பாட்டிகளை கட்டிப்பிடிச்சு ராகுல் சேர்த்த ஓட்டுக்கள் எல்லாம் ராசாவால வீணாப் போச்சு – -நன்றாகவே பேசுகிறார் நாஞ்சில் சம்பத் !

பாட்டிகளை கட்டிப்பிடிச்சு ராகுல் சேர்த்த
ஓட்டுக்கள் எல்லாம் ராசாவால வீணாப் போச்சு –
-நன்றாகவே பேசுகிறார் நாஞ்சில் சம்பத் !


தமிழகத்து அரசியல் பேச்சாளர்களில்,
சுவாரஸ்யமும், சாரமும், நகைச்சுவையும்,
அழகு தமிழும் ஒருசேரப்
பேசுபவர்கள் வெகு சிலரே !
அவரது கருத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட
ரசிக்கும்படி பேசுபவர் நாஞ்சில் சம்பத்.

ஏற்கெனவே சில முறை கேட்டிருக்கிறேன் என்றாலும்,
அண்மையில் ஸ்பெக்ட்ரம் சூட்டில் சம்பத்தின்
பேச்சை  ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நீங்களும் ரசிக்க அதில் சில சுவையான பகுதிகள் –

“தயாநிதி எம்பிஏ பட்டதாரி. ஏற்கெனவே
தகவல் தொழில் நுட்பத்துறையை நன்றாக கவனித்தவர்.
இளம் சாதனையாளர்களில் ஒருவர். பின்
அந்த துறையை அவருக்குக் கொடுக்காமல்
கருணாநிதி, ராசாவுக்கு ஏன் கொடுக்க வேண்டும் ?

யாரை எங்கே வெச்சா முழுசா அனுபவிக்க முடியும்னு
கருணாநிதிக்கு நல்லா தெரியுமே !

வயக்காட்டுல நிக்கறவனுக்கு வயித்துப் பசி எடுத்தா,
ஒரு கடலைச்செடியைப் பிடுங்கி, கடலைகளைச்
சாப்பிடுவான்.
ஆனால் கருணாநிதி அப்படி இல்லை.
கடலைச்செடி அப்படியே இருக்கும்.
அதன் அடியில் இருந்த
கடலைகள் மட்டும் காணாமல் போயிடும்.
அந்த அளவுக்கு “நேக்கா” தோண்டிடுவார் !

அதனால தான் மாறனையும் பாக்காம,
பேரனையும் பாக்காம,
ராசாவை அங்க உட்கார வெச்சார். அந்த அளவுக்கு
ராசா கூட நெருக்கம் !!

2001 -ல என் தங்கை கல்யாணத்துக்கு நகை
வாங்கினப்ப ஒரு பவுன் 4000 ரூபா.
இப்போ என் மகன் கல்யாணத்துக்கு
அதே ஒரு பவுன் 18000 ரூபா.
பொன்னி அரிசி தொடங்கி பூண்டு வரைக்கும் இன்னிக்கு
எல்லாம் வெலை ஏறிப்போச்சு.
ஆனா ராசா மட்டும் 2ஜி அலைக்கற்றையை
அதே வெலைக்கு விற்பாராம். எப்படின்னு கேட்டா –

மொதல்ல வர்றவனுக்கு முன்னுரிமைங்கறாங்க.
அதென்ன முத்துமாரியம்மன் கோயில் பிரசாதமா ?
மொதல்ல வர்றவனுக்கு  அள்ளிக்கொடுக்க !

அண்மையில் டெல்லி போயிருந்தபோது,
நம்ம எம்பி கணேஷ்மூர்த்தி கிட்ட இந்த
நீரா ராடியா’ங்கற
பொண்ணை பார்க்கணுமே –
உங்களால ஏற்பாடு பண்ண முடியுமா’ன்னு கேட்டேன்.

போலே – அதுக்கெல்லாம் உன்கிட்ட
பத்து கம்பெனியாவது
இருக்கணும்னுட்டார்.
நம்ம கிட்ட இருக்கறது எல்லாம்
மன்னார் அன்ட் கம்பெனி மட்டும்தானே ?
(கல்யாணப் பரிசு தங்கவேலு நினைவிற்கு
வருகிறாரா ?)

இன்னிக்கு பீகார்காரன் கூட திமுக வை திட்டறான்.
பீகார்ல காங்கிரஸ்  தோத்துப்போனதுக்கு அவங்க
இப்ப தான் விசாரணை நடத்தி முடிச்சுருக்காங்க.

தமிழ் நாட்டுல திமுக கூட காங்கிரஸ்
கூட்டு வெச்சது பீகார்  மக்களுக்கு கூட
பிடிக்கல்லையாம்.
அதனால தான்  தோக்கடிச்சாங்களாம் !

குடிசை வீட்டுக்குள்ளல்லாம்  நுழைஞ்சு,
கூழ் குடிச்சு, பாட்டிகளை எல்லாம் கட்டிப்பிடிச்சு
ராகுல் காந்தி சேத்து வெச்ச ஓட்டுக்கள் எல்லாம்
திமுக வோட சேர்க்கையால  வீணாப் போச்சாம் !

கூட்டணி சிக்கலையும் கண்டுக்காம,
கொட்ற மழை, வெள்ள பாதிப்புகளையும் பாக்காம,
கருணாநிதி இளைஞன் பட விழாவில் உட்கார்ந்திருக்கார்.
பக்கத்துலயே படத்தயாரிப்பாளர் மார்ட்டினை உட்கார
வெச்சு ரசிக்கறார். எந்த மார்ட்டின் ?
அதே  லாட்டரி மார்ட்டின் தான்.
பல வழக்குகள்ல சம்பந்தப்பட்ட
ஒருத்தரை பக்கத்துலயே  வெச்சுக்கறார்.

“இளைஞன்”  படத்துக்காக  87 வயது கருணாநிதியை
ஏன் கதை, வசனம் எழுதச்சொல்றீங்க ?

கூந்தல் வளர்ப்பு பற்றி ‘சோ ராமசாமி’ கிட்ட
ஆலோசனை கேட்கிற மாதிரி இல்ல இருக்கு !

இவர் கதை வசனம் எழுதற படமெல்லாம் பிச்சுக்கிட்டா
ஓடுது ? துரைமுருகனே  களத்துல இறங்கி
கூவிக்கூவி டிக்கெட் வித்தும் “உளியின் ஓசை”யை
ஓட்ட முடியலியே !

இதோ – தேர்தல் வந்து கொண்டே இருக்கிறது.
சம்பத் காட்டில் தொடர் வேட்டை தான் !!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, ஸ்பெக்ட்ரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.