நிதியமைச்சர் என்கிற உலக மகா பொய்யர், கொள்ளையர்களின் அடைக்கலசாமி !!

நிதியமைச்சர்  என்கிற உலக மகா  பொய்யர் ,
கொள்ளையர்களின் அடைக்கலசாமி !!

காங்கிரஸ் கட்சியை பதவியில் அமர்த்தினால்,
“முதல் 100 நாட்களுக்குள் வெளிநாட்டு வங்கிகளில்
பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் அத்தனை கள்ளப் பணமும்
வெளிக்கொண்டு வரப்படும்” என்று
உறுதி அளித்த அதே பிரதமர் மன்மோகன் சிங் தான் –

இப்போது – “கள்ளப் பணத்தைக் கொண்டு வர
உடனடித் தீர்வு  எதுவும் கிடையாது”
(there is no instant solution)
என்று எந்தவித கூச்சமும் இல்லாமல் கூறுகிறார்.

உலக மகா பொய்யர் பட்டத்திற்கு போட்டி போடும்
பிரதமரையும், நிதியமைச்சரையும் கொண்டிருப்பது
இந்த நாட்டு மக்கள்  செய்த பெரும் பாக்கியம் !

தங்கள் தலை(வி)வருக்காகவும், கட்சிக்காகவும்
எதையும் செய்யத் தயாராகி விட்ட அவர்களை
நாகரீகமாக எப்படித் திட்டுவது –
வேறு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

தன் 50 ஆண்டுக்கால அரசியல் வாழ்வில் –
35 ஆண்டு காலத்தை – மாநிலத்திலோ, மத்தியிலோ
எதாவது ஒரு அமைச்சராகவே
காலம் தள்ள   ஒருவரால் முடியுமானால் – அவர்
எவ்வளவு சாமர்த்தியசாலியாக இருக்க வேண்டும் ?

நிதி அமைச்சர் பிரனாப் முகர்ஜி கள்ளப் பணத்தைப்
பற்றி  பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறிய
வார்த்தைகள்  அனைத்தும், உண்மையை
வெளிக்கொண்டு வருவதில் ஆளும் கட்சிக்கு
விருப்பம்  இல்லை என்பதையே  காட்டுகின்றன.

அவர்கள் வேண்டுமானால்
சாமர்த்தியமாகப்  பேசுவதாக நினைத்துக்
கொண்டிருக்கலாம்.  ஆனால் அவர்கள் நினைத்துக்
கொண்டிருப்பது போல் மக்களும்,
மீடியாக்களும்  மடையர்களல்ல.

நிதியமைச்சர் பத்திரிக்கையாளர்களுடன்
நடந்த சந்திப்பில்  கூறியுள்ளதன் சாரம் –

(1) அரசு எந்த விவரத்தையும்,யாருக்காகவும்
மறைக்கவில்லை.
(2) இருக்கும் விவரங்களை வெளியிட சட்டவிதிகள்
அனுமதிக்கவில்லை.
(3) இரட்டை வரி விதிப்பு கொள்கைப்படி, மற்ற
நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின்படி
அவர்களிடமிருந்து கிடைக்கும் விவரங்கள், வரி விதிக்க
மட்டுமே பயன்படுத்திக்கொள்ளப்பட வேண்டும்.
(4) சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்கள் வெளியிடப்பட
மாட்டா என்று உறுதியளித்து தான் இந்த விவரங்களைப்
பெற்றிருக்கிறோம்.
(5)இதை மீறி, பெயர்களை இப்போது வெளியிட்டால்,
மற்ற நாடுகள்  நமக்கு ஒத்துழைப்பு
அளிக்கா. மற்ற நாடுகளிலிருந்து மேற்கொண்டு
நாம் பெயர்களை பெற முடியாது.

அவ்வளவு தான் – இந்த விளக்கெண்ணை
விளக்கத்தைக்
கொடுப்பதற்காக  ஒரு ப்ரெஸ் மீட்  வேறு.

எது எதற்கோ நோபல் பரிசு கொடுக்கிறார்கள்.
பொய் சொல்வதற்கும் ஒரு நோபல் பரிசு கொடுப்பதாக
இருந்தால் – நம் மத்திய அமைச்சர்களிடமிருந்தே
அதற்கு மிகப் பெரிய  போட்டி இருக்கும்.

அவர் சொன்னவற்றுள் மிக  மிகப் பெரிய
பொய் “இந்த பெயர் பட்டியலை
பார்ப்பதற்கு எனக்கே அதிகாரம் இல்லை.
நானே இன்னும் அவற்றைப் பார்க்கவில்லை.
பார்க்கவும் விரும்பவில்லை” என்பது தான்.

ஜெர்மனிடமிருந்து வந்த 250 பேர் கொண்ட
கள்ளப் பணக்காரர்களின் பட்டியலை இவர் இன்னும்
பார்க்கவில்லையாம்.  பார்க்காமலே தான்
அதிலிருந்து 24 பெயர்களை மட்டும் தேர்ந்தெடுத்து
சீலிட்ட கவரில் வைத்து சுப்ரீம் கோர்ட்டில்
சமர்ப்பித்து இருக்கிறார்களாம் !

பொய் சொன்னாலும் பொய் தான்.
உண்மையைச் சொல்லாமல் வேண்டுமென்றே
மறைத்தாலும் பொய் தான்.இந்த சந்திப்பின் போது
பல உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன.

விவரங்களை வெளிக்கொண்டு வருவதற்காக மற்ற
நாடுகளுடன் புதிய ஒப்பந்தங்களைப் போட
முயற்சித்து வருகிறோம். விரைவில் இவற்றை
முடித்த பிறகு மீதியுள்ள நாடுகளிடமிருந்தும்
பெயர்களைப் பெற முடியும் என்று
நம்புகிறேன்  என்று வேறு கூறி இருக்கிறார்.

நிதியமைச்சர் கூறியவற்றில் எந்த எந்த விதங்களில்
மக்களை ஏமாற்றும் முயற்சி இருக்கிறது என்பதை
நான் அறிந்த வரையில், அறிந்த வகையில்,
விளக்க விரும்புகிறேன்.

(1) ஜெர்மன் அரசு  தன்னிடமிருந்த
250 இந்தியர்களின் கணக்கு விவரங்களை இந்திய அரசு
கேட்டுக்கொண்டால், எந்தவித  ஒப்பந்தத்தையும் கோராமல்-வெளிப்படையாகவே, நேரடியாகத் தரத்தயாராக
இருந்தது.

(2) ஆனால், இந்திய அரசு தான் – பட்டியல்
வெளிப்படையாக தரப்பட்டால், அதனை வெளியிட
வேண்டிய அவசியம் வந்து விடுமே எனக் கருதி,
இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில்,
“ரகசியம்” என்று முத்திரையிட்டு கொடுக்கும்படி
கேட்டுக்கொண்டது.
இந்த பட்டியல், வரி விதிப்பிற்கு
மட்டுமே பயன்படுத்தப்படும்,
ரகசியமாக வைக்கப்படும்
என்றெல்லாம், இந்திய அரசு தானாகவே
விதிகளைச் சேர்த்துக்கொண்டது.
இந்த விதிகள் எல்லாம்
ஜெர்மன் அரசால் கோரப்பட்டவை அல்ல.
இந்திய அரசும், ஜெர்மன் அரசும் இது தொடர்பாக
பரிமாறிக்கொண்ட  கடிதங்களைப் பார்த்தாலே
இந்த விஷயம்  வெளியாகி விடும்.
(எதிர்காலத்தில் இவை எப்படியும்
சுப்ரீம் கோர்ட்டின் பரிசீலனைக்கு வந்தே தீரும்.
அப்போது பொது மக்களுக்கும் தெரிய வரும் )

(3) வெளிநாட்டு வங்கிகளில் பணத்தைப்
பதுக்கியவர்கள்  மீது உரிய வருமான வரி
கட்டவில்லை  என்கிற அடிப்படையில் மட்டும்
மத்திய அரசு நடவடிக்கை
எடுக்க இருக்கிறது.
இது கள்ளப் பணக்காரர்களைப்
பாதுகாக்கும் மிகப்பெரிய மோசடி.

(4) கள்ளப் பணத்தைப் பதுக்கியவர்கள் –
வருமானத்தை
மறைத்த குற்றதை மட்டுமா செய்தார்கள் ?
அந்நிய செலாவணி சட்டத்தை மீறி இருக்கிறார்கள்,
கோடிக்கணக்கான பணத்தை ரகசியமாக
இந்தியாவை விட்டு வெளியே கொண்டு
போயிருக்கிறார்கள்.

(5) இந்தப் பணம் அவர்களுக்கு எப்படி கிடைத்தது ?
லஞ்சம், மோசடி, அண்டர் இன்வாய்ஸ், கருப்புச் சந்தை,
போதை மருந்து, ஹவாலா பரிவர்த்தனை
போன்ற பல குற்றச் செயல்களின் மூலம் ஈட்டப்பட்டவை
தானே இந்தப் பணம்.

(6) அவர்கள்  யார் யாருக்கோ பினாமியாக
செயல்பட்டிருக்கிறார்கள். அவர்களின் பின்னணியில்
உள்ள  அரசியல்வாதிகள், தொழில் பிரமுகர்கள்,
வர்த்தக பிரமுகர்கள், கலைஞர்கள், ரியல் எஸ்டேட்
பேர்வழிகள் இப்படி எத்தனையோ பேர்வழிகளுக்கு
பினாமியாகவும் இருந்திருக்கிறார்கள்.

(7) அரசாங்கம் இவர்களைப் பாதுகாக்க விரும்புவதன்
காரணம் என்னவாக இருக்க முடியும் ?

– ஒன்று இவர்கள் ஆளும் கட்சியைச் சேர்ந்த
முக்கிய பிரமுகர்களாக இருப்பார்கள். அல்லது
அவர்களுக்கு, கட்சிக்கு –
வேண்டிய தொழில்,கலை,வர்த்தக உலக பிரமுகர்களாக
இருப்பார்கள்.

(இந்த பட்டியல் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களின்
பெயர்களை மட்டுமே கொண்டதாக இருந்திருந்தால் –
அவை ஏற்கெனவே வெளிவந்திருக்கும் !அநேகமாக
எல்லாம் கலந்த அவியலாக இருக்கும்.
அதனால் தான்  விழுங்கவும் முடியாமல்
துப்பவும் முடியாமல் தவிக்கிறார்கள்)

(8) பிரனாப் முகர்ஜியால்  மறைக்கப்படும்
மிக முக்கியமான விஷயம் ஒன்று
என்னவென்றால் –

இப்போது புதிதாகப் போடப்படும் ஒப்பந்தங்கள்
எல்லாமே, 01/01/2012 லிருந்து தான் அமுலுக்கு வரும்.
அதாவது அந்த தேதியிலும், அதற்குப் பின்னரும்
வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களின் விவரங்கள் மட்டுமே
சம்பந்தப்பட்ட நாடுகளால் தரப்படும். ஒப்பந்தத்தின்
ஷரத்துக்கள் அப்படி !

கடந்த கால விவரங்களைக் கோர இந்த
ஒப்பந்தங்களில் (வேண்டுமென்றே) வழி வகை
செய்யப்படவில்லை.

இன்னும் அடுத்த ஆண்டு ஜனவரி வரை தங்கள்
பணத்தையும், கணக்கையும் அப்படியே வைத்திருக்க
இந்த கள்ளப் பணக்காரர்கள் என்ன ……..களா ?
இந்த தகவல் நிதியமைச்சரால் வேண்டுமென்றே
மறைக்கப்படுகிறது.
இப்போது அவரால் பேசப்படும் ஒப்பந்தங்களின் மூலம்
பழைய விவரங்களைப் பெறவே முடியாது.

கட்டுரை நீண்டு கொண்டே போகிறது.
இருந்தாலும் – மிக முக்கியமான ஒரு விஷயத்தை
இங்கு அவசியம் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் மஹாராஷ்டிர
மாநிலம், புனே நகரைச் சேர்ந்த ஹாசன் அலி என்கிற
பெயரைக் கொண்ட குதிரை வியாபாரியை

அவரது உண்மையான பின்னணியும், பலமும்
தெரியாமல், தெரியாத்தனமாக வருமான வரித்துறை
ரெய்டு செய்தது.

வெளிவந்தது  நம்ப முடியாத, பிரமிக்கத்தக்க சில
விரங்கள்.  அவர் ஸ்விஸ் வங்கியில் மூன்று வெவ்வேறு
கணக்குகளில் எண்பது ஆயிரம் கோடிக்கு மேல் –
மறுபடியும்  படிக்கவும் – என்பது ஆயிரம் கோடிக்கு மேல் –
இயக்கி இருப்பது தெரிந்திருக்கிறது.

இந்த விஷயம்  ஆளும்கட்சித் தலைமைக்கு தெரிவதற்கு
முன் பத்திரிகைகளில் வந்து விட்டது.

விளைவு – சுத்தமாக மூடி மறைக்க முடியாமல்,
சுமார் 36,000 கோடி ரூபாயை
வருமான வரியாகச் செலுத்தச் சொல்லி விட்டு
கிட்டத்தட்ட ஹாசன் அலியின் கதை முடிக்கப் படுகிறது.

ஒரு ஆளை, நம்மால் கனவிலும் நினைக்க முடியாத
அளவிற்கு பெரியதான 36,000 கோடி ரூபாயை
சர்வ சகஜமாக வருமான வரியாக கட்டச்சொல்லும்
நிதி அமைச்சகம் –

இதற்கு – மேல்  நடவடிக்கையாக –
அந்த ஆள் எப்படி இத்தனை
பணத்தைச் சம்பாதித்தான் ? என்ன தொழில் செய்தான் ?
நியாயமான வழியில் எவராவது இவ்வளவு பணம்
சம்பாதித்திருக்க முடியுமா ?
போதை மருந்து கடத்தல் அல்லது கரென்சி நோட்டு
(கள்ள நோட்டு )அச்சடிக்காமல் ஒருவரால் இவ்வளவு
பணம் சேர்த்திருக்க முடியுமா ?
இந்த அயோக்கியன் தனியாக இத்தனையையும்
செய்திருக்க முடியுமா ? இவனது கூட்டாளிகள் யார் ?
என்பது போன்ற எந்த விவரங்களையும்
வெளிக்கொண்டு வர
மத்திய அரசு எந்தவித தீவிர நடவடிக்கைகளையும்
எடுக்கவில்லை.

இரண்டரை ஆண்டுகள் கடந்த பின்னரும் – இன்னும்
இது சம்பந்தமான விவரங்களை அரசாங்கம்
விசாரித்துக் கொண்டு இருப்பதாக வெட்கம் இல்லாமல்,
எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல்
அமைச்சர் பதில் சொல்கிறார்.

இதில் இன்னுமொரு வயிற்றெரிச்சல் என்னவென்றால்
ரெய்டின் போதே –
இந்த அயோக்கியனின் கணக்கில் 800 பில்லியன்
டாலர் பணம் இருப்பதாகத் தெரிந்திருக்கிறது.

இந்திய அரசாங்கத்தால்  இந்தப் பணதை முடக்க
முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதற்குள்
இந்தப்பணம் மாயமாகி விட்டது – என்றும்
வெட்கங்கெட்ட அமைச்சர்
பல்லைக் காட்டிக்கொண்டு சொல்கிறார்.

இத்தனை பணமும்-  பதுக்கப்பட்ட பணம்
அனைத்தும் இந்த நாட்டின் மக்களுக்குச்
சொந்தமானது.
அயோக்கியர்களால், இந்த நாட்டின் குடிமக்களை
ஏமாற்றிச் சுருட்டப்பட்ட பணம்.
இதை இந்த நாட்டிற்கு மீண்டும் கொண்டு வர
வக்கில்லாத இந்த அரசாங்கம் அவர்களுக்கு
வக்காலத்து வாங்குகிறது. அதிக பட்சம் அவர்களுக்கு
வரி விதிக்க முடியும் -வேறு என்ன செய்ய
முடியும் ? அந்த பணத்தை இந்தியாவிற்கு
கொண்டு வர சட்ட விதிகள் ஏதும் இல்லை என்கிறது.

இது உண்மையா ?
நம்மால் இந்தப் பணத்தை கொண்டு வர முடியாதா ?

மேற்கொண்டு விவரங்களுடன் –
மீண்டும் இது பற்றிப் பேசலாம்.

இந்த விவாதத்தில் கலந்து கொள்ள
ஆர்வமுள்ள நண்பர்கள்  தங்கள்
கருத்துக்களை, யோசனைகளை – எழுதலாமே.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to நிதியமைச்சர் என்கிற உலக மகா பொய்யர், கொள்ளையர்களின் அடைக்கலசாமி !!

  1. பிங்குபாக்: நிதியமைச்சர் என்கிற உலக மகா பொய்யர், கொள்ளையர்களின் அடைக்கலசாமி !! | தமிழ் ஒளி

  2. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    விட்டுடுங்க கா.மை.இந்த போட்டியில் நம்ம கட்சி ஜெயிக்கிறது மிக கஷ்டம்
    அவங்க கட்சியில் அரசு,நீதித்துறை,காவல் துறை,media,மற்றும் கடவுள்
    நம்ம கட்சியில்,நம்ப மற்றும் அப்பாவி ஏழை மக்கள்

  3. Rishi's avatar Rishi சொல்கிறார்:

    நண்பரே, உங்கள் தளத்தை ப்ளாக்கருக்கு மாற்றினால் நல்லது என நினைக்கிறேன். இண்ட்லி, மற்றும் தமிழ்மணம் இவற்றில் எல்லாம் உங்கள் பதிவுகளை வெளிப்படுத்துங்கள். ஆளே இல்லாத கடையில் நீங்கள் டீ ஆத்துவது போல இருக்கிறது.

    விவரங்களும், சிந்தனைகளும் வெளிப்படையாகவும் சிறப்பாகவும் இருக்கின்றன. பலரை இது சென்றடைய தமிழ்மணத்திற்கு வாருங்கள். ப்ளாக்கருக்கும் மாறுங்கள்!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பரே,

      உங்கள் வருகைக்கும், ஆலோசனைக்கும்
      நன்றி. முயற்சிக்கிறேன். பாராட்டுக்களுக்கு
      நன்றி. இத்தகைய பாராட்டுகள் தான்
      என்னை இன்னும் ஆழமாகவும், அழுத்தமாகவும்
      எழுத வைக்கின்றன.

      ஆனால் ஒரு விஷயம். இந்த வலைக்கு
      வருபவர்களை குறைவாக எண்ணி விடாதீர்கள்.

      ஒரு நாளைக்கு இந்த வலைக்கு எத்தனை பேர்
      வருவார்கள் என்று நினைக்கிறீர்கள் ?

      ஜனவரி மாதம் முழுவதும், சராசரியாக
      தினம் 600 பேர் வருகை தந்திருக்கிறார்கள்.

      இருந்தாலும், இன்னும் அதிக வருகை
      எனக்கு மகிழ்வே !

      வாழ்த்துக்களுடன்

      காவிரிமைந்தன்

  4. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    அன்புள்ள கா.மை.

    சில விஷயங்களை தெளிவு படுத்த விரும்புகிறேன்.

    1 40ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க எனும் விஷ வித்தைப்பற்றி காமராஜர்,ஜெயகாந்தன்,சோ,நெல்லை ஜெபமணி,பழ கருப்பையா ,ஞானி போன்றவர்கள் சொல்லாத எதையும் நீங்களோ(அ) மற்ற ப்ளாக்கர்களோ சொல்லிவிடவில்லை.ஆனால் இந்த விதை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து விஷ விருட்சமாக நிற்கிறது.இப்போ இதை அழிப்பது மிகவும் கஷ்டம்.

    2.உங்கள் தளத்திற்கு 600 பேர் வந்தாலும் பின்னூட்டம் இடுவது மிக சிலரே.இவர்களுக்குத்தான் நீங்கள் முக்கியத்துவம் தரவேண்டும்.ஏனோ நீங்கள் பதிலிடுவது குறைந்துவிட்டது.அதுவும் ஒரு முறை source சொல்லுங்கள் என ஒரு நல்லெண்ணத்தில் கேட்டதை நீங்கள் ரசிக்கவில்லை என்பது தெரிந்தது.உட்கார்ந்த இடத்தில் ப்ளாக் எழுதும் நமக்கே இவ்வளவு ego பிரச்சினை இருந்தால் தெருத்தெருவாக அலைந்து பொய்கள பல சொல்லி ஒட்டு பொறுக்கும் அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு ego இருக்கும்?நம் நாட்டின் பிரச்சினையே இதுதான்.குடிமக்கள் அனைவரும் சரியான சந்தர்ப்பம் அமையாத அரசியல்வாதிகள்.

    3 இப்போ பிரச்சினை என்ன என்பது எல்லாருக்கும் தெரியும்.அதற்கு தீர்வு தான் தெரியவில்லை.அரசை மாற்றுவதை விடுங்கள்.சென்னையில் உள்ள ஆட்டோ ரிக்ஷா பிரச்சினையை கூட நம்மால் தீர்க்க இயலவில்லை.அந்த பரிதாப நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம்.

    ஜனநாயக முறையில் இந்த நோய்க்கு தீர்வு காண்பது நிச்சயமாக இயலாது!தலைவலி போனால் திருகுவலி!மு.க.போனால் ஜெயா…இதுவா தீர்வு?Blood cancer can not be cured by Vicks Vaporub.
    Surgery or death is the only choice.

    நன்றி

  5. Rishi's avatar Rishi சொல்கிறார்:

    காவிரிமைந்தன்,
    சராசரியாக தினம் 600 பேர் வருகை தருவது மகிழ்ச்சியளிக்கிறது. பலருக்கு இது போன்ற விஷயங்கள் சென்று சேர்வது நல்லதுதான்.
    கண்பத் சொல்லிய அனைத்து விஷயங்களையும் நானும் வழிமொழிகிறேன்.
    வாழ்த்துக்கள்!

  6. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் கண்பத்,
    நண்பர் ரிஷி,

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
    இது குறித்து என் எண்ணங்களை
    – நம்புவோம் “இதுவும் கடந்து போகும்” !
    என்கிற தலைப்பில் தனியே
    எழுதி இருக்கிறேன்.

    தொடர்ந்து வருகை தாருங்கள் –
    உங்கள் கருத்துக்களையும்
    கூறுங்கள்.

    சில மறுமொழிகளுக்கு நான் பதில்
    கூறாமல் இருப்பதற்கு காரணம் –
    அந்தக் கருத்துக்களையும்
    படிப்பவர்கள் தங்களின் கண்ணோட்டத்திலேயே
    அலசட்டுமே – என் பதில் அவர்களது
    எண்ண ஓட்டத்தைத் தடுக்க வேண்டாமே
    என்பது தான்.

    வாழ்த்துக்களுடன்

    காவிரிமைந்தன்

  7. ச.திருமலைராஜன்'s avatar ச.திருமலைராஜன் சொல்கிறார்:

    இப்பொழுதுதான் உங்கள் பதிவுகளைப் படிக்கிறேன். மிக முக்கியமான விஷயங்களை ஆழமாக எழுதியுள்ளீர்கள். உங்கள் பதிவுகள் பரவலான கவனத்தைப் பெற வேண்டும். இன்னும் பலரையும் அடைய வேண்டும். நம்மால் முடிந்தது இந்த சின்ன விழிப்புணர்வு எழுத்துக்கள் மட்டுமே. நம்மால் முடிந்ததை விதைத்துக் கொண்டே இருப்போம் என்றாவது ஒரு நாள் அது செடியாக, மரமாக, பெரும் விருட்சமாக, வனமாக வளரட்டும். உங்கள் துணிவான கருத்துக்களுக்கு எனது பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள். நண்பர்கள் அனைவரிடமும் இந்தப் பதிவுகளைக் கொண்டு செல்கிறேன்

    ச.திருமலைராஜன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.