இதை எழுதும்போது, என் மனதின் முன்வரிசையில்
நிரந்தரமாக இடம் பிடித்து அமர்ந்திருக்கும் பெண்கள்
சிலரை நினைத்துக் கொள்கிறேன்…!
(நாளை உலக மகளிர் தினம் …!)
முதலில் என் பாட்டி -(திருமதி சாவித்ரி அம்மாள்)
அப்பாவின் அம்மா.
கும்பகோணம் சாரங்கபாணி தெரு ஓட்டு வீடு ஒன்றில்
பிறந்தார். பள்ளிக்கூடமே போனதில்லை.
7 வயதில் கல்யாணம்.
13 வயதில் ஒரு(ஒரே..!) மகனுக்குத் தாய் ஆனார்.
14 வயதில் விதவையானார்.
பின்னர், அந்த ஒரே மகன் படித்து, பெரியவனாகி,
சம்பாதிக்கும் வரை சகோதரர்களின் ஆதரவில் வாழ்ந்தார்.
பின்னர் மகனும், அவன் குடும்பமுமே சகலமும்.
73வது வயதில் காலமானார்.
அடுத்து “என்” அம்மா -(திருமதி மீனாட்சி அம்மாள்)
இது “என்” அம்மாவின் புகைப்படம்.
(1935-ல் அவரது 21வது வயதில்
எடுக்கப்பட்ட புகைப்படம். அப்போதே அவர்
3 குழந்தைகளுக்குத் தாய்…!)
அம்மாவின் அப்பா பிரிட்டிஷ் இந்தியா காலத்திலேயே
ஒரு சிவில் எஞ்ஜினீயர்.
அம்மா அந்தக்கால மைலாப்பூரில் பிறந்தார்.
எட்டாவது வரை படிப்பு.
14 வயதில் கல்யாணம். கல்யாணம் ஆகும் வரை
வசதியான சூழ்நிலையில் வாழ்ந்தார்.
அதன் பின் முற்றிலும் மாறுபட்ட-
நேர் எதிரிடையான சூழ்நிலை..!
வறுமை -கவலைகள் ..குடும்ப பாரம்.
மொத்தம் பெற்றது 12 குழந்தைகள்.
தங்கியது 8.
63 வயதில் -சர்க்கரை, ரத்த அழுத்தம்,
என்று ஏகப்பட்ட நோய்கள் வசப்பட்டு இறந்து போனார்.
அவரது கணவர் (என் அப்பா)-
இந்தியா சுதந்திரம் பெறும் வரையில் –
காந்திஜி காங்கிரசைக் கலைத்து விட்டு,
எல்லாரும் அவரவர் வேலையைப் பார்க்கப் போகலாம்
என்று சொன்ன நாள் வரை –
குடும்பப் பொறுப்பை மறந்து, துறந்து –
சுதந்திரப் போராட்டத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டவர்.
அரசியலிலேயே தொடர்ந்திருந்தால், சி.எஸ்.,
ஆர்.வி. மாதிரி ஒரு மத்திய அமைச்சர் ஆகி இருப்பார்..!
ஆனால் – அதன் பின்னர்,
பொதுவாழ்வை முற்றிலுமாகத் துறந்து
குடும்ப பாரத்தைச் சுமக்கும் பொறுப்பை ஏற்றார்.
ஆனால் – It was Too Late…!
அதுவரை என் அம்மா குழந்தைகளை
வளர்க்கப் பட்ட பாடு – ஏகப்பட்ட “ஏழைபடும் பாடு”
திரைப்படங்களை உருவாக்க கதைகளைத் தரும்.
என் அப்பாவை குறை சொல்ல மாட்டேன். மிக
அருமையான, நேர்மையான மனிதர்.
He was a perfect gentleman.
ஆனால் ஒருவர் பொது வாழ்வில் இறங்குவதானால்,
திருமணம் செய்து கொள்ளக்கூடாது;
குடும்ப பொறுப்புகள் இருந்தால் –
பொது வாழ்வில் தீவிரமாக இறங்கக் கூடாது
என்கிற எண்ணத்தை என் மனதில் அழுத்தமாகப்
பதியச் செய்தது என் அப்பா தான்.
.
அடுத்து என் மனைவி –
(இனி வருபவர்களுக்கு பெயர் வேண்டாமே ..!)
பிறந்தது வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு குக்கிராமம்.
(அவரது)அப்பா – விவசாயம்.
படித்தது – பத்தாவது வரை.(பாஸ் ..என்று தான்
சொல்கிறார்கள்…!)
கல்யாணத்திற்கு முன்னும் சரி பின்னும் சரி –
கடவுள் அருளால், கவலையில்லாத வாழ்வு….
(எல்லாவற்றிற்கும் சேர்த்து கவலைப்பட, பொறுப்பேற்க
வேறு ஆள் இருக்கும்போது அவருக்கென்ன கவலை …!)
அவர் இறுதி வரை இப்படியே இருக்க கடவுள்
அருள் புரிய வேண்டும்.
என் அம்மா அனுபவித்த துன்பங்களை உடனிருந்து
பார்த்ததால் – நான் எனக்குள் எடுத்துக் கொண்ட
உறுதி –
மளிகை, காய்கறி, குடும்ப வரவு-செலவுகள்,கடன்கள்,
குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது உட்பட எல்லா வித
பொறுப்புகளையும் சிறு வயதிலிருந்து நானே ஏற்றுக்கொண்டு
விட்டேன்…! குடும்பத்தில் எந்த பிரச்சினைகளையும்,
என்னைத் தாண்டிச் செல்ல விடுவதில்லை.
அடுத்து என் மகள் –
(பெற்றது இரண்டு – இளையவளை இறைவன் அவளது
16வது வயதிலேயே -தனக்கு துணைக்கு மகள் ஒருத்தி
வேண்டுமென்று அழைத்துக் கொண்டு விட்டான் )
இருப்பவள் – பாசமான, குடும்பப் பாங்கான பெண்.
பட்டமேல்படிப்பு வரை படித்திருக்கிறாள். நல்ல வேலை.
நல்ல கணவன்.
ஒரு பெண் குழந்தை.
கடவுள் அருளால் மகிழ்வான வாழ்க்கை.
அடுத்து என் பேத்தி –
10 வயது நடக்கிறது. 5வது படிக்கிறாள்.
இனிமையான பெண் குழந்தை – புத்திசாலி.
“Rocket Scientist” ஆகப்போவதாக
சொல்லிக் கொண்டிருக்கிறாள்…!
.
ஐந்து தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் பற்றிய
விவரங்களை மேலே எழுதி இருக்கிறேன்.
நான் இவ்வளவு விவரமாக இவற்றை எழுதக் காரணம் –
பொதுவாகவே கடந்த 100 ஆண்டுகளில் பெண்களின்
வாழ்க்கைச் சூழல் எப்படி எல்லாம் மாறி வந்திருக்கிறது
என்பதற்கு என் குடும்பத்திலிருந்தே உதாரணம் காட்டத்தான்.
பெண்களுக்கு கல்வியறிவு இல்லாமை.
சிறு வயது திருமணம்.
பெண்களைக் கேட்காமலே, அவர்கள் சம்மதம் இல்லாமலே
எல்லாம் நிகழ்ந்தது. பெரும்பாலும் உறவிலேயே திருமணம்.!
மருத்துவ வசதிகள் இல்லாமை.
அதிக குழந்தைகள் – பெரிய குடும்பப் பொறுப்பு.
இளம் வயது விதவைகள்.
மற்றவர்களை சார்ந்தே இருக்க வேண்டிய சூழ்நிலை.
ஆண் ஆதிக்கம் நிறைந்த குடும்பம், சமூகம்.
பெண்களுக்கு பேசவே சுதந்திரம் இல்லாத நிலை.
அடுப்படி வசதிகள் இல்லாத சூழ்நிலை.
நாள் முழுவது சமையலறை, விறகு அடுப்பு -புகை,
கிணற்றடி, மாட்டுத் தொழுவங்களில் வேலை.
என் அம்மாவும், பாட்டியும், மாறி மாறி தினமும்
2 மணி நேரம் உட்கார்ந்து ஆட்டுக்கல்லில் இட்லி மாவு
அரைத்தது (10 பேர் கொண்ட குடும்பம் ஆயிற்றே)
இன்னமும் என் நினைவில் அப்படியே இருக்கிறது..!
சமூகச்சூழல் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது.
பெண்கள் படிக்க ஆரம்பித்தார்கள்.
வேலைக்கும் போக ஆரம்பித்தார்கள்.
திருமணத்திற்கான வயது உயர்ந்தது.
வதவத வென்று குழந்தைகள் பெறுவது நின்றது.
குடும்பக்கட்டுப்பாடு முறைகள் வந்தன.
நெருங்கிய உறவுக்குள் திருமணங்கள் – குறைந்தது.
குடும்பச் சுமைகளில், குழந்தை வளர்ப்பில் –
ஆண்களும் பங்கு கொள்ள ஆரம்பித்தார்கள்.
ஒத்து வராத குடும்பங்களில் – விவாகரத்தும்,
மறுமணமும் சகஜமாக ஆரம்பித்தன.
விதவைப் பெண்களை ஒதுக்கி வைப்பது நின்றது.
விதவைத் திருமணங்கள் சகஜமாயின..
கொஞ்சம் கொஞ்சமாக நவீன வசதிகள் வர ஆரம்பித்தன.
முதலில் ஸ்டவ், பிறகு கேஸ் அடுப்பு.
பிரஷர் குக்கர்கள், மிக்ஸி,
(இட்லி) வெட் கிரைண்டர்கள்,
ரெப்ரிஜெரேடர், ஏர்கண்டிஷனர், ரேடியோ,
டேப் ரிக்கார்டர், டிவி, டிவிடி ப்ளேயர் –
சமையலறை வேலைகளையும்,
தினசரி வாழ்க்கையையும்
ஓரளவு சௌகரியமாக்கக்கூடிய சாதனங்கள்
நிறைய வந்தன.
பெண்களுக்கான பல விசேஷ திட்டங்களை மாநில,
மத்திய அரசுகள் உருவாக்கியுள்ளன.
கல்விக் கட்டணங்களில் சலுகைகள்.
அதிக அளவில் வேலை வாய்ப்பு.
இட ஒதுக்கீடு.திருமண உதவி. நல்ல மருத்துவ
வசதிகள். பேறு காலத்துக்கான சம்பளத்துடன் கூடிய
விடுமுறை. குழந்தைப் பேறு குறித்த நல்ல தெளிவு,
அறிவு, அனுபவம், ஆலோசனைகள்..!
பணியில் இருக்கும் பெண்கள், தனியாகவே
வெளிநாடுகளுக்குக் கூடச்சென்று வரக்கூடிய அளவிற்கு
அவர்களுக்கு வாய்ப்புகளும், அனுபவமும், சூழலும்
ஏற்பட்டுள்ளன.
இவை எல்லாம் அன்றைய பெண்களின் நிலையோடு
ஒப்பிடுகையில், இன்றைய மகளிர் பெற்றுள்ள
வசதிகளையும், முன்னேற்றங்களையும் குறிக்கின்றன.
ஆனால், இந்தச் சூழ்நிலை, இத்தகைய வசதிகள்
இன்றைய தினம் அனைத்துப் பெண்களுக்கும்
கிடைக்கிறதா ?
இல்லை என்று தான் சொல்ல வேண்டும். சமுதாயத்தின்
அனைத்துப் பிரிவு பெண்களுக்கும் இந்த வசதிகள்,
பாதுகாப்பு கிடைக்க வேண்டும்.
பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் காரணமாக உள்ள
வேறுபாடுகள் ஒரு பக்கம் இருந்தாலும் –
இன்றைய தினம் பெரும்பாலும் திருமணமான பெண்களின்
முக்கியப் பிரச்சினையே – குடிகாரக் கணவன்கள் தான்.
சம்பாதிப்பதில் பெரும்பகுதியை மதுக்கடையில் இழந்து,
தீராத ஆரோக்கியக் கேட்டை விலைக்கு வாங்கிக்கொள்வதோடு
குடும்பத்தில் பெண்களின் நிம்மதியை நிரந்தரமாகப்
பறிக்கிறது குடிப்பழக்கம்.
இதிலிருந்து அவர்களுக்கு விடிவு கிடைக்கச் செய்யும்
பொறுப்பு நம் அனைவருக்குமே இருக்கிறது. இந்த
சாராயக்கடைகளை தொலைக்க நாம் என்ன செய்தாலும்
தகும். இந்த விஷயத்தில் அரசியல் கட்சிகள் எதையும் நம்பிப்
பயனில்லை.
சாராயக்கடைகளை மூட மிகப்பெரிய அளவில் மக்களும்,
தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து செயல்பட வேண்டும்.
பணிக்குச் செல்லும் பெண்களுக்கு சரியான பாதுகாப்பான
சூழ்நிலை இன்னமும் ஏற்படவில்லை. குடிகாரர்களாலும்,
பொறுக்கிகளாலும் – அவதிப்படும் பெண்களுக்கு தகுந்த
பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
படிப்பதற்காகவும், பணி புரிவதற்காகவும் –
வெளியூர்களிலிருந்து வரும் பெண்கள் தங்குவதற்கு –
சௌகரியமான, நம்பகமான, குறைந்த செலவிலான –
பெண்கள் தங்கும் விடுதிகள் நிறைய ஏற்படுத்தப்பட
வேண்டும்.
ஓரளவு முன்னேறி விட்ட,
வசதியான படித்த பெண்கள்,
இது குறித்து ஆர்வத்துடன் செயல்பட வேண்டும்.
தகுந்த வசதி, வாய்ப்பு பெறாத மற்ற பெண்களையும்
வளம் பெற வாழ வைப்பது – தாங்கள் இந்த
சமுதாயத்திற்கு திரும்பச் செலுத்த வேண்டிய கடன்
என்பதை வசதிபெற்ற பெண்கள் உணர வேண்டும்.
இது ஒரு கூட்டுப்பொறுப்பு ! இந்த பொறுப்பு
சமுதாய அக்கரை கொண்ட ஒவ்வொரு ஆணுக்கும்,
பெண்ணுக்கும் இருக்க வேண்டும்.
கடந்த 50-60 ஆண்டு காலத்தில் நமக்கு ஏற்பட்டுள்ள
அனுபவங்கள், முன்னேற்றங்கள் நமக்கு சொல்வது –
நாம் தீவிரமாக இறங்கி முனைந்தால் விரைவிலேயே
இன்னும் நிறைய சமுதாய மாற்றங்களையும்,
முன்னேற்றங்களையும் –
நம்மால் நிச்சயம் ஏற்படுத்த முடியும் என்பதையே.
அரசியலைப் பற்றியே நான் அதிகமாக எழுதி
வந்தாலும் கூட, இந்த வலைத்தளத்தை
அதிக அளவில் பெண்களும் படிக்கிறார்கள்
என்பதை என்னால் உணர முடிகிறது.
“உலக மகளிர் தினத்”தை ஒட்டி அனைத்து
மகளிருக்கும் என் உள்ளம் நிறைந்த வாழத்துக்கள்.
“உலக மகளிர் தினத்”தை ஒட்டி அனைத்து
மகளிருக்கும் என் உள்ளம் நிறைந்த வாழத்துக்கள்.
அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி & வாழ்த்துகள்:
வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்
“உலக மகளிர் தினத்”தை ஒட்டி அனைத்து
மகளிருக்கும் என் உள்ளம் நிறைந்த வாழத்துக்கள்.
அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி & வாழ்த்துகள்:
வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்
//சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு பெண்களுக்கும் இந்த வசதிகள், பாதுகாப்பு கிடைக்க வேண்டும்.//
மிகச்சரியாக சொல்லியிருக்கிறீர்கள் ஐயா.
உலக மகளிர் தின வாழ்த்துக்கள்!!
உங்களின் குடும்பத்தை அறிந்துகொள்ள இந்த மகளிர் தினம் ஒரு வாய்ப்பாக அமைந்ததற்கு நன்றியுறைக்கின்றேன்.
உங்களின் தந்தைக்கு (அம்மாவின் கணவர்?!) ஒரு சல்யூட்.
வெவ்வேறு பதிவு வெவ்வேறு விதமாக இருக்கும்… இருந்து விட்டுப் போகட்டும்… ஆனால் இந்தப் பதிவு – உங்களைப் பற்றி + உங்களுடன் சார்ந்தவைகளைப் பற்றி… அருமை என்று ஒரு வார்த்தை சொல்ல முடியவில்லை… வாழ்த்துக்கள் பல…
முக்கியப் பிரச்சினை – 100% உண்மை…
மகளிர் தின வாழ்த்துக்கள் – என்றும்…
நீங்கள் பதிவிட்டுள்ள சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று.மிக சரியாக மகளிர் தின செய்தி அளித்துள்ளீர்கள்.மனமார்ந்த வாழ்த்துக்கள்.நீங்கள் உள்ளிட்ட உங்கள் குடும்பம் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
திரு.காவிரிமைந்தன் அவர்களுக்கு,
நான், என் கணவர் இருவருமே உங்கள் கட்டுரைகள் அனைத்தையும்,
ஒன்று விடாமல் படித்துக் கொண்டிருக்கிறோம்.
திரு கண்பத் அவர்கள் சொல்லியிருப்பது போல் இது உங்கள் the best.
எத்தனை அழகாக உங்கள் பாட்டி, அம்மா, மனைவி மூன்று பேரையும்
சித்தரித்திருக்கிறீர்கள். எனக்கும் இதே போல் ஒரு பாட்டியும், அம்மாவும்
என் சிறு வயதில் இருந்தார்கள். எங்கள் முழு குடும்பத்தையும் அவர்கள்
தான் தாங்கினார்கள். இப்போதெல்லாம் அத்தகைய கூட்டுக்குடும்பங்கள்,
பெரிய குடும்பங்கள் இல்லை.
உங்கள் மனைவி மிகவும் கொடுத்து வைத்தவர்.
உங்கள் பெண்களும் கூடத்தான்.
ஒரு வேண்டுகோள்.அரசியலைத் தாண்டி இது போன்ற கட்டுரைகளையும் அடிக்கடி எழுதுங்களேன்.
Mrs.ரேவதி சங்கரன்
vaazhthukkal sir….
thank uuuu sir
All i can say on your writing is, wowww.
பெண்களின் வாழ்வியல் குறித்த அருமையான பதிவு.
best article congrets
சிறந்த பதிவு ஐயா. இதன் சிறப்பு படிக்கும் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தில் இது போன்று தலைமுறைகளை ஒரு நிமிடம் எண்ணி பார்த்து உவகை கொள்ள தூண்டுவதே. தொடரட்டும் உங்கள் சீரிய பணி.
மிக அருமையான பதிவு. தங்களின் அரசியல் பதிவுகளுடன் இது போல் விழிப்புணர்வு பதிவுகளும் எழுத வேண்டுகிறேன்
திரு KM,
அருமையான பதிவு. உங்களுடைய வாழ்க்கையும் என்னுடையதும் பார்க்கும் போது, பெண்கள் வாழ்வின் மாறுபாட்டை உணர முடிஹின்றது. எழுபதாம் ஆண்டுஹளில் US வரும்போது, புதிய நாடு, கலாச்சாரம் என்று மனதில் (குடும்பம் இருந்தும் கூட) ஒரு பயம் இருந்தது, அது நீங்க பல வருடங்கள் ஆஹியது.
But nowadays, when you see the girls coming from a village, studied in a local college (not like IIT or Guindy, where the exposure is lot more), coming to US and after having some experience, traveling for different projects, landing in big city airports like Chicago, New York in odd hours, taking the rental car, driving with the help of iPhone Maps, staying in a hotel and starting a project with the Fortune 500 company – its amazing! Women have come a long way!
For this evolution, may be some of the credit goes to Sam Pitroda (who happened to be the Technology advisor to Rajiv Gandhi) who revolutionized the Telecom and opened the gateway for IT in India!
“அனைத்து மகளிருக்கும் எங்கள் உள்ளம் நிறைந்த வாழத்துக்கள்”.
அன்புடன் இராஜேந்திரன்
வணக்கம் காவிரிமைந்தன்
நல்ல பதிவு
மகளிர்தினம் உலகமெலாம் கொண்டாடப்படுகிறது ஆனால் இந்தியாவின் பல கோடி கிராமத்து அப்பாவி பெண்களுக்கு இது என்னவென்றே புரிந்துகொள்ளமுடியாத ஒரு சொல்லாக மட்டுமே இருக்கின்றது அல்லது வியாபார நாட்களில் இதுவும் ஒன்று அவ்வளவுதான் ஆனால் உங்கள் சொந்த குடும்பத்தையும் அதன்மாற்றங்களையும் பெண்ணிய வளற்சியோடு கொண்டுசென்ற விதம் நிட்சயமாக அந்த கிராமத்து பெண்களையும் சென்றடையும் மகளிர் தினம் என்றால் என்ன என்று விழங்காவிட்டாலும் இதுதான் நடக்கவேண்டும் என்று விளங்கிக் கொள்வார்கள் பாராட்டுக்கள் http://www.tamilmurasuaustralia.com மிலும் அவுஸ்ரேலியதமிழ் ஒலிபரப்பிலும் (ATBC) வெளிவருகிறது.
அன்புடன்
செ பாஸ்கரன்
நண்பர் செ.பாஸ்கரன் அவர்கட்கு,
உங்கள் மடலுக்கு மிக்க நன்றி.
தமிழ்முரசு ஆஸ்திரேலியா வலைத்தளத்தையும்
பார்த்தேன். மிகச் சிறப்பாக இருக்கிறது.
மிகவும் பெருமையாக இருக்கிறது.
பல்லாயிரக்கணக்கான மைல்கள் தாண்டி
வேறு ஒரு கண்டத்தில் வாழும் தமிழர்கள் தங்கள்
பண்பாட்டையும், மொழியையும் எவ்வளவு
அக்கரையோடு போற்றி வளர்த்து வருகிறார்கள்
எனபதைப் பார்க்க மனம் பூரிப்படைகிறது.
உங்கள் மூலமாகவும்,
உங்கள் வலைத்தளம் மூலமாகவும்,
ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழ் மக்கள்
அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த
வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
AVERY GOOD ARTICLE.
IT MADE EVERYBODY TO THIBNK ABOUT THEIR FAMILY STRUCTURE.
MY FATHE AND MOTHER (MY AGE 64) NEVER WENT TOGETHER TO ANY LOCAL PLACE.
FOR MY BROTHER’S MARRIAGE ONLY THEY TRAVELLED IN SAME BUS. I NEVER SAW THEM SITTING TOGETHER IN ANY PLACE.I NEVER SAW MY FATHER CALLING MY MOTHER BY NAME. I NEVER SAW IN OUR STREET LADIES TALKING WITH OTHER MALE MEMBERS.
IN MY OPINION, IN EVERY SECTION OF THE SOCIETY, THERE IS CHANGE REGARDING WOMEN’S POSITION.
AS MrS MANI RAJENDRAN SAID, SO MANY VILLAGE GIRLS ALSO GOT EDUCATION, THANKS TO PRIVATE ENGG COLLEGES..
WHEN I STUDIED ONLY NINE ENGG COLLEGES WERE THERE. NOW 600 ENGG COLLEGES.
WHEN I STUDIED, THERE WAS NO GIRL STUDENT IN ELECTL/MECH BRANCH. NOW IN NIGHT SHIFT ALSO LADIES ARE WORKING. IT HAS SOME SIDE EFFECTS ALSO. BUT WE HAVE TO ACCEPT THE OVERALL IMPROVEMENT UPTO HIGH SCHOOL COMPULSORY FREE EDUCATION SHOULD BE GIVEN TO GIRLS. BY GOVT.
IT WILL TAKE YEARS TO ERADICATE THE OTHER EVILS LIKE DOWRY, MARRIAGE EXPENSES, DOMESTIC VIOLENCE ETC.
Surprisingly, your mother’s facial features resemble that of my late mother’s and Periamma’s. What you have written about women’s progress over the century are all very true. Very similar women’s evolution in my family too. Fully agree with you on the evils of drinking. Some wise leader must boldly re-introduce prohibition to save the women of Tamil Nadu. Sadly, two generations of men have been spoiled, thanks to the monumental wrong decision of state leaders in the sixties, despite the repeated warnings of Rajaji. We may not agree with Dr Ramadas, but on prohibition, he is right on dot, and to his credit, he has been consistently advocating prohibition.
Thank you Mr.D.Chandramouli.
I fully agree with you on Dr.Ramadoss.
He never fails to talk about this evil
in every one of his meeting.
Reg. your remarks on resemblence of my mother’s facial -with that of your mother’s –
My mother died 35 years ago and as I was moving to
various parts of the country, I have lost
touch with her other relatives. My mother
had two sisters – both were elders to her –
Seethalakshmi and Rukmini by name.
By chance – if you have anybody with that name
in your family – please let me know.
You can write to my ID – kavirimainthan@gmail.com
With all best wishes,
Kavirimainthan
Anna best article
thank you Selvaraj…!
with all best wishes,
Kavirimainthan
சின்ன துக்கமும், சின்ன சந்தோசமும் ஆக இருக்கிறது. ஆனால், எதோ கணத்த மனதை கொடுத்து விட்டீர்கள். வாழ்க வளர்க!