மாடர்ன் தியேட்டர்ஸின் நிஜ சர்வாதிகாரி டி.ஆர்.சுந்தரம் …..!!!

……………………………………………………..

……………………………………………………..

…………………………………………………..

மாடர்ன் தியேட்டர்ஸில் வேலை பார்த்த அத்தனை பேருக்கும் மாதச்சம்பளம் தான்… கருணாநிதி, எம்.ஜி.ஆர் … உட்பட…!!!

மாடர்ன் தியேட்டர்ஸ் – கருணாநிதி, எம்.ஜி.ஆர் கண்ணதாசன் உள்ளிட்டோருக்கு தாய்வீடு!

திராவிட இயக்க தலைவர்களாக பின்னாளில் விளங்கிய பலருக்கு மாடர்ன் தியேட்டர்ஸ் தாய்வீடு போன்று விளங்கியது.

கருணாநிதி, எம்.ஜி.ஆர் கண்ணதாசன் உள்ளிட்டவர்கள் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் பங்கேற்றதனால் புகழ்பெற்றனர். திரைப்படப் பாடலாசிரியர்கள் மருதகாசி, கவி கா.மு.ஷெரிப் பாடல்கள் எழுதி புகழ் பெற்றது இங்குதான்.

பாடகர்கள் திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன் டி.எம்.சௌந்தர ராஜன் போன்றோர் ஆரம்ப காலத்தில் தங்களை திறமையை வளர்த்துக் கொண்டதும் இந்த ஸ்டுடியோவில் தான். நடிகர் ஜெயசங்கர், மனோகர், நம்பியார் போன்ற திரைப்பட நட்சத்திரங்கள் பிரபலமடைந்ததும் இங்குதான்.

கண்ணதாசனின் திரையுலக பிரவேசம் நிகழ்ந்தது மாடர்ன் தியேட்டர்ஸில்தான். ‘சண்டமாருதம்’ என்ற தனது பத்திரிகையில் உதவி ஆசிரியராக கண்ணதாசனை நியமித்தார்.

கண்ணதாசன் முதன்முதலில் சினிமாவிற்கு பாட்டு எழுதியதும் மாடர்ன் தியேட்டர்ஸில்தான். அஞ்சலி தேவியையும், எம்.ஆர்.ராதாவையும் சினிமாவில் அறிமுகம் செய்ததும் மாடர்ன் தியேட்டர்ஸ்தான்.

கண்டிப்புக்கு பேர் போன சுந்தரம், படப்பிடிப்பின் போது ஒரு சர்வாதிகாரிப் போல்தான் நடந்து கொள்வார். படப்பிடிப்பை திட்டமிட்டு நடத்தி, படத்தை குறித்த நேரத்தில் வெளியிடும் பழக்கமுடையவர்.

தனது ஸ்டுடியோவில் தயாராகி, எதிர்பாராதவிதமாக எரிந்து போன ‘போஜன்’ படத்தை ஒரே மாதத்தில் திரும்பவும் படமாக்கி திரையிட்ட சாதனையாளர் சுந்தரம். தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களை தயாரித்தது.

மலையாள மொழியின் முதல் பேசும் படமான ‘பாலன்’ திரைப்படத்தை 1938 ல் எடுத்தவர் சுந்தரமே. தமிழின் முதல் கலர் படமான ‘அலிபாபவும் நாற்பது திருடர்களும்’ படத்தை தயாரித்தவரும் சுந்தரமே.

அதேபோல் மலையாளத்தில் முதல் வண்ணப் படமான ‘கண்டம்பெச்சகோட்டு’ என்ற படம் மாடர்ன் தியேட்டர்ஸில் 1961ல் தயாரிக்கப்பட்டது என்பது ஒரு சாதனை. அமெரிக்க படத் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, ‘Jungle’ என்ற ஆங்கில படத்தையும் தயாரித்தார் டி.ஆர்.சுந்தரம் .

பாரதிதாசனின் ‘எதிர்பாராத முத்தம்’ என்ற கதையை பொன்முடி என்ற பெயரில் சுந்தரம் தயாரித்தார். இப்படத்தை எல்லிஸ் ஆர்.டங்கன் டைரக்ட் செய்தார்.

இப்படம் 1950 ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்றது. படத்தில் பொன்முடியாக நரசிம்ம பாரதியும், பூங்கோதையாக அந்நாளைய கவர்ச்சி ராணி எனப்பட்ட மாதுரிதேவியும் நடித்திருந்தனர். அப்படத்தின் காதல் காட்சிகள், மிக விரசமாக அமைந்திருந்தன என பொதுமக்கள் மத்தியில் விமர்சனம் எழுந்தன.

இப்படத்தை தொடர்ந்து ‘திகம்பர சாமியார்’ என்ற படத்தை தானே டைரக்ட் செய்து தயாரித்தார் டி.ஆர்.சுந்தரம். இப்படத்தில் நம்பியார், 10 வேடங்களில் தோன்றினார். இப்படத்தின் கதை வழுவூர் துரைசாமி அய்யங்காரின் துப்பறியும் நாவலைத் தழுவியது.

‘மந்திரி குமாரி’ என்ற நாடகம் தமிழ் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது. கருணாநிதி எழுதிய இந்த நாடகத்தை விலைக்கு வாங்கிய டி.ஆர்.சுந்தரம், ‘மந்திரிகுமாரி’ என்ற பெயரிலேயே படமாக எடுத்தார்.

எல்லிஸ் ஆர். டங்கன் என்ற வெளிநாட்டைச்சேர்ந்தவர் டைரக்டர் பொறுப்பை ஏற்றார். திரைப்படத்திற்கான திரைக்கதை, வசனத்தை எழுத, கருணாநிதி சேலம் வந்து, மாத சம்பளமாக ரூ500/- பெற்று திரைப்படத்தின் வசனத்தை எழுதிக் கொடுத்தார்.

கனல் பறக்கும் வசனங்கள் படத்தில் இடம் பெற்றது. படத்தின் கதாநாயகனாக, தளபதியின் வேடம் அப்போது வளர்ந்துவந்த எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு தரப்பட்டது.

படத்தின் வில்லன் காதாபாத்திரம் பேசும் வசனங்கள் பரபரப்பாக பேசப்பட்டன. தன் காதல் மனைவி, தன் திரைமறைவு வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதால், அவளை கொல்ல திட்டம் தீட்டி, மலையுச்சிக்கு கொண்டுவருகிறான் வில்லன்.

ஆனால் அதை புரிந்துகொள்கிற மனைவி, தன் சாமர்த்தியத்தால் அவனையே கொன்று, தான் தப்பிக்கும் உத்தியை மக்கள் ரசித்து பார்த்தனர். படம் பெரும் வெற்றி பெற்றது. ( – உதவி : விகடன் தளம் )

…………………………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக