கிருஷ்ணர், கீதோபதேசத்துக்கு – அர்ஜுனனை தேர்ந்தெடுத்தது ஏன் …..???

…………………………………………….

…………………………………………..

நம்பிக்கையானவர்களைத் தேர்ந்தெடுப்பதும் வெற்றிக்கு மிக முக்கியம்.
கண்ணன், அர்ஜுனனைத் தேர்ந்தெடுத்ததும் அப்படித்தான்!

`பகவான் கிருஷ்ணர், கீதை மூலம் நுட்பமான அரிய உண்மைகளை எடுத்துச் சொல்ல நம்மை ஏன் தேர்ந்தெடுத்தார்?’ என்பது அர்ஜுனனின் சந்தேகம்.

‘கிருஷ்ணர் இதை பிதாமகன் பீஷ்மரிடம் சொல்லியிருக்கலாம். அவர் எதிர் முகாமில் இருப்பதால் அவரைத் தவிர்த்திருக்கலாம். சரி… அண்ணன் தருமன், தரும நீதிகளை உணர்ந்தவர். மூத்தவர். அவரைவிட கீதை கேட்கப் பொருத்தமானவர் வேறு யார் இருக்க முடியும்? இன்னோர் அண்ணன் பீமன் பலசாலி மட்டுமல்ல; பூஜா நியமங்களைச் சரிவரச் செய்து வரும் பக்திமானும்கூட.

இவர்களை எல்லாம் விட்டுவிட்டு, உலக சுகங்களில் நாட்டமுள்ள, உணர்ச்சிவசப்பட்டு அடிக்கடி தவறு செய்யும், ஆத்திரக்காரனான என்னை, கீதோபதேசம் கேட்கத் தகுதி உள்ளவனாக கிருஷ்ணர் கருதியது எந்த வகையில் நியாயம்?’ – இதைக் கேட்டே விட்டான் அர்ஜுனன். சந்தேகத்தை கிருஷ்ணரே போக்கினார்,

‘‘அர்ஜுனா! என்னிடம் அன்பு கொண்டவன் என்பதால், உனக்குக் கீதையை உபதேசிக்கவில்லை. சாஸ் திரங்களை அறிந்த ஒரு மகாத்மாவாக பீஷ்மரை என்னால் கருத முடிய வில்லை. அவற்றை அறிந்திருப் பதால் மட்டும் சிறப்பில்லை… அதைக் கடைப் பிடிப்பதுதான் சிறப்பு. கௌரவர்கள் தர்ம முறைப்படி நடந்துகொள்ள வில்லை. இருந்தும், பீஷ்மர் அவர்கள் பக்கமே இருக்கிறார். ஆனால், பாண்டவர்களாகிய உங்களைச் சந்திக்கும்போது, ‘தர்மம் வெல்ல ஆசீர்வதிக்கிறேன்’ என்று கூறுகிறார். எண்ணம் – சொல் – செயல் ஆகியவை எவனிடம் ஒன்றாக இருக்கிறதோ, அவன் உத்தமன். ஆகவே, பீஷ்மர் அப்படிப்பட்டவர் அல்லர்.

அடுத்தவர் தருமன். நல்லவர்; ஆனால், முன்யோசனை இல்லாதவர். தவறு செய்தபின் வருந்துவது அவர் இயல்பு. தர்மம்- நீதியைக் கடைப்பிடிப்பவர் எனினும் உரியநேரத்தில் தனது கடமை என்ன என்பதை அவரால் உணர முடிவதில்லை. பீமன் பலசாலி; பக்திமான். ஆனால், அவனிடம் மனோபலமோ, புத்தி பலமோ இல்லை. அவனது வீண் கோபத்தால் விபரீதங்களே விளையும்.

அர்ஜுனா! நீ மாவீரன். அதிநுட்பமாக அஸ்திர வித்தை கற்றவன். முன்யோசனை உள்ளவன். இப்போது, உன்னைவிட வயதிலும் அறிவிலும் பெரியவர்களான பலர் குறித்து, மதிப்புடன் என்னிடம் விவாதித்தாய். போர்க்களத்தில், ‘உற்றார் – உறவினர் மற்றும் மதிப்புக்கு உரியவர்களைக் கொல்வதா? தேவைதானா இந்த யுத்தமும் இழப்பும்?’ என்றெல்லாம் யோசித்தாய்.

‘எல்லோரையும் இழந்துவிட்டு ஓர் அரசாட்சியை அடைவதில் என்ன பெருமை இருக்க முடியும்?’ என்று கலங்கினாய். பதவிப் பித்து உனக்கு இல்லை. பகைவரைப் பழிவாங்க நினைத்தாலும், போர்க்களத்தில் அவர்களை மன்னித்து… போரே வேண்டாம் என்று கருதும் உள்ளம் உன்னிடம் உள்ளது.

நீ… நீதி – அநீதி குறித்துச் சிந்திக்கிறாய். நேர்மையான வழியில் செல்ல, தியாகம் செய்யும் மனவலிமை தேவை. பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்பவனுக்கே அது சாத்தியம். உன்னிடம் அது இருக்கிறது. இவையெல்லாம்தான் நான் உனக்கு கீதையை உபதேசிக்கக் காரணங்கள்!’’ என்றாராம்.

ஒரு செயலில் – தொழிலில் – வாழ்வில் ஒருவரோடு இணைந்து செயலாற்றும் சூழல் எனில், உரிய தகுதிகளோடு இருப்பவர்களையே தேர்வு செய்யவேண்டும். அவர்களே வெற்றியை ஈட்டுவதற்கு நம்பிக்கையானவர்கள்!

.
…………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.