்கும் நேரத்தில் மாட்டினி ஷோவுக்குப்
போயிருந்த மீனாவும் அம்பியும் வீடு திரும்பினார்கள். வாசற்படியில்
கால் எடுத்து வைத்த அம்பி, கூடத்து ஈஸி சேரில் சாய்ந்து படுத்து ஆழ்ந்த யோசனையில் அமிழ்ந்திருக்கும் பாட்டியைக் கண்டதும் சட்டென்று நின்று திரும்பிப் பின்னால் வரும் மீனாவிடம்,
‘பாட்டிடா… ‘ என்று ரகசியமாக எச்சரித்தான்.
‘எங்கே ? உள்ளே இருக்காளா, கூடத்தில் இருக்காளா ? ‘ என்று பின் வாங்கி நின்றாள் மீனா.
‘சிம்மாசனத்தில்தான் சாஞ்சிண்டு தூங்கறா… ‘ என்றான் அம்பி.
மீனா தோள் வழியே ‘ஸ்டைலாக ‘ கொசுவித் தொங்கவிட்டிருந்த
தாவணியை ஒழுங்காய்ப் பிரித்து, இழுத்து இடுப்பில் செருகிக் கொண்டு,
மேலாடை ஒழுங்காக இருக்கிறதா என்று ஒரு முறை கவனித்த பின்
தலையைக் குனிந்து சாதுவாய் உள்ளே நுழைந்தாள்.
உள்ளே வந்த பின்தான் பாட்டி தூங்கவில்லை என்று தெரிந்தது. அப்பா
ஒரு பக்கம் நாற்காலியிலும் அம்மா ஒரு பக்கம் முகத்தில் முந்தானையைப் போட்டுக் கொண்டு விம்மியவாறு ஒரு மூலையிலும் விழுந்து கிடப்பது என்ன விபரீதம் என்று புரியாமல் இருவரும் திகைத்து நின்றனர்.
அப்போது ஜானா சிரித்துக் கொண்டே அம்பியிடம் ஓடி வந்தாள். ‘பாட்டி
வெள்ளரிப் பிஞ்சு வாங்கியாந்தாளே… ‘ என்ற ஜானாவின் குரல் கேட்டுப்
பாட்டி திரும்பிப் பார்த்தாள் மீனாவை.
‘எப்ப வந்தேள் பாட்டி ? ‘ என்ரு கேட்டுவிட்டு ‘என்ன விஷயம்–
இதெல்லாம் என்ன ? ‘ என்று சைகையால் கேட்டாள் மீனா.
பாட்டியின் கண்கள் குளமாயின.
மீனாவைப் பார்க்கும்போதுதான் அவளுக்கு இன்னொரு விஷயமும்–
கணேசய்யர் கீதாவைத் தலை முழுகச் சொல்வதன் காரணம்,
பார்வதியம்மாள் கீதாவைச் சபிப்பதன் நியாய ஆவேசம் இரண்டும்–புரிந்தது பாட்டிக்கு.
அங்கே கிடந்த அந்தக் கடிதத்தை மீனா எடுத்துப் படித்தாள்.
‘அதை நீ படிக்க வேண்டாம் ‘ என்று தடுக்க நினைத்தாள் பாட்டி. பிறகு
ஏனோ ‘படிக்கட்டுமே ‘ என்று எண்ணி மீனாவின் முகத்தையே உற்றுக்
கவனித்தாள்.
மீனாவின் முகம் அருவருப்பால் சுளித்தது.
‘அடி நாசமாப் போக ‘ என்று அங்கலாய்த்தவாறே தொடர்ந்து கடிதத்தைப்
படித்தாள். அவள் தோள் வழியே எக்கி நின்று கடிதத்தைப் படித்த அம்பி
கூட விளக்கெண்ணெய் குடிப்பது போல் முகத்தை மாற்றிக் கொண்டான்.
வீடே சூன்யப் பட்டது. ஊரெல்லாம் பிளேக் நோய் பரவிக்கிடக்கும் போது
வீட்டில் ஒரு எலி செத்து விழக்கண்டவர்கள் போல் ஒவ்வொருவரும்
மிகுந்த சங்கடத்தோடு இன்னொருவர் முகத்தைப் பார்த்தனர்.
இரவு முழுதும் கெளரிப் பாட்டி தூங்கவில்லை. சாப்பிடவில்லை;
கூடத்து ஈஸிசேரை விட்டு எழுந்திருக்கவும் இல்லை.
மகனைப் பார்த்தும் மருமகளைப் பார்த்தும், மற்றப் பேரக்குழந்தைகளைப்
பார்த்தும், கீதாவை நினைத்தும் பெருமூச் செறிந்து கொண்டிருந்தாள்.
‘வழக்கத்துக்கு விரோதமாய் என்னை வழியனுப்ப பஸ் ஸ்டாண்டுக்கு
வந்து, பஸ் புறப்படும் போது முந்தானையால் கண்களைக் கசக்கிக்
கொண்டாயடி கீதா ? இப்போதல்லவா தெரிகிறது… பாட்டியை
நிரந்தரமாப் பிரியறமேன்னுட்டு, பாவம் கொழந்தெ கண்கலங்கி
நின்னுருக்கேன்னு… இப்பன்ன புரியறது… கண்ணிலே தூசு
விழுந்திருக்கும்னு நினைச்சேனே பாவி ‘–
‘என்னடி இப்படி பண்ணிட்டியே ‘ ‘ என்று அடிக்கடி தன்னுள் குமுறிக்
குமுறிக் கேட்டுக் கொண்டாள் பாட்டி.
விடிகின்ற நேரத்துக்குச் சற்று முன்பு தன்னையறியாமல் கண்ணயர்ந்தாள். கண்மூடிக் கண் விழித்தபோது மாயம் போல் விடிவு கண்டிருந்தது.
தெருவாசற்படியின் கம்பிக் கதவோரமாக கைப் பெட்டியுடன் வந்து
காத்திருந்தான் வேலாயுதம்.
கண் விழித்த பாட்டி– நடந்த தெல்லாம் கனவாகி விடக்கூடாதா என்று
நினைத்து முடிக்கு முன் ‘இது உண்மை ‘ என்பது போல் அந்தக் கடிதம்
ஸ்டூலின் மீது கிடந்தது.
அந்த கடிதத்தை எடுத்து மீண்டும் படித்தாள் பாட்டி. அப்போது
அறைக்குள்ளிருந்து வந்த கணேசய்யர், இரவெல்லாம் இதே நினைவாய்க்
கிடந்து மறுகும் தாயைக் கண்டு தேற்ற எண்ணி ‘அம்மா வேலாயுதம்
வந்திருக்கான்… அவள் செத்துட்டானு நெனைச்சித் தலையை செரைச்சி
தண்ணிலே போயி முழுகு… ‘ என்றார்.
‘வாயை மூடுடா… ‘ என்று குமுறி எழுந்தாள் பாட்டி. காலங் கார்த்தாலே
அச்சான்யம் பிடிச்ச மாதிரி என்னபேச்சு… இப்ப என்ன நடந்துட்டுதுன்னு
அவளைச் சாகச் சொல்றே ?… ‘ என்று கேட்டுவிட்டு, தாங்க முடியாத
சோகத்துடன் முகமெல்லாம் சிவந்து குழம்பக் கதறியழுதாள் பாட்டி.
பிறகு சிவந்த கண்களைத் திறந்து ஆத்திரத்துடன் கேட்டாள்.
‘என்னடா தப்புப் பண்ணிட்டா அவ ?… என்ன தப்புப் பண்ணிட்டா,
சொல்லு, ‘ என்று தன் தாய் கேட்பதைக் கண்டு, கணேசய்யருக்கு ஒரு
விநாடி ஒன்றுமே புரியவில்லை.
‘என்ன தப்பா ?…… என்னம்மா பேசறே நீ ? உனக்குப் பைத்தியம்
புடிச்சிடுத்தா ? ‘ என்று கத்தினார் கணேசய்யர்.
அடுத்த விநாடி தன் சுபாவப்படி நிதானமாக மகனின் முகத்தைப் பார்த்தவாறு, அமைதியாக யோசித்தாள் பாட்டி. தன் மகன் தன்னிடம் இப்படிப்பேசுவது இதுவே முதல் தடவை.
பாட்டி மெல்லிய குரலில் நிதானமாய்ச் சொன்னாள்: ‘ஆமாம்டா…
எனக்குப் பைத்தியந்தான் … இப்பப் பிடிக்கலைடா… இது பழைய பைத்தியம் ? தீரமுடியாத பைத்தியம்… ஆனால் என்னோட பைத்தியம்– என்னோட போகட்டும் அந்தப் பைத்தியம் அவளுக்குப் ‘படார் ‘ னு தெளிஞ்சிருக்குன்னு அதுக்கு யார் என்ன பண்றது ?…… அவதான் சொல்லிட்டாளே– என் காரியம் என் வரைக்கும் சரி, வேஷம் போட்டு ஆடி அவப் பேரு வாங்காம விதரணையா செஞ்சிருக்கேன்னு… ‘
‘அதனாலே சரியாகிடுமா அவ காரியம் ? ‘ என்று வெட்டிப் பேசினார்
கணேசய்யர்.
‘அவ காரியம் அவ வரைக்கும் சரிங்கறாளே அவதான்… அதுக்கென்ன
சொல்றே ? ‘ என்று உள்ளங் கையில் குத்திக் கொண்டாள் பாட்டி.
‘சாஸ்திரம் கெட்ட மூதேவி. ஆசாரமான குடும்பத்துப் பேரைக் கெடுத்த
சனி — செத்துத் தொலைஞ்சுட்டானு தலையை முழுகித் தொலைன்னு
சொல்றேன் ‘ என்று பல்லைக் கடித்துக்கொண்டு கத்தினார் கணேசய்யர்.
பாட்டியம்மாள் ஒரு விநாடி தன்னையும் தன் எதிரே நிற்கும் மகனையும்
வேறு யாரோ போல் விலகி நின்று பார்த்துவிட்டு, ஒரு கைத்த சிரிப்புடன் கூறினாள்.
‘நம்ம சாஸ்திரம்…ஆசாரம் ‘ அப்படான்னா நீ என்ன பண்ணியிருக்கணும்
தெரியுமா ? என்னை என்ன பண்ணித்து தெரியுமா அந்த சாஸ்திரம் ?….அப்போ நீ பால் குடிக்கிற கொழந்தையடா…எனக்குப் பதினைஞ்சி வயசுடா ‘ என் கொழந்தை, என் மொகத்தெப் பார்த்துப் பேயைப் பார்த்ததுபோல் அலறித்தேடா…. ‘ பெத்த தாய் கிட்டே பால்குடிக்க முடியாத குழந்தை கத்துவே; கிட்டே வந்தா மொட்டையடிச்ச என்னைப் பார்த்து பயத்துலே அலறுவே…. அப்படி என்னை, என் விதிக்கு மூலையிலே உட்காத்தி வெச்சாளேடா ‘ அந்த கோரத்தை நீ ஏண்டா பண்ணலே கீதாவுக்கு ?…..ஏன் பண்ணலே சொல்லு ‘ என்று கண்களில் கண்ணீர் வழியக் கேட்கும்போது, கணேசய்யரும் கண்களை பிழிந்து விட்டுக் கொண்டார் ‘ அவள் தொடர்ந்து பேசினாள்.
‘ஏண்டாப்பா உன் சாஸ்திரம் அவளைக் கலர் புடவைக் கட்டிக்கச்
சொல்லித்தோ ? தலையைப் பின்னிச் சுத்திண்டு பள்ளிக்கூடம்
போய்வரச் சொல்லித்தோ ? தன் வயித்துக்குத் தானே சம்பாத்திச்சுச்
சாப்பிடச் சொல்லித்தோ ? இதுக்கெல்லாம் நீ உத்தரவு கேட்டப்போ நான்
சரின்னேன், ஏன் ?….
காலம் மாறிண்டு வரது; மனுஷாளும் மாறணும்னுதான் ‘ நான் பொறந்த குடும்பத்தலேன்னு சொல்றயே….
எனக்கு நீ இருந்தே ‘ வீடும் நெலமும் இருந்தது. அந்தக் காலமும்
அப்படி இருந்தது. சீதா பண்ண காரியத்தை மனசாலே கூட நெனக்க முடியாத யுகம் அது. அப்போ அது சாத்தியமாவும் இருந்தது. இப்போ முடியலியேடா…. எனக்கு உன் நிலைமையும் புரியறது—அவளும் புரிஞ்சுதானே எழுதி இருக்கா….உன் சாஸ்திரம் அவளை வாழ வைக்குமாடா ? அவளுக்கு அது வேண்டாம்னுட்டா….ஆனா, டேய் கணேசா…. என்னெ மன்னிச்சுக்கோடா…
எனக்கு அவ வேணும் ‘ அவதாண்டா வேணும்…. எனக்கு இனிமே என்ன வேண்டி இருக்கு ‘ என் சாஸ்திரம் என்னோடேயே இருந்து இந்தக் கட்டையோட எரியும்….
அதனாலே நீங்க நன்னா இருங்கள்…. நான் போறேன்…. கீதாவோடேயே
போயிடறேன்…. அது தான் நல்லது. அதுக்காக நீ உள்ளூரத் திருப்திப்
படலாம்—யோசிச்சுப் பாரு இல்லேன்னா அவளோட சேத்து எனக்கும்
ஒரு முழுக்குப் போட்டுடு ‘ நான் வர்ரேன் ‘ என்று கூறியவாறே மாற்றுப்
புடவையைச் சுருட்டிக் காக்கிப் பைக்குள் திணித்தவாறு எழுந்தாள்
பாட்டியம்மாள்.
‘அம்மா ‘ ஆ…. ‘ என்று கைகளைப் கூப்பிக்கொண்டு தாரை தாரையாய்க்
கண்ணீர் வடித்தார் கணேசய்யர்.
‘அசடே….எதுக்கு அழறே ? நானும் ரொம்ப யோசிச்சுத்தான் இப்படி முடிவு பண்ணினேன்… என்ன பண்ணினாலும் அவ நம்ம கொழந்தேடா ‘
என்று மெதுவாய்ச் சொல்லிவிட்டு உட்புறம் திரும்பிப் பார்த்தாள்.
‘பார்வதி நீ வீட்டெச் சமத்தாப் பார்த்துக்கோ… ‘ என்று எல்லோரிடமும்
விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டாள் பாட்டி.
‘எனக்கு உடனே போயி கீதாவைப் பார்க்கணும் ‘ என்று தானே சொல்லிக் கொண்டு திரும்பும்போது, வாசற்படியில் நின்றிருந்த வேலாயுதத்தைக் கண்டாள் பாட்டி.
‘நீ போடாப்பா….நான் அவசரமாப் போறேன் நெய்வேலிக்கு ‘ என்று
அவனிடம் நாலணாவைத்தந்து அனுப்பினாள்.
‘இனிமேல் இவனுக்கு இங்கு வேலை இல்லை—அதற்கென்ன ?
உலகத்தில் என்னென்னமோ மாறுகிறது ‘ நான் ஒரு நாவிதனைக்கூட
மாற்றிக்கொள்ளக் கூடாதா ? ‘ என்று எண்ணிச் சிரித்துக்கொண்டாள்.
இடுப்பில் பையை வைத்துக் கொண்டு வாசற்படியிலிறங்கிய பாட்டி,
ஒரு முறை திரும்பி நின்று ‘நான் போயிட்டு வரேன் ‘ என்று மீண்டும்
விடை பெற்றுக்கொண்டாள்.
அதோ, காலை இளவெயிலில், சூடில்லாத புழுதி மண்ணில் பாதங்கள்
அழுந்தி அழுந்திப் பதிய ஒரு பக்கம் சாய்ந்து சாய்ந்து நடந்துக்கொண்டிருக்கும் பாட்டியின் தோற்றம்…..
வேகமாய் ஆவேசமுற்று வருகின்ற புதிய யுகத்தை, அமைதியாய்
அசைந்து அசைந்து நகரும் ஒரு பழைய யுகத்தின் பிரதிநிதி எதிர்
கொண்டழைத்துத் தழுவிக்கொள்ளப் பயணப்படுவதென்றால் ?……
ஓ ‘ அதற்கு ஒரு பக்குவம் தேவை ‘
——————————————————————————————————



கண்ணீருடன் இதனை படித்து முடித்தேன்.காலத்திற்கு ஏற்றாற்போல் நாமும் மாறிக்கொள்ளத்தான் வேண்டும்
” யுக சந்தி ” என்பது எழுத்தாணி மூலம் மாறிவரும் சமூகத்தின் புதிய செயல்களை சரியாக அடையாளப்படுத்தி அதன் பிரதிநிதிகளைக் கதாபாத்திரங்களாக எழுதிக் காட்டிய ” தில்லானா ஆசாமி ” நம்ம ஜெயகாந்தன் …. அவர் எழுதிய பல கதைகள் பலத்த சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் எதிர்கொண்டவை. யுகசந்தி கதையும் அப்படிப் பட்ட கதைதான்…. ஆனால் அவர் நன்கு திட்டமிட்ட பின் தான் தன் கதைகளை எழுத்துருவாக்கினார் என்பதில் வியப்பேதுமில்லை ….
பால்ய விவாகம், அதனால் ஏற்பட்ட விதவைகள் பிரச்சினை என்று சமூகத்தின் அவலங்களை ” கௌரி பாட்டியின் ” மூலம் தோலுரித்து காட்டிய அவரை பாராட்டியே தீர வேண்டும் — இது சமூகம் சார்ந்த எழுத்தாளனின் பல படைப்புகளில் ஒன்று … அதே நேரம் …
திரு பாக்கியம் ராமசாமியின் மறைவு மாபெரும் சோகம் — கௌரிப் பாட்டி என்றவுடன் — அடுத்து நினைவுக்கு வந்தது ” சீதாப்பாட்டி ” தான் — அன்றையகாலத்தில் அப்புசாமியும் சீதாப்பாட்டியும் என்றவுடனே சிரிப்பு பொங்கிவரும் — அந்தளவுக்கு நகைச்சுவை கதைகள் — நகைச்சுவையை எழுத்தில் வடிப்பது அவ்வளவு சுலபமல்ல என்பதை அறிந்தவர்கள் நிச்சயம் – நினைகூறுவார்கள் இந்த ” அப்புசாமி – சீதாப்பாட்டி ” — தம்பதியினரை …. கதையாக — தொடராக — கார்ட்டூனாக எந்த ரூபத்திலும் கிச்சுகிச்சு மூட்டியவர்களை உருவாக்கிய பாக்கியம் அவர்களின் மறைவு — மற்றுமோர் – பேரிழப்பு …. !!!
I concluded reading with wet eyes , Jayakanthan is always great . I too have a similar story to tell, my patti – also, widowed after marrying to a educated man in those days ( Thatha was a Engr from Guindy eng college – long long ago ..) , at the time of his death he did not die as a rich man, you can imagine the plight of my patti with a son and a daughter (my mother ) . Its a real thapas , she also had a mottai, and white /kavi saree ( saree no its only a cloth )… the story is so much true , as you said , times have changed . I remember once Gurumurthy talking about his amma , how she brought them up as a widow, and that too as a poor widow.
In this connection, I would like to share a conversation I had with a gentleman from Hyderabad but lives in Canada , he was talking about the disturbance for movie water ( the so called sangh people did not allow that movie to be shot ) it was being made by Deepa Metha from Canada, earlier she made Fire , and shown a lesbian story line – but along with that , the story was going something like this , where in a old couple , who always in bed, can’t move or stand and sit, they are shown as some characters , where in a servant shown that , he watches x rated movies in front of them, and does ….ing while a Ramleela program is going at the same. See how deep she goes into insult Ramayan etc.,
And she was making a movie , in mathura lots of widows are dropped in and around the temple , it seems they are very poor, old & young , and they are dropped by their son/ daughter . She was trying to make movie on that , mathura widows , being young etc., how they have hormonal problems .
Then the canada gentleman agreed , even though he was a muslim, his mother also had to undergo lots of trouble, when his father died, and agreed that Deepa Metha is on the wrong side.
Just one look at her photgraph you will understand , what I am talking about.
I would like to share this story too, and I am sure you will enjoy this
http://azhiyasudargal.blogspot.ae/2012/03/blog-post_14.html
சுந்தரராமன் – உங்கள் முதல் பத்தியைப் படித்து நெகிழ்ந்தேன். இதனைத் தாண்டிவராத பிராமணர்கள் அரிது.
மற்ற பகுதிகள் இடுகைக்குச் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது. எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். நியாயம் மட்டும்தான் காலவெள்ளத்தில் வெற்றிபெறும். மற்றவைகள் அந்த நேரத்தில் சலனம் உண்டாக்கினாலும், வெற்றிபெறாது. சதி, தேவரடியார், மலையாள வழக்கமாக இருந்த மேற்சீலை அணியவிடாதது, வைதவ்யம், பிற சமூகத்து மக்களை அவமதித்தல் (எந்தச் சமூகம் செய்திருந்தாலும்) போன்றவை காலவெள்ளத்தில் மறைவது நிச்சயம்.
OK , I understood your point … some time in the urge to say few things, I mix up ..its all in the bottom, and it comes out some time at a appropriate time and at times inappropriately .
பொறுமையாக படித்தேன். இரண்டு பக்கங்களில் முடித்திருக்க வேண்டிய கதையை, 10 பக்கங்கள் வரை நீட்டித்து விட்டார் ஜெகா. பிழியப்பிழிய தத்துவங்களும், வளவள வர்ணனைகளும், கதையில் ஒட்ட மறுக்கின்றன. புதுமைப்பித்தன் இது போன்ற கதையை மூன்று பக்கங்களில் முடித்திருப்பார். அதனால்தான் அவரை சிறுகதை மன்னர் என்கிறார்கள்.
Justin Robers,
நண்பரே, இரண்டு பேரையும் ஒப்பீடு செய்வது சரியல்ல.
அவர் அவருக்கு என்று தனித்தனி பாணி…
உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் விட்டு விடுங்கள்.
தேவையின்றி, மிகச்சிறந்த எழுத்தாளர் ஒருவரை அவமதிக்காதீர்கள்.
-காவிரிமைந்தன்
நான் விமர்சனம் எழுதலாமா? அறிவு ஜீவி என்று தாக்கப்படுவேனா? எழுதலாம் என்றால் வைக்கிறேன் பாருஙக்ள். நான் இன்னும் இக்கதையை வாசிக்கவில்லை. வாசித்தபின் அதை மொழியாக்கம் செய்து வெளியிடுவேன் என் ஆங்கிலப்பதிவில். ஏற்கனவே ஜயமோஹனின் கதையை இங்கு வாசித்துவிட்டு ஆங்கிலமொழியாக்கமும் விமர்சனமும் வைக்கப்பட்டிருக்கின்றன அங்கே.
விமர்சனமல்லாத ஒன்றை மட்டும் சொல்கிறேன்.
அரசியல்வாதிகள்; நடிகர்கள்; எழுத்தாளர்கள் – இருப்பவர்களும், மறைந்தவர்களும் சேர்த்து – இவர்களைக்குறிப்பிடும்போது ”அவர்கள்” என சேர்த்துச் சொல்வது மரபன்று. ஜெயகாந்தன்; ஜெயமோகன், நா.பா, மு.வ, சுஜாதா, கருநாநிதி, ஸ்டாலின், ராமதாஸ், ஜெயலலிதா, தமிழிசை, என மொட்டையாகத்தான் சொல்வது. தேவையான இடத்தில் மரியாதைச்சொற்கள்; தேவையில்லாத மரபு இருக்கும்போது, அங்கே வலிந்து புகுத்துவது சரிதானா?
// ”அவர்கள்” என சேர்த்துச் சொல்வது மரபன்று. //
யாருடைய மரபு இல்லை ? உங்களுக்கு வேண்டுமானால் மரபின்றி
இருக்கலாம். கோபம் கொண்டு எழுதினால் கூட, யாரையும் மரியாதை
குறையாமல் குறிப்பிடுவது கே.எம். சாரின் மரபு.
மரியாதை கொடுத்து எழுதுவதை குறை கூறும் முதல் ஆசாமியை இங்கே
பார்க்கிறேன். சிலர் கிறுக்குத்தனமாகவே எழுதுவதை மரபாக வைத்திருக்கிறார்கள் என்ன செய்வது ?
எவரையும் தனிநபராக எடுத்துப்பேசும்போது அவர்கள் எனலாம். அது பேசுபவரின் விருப்பத்தைப் பொறுத்தது. ஆனால் அவரை ஒரு பொது நபராக (மதத்தலைவர்கள் விலக்கு) – எழுத்தாளர், அரசியல்வாதி, நடிகர்கள் போன்று) பேசும்போது வெறும்பெயர்கள்தான் சொல்லப்படும். ஒரு எடுத்துகாட்டாக, இப்படி சொல்லப்பாருங்கள்; தெரியும்: விஷால் அவர்கள், கமல் அவர்கள், நயந்தாரா அவர்கள்; இளைய ராஜா அவர்கள்; ஜயமோஹன் அவர்கள்; ஜய்காந்தன் அவர்கள்; சுஜாதா அவர்கள்; புதுமைப்பித்தன் அவர்கள். நான் குறிப்பிட்ட மரபு என்பது. இது பேச்சுவழக்கம் என்று பொருள். காவேரிமைந்தன் எவரையும் எப்படியும் அழைக்கலாம். எழுத்தாளர்களை பணிவோடு அழைக்கலாம். அவர் விருப்பத்தைக் குறைசொல்லவில்லை. மரபைக்காட்ட வேண்டியது பொறுப்பு. கேட்பதும் கேட்காததும் உங்கள் விருப்பம்.
இளங்கோ… ThroughAlooking… – அவர் எழுதியதில் எனக்கு ஒன்றும் வித்தியாசமாகத் தெரியவில்லை. அவர் சொல்வதில் கொஞ்சம் அர்த்தம் இருக்கிறமாதிரித் தெரிகிறது. தமிழ் உபயோகத்தைப் பற்றி அவர் எழுதியுள்ளதுபோல்தான் எனக்குத் தோன்றுகிறது. மேடைப் பேச்சிலே, ‘இலக்குவனார் அவர்கள் இங்கு சொன்னார்’ போன்று வருமே தவிர, பெரும்பாலான உரை’நடையில் அப்படி வராது. அது ஒரு அப்சர்வேஷன் என்ற முறையில்தான் பார்க்கவேண்டும். நீங்கள் கொஞ்சம் அதிகமாக கோபப்பட்டு இருக்கிறீர்களா?
புதியவன்,
நீங்கள் சொல்வது எனக்கு புரிகிறது. கருத்தில் இருத்திக் கொள்கிறேன்..
ஆனால், ” நான் வித்தியாசமானவன்”, “கோபமூட்டும்படி எழுதக்கூடியவன் ”
“அறிவுஜீவி” என்றெல்லாம் அலட்டிக்கொண்டு இங்கே நுழைபவர்களை நான் ஊக்குவிப்பதற்கில்லை….
முன்னதாக ஜெயமோகன் அவர்களின் ஒரு சிறுகதையை இங்கே பதித்தபோது, இந்த நபர் சொன்னவை எல்லாம், இந்த தளத்தின் தன்மைக்கேற்றவை அல்ல…
அதற்கு இளங்கோ போன்றவர்கள் கொடுக்கும் விளக்கங்களும், பதில்களும்
தான் சரி. எனவே, இளங்கோ சொல்வதையும் நான் ஏற்கிறேன்.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
எழத்து நடை இங்கு பேசப்படவில்லை. பேசும் வழக்குதான் குறிப்பிடப்படுகிறது. எல்லாருமே எனக்கு வெறும் எழ்த்தாளர்கள்தான். என் பெயர் விநாயகம். நபரன்று.
காவேரி மைந்தனின் பதிவுகள் தமிழ்மணம் என்ற பொதுவெளியில் எல்லாரும் வாசிப்பதற்காகவே வைக்கப்படுகின்றன. அவருக்கென்று ஒரு இரசிகர் கூட்ட்டம் இருக்கிறது. அவர்களைத் தவிர மற்றவர்கள் எதுவுமே சொல்லக்கூடாது எனபதென்றால், அதற்கெதற்கு தமிழ்மணம்?
நான் வித்தியாசமானவனும் இல்லை; கோபத்தைத் தர எழுதுபனுமில்லை. அப்படி நினப்பது நீங்கள். நினைத்தால் நான் எப்படி பொறுப்பாவேன் காவேரி மைந்தன்? உங்கள் கருத்துக்கள் எப்போதுமே வரவேற்கப்படவேண்டும்; விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை என்ற நினைப்பிலிருந்து எழும் பயவுணர்ச்சிகள்; அல்லது preservation technique. எழத்தாளர்களையும் அரசியல்வாதிகளையும் நடிகர்களையும் ”அவர்கள்’ என அடைகொடுத்துப்பேசுவது கிடையாது என்று சொல்வதைக்கூட அதிகப்பிரசிங்கித்தனம்; அறிவுஜீவித்தனமென்றால், எங்கே நீங்கள் நிற்கிறீர்கள்?
நான் எழுதுவது என் சிந்தனைகள். பொது விடயங்கள்; சிறுகதைகள் – இவற்றின்மேல் விமர்சனங்கள் வைப்பதற்கு நடுங்க வேண்டுமென்றால், அது என்ன தமிழகம்? அடிமைகள் உலகமா? கும்பிடு போடலாம். கூழைக்கும்பிடு போடலாமா?
கருத்துச்சுதந்திரத்தை விடுங்கள். எழுதுப்வர்கள் எழுதட்டும் வாசிப்பவர்கள் வாசிக்கட்டும். Be broad-minded.
கவனிக்கப்பட வேண்டியது: ஒன்றேயொன்று: ஆபாசச் சொற்கள் இருக்ககூடா. நிலத்தில் எவர்க்கும் அஞ்சா நெறிமுறைகள் என்பதை குறைந்த பட்சம் சின்ன விடயங்களில் கூட கடைபிடிக்க
கடைபிடிக்க முடியாதா?
throughalookingglassalaymanreflects – இது தான் இந்த “நபர்”
தன் பெயராக கொடுத்திருப்பது… இவரை “நபர்” என்று குறிப்பிடாமல் வேறு எப்படி குறிப்பிடுவது…?
நான் ஏன் இவரை தவிர்க்கிறேன் என்று மற்ற நண்பர்கள்
புரிந்துகொள்ளும் பொருட்டு –
இவர் முன்னதாக எழுதிய சில பின்னூட்டங்களிலிருந்து சில
பகுதிகளை மட்டும் கீழே தருகிறேன்….
—————————–
நான் கொஞ்சம் வேறான ஆள். பொறுமையை இழக்காமல்
வாசிக்கவும். என் எழுத்துக்கள் கோபத்தை மூட்டலாம்.
—–
இன்னொருவரின் சிறுகதையைப்போடுமுன், அவரைப்பற்றி முன்னுரையை ஓஹோ என்று வைத்தால், சிறுகதையை ஓஹோ என்று சொல்வதாகவும் வாசகரையும் ஒத்தூத விரும்புவதாகவும் தோன்றும். அதற்குப்பதிலாக, சிறுகதையை மட்டுமே – ஆசிரியரின் பெயரோடு போட்டுவிட்டு – உங்களுக்கு இக்கதை புரிகிறதா என்று கேட்டால் போதும்.
—————
இக்கதையை நான் என் ஆங்கில பளாக்கில் மொழிபெயர்த்து என் விமர்சனத்தை அங்கே வைக்கப்போகிறேன். விமர்சனம் ஆங்கிலத்திலேயே இருக்கும் பழகு மொழியாதலால்.
மேலும், நான் வாசிக்கும் தமிழ்ச்சிறுகதைகள் அங்கு விமர்சிக்கப்படும். பிரபல எழுத்தாளர்களும் வெளித்தெரியா எழுத்தாளர்களும் எனக்கு ஒன்றே.
———–
அது கிடக்க. ஆசிரியரின் பெயரையே போடாமல் இக்கதை வெளியிடப்பட்டிருந்தால், அதன் அபத்தங்களை என் விமர்சனம் கண்டிப்பாகக் காட்டும். எவராயிருந்தால் என்ன?
வாசகர் நாம்தானே? நாமேன் பயப்படவேண்டும்?
———–
தேடிப்போய் கதைவாசிக்கும் வழக்கம் கிடையாது. உஙக்ளைப்போன்று எவராவது இணைப்பு கொடுக்கும்போது வாசிப்பதுண்டு. பிராண்ட் எழுத்தாளரானாலென்ன, முன்பின் தெரியாதவரானாலென்ன? நம் முன் வைக்கப்பட்டது ஒரு சிறுகதை. நான் வாசகர்ர்கள். அவ்வளவுதான்.
————-
கதையை எழுதி நமக்குத் தந்துவிட்டு ஆசிரியர் செத்தார். கதையே நம் முன். நமக்கும் கதைக்கும் உள்ள உறவிலும் தனிநபர் இச்சையிலும் எந்தக்கொம்பனும் தலையிட முடியாது.
—————
இதையெல்லாம் விட்டுவிட்டு ஆசிரியரைப்பிடித்துத் தொங்கலாமா?
——————————————————————————————————–
இதற்கு மேலும், இவரது பின்னூட்டங்களை வெளியிட்டு, என் நேரத்தையும், நண்பர்களின் நேரத்தையும் வீணடிக்க நான் விரும்பவில்லை…. எனவே, இனி இவரது பின்னூட்டங்கள் இங்கே
வெளியிடப்பட மாட்டாது.
திருவாளர் throughalookingglassalaymanreflects – தான் இங்கு வரவேற்கப்படவில்லை என்பதை உணர்ந்து கொண்டு, தாமாகவே இங்கு
பின்னூட்டங்கள் எழுதுவதை நிறுத்திக்கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன்.
– காவிரிமைந்தன்
நாம் என்னை அறிவுஜீவி என்று அழைக்கவில்லையா? பிறர்தான் என்னை அப்படி அழைக்க விரும்பலாம். மாற்றுக்கருத்து வைத்தாலே அறிவு ஜீவி என அழைப்பது என்னைக்காட்டுகிறதா? அவர்களை காட்டுகிறதா? கொஞ்சம் சிந்தியுங்கள். புரியும்.
அவரவர் அவரவருக்குப் புரிந்ததையும் தெரிந்ததையும் எழுதுகிறார்கள். இங்கே எப்படி அரை, நிறை குடங்கள் வரும்? நீங்கள் எதை எழுதினாலும் உங்களை அரைகுடமென்றோ, நிறைகுடமென்றோ நான் அழைக்கவே மாட்டேன். காரணம். எனக்குள்ள கருத்து சுதந்திரம் உங்களுக்கும் இருக்கிறதே !
I am now reading the short story here. I will comment. You can read and say whatever. But if you don’t like my comments, don’t call me a Arivu jeevi. Because I am just exercising my right to give my reaction to the story. Understand a short story is for reading of all. Not only for Ilangko. All can comment thereon. Comments mean they express their experience of reading it.
ஒரே சிறுகதையில் அனைத்தும் … ” சட்டை ” … பற்றி …?
ஜெயகாந்தன், அந்தக் காலத்துக்கு ஏற்றவாறு பாலிஷ்டாகவே கதையை எழுதியுள்ளார். ஒரு பிரச்சனையின் தீவிரம், அதனை அனுபவிப்பவர்களுக்கே தெரியும். நாமக்கல் கவிஞர், தான் படித்த காலத்து, தன் பிராமண நண்பனின் முறைப்பெண்ணின்மீது தனது கவனம் சென்றதையும், அந்தப் பெண்ணும் இவருடன் அன்பு கொண்டு இருந்ததையும் (காதல் என்று சொல்லவில்லை) எழுதியிருப்பார். அந்தப் பெண் அத்தனை அழகு என்றும் சொல்லியிருப்பார். விதி வசத்தால் அந்தப் பெண்ணை பணக்காரர் ஒருவருக்குத் திருமணம் செய்துவைத்துவிடுகிறார்கள் (இது 1900களில்). 10-15 வருடங்கள் கழித்து அந்தப் பெண்ணை வைதவ்யக்கோலத்தோடு இரயில்வே ஸ்டேஷனில் பார்க்கிறார். அடையாளம் காணமுடியாதபடி, இரண்டு சிறு குழந்தைகளோடு, மாமனார்/மாமியாரோடு புனிதயாத்திரை மேற்கொண்டு திரும்பிக்கொண்டிருக்கிறார் அந்தப் பெண். இதுதான் அந்த நாளைய வழக்கம். காலம் எல்லாப் பழக்கத்தையும் மாற்றுகிறது. தவறுகளைத் திருத்துகிறது. பாதிக்கப்பட்டவர்களையும் மதித்து அவர்களுக்கு உண்டான நியாயத்தை ஓரளவு வழங்குகிறது.
ஆனாலும் நான், மக்கள் (அதிலும் பெண்கள்) நிறைய பழைய பழக்கவழக்கங்களிலிருந்து மாறவேண்டும் என்று நினைக்கிறேன். (திருமணத்துக்கு கணவனை இழந்தவர்களை அழைக்காதது, சம்பிரதாய விழாக்களில் கணவனை இழந்தவர்களைப் புறக்கணிப்பது போன்று).
ஒவ்வொருவரும், நாம் காலத்திற்கு ஏற்றவாறு பல விஷயங்களில் மாறியிருக்கிறோமா? என்று தன்னைத் தானே கேட்டுக்கொள்ளவேண்டும். அப்படி மாறியிருந்தால், மற்றவர்களும் மாறுவதற்கு அவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டும். அதனை அங்கீகரிக்கவேண்டும். சமூகத் தலைவர்களும், ஆசார்யர்களும், இதனை வலியுறுத்திச் சொல்லவேண்டும். எனக்கு பிராமண சமூகத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியுமாதலால் இதனைச் சொன்னேன். மாற்றம் ஒன்றே மாறாதது, அது நியாயத்தின்பாற்பட்டதாக இருக்கவேண்டும்.
விளம்பரத்துக்காக 3,755 கோடி ரூபாய் செலவுசெய்த மோடி அரசு..! https://www.vikatan.com/news/india/110256-modi-government-spent-3755-crores-on-publicity.html … இதெல்லாம் ஒரு செலவா …? இன்னும் அதிகமா எதிர்பார்க்கனும் …? நமக்கேன் வம்பு …!
இது நண்பர் விநாயகம் என்கிறவர்க்கு..
நண்பர் காவிரிமைந்தன் JK யின் உலகத்தரம் வாய்ந்த சிறுகதை ஒன்றை பதிவிட்டுள்ளார்.நீங்கள் அதை ரசிக்காவிட்டாலும் பிழையில்லை அதற்கு சிறிதும் சம்பந்தமே இல்லாத கருத்துக்களை கூறியுள்ளீர்கள்.
முற்போக்கு சாதி என பொதுவாக கருதப்படும் ஒரு சமூகத்தினரிடையே ஆப்பிரிக்க பழங்குடி மக்களிடம் கூட இல்லாத ஒரு கொடுமையான மூட பழக்கம் இருந்து வந்தது அது என்னவென்றால் கணவனை இழந்த பெண்களை வயது வித்தியாசம் பாராமல் உருவ/மன ரூபங்களில் குரூபமாக்குவது. இதை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து பல அறிஞர்கள் கண்டித்து வந்துள்ளனர்.அவர்களின் முயற்சி காரணமாக இந்த கொடுமை இப்பொழுது அறவே ஒழிக்கப்பட்டு விட்டது. இதற்கு முக்கிய காரணிகளில் ஒருவர் திரு.ஜேகே.
பெண்களை வடிவத்தை கெடுப்பது என்ற நிலையை மீறி அது ஏற்படுத்தும் இன்னொரு நுணுக்கமான மனரீதியான சிக்கலை ஜேகே எழுதுகிறார்..
//அப்போ நீ பால் குடிக்கிற கொழந்தையடா…எனக்குப் பதினைஞ்சி வயசுடா ‘ என் கொழந்தை, என் மொகத்தெப் பார்த்துப் பேயைப் பார்த்ததுபோல் அலறித்தேடா…. ‘ பெத்த தாய் கிட்டே பால்குடிக்க முடியாத குழந்தை கத்துவே; கிட்டே வந்தா மொட்டையடிச்ச என்னைப் பார்த்து பயத்துலே அலறுவே//
பல ஆண்டுகளுக்கு முன் இதை முதன் முதலில் படிக்கும்பொழுது இந்த வரிகளை கடக்க எனக்கு பலநாட்கள் ஆயின இப்பொழுது கூட என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.சத்தியமாக சொல்கிறேன் இந்த வரிகளை எழுதியவர் சாட்சாத் தக்ஷிணாமூர்த்தியின் அவதாரமாக இருந்தாலொழிய இது சாத்தியமில்லை.
அன்பரே! ஜேகே எழுத்துக்கள் புரியவில்லை அவைகளை என்னால் ரசிக்க முடியவில்லை என்பது ஒரு நிலை அதில் குற்றமில்லை ஆனால் அவரை விமரிசிக்க நமக்கு அருகதை கிடையாது.
அதுவும் ஒரு புனைப்பெயரைக்கூட சரியாக வைத்துக்கொள்ளத்தெரியாத ஒருவருக்கு..
பகிர்ந்த திரு.காமை க்கு நன்றி
அடடா…. கொஞ்சம் இருங்க கண்பத்,
மொட்டை மாடிக்கு போய் பார்த்துவிட்டு வருகிறேன் – மழை வருகிறதா என்று… 🙂 🙂 🙂
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்