…
…

ஏறக்குறைய ஒரே சமயத்தில் இந்தியாவும் சீனாவும்….
சுதந்திரமாக செயல்படத் துவங்கின.( 1947, 1949…)
68 ஆண்டுகளுக்கு முன்னர் சீனா இருந்த நிலை என்ன,
இன்று அதன் நிலை என்ன ?
இதே அளவு காலத்தில் நம் நாடு எந்த அளவிற்கு
வளர்ந்திருக்கிறது ? எதில் வளர்ந்திருக்கிறது ?
இந்த இடுகையின் முதல் 4 பகுதிகளில், சீனாவின்
வளர்ச்சியைப் பற்றிய விவரங்களை, அது எந்த அளவிற்கு
வளர்ந்திருக்கிறது என்பதை புகைப்படங்களுடனும், புள்ளி
விவரங்களுடனும், ஓரளவு விவரமாக எடுத்துக் காட்டி
இருக்கிறேன்.
அதே சமயம் – நம் நாட்டின் வளர்ச்சியைப் பற்றி –
நான் சொல்வதை விட,
அவரவர் நேரடியாகப் பார்த்துக் கொண்டிருக்கும்
அனுபவமே நன்கு சாட்சி சொல்லும்.
அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டு உற்சாகமாக ஈடுபட
வேண்டிய துறைகள் எல்லாம் தனியார் துறைக்கு
தாரைவார்க்கப்பட்டிருக்கிறது.
மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வியும்,
சுகாதாரமும் தனிப்பட்ட முதலாளிகளின் பணம் கொட்டும்
தொழிலாக மாறி விட்டது.
எங்கு நோக்கினும் தனியார் பள்ளிகள்,
மழலைப் பள்ளிகளில் துவங்கி –
CBSE, Matric என்று வகை வகையாக
அடுக்கடுக்காக வெவ்வேறு status-ல்
தனியார் பள்ளிகள் –
புற்றீசல் போல தனியார் பொறியியல் கல்லூரிகள் –
அரசியல்வாதிகள் முக்கால்வாசி பேருக்கு
தனித்தனியே பொறியியல் கல்லூரிகள் –
வசதி படைத்தோர்க்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள்,
பெரிய பெரிய மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவ மனைகள் –
இத்யாதி இத்யாதி….
பிழைக்கத் தெரிந்த அரசியல்வாதிகளுக்கு –
தொலைக்காட்சி சேனல்கள், நாளிதழ்கள் ….
ரியல் எஸ்டேட் பிஸினஸ் ….
சிலருக்கு சினிமா – தயாரிப்பு, விநியோகம் வேறு –
அரசு – மக்கள் நலத்திட்டங்களுக்காக செலவழிக்கும்
கோடிக்கணக்கான ரூபாயில் பெரும்பகுதி –
ஆளும் கட்சி ஆட்களுக்கே காண்ட்ராக்ட் மூலமும்,
கமிஷன் மூலமும் போய்ச்சேருவதும் ….
(latest trend – இதில் எதிர்க்கட்சிகளுக்கும் பங்கு…! )
மக்களுக்கு உதவக்க்கூடிய திட்டங்களைப் போடுவதை விட,
அரசியல்வாதிகளுக்கு காசு சம்பாதிக்க உதவும் திட்டங்களுக்கே முன்னுரிமை கொடுப்பதும்…
ரெயிலில் கூட்டம், பஸ்ஸில் கூட்டம் –
எதிலும் கூட்டம், எங்கும் கூட்டம் – காசு கொடுத்தாலும்,
மணிக்கணக்காக – உட்காரக்கூட முடியாமல் தொத்திக்
கொண்டே பயணம் செய்ய வேண்டிய கொடுமை..
தனியார் பஸ்களில் கொள்ளை வசூல்…
சுதந்திரம் கிடைத்து 65 ஆண்டுகள் ஆன பின்பும்,
மக்களுக்கு குடிக்க சுத்தமான தண்ணீர் கொடுக்க வக்கில்லாத அரசாங்கங்கள். தாகத்திற்கு தண்ணீர் குடிக்கக் கூட காசு தேவைப்படும் ஒரு நாடு….
வெட்கக்கேடு – வெளியே போனால் – சிறுநீர் கழிக்கக் கூட
காசு தேவைப்படும் ஒரு நாடு …
அடிக்கல் நாட்டி, ஆண்டுகள் பலவாகினும், மேலே
தொடராத திட்டங்கள் எத்தனை ….?
தொடங்கப்பட்டு, அல்லது பெயருக்கு துவக்கி வைக்கப்பட்டு,
போதுமான நிதி ஒதுக்கப்படாமல் –
அப்படியே ஊஞ்சலாடும் திட்டங்கள் எத்தனை…?
திட்டம் போட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் –
போதுமான அக்கரையின்மை காரணமாக ஆண்டுக்கணக்கில்
முடிவடையாமல் இருக்கும் திட்டங்கள் எத்தனை ….?
நாட்டின் முக்கியமான தேவை மின்சக்தி.
இதற்குத் தேவையான நிலக்கரியில் – பெரும்பகுதி இன்னமும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. நம் நாட்டிலேயே நிலக்கரி வளம் இருந்தாலும் – அதைத் தோண்டி எடுப்பதில் சிக்கல் ….
( வெளிநாட்டு நிலக்கரி இறக்குமதியில் கிடைக்கும் கமிஷன்
கவர்ச்சிகரமாக இருக்கும் வரை – உள்நாட்டு
உற்பத்தியில் எப்படி கவனம் போகும் ? )
அதையும் மீறி – அவசியமாகத் தேவைப்படும்
நிலக்கரியை தோண்டி எடுத்து வியாபாரம் செய்யும்
உரிமையையும் அரசாங்கம் தங்களுக்கு வேண்டிய
அரசியல் தரகர்களுக்கே தாரை வார்க்கும் அவலம் –
நாட்டின் முக்கிய கனிம வளங்கள் அனைத்தின் சுரங்க
உரிமையும் – தனிப்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு
பண முதலைகளுக்கு தாரை வார்க்கப்படும் அநியாயம் …
காடுகளிலும், மலைகளிலும் காணப்படும் கனிம வளங்களை இந்த ஏகபோக முதலாளிகள் சுரண்டிச் சாப்பிட, அங்கு ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும்
பழங்குடி மக்களை விரட்டி அடிக்கும் அநியாயம் ….
புதிதாக தொழிற்சாலைகளை, கட்டமைப்பு வசதிகளை,
உணவு உற்பத்தியை – அதிகரிக்கவோ, ஊக்கப்படுத்தவோ
திறனில்லாத அரசியல்வாதிகள் –
எதற்கெடுத்தாலும் அந்நிய முதலீட்டை நம்பி இருக்கும்
அவலம் –
தொடர்ந்து அடுக்கடுக்காக ஊழல் புகார்கள் வந்தாலும்,
கோடிக்கணக்கில் கொள்ளையடிப்பது கண்ணெதிரே
தெரிந்தாலும் –
ஊழல் வழக்குகளில் விசாரணையை விரைவாக
நடத்தி முடிக்கவோ, கடுமையான தண்டனைகளை
விதிக்கவோ – விரும்பாத அரசாங்கம்.
( தங்களுக்கு தாங்களே சூனியம் வைத்துக் கொள்ள
யார் தயாராக இருப்பார்கள் !)
இந்த நாட்டின் சீர்கேட்டிற்கு காரணம் ஜனநாயகம்
தான் என்று பலபேர் நினைக்கிறார்கள்.
உங்களில் சிலருக்கு கூட அதுபோல் தோன்றலாம்.
பல சமயங்களில் நான் கூட அது போல் நினைப்பேன்..!
ஆனால் இது என் நிரந்தரமான எண்ணம் அல்ல –
சில சமயங்களில் மட்டும் வந்து போகும் கடுப்பு …!!!
கொஞ்சம் யோசித்தால் …
இப்போது மட்டும் நாம் என்ன
ஜனநாயகத்திலா வாழ்கிறோம் ?
சுதந்திரம் – வந்த பிறகு அல்ல வருவதற்கு முன்னரே
பிரதமர் பதவிக்கு நம் நாட்டில் போட்டி வந்து விட்டிருந்தது.
முதலில் ஜின்னாவிற்கும் நேருவிற்கும் –
பிறகு நேருவுக்கும் படேலுக்கும் …
காந்திஜியின் விருப்பம் –
வல்லபாய் படேல் ஒதுங்கினார் ..
ஜவஹர்லால் நேரு பிரதமராக வந்தார்.
அதன் பிறகு ? வரிசையாக –
நேருவின் மகள் இந்திரா,
இந்திராவின் மகன் ராஜீவ்,
ராஜீவின் மனைவி சோனியா
(defacto பிரதமராக),
( நடுவில் கொஞ்சம் மறந்த பக்கமாக அற்ப, சொற்ப
காலங்களுக்கு பிரதமராக இருந்த மற்றவர்களை
விட்டு விடுவோம் )
2014 பாராளுமன்ற தேர்தல் வந்தது. ஒரு பெரிய ஊழல்
சாம்ராஜ்ஜியத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்கிற
வெறியுடன் மக்கள் ஓட்டு போட்டார்கள்.
இனி அமையப்போகும் அரசாவது நமக்கு ஏற்றம்
தரத்தக்கதாக இருக்க வேண்டுமென்று இந்திய மக்கள் மாற்றத்தை விரும்பி,
மிகுந்த நம்பிக்கையுடன் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் ஒரு
புதிய தலைவரை தேர்ந்தெடுத்து, மாற்று ஆட்சியை
ஏற்படுத்தினார்கள்.
ஆனால்….?
மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறினவா…?
நாடும், அரசாங்கமும் மக்கள் விரும்பிய வழியில்,
எதிர்பார்த்த வழியில் – வளர்ச்சியை நோக்கி
நடைபோடுகிறதா..?
பாலும், தேனும் ஓடாவிட்டாலும் – மக்கள்
குறைந்த பட்ச நிம்மதியுடன், சந்தோஷமாக – இருக்கிறார்களா…?
அரசின் தலைவர் மாறியதாலும் –
ஆளும் கட்சி மாறியதாலும் –
ஏற்பட்ட விளைவுகள் என்ன….?
வாணலிக்கு பயந்து அடுப்பில் விழுந்த கதை ஆயிற்றே…
நம்மை நாமே ஏமாற்றிக்கொண்ட அனுபவம் தானே
மீண்டும் மீண்டும் கிடைக்கிறது…?
( தொடர்வோம் – பகுதி-7-ல் …)



// சுதந்திரம் கிடைத்து 65 ஆண்டுகள் ஆன பின்பும் // … சரி செய்யவும் !
மக்களுக்காக மக்களால் மக்களைக் கொண்டு ஆளுவதே ஜனநாயகம். அப்படி ஆள சரியான தலமை வேண்டும். அது இல்லாத போது இந்தியா என்ற கூட்டாட்சி முறை தவிர்க்கப்பட வேண்டிய வீண் முயற்சியே. அது தீவிரவாதிகளுக்கு கொண்டாட்டமாகவே முடியும்-தீவி
ரவாதிகளால் தீவிரவாத நோக்கத்திற்காக தீவிரவாதிகளைக்கொண்டு ஆளப்படும். இங்கு தரமான அரசியல் அமைப்பு உள்ளது. ஆனால் சரியான தலைவன் இல்லை. தண்ணீர் வசதி மின்சாரவசதி சாலைவசதி இரயில் வசதி எல்லோருக்கும் வேண்டும் அடிப்படையில். படிப்பு எல்லோருக்கும் கிடைத்தால் அதற்குதக்க வேலை கிடைத்தால் போதும் இதைவிட மக்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை. நாம் முன்னேற வேண்டுமானால் மற்றவனும் முன்னேற வேண்டும் என்பது தான் சரியான வழி என அலிபாபாவின் தலைவர் ஜாக் மா சொல்கிறார். மற்றவன் முன்னேறிவிடக்கூடாது என்பதிலேதான் தலைவர்கள் கவணமாக இருக்கிறார்கள். சீனாவிலும் பல பிரனைகள் உண்டு. ஆனால் தலமை சரியானபடி வழி காட்டினபடியால் அவை அடங்கிபோகின்றன. மக்களுக்காக மக்களால் மக்களைக்கொண்டு ஆட்சி நடக்கிறது.
செல்வராஜன்,
சரி செய்யப்பட்டு விட்டது.
நன்றி.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
சீனாவின் 65. சரியாகிவிட்டது … இந்தியாவின் 65 யையும் சரி செய்யவும் .
இப்போது வார்த்தை சரியாகவே பொருந்துகிறது.
இதை இத்துடன் விட்டு விட்டு,
உங்களுக்கு வேறு எதாவது கருத்து இருந்தால் சொல்லலாம்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
என்னுடைய பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருந்தது இடுகையில் உள்ள வாக்கியத்தைதான் இரு நாட்டின் சுதந்திரம் அடைந்தபின் உள்ள ஆண்டுகள் ” தற்பாேது ” சரி செய்ய வேண்டும் என்ற நாேக்கில் … அவ்வளவே ….!
சீனா சர்வாதிகார நாடு என்று சொல்லிவிடமுடியாது. அங்கு பெரிய குழு ஒன்று இருக்கிறது. அவ்வப்போது அதற்கு தலைவர்கள் இருக்கின்றனர். ஆனால் பொதுவாக நாட்டுக்காக அவர்கள் திட்டம் தீட்டி அதனைச் செயல்படுத்துகின்றனர். மக்களின் எதிர்ப்புகளைக் கண்டுகொள்வதில்லை, அதில் நேரம் செலவழிப்பதில்லை.
இங்கு ஜனநாயகம் என்ற பெயரால், சிந்திக்கத் தெரியாத, படிப்பறிவில்லாத மக்கள் கூட்டமும் வாக்களித்து அரசியல்வாதிகளை ஒவ்வொரு 5 வருடங்களுக்கு ஒரு முறையும் தேர்ந்தெடுப்பதால், குறுகிய காலத் திட்டங்கள், கவர்ச்சித் திட்டங்கள், பேச்சு என்பதிலேயே நம் ஜனனாயகம் கழிந்துவிடுகிறது.
நம்ம நாட்டில் ஒரு திட்டமாவது பிரச்சனை இல்லாமல், குறித்த காலத்தில் நடந்திருக்கிறதா? நீதித்துறை நாட்டு நன்மைக்காகச் செயல்படுகிறதா? அடிப்படையும் சரியில்லை, தலைவர்களும் சரியில்லை என்று இருக்கும்போது எப்படி நமக்கு ஒரு தேவதூதன் வந்து எல்லாவற்றையும் சரிசெய்யமுடியும்?
இன்றைக்கு காமராசர் என்று வீண் பெருமை பேசும் நாம்தானே அவருடைய அரசியல் வாழ்க்கை முடியக் காரணமாக இருந்தோம்? அவரைத் தோற்கடித்தவர்கள் நாம்தானே? மோடி அவர்கள் இல்லாமல் இன்னொருவர் வந்தாலும் 60% மக்கள் எதிர்க்கத்தான் போகிறார்கள்.
ஆனால் சைனாவில் அப்படிக் கிடையாது. 500 பேர், நாட்டின் நலனை ஒட்டி பெரிய பெரிய திட்டங்கள் வகுத்துச் செயல்படுத்துகின்றனர். எதிர்ப்பு என்பதை ஒடுக்குகின்றனர். இதில் பிரச்சனை இருந்தாலும், நாட்டுக்கு எது நல்லது? சைனா வழியா அல்லது இந்திய ஜனனாயகமா என்று கேட்டால், நம் மக்களின் தரத்தைப் பார்த்து, நமக்கு சைனா ஜனனாயகம்தான் வேண்டும் என்று சொல்வேன்.
கா.மை சார்…. நீங்கள் சிங்கப்பூர் எப்படி இந்த அளவு வளர்ச்சியடைந்தது என்றும் பார்க்கவேண்டும். அங்கும் கிட்டத்தட்ட சர்வாதிகாரம்தான். சிங்கப்பூர் இப்போவும் அமேசிங் வளர்ச்சி. சில சமயம், நாமும் மெட்’ரோ வைத்திருக்கிறோம், ஸ்பீட் ரயில் என்றெல்லாம் பேசும்போது சிரிப்புதான் வருகிறது.
புதியவன்,
நிச்சயமாக…. அடுத்த பகுதியில் சிங்கப்பூரையும் பார்க்கலாமே.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
//வாணலிக்கு பயந்து அடுப்பில் விழுந்த கதை ஆயிற்றே…
நம்மை நாமே ஏமாற்றிக்கொண்ட அனுபவம் தானே
மீண்டும் மீண்டும் கிடைக்கிறது…?//
எவ்வளவு சத்தியமான வார்த்தை. இன்னமும் மோடி பக்தர்களின் கூச்சல் சகிக்க முடியவில்லை. எப்போது நிறுத்தப் போகிறார்கள்? இந்நாட்டை மேலும் மேலும் மூழ்கடித்த பிறகா?
ஆமாம் காந்திஜியின் முழு பெயர் என்ன?
Mohan Lal Karamchand Gandhi (or)
Mohandas Karamchand Gandhi
எவ்வளவு ஞானமிக்க பிரதமரை இந்நாடு கொண்டிருக்கு. இப்படித்தான்
முன்பு சரித்திரமும் தெரியாமல் உளரினார்.
மோடியின் தத்துபித்து உளரல்கள் கண்டு உள் நாடு மட்டுமல்லாமல் வெளி நாடெல்லாம் பின் புறமா சிரிக்கிறதுகள்.