மயிலே, மயிலே ….
“இந்தியப் பொருளாதாரம் மிகவும் பலவீனமடைந்து,
கடுமையான சீர்திருத்தங்களும், உதவிகளும் தேவைப்படும்
இந்த வேளையில் –
மத்திய அரசு “செல்வந்தர்களுக்கு விசேஷ வரி” போடுவது
நேர்மாறான விளைவுகளையே உண்டாக்கும் என்று
எச்சரிக்க விரும்புகிறேன்”.
-சொல்வது யார் ?
Confederation of Indian Industries
Chairman – ஆதி கோத்ரெஜ்
“செல்வந்தர்களுக்கு அதிக வரி விதிப்பது என்பது-
புதிய முதலீடுகளின் மூலம் இந்தியப் பொருளாதாரத்தை
கரையேற்ற விரும்பும் தொழில் அதிபர்களிடையே
எதிர்மறையான விளைவுகளையே உண்டு பண்ணும்”.
“வரியை அதிகரித்தால்,
வியாபாரத்தை – வரி குறைவாக
உள்ள வெளி நாடுகளுக்கு கொண்டு
செல்ல நேரிடும்”
-இதைச் சொல்லி பயமுறுத்துவது யார் ?
FICCI President -நைனாலால் கித்வாய் !
1990-களில்அதிகபட்சம் 56% வரை வருமான வரி இருந்த
இந்தியாவில் இப்போது விதிக்கப்படும் உச்சபட்ச
வருமான வரி 30 % தான்.
இந்த பயமுறுத்தல்கள் எப்படி வந்தன ?
பிரதமரின் – பிரதம பொருளாதார ஆலோசகர்
சி.ரங்கராஜன் சில நாட்களுக்கு முன்னர் ஒரு
பொது நிகழ்ச்சியில் திருவாய் மலர்ந்தருளினார் –
“the income tax rate on the ‘super-rich’
be raised from the current 30 per cent
in order to meet the growing expenditure
requirements”
இதை அவர் சொல்ல வேண்டிய இடம் எது ?
நிதியமைச்சர் மற்றும் பட்ஜெட் விவரங்களை தயாரிப்பதில்
ஈடுபட்டிருக்கும் அரசு அதிகாரிகளிடம்.
ஆனால் பொது நிகழ்வில் கூறக்காரணம் என்ன ?
நம்ப வைக்க. மக்களை நம்பவைக்க.
மத்திய அரசு பணக்காரர்களுக்கு வரிகளை உயர்த்துவதைப்
பற்றி சீரியசாக யோசித்து வருகிறது என்று நம்ப
வைப்பதற்காக. இது உண்மையிலேயே நடக்கும் என்றால்,
அதை இவர் இப்போது வெளியில் கூற வேண்டிய
அவசியமே இல்லை.
பின் ஏன் கூறுகிறார் ? இதன் மூலம்
எதிர்பார்க்கும் விளைவுகள் தாம் என்ன ?
“மயிலே -மயிலே” என்றால் மயில்கள்
இறகு போடாதா ?
இப்படி எல்லாம் அறிவிப்புகள் வெளியிட்டால் –
அரசின் சாதகமான போக்கை வேண்டி,
தொழிலதிபர்களிடமிருந்து ஆளும்கட்சிக்கு
வரவிருக்கும் தேர்தல் செலவுகளை எதிர்கொள்ள
“கணிசமான” நிதியுதவி கிடைக்கும்.
நம் “பொது மக்கள்” எப்போதும் போல்
இதையும் சீரியசாக எடுத்துக் கொண்டு,“தேவலையே –
இந்த அரசு பணக்காரர்களையும் விட்டு வைக்கவில்லையே”
என்று நினைப்பார்கள்.
பெரும் தொழிலதிபர்கள், வர்த்தகர்களுடன்
மத்திய நிதியமைச்சர் பட்ஜெட்டுக்கு முன்னால் வழக்கமாக
நடத்தும் ஆலோசனைக் கூட்டங்கள் நிகழ்ந்து
கொண்டிருக்கின்றன. இது குறித்து இரண்டு கேள்விகள்
எழுகின்றன.
ஒன்று – இந்த ஆலோசனைக் கூட்டங்களால் உண்மையில்
எதாவது பயன் உண்டா ? உண்டு என்றால் – யாருக்கு ?
இரண்டு – பட்ஜெட் வாட்டி வதைக்கப்போவது என்னவோ
பொது மக்களைத்தான். பொதுமக்களிடம் எப்போதாவது
அரசாங்கம் பட்ஜெட் ஆலோசனை கேட்டிருக்கிறதா ?
நம் மீது போடப்படும் பலவிதமான வரிகளைப் பற்றி
என்றைக்காவது நம்மைக் கலந்து ஆலோசித்தது உண்டா ?
ரெயில் டிக்கெட் விலையை உயர்த்தலாமா ?,
பெட்ரோல், டீசல் விலையை கொஞ்சம் உயர்த்தலாமா ?
சேவை வரியை கொஞ்சம் விஸ்தரிக்கலாமா என்று
என்றைக்காவது பொது மக்களை கேட்டதுண்டா அரசு ?
மான்ய LPG சிலிண்டர்களின் அளவை
ஆண்டுக்கு 6 என்று குறைத்தார்களே
அந்த உத்திரவு உடனடியாக அமுலுக்கு வந்தது.
ஆனால் அதையே மீண்டும் 9 ஆக உயர்த்த போடும்
உத்திரவில் மட்டும் அடுத்த ஏப்ரல் மாதத்திலிருந்து
தான் அமுலுக்கு வரும் என்று
காத்திருக்கச் சொல்கிறார்கள்.
சின்னச் சின்ன விஷயங்களில் எல்லாம் கூட
மக்களை ஏமாற்றும் வகைகளை புதுப்புது விதங்களில்
கண்டு பிடித்து அறிமுகப்படுத்துகிறது அரசு.
பொது மக்களுக்கு விதித்த சிலிண்டர் கட்டுப்பாடுகள்
ஏன் அமைச்சர்களுக்கும், எம்.பி.க்களுக்கும்
விதிக்கப்படவில்லை? ஆண்டுக்கு 150 சிலிண்டர்
வாங்கும் அரசியல்வாதி இன்னமும் சலுகை விலையில்
சிலிண்டர் வாங்கிக் கொண்டு தானே இருக்கிறார் ? அவருக்கு
எந்தவித கட்டுப்பாடுகளையும் அரசு விதிக்கவில்லையே !
இங்கு மற்றொரு முக்கியமான விஷயமும் சொல்ல
வேண்டும். அரசு அதிகாரிகளும் சரி, மீடியாக்களும் சரி,
அரசியல்வாதிகளும் சரி –
TAX PAYER என்றால் வருமான வரி செலுத்துபவர்கள்
மட்டும் தான் TAX PAYER என்பது போல் பேசிக்கொண்டு
இருக்கிறார்கள்.
Income Tax -“வருமான வரி” மட்டும் தான் வரி
என்று ஒரு மாயத்தோற்றத்தை இங்கே உண்டு பண்ணி
வைத்திருக்கிறார்கள்.
கடைக்கு சென்று நீங்கள் எந்தப் பொருளை வாங்கினாலும்
மறைமுகமாக அதற்கு வரி கட்டத்தானே செய்கிறீர்கள் ?
சென்ற வாரம் 1300 ரூபாய்க்கு மளிகை சாமான்
வாங்கினேன். அதில் வரி மட்டும் 87 ரூபாய்.
மாதத்திற்கு 10,000 ரூபாய் செலவழிக்கும் ஒரு சம்சாரி –
அதில், குறைந்த பட்சம் 800 ரூபாயையாவது எதாவது
ஒரு வகையில் வரியாகச் செலுத்துகிறார்.
SALES TAX, EXCISE DUTY, SERVICE TAX,
INCOME TAX –
எதுவாக இருந்தால் என்ன ?
மாநில அரசோ – மத்திய அரசோ – வரி வரிதானே ?
வரிகளை இரண்டும் தான் பிரித்துக் கொள்கின்றன.
உண்மையில் இந்த நாட்டில் வரி கொடுக்காத ஆளே இல்லை.
பிச்சைக்காரர் கூட வரி கொடுக்கும் நாடு இது !
பிச்சைக்காரர் டீக்கடையில் ஒரு டீ சாப்பிட்டால் கூட –
அவர் கொடுக்கும் 6 ரூபாயில்
பாலுக்கும், சர்க்கரைக்கும் தேயிலைக்கும் வரி கொடுக்கிறாரே !
பெண்டாட்டி -பிள்ளைகளிடம்,
நண்பர்களிடம் -உறவினர்களிடம் –
பேசுவதற்கு கூட வரி விதிக்கப்படுகிறது இங்கே !
இன்றைய தினம் அநேகமாக எதாவது ஒருவகை
தொலைபேசி இல்லாத வீடே இல்லை.
மாதாந்திர தொலை பேசி கட்டணத்தின்
மீதும் -12 % சர்வீஸ் டேக்ஸ்.
(அதற்கு மேல் 2 % கல்வி வரி –
அதற்கு மேல் 1 % உயர் கல்வி வரி !!)
மேலே சொன்ன பணக்கார தொழிலதிபர்களை
பாதியில் அப்படியே விட்டு விட்டேனே !
இவர்கள் பதறுவதும், பயமுறுத்துவதும் எதற்காக ?
ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் சம்பாதிப்பவருக்கும்
100 கோடி ரூபாய் சம்பதிப்பவருக்கும் ஒரே விகிதத்தில் வரி
என்பது என்ன நியாயம்?
நம் நாட்டில் அதிகமாகப் போனால் மென்பொருள்
உற்பத்தியில் பணிபுரிவோர் வருடத்திற்கு 20-25 லட்சம்
சம்பளம் பெறக்கூடும். இவர்களை விட்டு விட்டு –
ஆண்டுக்கு 25 லட்சத்திற்கு மேல் வருமானம்
பெறுவோரை ஒரு வரிசையிலும்,
50 லட்சத்திற்கு மேல் பெறுவோரை
ஒரு வரிசையிலும்,
ஒரு கோடிக்கும் மேல் வருமானம் பெறுவோரை
ஒரு வரிசையிலும் வைத்து
“Super rich” என்று categorise பண்ணி
ஏன் 40 %, 50 %, 60% என்று வரி விதிக்கக்கூடாது ?
56% வரை வருமான வரி போடப்பட்டிருந்த நாடு தானே இது ?
அன்றாடங்காய்ச்சிகள், 3 வேளை வயிறாற சோறு கூட
உண்ண முடியாதவர்கள் கோடிக்கணக்கில் இருக்கும்
இந்த நாட்டில் –
100 கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பவர்களுக்கு
அதற்கு மேற்பட்ட தொகையில் 10 % சொத்து வரி
போட்டால் தான் என்ன ?
40,000 கோடி 50,000 கோடி என்று சொத்து சேர்த்து
வைத்திருக்கும் பெருமகன்களின் பணம் கொஞ்சம் இந்த
நாட்டு ஏழைகளுக்காகவும் செலவழிக்கப்படட்டுமே !
இன்னொரு முக்கியமான விஷயம் tax evasion !
வரி ஏய்ப்பு !
தங்கள் உண்மையான வருமானம் எவ்வளவு என்பதை
எந்த வக்கீலாவது சொல்கிறாரா ?
எந்த டாக்டராவது சொல்கிறாரா ?
வக்கீல்களின், டாக்டர்களின் உண்மையான
வருமானத்தில் பத்தில் ஒரு பங்காவது கணக்கு
வைக்கப்படுகிறதா ?
இந்தியாவில் எத்தனை வக்கீல்கள் –
எத்தனை டாக்டர்கள் – ரசீது கொடுக்கிறார்கள் ?
நம் மக்களில் சிலருக்கு வக்கீல்களிடம் போய்
அனுபவம் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் -டாக்டர்களிடம் போகாதவர்கள்
யாரும் இருக்க முடியாது ?
இதில் எவ்வளவு பேருக்கு டாக்டரிடம் ரசீது வாங்கிய
அனுபவம் இருக்கிறது ?
நம் நாட்டில் வக்கீல்களிடமிருந்தும், டாக்டர்களிடமிருந்தும்
ஒழுங்காக வருமான வரி வசூலித்தாலே
பெரும் தொகை சேருமே !
இந்த டாக்டர்களையும், வக்கீல்களையும் ஒழுங்காக
வருமான கணக்கை வைக்கச்செய்யும் வழிகளை
அரசு நினைத்தால் செய்ய முடியாதா ?
(வக்கீல்களைப் பொறுத்த மட்டில் – அரசு நிச்சயம் செய்யாது
என்றே தோன்றுகிறது. கொஞ்சம் நினைவுபடுத்திப் பாருங்கள்.
மத்திய மந்திரிகளில் குறைந்தது 50 % பேர் வக்கீல்கள் !
இதில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய்
பீஸ் வாங்கும் பெருமகன்கள் எல்லாம் உண்டு )
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும்
கறுப்புப் பணத்தை கொண்டு வருவதாகச் சொல்லி
எத்தனை ஆண்டுகளாக அரசு விளையாடி வருகிறது.
அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட பட்டியலில் என்ன
மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது ?
சம்பந்தப்பட்டவர்கள் ஒன்று ஆளும் கட்சியைச் சேர்ந்த
ஆசாமிகளாக இருப்பார்கள் இல்லையென்றால் –
ஆளும் கட்சித் தலைமைக்கு “நன்கொடை”கொடுப்பவர்
பட்டியலில் இருப்பார்கள். பின்னர் நடவடிக்கை எப்படி
வரும் ?
பி.கு –
இதை எல்லாம் இங்கு எழுதுவதால் என்ன பயன் ?
இதனால் எல்லாம் இங்கு மாற்றம் உண்டாகி விடவா
போகிறது என்று சிலர் நினைக்கக்கூடும்.
அந்த மாதிரி அநியாயமான நம்பிக்கைகள் எல்லாம்
எனக்கு இல்லை.
நான் எழுதுவதற்கு முக்கியமான காரணங்கள் –
ஒன்று – இந்த எரிச்சல் தரும் சூழ்நிலையில்
மூச்சு முட்டுகிறது.
நமக்கு (எனக்கும், என்னைப்போன்ற
மற்ற நண்பர்களுக்கும்)
இது ஒரு ventilation -தாராளமாக மூச்சு விட
ஒரு இடம் !
இரண்டு – இதைப்பற்றி எல்லாம் இன்னும் எதுவும்
யோசித்தே பார்க்காத சில நண்பர்களாவது
இனி இதைப்பற்றி எல்லாம் கொஞ்சமாவது சிந்திக்க
ஆரம்பிப்பார்கள் என்கிற நம்பிக்கை !



Ethanai kaalamthan emattruvan indha Naattile?
good article……hope awareness will be created…..
தங்களது கருத்து நூறு சதவிதம் சரியானதுதான் . பிரதமராக டீ .என் .சேஷன் வந்தால்தான் நாடு நிமிர்ந்து நிற்கும்
அருமையான பதிவு. நண்பர்களே, படித்துப் பாருங்கள்.
நன்றி திரு காவிரி மைந்தன்.
wish you & your’s happy new year and pongal super your opinion
2013/1/21 “வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்”
> ** > vimarisanam – kavirimainthan posted: “மயிலே, மயிலே …. “இந்தியப் > பொருளாதாரம் மிகவும் பலவீனமடைந்து, கடுமையான சீர்திருத்தங்களும், உதவிகளும் > தேவைப்படும் இந்த வேளையில் – மத்திய அரசு “செல்வந்தர்களுக்கு விசேஷ வரி” > போடுவது நேர்மாறான விளைவுகளையே உண்டாக்கும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்”. > “
கபட நாடகத்தை தோல் உரித்து கட்டியிருக்கும் அருமையான கட்டுரை. என்னுடைய கவலை எல்லாம் இதுக்கே மூச்சு முட்டினால்… இப்போது முடிக்குரியவராக பட்டம் கட்டப்படிருக்கும் ‘இளைய’ ராஜா, இந்தியாவின் ‘ஒபாமா’ போல் மாற்றங்கள் பற்றி அள்ளிவிட்டிருப்பதை பார்த்தால் எதிர்காலத்தில் எத்தனை தடவை தான் முழுதாக மூச்சு விட முடியுமோ என்பது தான்.