உலக மகளிர் தினத்தை முன்னிட்டு எனக்குப்
பிடித்த இடுகையொன்று …
உலக மகளிர் தினத்தையொட்டி எனக்குப் பிடித்த
இடுகை ஒன்றை இதில் வெளியிட விரும்புகிறேன்.
யாத்ரிகனின் முயற்சியில் உருவானது.
சற்றே நீளமாக இருந்தாலும் –
நல்ல நேர்மையான ஆய்வு !
“பெண்ணிய மாயையும் தொடரும் ஆணாதிக்கமும் “
இந்தத் தலைப்பில் ஒரு ஆய்வு மேற்கொள்ள
வேண்டுமானால்,முதலில் நாம் சிறிது காலம் பின் சென்று
பிறகு நம் பயணத்தைத் முன் நோக்கித்
துவங்க வேண்டும். எவ்வளவு காலம் பின் சென்று
துவங்கலாம் ?
அதிகம் வேண்டாம். 150 – 200 வருடங்கள் போதும்.
ஏனென்றால் ராஜாராம் மோகன் ராய்க்கு முன்னதாக
யாரும் இதைப்பற்றி தீவிரமாக யோசித்ததாகவோ /
பேசியதாகவோ தெரியவில்லை !
பெண்ணியம் என்றால் என்ன ? பெண்களுக்கு உரிய
இடத்தை அளிப்பது
என்று எடுத்துக்கொள்ளலாமா ?
இதில் மாயை என்ற சொல் ஏன் வந்தது ? அளிப்பது
போன்ற அல்லது
அளித்து விட்டது போன்ற
தோற்றம் (மட்டும்) ஏற்பட்டிருப்பதாலா?
இதில் அளிப்பது என்ற சொல் எப்படி வருகிறது ?
அளிக்கும் இடத்தில்
ஆண்கள் இருக்கிறார்கள் என்பதாலா ?
அளிக்கும் இடத்தில் இருப்பது ஆண்கள் மட்டும் தானா –
இல்லை இந்த சமூகமா ?
சமூகம் என்றால் அது எப்படி ஆண்களை மட்டும்
கொண்டதாக இருக்க முடியும் ?
இப்படி சில கேள்விகளை நமக்கு நாமே
கேட்டுக்கொண்டால் தான்
இந்தப் பிரச்சினையப் பற்றி
தெளிவாகவும் விவரமாகவும் ஆராய முடியும்.
முதலில் -நேற்றைய நிலை என்ன ?
இன்றைய நிலை என்ன ?-
இந்த நிலை எதனால் ஏற்பட்டது ?
சிறிது ஆராய்வோமா ?
சிலபல வருடங்கள் முன்னால் இருந்த நிலை –
பெண்குழந்தைகள் பிறப்பதையே விரும்பாத
குடும்பங்கள் – சமுதாயம் !
பெண்களுக்கு எதற்கு கல்வியும் பள்ளிக்கூடமும்
என்ற நிலை –
பருவம் அடையாத, திருமணம் என்றால் என்ன
என்று உணர முடியாத
சிறு வயதிலேயே திருமணம் –
பொருத்தமில்லாத திருமணங்கள் !
நெருங்கிய உறவினர்களிடையே கட்டாய
திருமண பந்தம் !
தகுந்த மருத்துவ உதவிகள் இல்லாத நிலையில்
பிரசவங்கள் –
பல குறைப்பிரசவங்கள் –
பிரசவங்களின் போதே பல மரணங்கள்.
குடும்பக்கட்டுப்பாடு முறைகள் அறியாத காரணத்தால்
அதிக அளவில் பிரசவங்கள் –
அதிகம் குழந்தைகள் –
இடைவெளியின்றி பிறந்ததால் ஆரோக்கியம்
குன்றிய குழந்தைகள்.
பெரிய குடும்பங்கள் ! அதனால் வறுமை நிலை !
மாமியார், மாமனார், நாத்தனார்கள்,
மைத்துனன்கள், சித்திகள்,
சித்தப்பாக்கள், பாட்டிகள், தாத்தாக்கள் போன்ற
பல உறுப்பினர்களை
கொண்ட பெரிய பெரிய குடும்பங்களின்
சமையலறையிலும், கிணற்றடியிலும்,
மாட்டுக்கொட்டகையிலுமே
வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்த பெண்கள்
எத்தனை பேர் !
குடும்பங்களில் ஆண்களே எதையும்
தீர்மானிக்கும் நிலை.
சொத்துரிமை இல்லை – பொருளாதார ரீதியாக
எப்போதும் ஆண்களையே சார்ந்திருக்க
வேண்டிய சார்பு நிலை !
பெரும்பாலும் இளம் வயதிலேயே விதவை
ஆகும் நிலை.
வெள்ளை உடையில் விதவைக் கோலம் –
அமங்கலமாக கருதப்பட்ட நிலை !
எதிலும் ஒதுக்கி வைக்கப்படும் கொடூரம் !
பலதார திருமணங்கள் – சக்களத்திகளுடன்
சேர்ந்து வாழும் அவல நிலை !
துவக்கத்தில் தகப்பன், பிறகு கணவன் அதன்
பின்னர் பிள்ளை என்று தொடர்ந்து
வாழ்க்கை முழுவதும் ஆண்களையே
சார்ந்திருக்கும் நிலை !
தனியே எங்கும் பெண்கள் பயணிக்காத –
பயணிக்க முடியாத நிலை !
இன்று – ?
பெண் குழந்தைகள் பிறந்தால் – பல வித அரசாங்க
சலுகைகள் ! சன்மானங்கள் !!
பெண்களுக்கு என்றே தனியான பள்ளிகள்,கல்லூரிகள்,
ஏன் – பல்கலைக்கழகங்கள் கூடத்தான் !
தனியான பேருந்துகள் – மிகச்சமீப காலமாக தனியான
மின்வண்டிகள் கூட !!
பெண்களுக்கு கல்வியில் சலுகைகள் –
அதிக அளவில் வேலை வாய்ப்புகள் – வேலை
வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு !
பிரசவத்திற்காக 3 மாதங்கள் சம்பளத்துடன்
கூடிய விடுமுறை !
நல்ல மருத்துவ வசதிகள் – சிறந்த மகப்பேறு
மருத்துவமனைகள் !!
குழந்தைப் பேற்றைப்பற்றிய நல்ல தெளிவு – அறிவு –
அனுபவம் ! ஆலோசனைகள் !
பாதுகாப்பான குடும்பக்கட்டுப்பாடு முறைகள் –
தேவை இல்லை என்றால்
பிள்ளைப்பேற்றை தவிர்க்கவும் மருத்துவ உதவிகள் /
சட்டபூர்வமான வசதிகள் !
பெரும்பாலான குடும்பங்களில் திருமணம் நிச்சயம்
செய்யும் முன்
பெண்ணின் சம்மதத்தை கேட்டறியும் வழக்கம் !
நெருங்கிய உறவினர்களுடன் திருமணம் – குறைவு.
குழந்தை திருமணங்கள் / சிறு வயது திருமணங்கள்
அடியோடு ஒழிப்பு !
சில குடும்பங்களில் காதல் திருமணங்களையும் கூட
சகஜமாக ஏற்றுக்கொள்ளும் நிலை !
பெரும்பாலும் கணவன், மனைவி, குழந்தைகள் மட்டும்
அடங்கிய சிறு குடும்பங்கள் !
விஞ்ஞான வளர்ச்சி காரணமாக சமையல் அறையில் –
மிக்ஸி, கிரைண்டர், ப்ரிட்ஜ்,
சமையல் எரிவாயு -அடுப்பு, குக்கர் போன்ற
அற்புதமான சாதனங்கள் !
50 வருடங்களுக்கு முன்னர் நினைத்துக்கூட
பார்த்திருக்க முடியாத
அளவுக்கு சமையலறை சௌகரியங்கள் !
விதவைக் கோலங்கள் – திரைப்படங்களில் மட்டுமே
காணப்படும் நிலை !
விதவைத் திருமணங்கள், மறுமணங்கள் சர்வ சகஜமாக
ஏற்றுக்கொள்ளப்படும் நிலை !
பிடிக்காத ஆணுடன் சேர்ந்து வாழ வேண்டிய
கட்டாயம் இல்லாத அளவிற்கு விவாகரத்தும்,
ஜீவனாம்சமும் சுலபமாக்கப்பட்டுள்ள நிலை !
பல தார தடைச்சட்டத்தால் ஆண்கள் ஒன்றுக்கு
மேற்பட்ட திருமணங்கள்
செய்துகொள்வது சட்டபூர்வமாக தடுக்கப்பட்டுள்ள நிலை !
குடும்பச் சொத்தில் ஆண்களுடன் பெண்களுக்கும்
சம உரிமை –
பொருளாதார சுதந்திரம் !
ஆண்களின் துணையின்றி, பெண்கள் தங்கள்
குழந்தைகளுடன் தனியே வாழ சமூக அங்கீகாரம் !
இன்று நாடு விட்டு நாடு கூட
தன்னந்தனியே விமானங்களில்
பயணம் செய்யும் பெண்கள் !
இவ்வாறு பல விதங்களிலும் பெண்களின் இன்றைய
நிலை நிச்சயம் மாறித்தான் இருக்கிறது.
ஆனால் இது போதுமா ? இந்த வசதிகளும்,
முன்னேற்றமும் எல்லா பெண்களையும் சென்று
சேர்ந்திருக்கிறதா என்று பார்த்தால் பதில் திருப்தி
அளிப்பதாக இல்லை.
ஏன் அப்படி ? என்ன காரணம் ?
மேற்படி முன்னேற்றங்கள் அத்தனையும் பெண்களும்
பெண் உரிமை அமைப்புகளும்
போராடியதால் ஏற்பட்டவையா?
நிச்சயமாக இல்லை – ராஜாராம் மோகன் ராய் முதல்
பெரியார் ஈவேரா வரை
பெரும்பாலும் தொலைநோக்கு கொண்ட சமுதாய
சீர்திருத்தவாதிகளின் தொடர்ந்த
முயற்சிகளின் வாயிலாகவே இந்த முன்னேற்றங்கள்
ஏற்பட்டுள்ளன. இதில் தைரியமாக
வெளி வந்து சமுதாயத்தில் போராடிய சில
பெண்மணிகளும் அடங்குவர்.
இது தொடர்ந்து நடக்க வேண்டிய ஒரு பயணம்.
சமுதாய அக்கரை கொண்ட அனைவரும்
சேர்ந்து மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தப் பயணம்.
இதன் நடுவே போராட்டத்தை திசை திருப்பும்
வகையில் சில பெண் உரிமை அமைப்புகள்
நடந்து கொண்டதும்,
அதன் விளைவாக சில எதிர்ப்பு உணர்ச்சிகள்
கிளம்பியதாலும் இடையில் தடை வந்து விட்டது.
முதலில் பிரா அணிந்து கொள்ளவும்,
பின்னர் அதை அணிந்து கொள்ளமல் இருக்கவும்,
விருப்பம் போல் உடை அணியவும்,
புகை பிடிக்கவும், மது அருந்தவும்,
பிள்ளை பெற்றுக்கொள்ளமல் இருக்கவும்,
இரவு விருந்துகளில்
கலந்துகொண்டு விருப்பம் போல் நடந்துகொள்ளவும்
சில மேற்கத்திய நாடுகளில் இத்தகைய சில
அமைப்புகள் பெண்களால் உருவாகின.
இந்திய சமுதாயத்திலும், மேல் தட்டு வர்க்கத்தைச்
சேர்ந்த, படித்த
ஆனால் பக்குவம் இல்லாத
சில பெண்களால் இத்தகைய அமைப்புகள்
உருவாக்கப்பட்டு
அவர்கள் ஆண்களைப்போல் முடிவெட்டிக்கொள்வது,
கால்மேல் கால் போட்டுக்கொண்டு உட்காருவது
போன்ற ஆண்களோடு போட்டி போடும் செயல்களில்
தான் பெண்களின் முன்னேற்றம் இருக்கிறது –
என்று அசட்டுத்தனமாக
நம்பியதால், உண்மையில் பெண்களின்
முன்னேற்றத்தில் அக்கரை கொண்டவர்களாலும் கூட
வேகமாக செயல்பட
முடியாத நிலை இடையில் சிறிது காலம் ஏற்பட்டது.
மேலும் இன்றைய சமுதாயத்தில் பெண்களின்
அவல நிலைக்கு ஓரளவு
பெண்களின் ஒரு பகுதியினரும் கூட
காரணம் எனலாம். எப்படி ?
குடும்பப்பெண்களுக்கு பெரும்பாலும் துன்பங்கள்
ஏற்படுவது மாமியார், நாத்தனார் போன்ற சக
பெண்களால் தான் !
தன் இனத்தை தானே கொடுமைப்படுத்தலாமா
என்கிற உணர்வு
பெரும்பாலான பெண்களுக்கு
ஏனோ ஏற்படுடவதே இல்லை!
ஆபாசமான விளம்பரங்களில் கூட பங்கு பெறுபவர்
பெண்கள் தானே ?
அதிகம் பணம் கிடைக்கிறது என்றால் எத்தகைய
கௌரவக்குறைவான
தோற்றங்களிலும் தோன்றலாமா ?
பெண்கள் மறுத்து விட்டால் இத்தகைய விளம்பரங்கள்
எப்படி வெளிவரும் ?
நாடு முழுவதும் காணப்படும் விபச்சார விடுதிகளை
நடத்துவதில் பெண்களின் பங்கே அதிகம் !
கொஞசம் கூட ஈவு இரக்கம் இல்லாமல்
சின்னஞ்சிறிய பெண்களை கடத்திக்கொண்டு வந்து
விபச்சாரத்தில் ஈடுபடுத்துகிறார்கள். மும்பையிலும்,
கல்கத்தாவிலும் இதற்கென்று விளம்பரப்படுத்தாத
தனி சந்தையே இருக்கிறது !
பெண்களை பெண்களே விபச்சாரத்தில் ஈடுபடுத்தும்
கொடுமையை -எந்த காரணத்தினாலும்
நியாயப்படுத்த முடியாது தானே ?
இத்தனையையும் மீறி சமுதாயம் முன்னேற்றத்தை
நோக்கித் தான்
செல்ல வேண்டும் – செல்லும் !
அதற்கு – இன்னும் என்னென்ன செய்ய வேண்டும் ?
செய்ய இயலும் ?
பெண்களின் பலம் அழகும், கவர்ச்சியும்,
கண்ணீரும் தான்
என்கிற நிலை மாறி –
தன்னம்பிக்கையும், தைரியமும்,
எதையும் புரிந்துகொண்டு செயல்படும்
பக்குவமும் தான்
பெண்களின் இயல்பு என்றாகிக் கொண்டிருக்கிறது !
இது சில பெண்களின் இயல்பாக மட்டும்
இல்லாமல் பெண்கள் சமுதாயம் முழுவதும்
இது போல் மாற வேண்டும் !
அதற்கு – இருக்கின்ற வசதிகள் எல்லாரையும்
சென்றடைய வேண்டும்.
கல்வி வசதிகள் மேலும் பெருக வேண்டும்.
நகரத்து பெண்களுக்கு
கிடைக்கும் கல்வி வசதிகள்
கிராமத்து பெண்களுக்கும் கிடைக்க வேண்டும்.
பாதுகாப்பான, சௌகரியமான – பெண்கள் தங்கும்
விடுதிகள் நிறைய ஏற்படுத்தப்பட வேண்டும்.
கிராமத்து பெண்கள்
இலவசமாக அல்லது குறைந்த செலவில் அதில்
வந்து தங்கி படிக்கவும், வேலைக்குப் செல்லவும்
வசதிகள் செய்ய வேண்டும்.
ஒரு ஆண் படித்தால் அவன் மட்டும் தான்
முன்னேறுவான்.
ஒரு பெண் படித்தால்-
அவளால் ஒரு குடும்பமே முன்னேறும் என்பது
நிதரிசமான உண்மை !
பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் அதிகமாக
உருவாக்கப்பட வேண்டும். மருத்துவம், கல்வி,
கணினி, மின் இயல், விஞ்ஞானம் போன்ற –
பெண்களுக்கேற்ற துறைகளில் பெண்களுக்காக
அதிக இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.
மகளிருக்கு என்று தனி காவல் நிலையங்களை
ஏற்படுத்திய
பரிசோதனை முயற்சி – பெண் ரவுடிகளை
உருவாக்குவதிலேயே முடிந்திருக்கிறது !
எனவே இதை நம்பாமல் – பெண்களுக்கு என்று
தொடர் கல்வியிலும்,
தொழிற்பயிற்சியிலும்,
வேலை வாய்ப்பு விஷயங்களிலும்,
குடும்ப பிரச்சினைகளிலும் உதவி புரிய –
தகுந்த ஆலோசனை மையங்களை
(counselling centres )
ஆரோக்கியமான, தன்னார்வுத் தொண்டு
நிறுவனங்களின் துணையுடன் ஒவ்வொரு
மாவட்டத் தலைநகரிலும் அமைக்க வேண்டும்.
ஓரளவு முன்னேறி விட்ட, வசதியான படித்த
பெண்கள் இந்த ஆலோசனை மையங்களில்
ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும்.
தகுந்த வசதி,வாய்ப்பு பெறாத மற்ற பெண்களையும்
வளம் பெற வாழ வைப்பது தாங்கள் இந்த
சமுதாயத்திற்கு திரும்பச் செலுத்த வேண்டிய கடன்
என்பதை வசதிபெற்ற
பெண்கள் உணர வேண்டும்.
இத்தகைய மையங்கள் தகுந்த கல்வியாளர்கள்,
தொழிலதிபர்கள், மற்றும் சட்டநிபுணர்களின்
உதவியை தேவைப்படும்போது
பெறும் வகையில் அமைய வேண்டும்.
திரும்பத் திரும்ப சட்ட சபையிலும்,
பாராளுமன்றத்திலும்
பெண்களுக்கு இட ஒதுக்கீடு
என்று பல்லவி பாடுவதை முதலில் விட வேண்டும்.
பெண்கள் பெற வேண்டிய இடங்கள் சமுதாயத்தில்
இன்னும் எவ்வளவோ உள்ளன.
அதை முதலில் செய்வோம். குடும்பத்தை
நடத்திச்செல்வதில்
ஆணுக்கும் பெண்ணுக்கும்
சம பங்கும் பொறுப்பும் உள்ளது என்பதை சமுதாயம்
ஏற்கெனவே
உணரத்தொடங்கி விட்டது.
மிச்சமுள்ளோரும் இதை உணரும் வகையில்
அனைவரும் ஒன்றுபட்டு செயல்புரிய வேண்டும்.
ஆண்களுக்கு எதிராக பெண்களோ – பெண்களுக்கு
எதிராக ஆண்களோ கூட்டணி அமைத்து
எதிர்த்துப் போராடக்கூடிய விஷயமில்லை இது !
இது ஒரு கூட்டுப்பொறுப்பு ! இந்த பொறுப்பு
சமுதாய அக்கரை
கொண்ட ஒவ்வொரு ஆணுக்கும்,
பெண்ணுக்கும் இருக்க வேண்டும்.
சமுதாய முன்னேற்றமும், மாற்றமும்
நாள் குறித்து வைத்து
நிகழக்கூடியவை அல்ல !
அவை மக்களின் மனநிலையில் ஏற்படும்
மாற்றங்களின் வேகத்தைப் பொறுத்தது.
இதை துரிதப்படுத்த வேண்டியது தான்
நாம் செய்யக்கூடிய ஆக்கபூர்வமான பணி !
கடந்த 50 ஆண்டு கால அனுபவங்கள் இந்த
மாற்றங்களை நம்மால் நிச்சயம் ஏற்படுத்த
முடியும் என்பதை உறுதிப்படுத்துகின்றன !
இவை நிகழ்கையில் – பெண்ணிய மாயையும்,
ஆணாதிக்கமும
இயல்பாகவே
காணாமல் போய் விடும் !. .
அதற்குள்ளாகவாவது அரசியல் – பெண்கள்
பங்கு கொள்ளும்
அளவிற்கு கண்ணியமும் தகுதியும்
பெறுகின்றதா என்று பார்ப்போம் !!




நிஜமான சாமியாரா இல்லை ….