…
…
அவசியம் அறியப்பட வேண்டியவர் மதுரையை சேர்ந்த
காந்திமதி அம்மாள்… அவர் என்ன செய்கிறார் பாருங்களேன்…
…
…
இந்த வயதில் காந்திமதி அம்மாள், தன் கணவருக்குப் பின்னர்
இந்த செயலைத் தொடர என்ன காரணம்…?
பழக்கமாகி விட்டது…!
தினமும் இதை நம்பி இருப்பவர்கள், வண்டி வருவதை எதிர்பார்த்து
பசியோடு காத்திருப்பார்களே என்கிற உணர்வு அவர் மனதில் ஊறி விட்டது.
இது போல், இல்லாதவர்களுக்கு நம்மால் இயன்றதைச் செய்ய
வேண்டும் என்கிற ஈர குணம் அனைவருக்கும் வேண்டும்.
பலர் மனதில் ஏற்கெனவே இருக்கிறது… அதை எப்படி முறையாக செய்வது என்பதைப்பற்றி அவர்கள் சீரியசாக யோசிக்கவில்லை…அவ்வளவு தான்.
இப்போதும் சில குடும்பங்களில், தங்கள் வீட்டில் திருமணம் போன்ற
விசேஷ நிகழ்ச்சிகள் நடைபெறும்போது, அருகிலுள்ள ஆதரவற்ற
குழந்தைகள் இல்லம், முதியோர் இல்லம் ஆகியவற்றிற்கும் உணவிற்கு
ஏற்பாடு செய்கிறார்கள்.
வசதியுள்ள ஆயிரம் பேருக்கு விருந்தளிக்கும்போது, வசதியற்ற
ஒரு 50 பேருக்காவது சேர்த்து சமைத்தால், உணவளித்தால், மனதில்
ஏற்படும் திருப்தியே அலாதியானது.
இந்த பழக்கத்தை ஓரளவு வசதியுள்ள அனைவருமே மேற்கொள்ளலாம்.
திருமண நிகழ்வுகளோடு நின்று விடாமல், தங்கள் குழந்தைகளின்
பிறந்த நாள், வளைகாப்பு, சீமந்தம், திருமண ஆண்டு தினம்
ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். கூடவே, தங்கள்
குடும்பத்தில் மறைந்த பெற்றோருக்கு திதி கொடுக்கும் நாட்களில் கூட
ஆதரவற்ற ஏழைகளுக்கு உணவு அளிக்கலாம்.
மனதில் எல்லாருக்கும் நிச்சயமாக ஈரம் இருக்கிறது. அந்த ஈரத்தை
செயலில் கொண்டு வரவேண்டிய அவசியத்தை, நமது அன்றாட
அவசரங்கள் மறக்க வைத்து விடுகின்றன.
இதை ஒரு பழக்கமாக குடும்பத்தில் மேற்கொண்டு, இரண்டு மூன்று
முறை செய்தால், பின்னர் அந்த பழக்கம், தானாகவே வழக்கமாக
தொடரத் தொடங்கி விடும்.
இது வரை இத்தகைய வழக்கங்கள் இல்லாத நண்பர்களும், இந்த காந்திமதி அம்மாளை பார்த்த பிறகு துவங்கி விடுவார்கள் என்று நம்புகிறேன்… சரி தானே நண்பர்களே …?



// பசியின் கொடுமையை பற்றிய “ஸ்ரீ வள்ளலார் சித்தர் சுவாமிகளின் – கூற்று”
“ஜீவர்களுக்கு பசி அதிகரித்த காலத்தில்”
ஜீவ அறிவு விளக்கமில்லாமல் மயங்குகின்றது-
அது மயங்கவே அறிவுக்கறிவாகிய கடவுள் விளக்கம்
மறைபடுகின்றது – அது மறையவே புருடதத்துவம்
சோர்ந்துவிடுகிறது. அது சோரவே பிரகிருதி தத்துவம்
மழுங்குகின்றது – அது மழுங்கவே குணங்களெல்லாம்
பேதப்படுகின்றன. மனம் தடுமாறிச் சிதறுகின்றது – புத்தி
கெடுகின்றது- சித்தம் கலங்குகின்றது – அகங்காரம்
அழிகின்றது – பிராணன் சுழல்கின்றது –
பூதங்களெல்லாம்புழங்குகின்றன -வாதபித்த சிலேட்டுமங்கள் நிலை மாறுகின்றது
கண் பஞ்சடைந்து குழிந்து போகின்றது , காது
கும்மென்று செவிபடுகின்றது – நா உலர்ந்து வரளுகின்றது-
நாசி குழைந்து அழல்கின்றது தோல் மெலிந்து
ஸ்மரணை கெடுகின்றது -கை கால் சோர்ந்து
துவளுகின்றன – மல சல வழி வெதும்புகின்றது,-
மேனி கருக்கின்றது ரோமம் வெறிக்கின்றது – நரம்புகள் குழைந்து நைகின்றன-
நாடிகள் கட்டுவிட்டுக் குழைகின்றன – எலும்புகள்
கருகிப் பூட்டுகள் நெக்குவிடுகின்றன – இருதயம் வேகின்றது –
மூளை சுருங்குகின்றது – சுக்கிலம் மாமிசம் குழைந்து
தன்மை கெடுகின்றது – வயிறு பகீரென்று எரிகின்றது .
தாப கோபங்கள் மேன்மேலும் உண்டாகின்றன.உயிரிழந்து
விடுவதற்கு மிகவும்சமீபத்த அடையாளங்களும்
அனுபவங்களும் மேன்மேலும் தோன்றுகின்றன.
பசியினால் இவ்வளவு அவத்தைகளுந் தோன்றுவது
ஜீவர்களுக்கெல்லாம் பொதுவாகவே இருக்கின்றது.
இவ்வளவு அவத்தைகளும் -ஆகாரம் கிடைத்தபோது
உண்டு – பசிநீங்க நீங்குகின்றன. அப்பொழுது
தத்துவங்களெல்லாம் தளைத்தது -உள்ளம் குளிர்ந்து,
அறிவு விளங்கி , அகத்திலும் முகத்திலும்
ஜீவகளையும் கடவுள் களையுந்துளம்பி ஒப்பில்லாத
திருப்தி இன்பம் உண்டாகின்றன. இப்படிப்பட்ட
இன்பத்தை உண்டு பண்ணுகின்ற புண்ணியத்துக்கு
எந்த புண்ணியத்தை இணையென்று சொல்லலாம்?
எல்லாத் தெய்வங்களுக்கும்மேலாகிய கடவுள்
அம்சமென்றே சத்தியமாக அறியவேண்டும். இதனால்-
ரகவேதனை, சனனவேதனை, மரணவேதனை
என்கின்ற மூன்று வேதனைகளுள் கூடி முடிந்த
வேதனையே பசிவேதனை என்றும் ;
அகம், புறம், நடு, கீழ், மேல், பக்கம் என்கின்ற
எவ்விடத்தும் நிறைந்து எக்காலத்தும் வேறுபடாத
மோட்ச இன்பமே ஆகாரத்தினால் உண்டாகும் திருப்தி
இன்பம் என்றும் அறியப்படும். //
ஒருவருக்கு பசி ஏற்பட்டால் என்னென்ன நிகழும் என்பதையும் — பசி உணவருந்தி நீங்கியபின் என்னென்ன ஏற்படும் என்பதையும் விளக்கமாக ” வள்ளலார் ” குறிப்பிட்டுள்ளதை மனதில் கொண்டு நம்மால் இயன்ற பசி நீக்க தொண்டுகளை செய்ய வேண்டும் — செய்வோம் … ! இதற்கு பின்னும் திரு வள்ளலார் அவர்கள் — பசியில் இருக்கும் ஒருவன் என்னென்ன — ” செய்யத்துணிவான் ” என்பதையும் விளக்கியுள்ளார் — ஒரு முறையாவது அவற்றை படித்துப் பார்த்தால் — பசி என்பதைப்பற்றி நன்கு விளங்கும் — அதை தீர்க்கும் எண்ணம் மேலோங்கும் …!!! காந்தி அம்மாளின் தொண்டு போற்றுதலுக்கு உரியது — தானத்தில் சிறந்தது — ” அன்னதானமே “
சிலர் தன்னால் இயன்றதையும், இருப்பதையும் பிறருக்கு கொடுக்கிறார்கள். சிலர் இருப்பதை எல்லாம் தனதாகிக் கொள்கிறார்கள்.
கா.மை சார்… சில இடுகைகளைப் படிக்கும்போதும், காணொளியைப் பார்க்கும்போதும் மனது நெகிழ்கிறது. நீங்கள் தொடர்ந்து இந்த மாதிரி நல்ல செய்திகளையும் பகிர்ந்துகொண்டுவருகிறீர்கள். வாழ்த்துக்கள்.
எல்லார் மனதிலும் ஈரம் இருக்கிறது. அதைத் திருப்பிவிடத்தான் நேரமும் வாய்ப்பும் கிட்டுவதில்லை. இந்தக் காணொளியைப் பார்த்தவுடன், அந்த இளகிய மனம் கொண்ட அம்மாவுக்குப் பணம் அனுப்பவேண்டும் என்று மனது சொல்கிறது. எப்படி அனுப்புவது? உங்களால் (முடிந்தால்) கான்டாக்ட் எண் பதிவு செய்யவும். காந்திமதி அம்மையைப் போன்றவர்கள் செய்வது விளம்பரமல்ல, ஆத்மார்த்த சிந்தனை. அதில் சிறிது எண்ணெயாக இருக்கவேண்டும் என்று எல்லா நல்லோர்களும் நினைப்பர்.
// Caring for downtrodden: Serving the poor, with லவ் // http://www.deccanchronicle.com/nation/current-affairs/080417/caring-for-downtrodden-serving-the-poor-with-love.html …. நண்பரே இதில் படிக்கட்டுகள் என்கிற ஆர்கனைசேஷன் அவர்களை கேட்டால் ஓரளவு தெரிய வாய்ப்புள்ளது அவர்களது விவரம் 096779 83570
Send Message
http://www.padikkattugal.org — பணமாக பெறுவதில்லை போல தெரிகிறது — முயன்று பாருங்கள் ..!
நன்றி பிரனீஷ்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
புதியவன்,
உங்கள் உணர்வுகள் எனக்கு புரிகின்றன…
உங்களுக்கு நம்பிக்கையாக தோன்றும்,
உங்களுக்கு பிடித்தமான எந்த வகையில் வேண்டுமானாலும்
நீங்கள் உதவலாம்…
பிரனீஷ் குறிப்பிட்டுள்ள http://www.padikkattugal.org – தளம்
செயலிழந்து விட்டதாக தெரிகிறது.
மாற்றாக நீங்கள் இந்த வலைப்பக்கத்தை தொடர்பு கொள்ளலாம்…
https://www.facebook.com/pg/Padikkattugal/about/?ref=page_internal
பிரனீஷ் குறிப்பிட்ட அதே தொலைபேசி – 096779 83570 -லும்
தொடர்பு கொள்ளலாம்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்