கவிஞரின் கட்டில் ….

…………………………………………

………………………………………

கவிஞரின் மகன் கோபி கண்ணதாசன் அவர்கள் எழுதியதிலிருந்து –

………………………………………….

அந்த கட்டில் கருங்காலி மரத்தினால் ஆனது என்று நினைவு..அற்புதமான வேலைப்பாட்டுடன்..அப்பாவின் உயரத்திற்கு எப்படி அது பொருந்தியது என்று இன்னும் வியப்பாய் இருக்கிறது..அப்பா அதில் கால்களை சிறிது மடித்தபடியேதான் படுத்திருந்ததாக நினைவு..சர்க்கரை நோயினால்தான் படுக்கையில் எறும்பு வருகிறது என்ற எண்ணத்தில் கட்டிலின் கால்களுக்கு ஒரு தெப்பம் மாதிரி தண்ணீர் ஊற்றக்கூடிய மரத்தினாலான பலகை..சுவற்றிற்கு மேலே சாத்தப்பச் செட்டியார்-விசாலாட்சி அம்மையார்..ஐயா-அப்பத்தா படம்..அந்த இரு முகங்களை குறைந்தது நூறு உறவினர்களின் முகங்களில் ஜாடையாய் நான் பார்த்திருக்கிறேன்..பெரிய குடும்பம் எங்களுடையது..

அப்பா சோப் உபயோகப்படுத்தியதில்லை..உடலில் உள்ள இயற்கையான எண்ணை பசையை சோப் எடுத்துவிடும் என்கிற காரணத்தால் அப்படி….எப்போதாவது பயத்தம்பருப்பு மாவை அவர் குளியலறையில் பார்த்திருக்கிறேன்..பளிங்கு போன்ற தேகம்..அப்படிப்பட்ட ஒரு சருமத்தை நான் அதற்குபிறகு பார்த்ததில்லை..

அந்த கட்டிலில் அமர்ந்து பரீட்ச்சைக்கு படித்துவிட்டு எத்தனையோ தடவை அப்படியே தூங்கிப் போயிருக்கிறேன்..அவர படுக்கையில் ஒருவித வாசனையைத்தான் நான் கண்டிருக்கிறேன்..அப்பா இத்தனைக்கும் வாசனை திரவியங்கள் உபயோகபடுத்தியதில்லை..எப்போதாவது பவுடர் போட்டுக்கொள்வார்..வெயில் நாட்களில் கூட வேர்வை வாசனையை நான் கண்டதில்லை..அவர் அணிந்த சட்டையிலும் கூட…

அப்பாவிற்கு கால் பிடித்துவிட்டால் பணம் தருவார்…பிடித்து விடாதவர்களுக்கும் கூட பணம் தருவார்..அந்த கட்டிலில் அவர் உட்கார்ந்துக்கொண்டு சிலை போல் யோசனையில் அமிழ்ந்து கிடப்பதை நான் தினம் தினம் பல வருடங்கள் பார்த்திருக்கிறேன்..

யாராவது கதவை திறந்து உள்ளே வரும்போது மட்டும் கொஞ்சம் திரும்பி பார்த்து, மறுபடியும் சிந்தனையில் ஆழ்வார்..பல வருடங்கள் அவர் சோகத்தில் இருக்கிறார் என்று நான் தப்பாய் எண்ணிக்கொண்டிருந்தேன்..நான் ஆன்மீகத்தில் ஆழ்ந்த பிறகுதான் அவர் நிலையைப் பற்றிய அபிப்பிராயம் மாறியது..ஏதுமில்லா வெட்ட வெளியில் சுழன்று, கற்பனையில் திளைத்து, பின் எழுதும்போது ‘அவன்’ கருணையுடனும் ஆசியுடனும் எழுதியது அந்த கட்டிலில் அமர்ந்துதான்..

அந்த கட்டிலில் படுத்தபடியே எத்தனையோ கனவுகளுக்கு அடைக்கலம் தந்திருக்கிறேன்….எத்தனையோ ஏமாற்றங்களால் ஏற்பட்ட சோகத்தை அந்த தலையணைகளில் முகம் புதைத்து கரைத்திருக்கிறேன்.,.பள்ளியில் பேச்சுப் போட்டியில் பேசுவதற்கு முன்பு அப்பாவின் அறையில் உள்ள ஆளுயரக் கண்ணாடியின் முன்பு பேசிப் பார்ப்பேன்..வெற்றி பெற்ற பிறகு அந்த கட்டிலில் படுத்தபடியே பேசியதை அசை போட்டு, என்னை நினைத்து பெருமிதம் அடைந்த நாட்கள் எத்தனையோ..

அந்த கட்டிலிலிருந்துதான் அப்பா என் சகோதரிகளுக்கும் சகோதரர்களுக்கும் மணம் பேசினார்..அந்த கட்டிலில் அமர்ந்திருந்தபோதுதான் பண்டித நேரு மரணச் செய்தியை கேள்வியுற்றார்.

“சீரிய நெற்றி எங்கே ..சிவந்த நல் இதழ்கள் எங்கே’ என்ற கவிதையை நேருவிற்கு சமர்ப்பணமாக எழுதியதும், பல்லாயிரம் சினிமாப் பாடல்களை எழுதியதும், இதில் அமர்ந்துதான்..

அந்த கட்டில் பார்க்காத மேதைகளில்லை..அந்த கட்டில் காணாத சந்தர்ப்பவாதிகளும் இல்லை..நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ண மேனன் தொடங்கி ஹிந்தி பட நடிகர் ராஜேந்திர குமார், தெலுங்கு பாடலாசிரியர் ஆத்ரேயா, கேரளத்து வயலார்….என்று…பட்டியல் போட்டால் நீளும்..

படங்களை தயாரித்து பின்னர் கடனாளியாக கவிஞர் துவண்டதும் இதே கட்டிலில் தான்..அரசியலில் முதுகில் குத்தப்பட்டு , பின்னர் புரட்சித் தலைவரின் பாசத்திற்கு அவர் ஆளானதையும் இந்த கட்டில் கண்டிருக்கிறது..

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் கூட……

1981..

சிகாகோ நகரில் காலமான அப்பாவின் உடல் சென்னை விமான நிலையத்திற்கு வந்துவிட்டதாக செய்தி வருகிறது..இரவு பகல் குழப்பத்தில் நான் விழிக்கிறேன்..அப்பாவின் கட்டிலில் தான் படுத்திருக்கிறேன்..சன்னமான உறவினரின் அழுகைச் சத்தம் மறுபடியும் பீறிடுகிறது,.

கலையாத கூட்டம் வீட்டிற்கு வெளியே..இறுதிச் சடங்கு முடிந்து அப்பாவின் உடல் கண்ணம்மாப் பேட்டைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது…பல்லாயிரம் பேர் கொண்ட அந்த இறுதி ஊர்வலத்திற்கு புரட்சித் தலைவர் தலைமை வகித்து முன்னால் செல்கிறார்..

வீட்டின் ஒரு ஓரமாய் அப்பாவின் கட்டில் பிரித்தெடுக்கப்படுகிறது..என் இருதயம் ஒரு நிமிடம் நின்று..மறுபடி இயங்குகிறது..சகோதரியிடம் இதைப்பற்றி கேட்கிறேன்..

“அப்பா, அவர் உடலை எரிக்கும்போது கட்டிலையும் சேர்த்து எரிக்க சொன்னாராம்”..என்றார்..”யார் சொன்னது”..என்றேன்..அம்மா சொன்னங்க..ஏன் ..என்கிட்டே கூட அப்பா சொல்லியிருக்கார்..எல்லாருக்கும் தெரியுமே..”..என்றார்..

கருங்காலி மரம்..நான்கு பேர் போராடி அதை ஒரு வழியாய் பிரித்தனர்..அப்பாவின் உடல் மீது வைக்கப்பட்ட சந்தன கட்டைகளுடன் சேர்த்து, பிரித்த அவர் கட்டிலும் வைக்கப்பட்டு சிதை மூட்டப்பட்டது..

சேகண்டி எங்களையெல்லாம் திரும்பிப்பார்க்காமல் வீட்டிற்கு நடக்குமாறு உத்தரவிட்டார்..அப்பாவின் முகத்தை மூடுவதற்கு முன்பாக கடைசியாக ஒரு முறை அவர் முகத்தை பார்த்து மனதில் நிறுத்திக்கொண்டேன்..

வீட்டில் அம்மா அழுது சோர்ந்து சுவற்றில் சாய்ந்தபடி கண் மூடியிருந்தார்..நெற்றியில் குங்குமம் வேர்வையில் கரைந்தோடியிருந்தது..

அடுத்த நாள் காலை..

காசியில் கரைக்க சாம்பல் சேகரிக்க நானும் எனது சகோதரர்களும் கண்ணம்மாபேட்டைக்கு சென்றோம்..

கையில் பால் சட்டியுடன்..எரிந்த சாம்பலினூடே கருங்காலி மரம், காற்றில் “விண், விண்” என்று சிகப்பாய் கண் சிமிட்டி …மிகுந்த பிடிவாதத்துடன் எரிய மறுத்து..

ஒரு வழியாய் வெந்து தணிந்தது…!

……………………………………………………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக