எனக்குத் தெரிந்து அநேக குடும்பங்களில் (எங்கள் வீட்டிலும் கூட )
ஒரு பழக்கம் உண்டு. வீட்டில் விசேஷங்கள், கொண்டாட்டங்கள்,
நல்ல நிகழ்வுகள் போன்றவை நடக்கும்போது – முகூர்த்த தேதியை
தீர்மானிக்கும்போதே – “சாமி”க்கு (அதாவது அவரவர் குலதெய்வம்)
என்று ஒரு தொகையை எடுத்து ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து விடுவார்கள். பின்னர், நேரிடையாக கோவிலுக்குச் செல்லும்போது, அதை கோவிலில் சேர்த்து விடுவார்கள்.
எங்கள் வீட்டில் என் நினைவு தெரிந்த நாளிலிருந்து இந்த வழக்கம் உண்டு.
மிகவும் தொலைவில் இருந்தால் மணியார்டர் மூலம் அப்பா குலதெய்வம்
கோவிலுக்கு பணம் அனுப்பி விடுவார். அந்த நாட்களில், அதாவது –
60 வருடங்களுக்கு முன்னால் 11 ரூபாயாக இருந்தது. பின்னர் 51, பின்னர் 101, இப்போதெல்லாம் 1001. அப்பாவிற்கு பின்னர், இந்த பழக்கம் எங்கள் சகோதரர்கள், சகோதரிகள் – அனைவரின் குடும்பத்திலிருந்தும் கடைப்பிடிக்கப் படுகிறது.
இதைத்தவிர, கிட்டத்தட்ட கடந்த 14- 15 வருடங்களாக, இன்னொரு பழக்கமும் வைத்திருக்கிறோம். வீட்டில் விசேஷங்கள் – குழந்தைகளின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள், வளைகாப்பு-சீமந்தம், போன்ற சிறிய நிகழ்வுகளின்போது, உள்ளூரில் இருக்கும் – சிறிய அளவிலான, ஆதரவற்றோரைப் பராமரிக்கும் கருணை இல்லங்கள்,
முதியோர் விடுதிகள் ஆகியவற்றில் எதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து,
வீட்டிற்காக ஆர்டர் கொடுக்கும் – இனிப்புகள், மற்ற பணியாரங்கள்
ஆகியவற்றோடு இன்னும் சுமார் 100 எண்ணிக்கை (அல்லது அந்த விடுதியில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை அளவிற்கு )அதிகமாக ஆர்டர் கொடுத்து அவற்றை இத்தகைய இல்லங்களுக்குச் சென்று கொடுப்போம்.
இந்தப் பழக்கம், நான் பணியில் இருக்கும்போது, இன்னும் சில நெருங்கிய
நண்பர்களுடன் சேர்ந்து துவங்கியது. பிறகு நான் வெவ்வேறு ஊர்களுக்கு
மாற்றலில் செல்லும்போது, அங்கு புதிதாக கிடைக்கும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பரவியது
கொடுப்பதில் இருக்கும் சுகமே தனி.
நம்மிடம் இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு,
அதில் அவர்கள் பெறும் மகிழ்ச்சியை காணும்போது –
கிடைக்கும் சுகம் சொல்லற்கு அரியது.
அதை உணர்ந்து,
அனுபவித்து, பார்த்தவர்களுக்கு நன்கு புரியும்.
நான் சொல்வதற்கு முன்னரே –
உங்களில் நிறைய பேர் இதை அனுபவித்திருப்பீர்கள்.
இதில் அளவு முக்கியம் இல்லை. கொடுக்க வேண்டும் என்கிற
குணம் தான் முக்கியம். மனம் தான் – முக்கியம்.
இன்னொரு விஷயத்தையும் நான் கவனித்திருக்கிறேன்-
நிறைய பணம் வைத்திருக்கும் செல்வந்தர்களை விட –
நடுத்தர மற்றும் ஏழை மக்களிடம் தான் இத்தகைய பகிர்ந்து கொள்ளும்
குணம் அதிகமாக இருக்கிறது. அவர்களுக்குத் தான்
அதன் அவசியமும் புரிகிறது –
அருமையும் புரிகிறது…!
இந்த வலைத்தளத்து நண்பர்கள் பலர் ஏற்கெனவே இத்தகைய பழக்கங்கள்
எதாவது ஒன்றினை மேற்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கும்,
அவர்கள் மூலமாக அவர்களது மற்ற நண்பர்களுக்கும் இந்த செய்தி பரவ
வேண்டும் என்று விரும்புகிறேன்.
இந்த புத்தாண்டிலிருந்து நாம் அனைவரும் இதை ஒரு நற்பணியாக
மேற்கொள்வோமே. நாம் மேற்கொள்வதோடு அல்லாமல், நமக்குத் தெரிந்த
நண்பர்கள், உறவினர் குடும்பங்களுக்கும் இந்தப் பழக்கம் போய்ச்சேர
முயற்சி செய்வோமே. பெரிய அளவில் இல்லையென்றாலும் –
தம்மிடம் இருப்பதில் சிறிதளவை – இல்லாதவர்களுக்கு கொடுக்கும்
உள்ளங்களை அதிகரிக்க முயற்சி செய்வோமே. கடவுள் இல்லங்களை
அதிகரிப்போமே.
கருணை உள்ளமே – கடவுள் இல்லமே !




/// கொடுப்பதில் இருக்கும் சுகமே தனி. நடுத்தர மற்றும் ஏழை மக்களிடம் தான் இத்தகைய பகிர்ந்து கொள்ளும் குணம் அதிகமாக இருக்கிறது… ///
அப்பட்டமான உண்மைகள்… பாராட்டுக்கள்…
தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…
நன்றி தனபாலன்,
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
திரு காவிரி மைந்தன் அவர்களின் அருமையான பதிவு. நண்பர்கள் படித்து முடிந்த அளவு கடைப்பிடிக்க வேண்டுகிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் & நன்றி திரு காவிரி மைந்தன்.
திரு காவிரி மைந்தன் அவர்களின் அருமையான பதிவு. நண்பர்கள் படித்து முடிந்த
அளவு கடைப்பிடிக்க வேண்டுகிறேன். எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் & நன்றி திரு காவிரி மைந்தன்.
2014/1/1 “வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்”
> vimarisanam – kavirimainthan posted: ” எனக்குத் தெரிந்து அநேக
> குடும்பங்களில் (எங்கள் வீட்டிலும் கூட ) ஒரு பழக்கம் உண்டு. வீட்டில்
> விசேஷங்கள், கொண்டாட்டங்கள், நல்ல நிகழ்வுகள் போன்றவை நடக்கும்போது –
> முகூர்த்த தேதியை தீர்மானிக்கும்போதே – “சாமி”க்கு (அதாவது அவரவர் குலதெய்வம்)
> என்று ஒரு தொக”
நன்றி திரு ரத்னவேல் நடராஜன்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
புது வருட நல்ல பதிவு. நான் சிறு பையனாக இருந்த பொதும் இது போல் எனது பெற்றொர் செய்வதை பார்த்திருக்கிறேன். ஆனால் நான் அவ்வப்போது நன்கொடைகளை cheque மூலம் செய்து விடுகிறேன். இது சுலபமாக உள்ளது.
எனினும் நீங்கள் கூறுவதும் உண்மை தான். Wishing you happy new year.