அன்னா ஹஜாரே – இயக்கத்தை அழித்தொழிக்க சதி
ஊழலை ஒழிக்க முதன் முதலில் “லோக்பால்” மசோதா
42 வருடங்களுக்கு முன் பாராளுமன்றத்தில் கொண்டு
வரப்பட்டது. ஒவ்வொரு முறையும் எதாவது ஒரு
காரணத்தால் மசோதா நிறைவேற்றப்படாமலே காலாவதி
ஆகி இருக்கிறது. இது வரை இவ்வாறு 8 முறை மசோதாக்கள்
கொண்டு வரப்பட்டிருக்கின்றன. ஆனால் ஒரு முறை கூட
நிறைவேற்றப்படவில்லை.
இந்த அரசியல்வாதிகள் உருப்படியாக எதுவும் செய்யப்போவது
இல்லை என்பது தீர்மானமாகத் தெரிந்தபின்னர் தான்
அன்னா ஹஜாரே உண்ணாவிரதத்தில் இறங்கினார்.
மும்பை அடுக்கு மாடி கட்டிட ஊழல்,
காமன்வெல்த் விளையாட்டு மோசடிகள்,
2ஜி ஸ்பெக்ற்றம் ஊழல் என்று ஒவ்வொன்றாக
வரிசையாக மத்திய அரசு சம்பந்தப்பட்ட ஊழல்கள் வெளிவர
ஆரம்பித்த நிலையில் இதில் அதிகம் பாதிக்கப்படுவது காங்கிரஸ்
கட்சி தான் என்பதால் –
வழக்கம்போல் இதிலும் குறுக்கிட்டது “அன்னை”யின் சதி.
உங்களது லட்சியம் தான் எனது லட்சியமும் –
உங்களது நோக்கமும் என் நோக்கமும் ஒன்றே தான் என்பதால்
நீங்கள் உண்ணாவிரதத்தை கை விடுங்கள். மத்திய அரசு
உங்கள் கோரிக்கைகளை பரிசீலித்து உடனடியாக ஆவன
செய்யும் என்றார்.
காங்கிரஸ் கட்சிக்கோ, மத்திய அரசுக்கோ இதில் கொஞ்சமும்
விருப்பம் இல்லை என்றாலும், எதிர்பாராமல் அன்னாவுக்கு
ஆதரவாக
கிளம்பிய மக்கள் ஆதரவும், 5 மாநிலங்களில் நடைபெறவிருக்கும்
தேர்தல்களும் காங்கிரஸ் தலைமையை யோசிக்க வைத்தன.
எனவே தான் மசோதா வரைவைத் தயாரிக்க கூட்டு
ஆலோசனைக் குழுவை அமைக்க உள்நோக்கத்துடன்
மத்திய அரசு ஒப்புக் கொண்டது.
ஆரம்பத்திலேயே ஏகப்பட்ட தடங்கல்கள்.
மசோதா தயாரிப்பது மந்திரி சபையின் வேலை !
வெளியாட்களுக்கு இதில் என்ன வேலை –
வெளி ஆள் தலைமை ஏற்க வேண்டுமானால் அதில் அமைச்சர்கள்
பங்கேற்க மாட்டார்கள் –
அரசு ஆணை எல்லாம் வெளியிட முடியாது.
அது வேண்டாத முன் உதாரணமாகி விடும். வேண்டுமானால்,
சட்ட அமைச்சகம் மூலம் ஒரு கடிதத்தை அளிக்கலாம் ….
இத்யாதி இத்யாதி என்கிற வகையில்.
அன்னா தரப்பு எதற்கும் மசிவதாக இல்லை –
இறங்கி வருவதாக இல்லை என்ற பிறகு –
இறுதியாக வேறு வழியின்றி அரசு அறிவிப்பு வந்தது.
அன்னை சோனியா காந்தி முழு வேகத்துடன்
ஊழல் தடுப்பு மசோதா கொண்டு வருவதில் தீவிரமாக இருப்பதாக
ஒரு இமேஜ் உருவாக்கப்பட்டது.
ஆனால் – அடிவருடிகள் வேலையைக் காட்ட ஆரம்பித்தார்கள்.
வெளி உறுப்பினர்களை அவமானப்படுத்தும் வகையில் பேச
ஆரம்பித்தனர்.
லோக்பால் வந்து விட்டால் – பள்ளியில்
அட்மிஷன் கிடைத்து விடுமா ? ரேஷன் கார்டு கிடைத்து விடுமா ?
குழாயில் தண்ணீர் வந்து விடுமா ?
பொது மக்களுக்கு இது எந்த விதத்தில் உதவப்போகிறது –
என்றார் கபில் சிபல்.
முதலில் அத்தனை முதல் அமைச்சர்களும் இதற்கு ஒப்புக்கொள்ள
வேண்டுமே – ஒரு வருடம் கூட ஆகலாம் என்றார் வீரப்ப மொய்லி.
கமிட்டியில் உள்ள அமைச்சர்கள் எல்லாம் ஏற்கெனவே தங்கள்
சொத்து விவரங்களை பகிரங்கமாக வெளியிட்டிருக்கிறார்கள்.
அன்னா தரப்பு உறுப்பினர்கள்
என்ன செய்யப்போகிறார்கள் என்றார் அபிஷேக் சிங்க்வி.
அன்னா ஆதரவாளர்களிடையே குழப்பத்தையும் பிளவையும்
ஏற்படுத்த திரை மறைவில் எல்லா முயற்சிகளும்
நடைபெற்று வருகின்றன.
அது எப்படி அன்னா குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை
பாராட்டிப்பேசலாம் – அன்னா கூறியதை வாபஸ் வாங்கா விட்டால்
நாங்கள் ஒத்துழைப்பு தர மாட்டோம் என்றார் மல்லிகா சாராபாய்.
(இவர் ஆதரிக்கவில்லை என்று யார் அழுதது ?)
தந்தை – மகன் (சாந்தி பூஷன், பிரசாந்த் பூஷன்) இருவருக்கும் எப்படி
கமிட்டியில் இடம் கொடுக்கலாம் என்று பாபா ராம்தேவ் போர்க்கொடி.
கிரண் பேடிக்கு கமிட்டியில் இடம் கொடுத்து பெண்களுக்கும் உரிய
பங்கு கொடுத்திருக்கலாமே என்று கூக்குரல்.
(கிரண் பேடியே – கமிட்டியில் இருப்பவர்கள் அனைவரும் என்னைவிட
அனுபவமும், தகுதியும் வாய்ந்தவர்கள் – எனவே இதில் எந்தவித
அபிப்பிராய பேதமும் கூடாது என்று கூறி பிரச்சினை அடங்க
வழி வகுத்தார் )
தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து ஏன் யாரையும் உறுப்பினர்களாக
சேர்க்கவில்லை என்று ராம் விலாஸ் பாஸ்வான் போர்க்கொடி.
கமிட்டி கூட்டத்தில் நிகழும் விவாதங்களை பதிவு செய்யக்கூடாது –
அவற்றை எல்லாம் பதிவு செய்வதாக இருந்தால் உறுப்பினர்கள்
சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட முடியாது- என்று
காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக எதிர்ப்பு !
இவ்வாறு இந்த இயக்கத்தை அவமானப்படுத்தி,
ஏளனப்படுத்தி, சிறுமைப்படுத்தி, நீர்த்துப்போக வைக்க
காங்கிரஸ் கட்சித் தலைமையால் எல்லாவித முயற்சிகளும்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தான் நாளை – ஏப்ரல் 16ந்தேதி இந்த ஆலோசனைக்
குழுவின் முதல் கூட்டம் கூட்டப்படுகிறது.
இந்த இயக்கத்தை அழிக்க நடக்கும் எல்லா முயற்சிகளையும்
பொது மக்கள் முறியடிக்க வேண்டும். இது அன்னா ஹஜாரே
என்கிற தனிப்பட்ட ஒரு மனிதரின் பிரச்சினை அல்ல.
ஊழல் இந்த நாட்டு மக்களின் மிகப்பெரிய பிரச்சினை.
இதை இயக்கத்தை அடக்கவோ
அழிக்கவோ இடம் கொடுக்க மாட்டோம் என்று மக்கள்
உறுதியாக திரண்டு அன்னா ஹஜாரேயுடன்
துணையாக நிற்க வேண்டும்.



நிஜமான சாமியாரா இல்லை ….